"போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்." என்று "சிலர் போலல்லாத" மற்றவர்கள் பற்றி கூறும் மணியம், தான் என்ன நோக்கத்துக்காக எப்படி செயல்படுகின்றார் என்பதை சொல்வாரா?. தேசியத்தையும் புலியையும் அழிப்பதும், அதற்காக அரசை ஆதரிப்பதும் தான் மார்க்சியம் என்று விளக்கம் கொடுக்கும் கும்பலுக்கு தலைமைதாங்கும் உங்கள் அரசியல் பின்னணிதான் என்ன? 1970 முதல் 2009 வரை மக்களுடன் நின்று அரசியல் செய்யாதவர், 2009 பின் பலரைப்போல் இவரும் திடீர் அரசியல்வாதியாக பவனி வருகின்றார். இதற்கு தன் மீதான புலிகளின் வதைகளை எடுத்துக் கூறியபடி, அதற்கூடாக கடந்தகாலம் பற்றி இட்டுக் கட்டுகின்றார். குறிப்பாக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, என்.எல்.எப்.ரி, பி.எல்.எப்.ரி பற்றிய திரிபுகளையும், இதைச் சுற்றிய அரசியலையும் திரித்து, தனது செயல்பாடு பற்றிய புரட்டுகளையும் முன்வைக்கின்றார்.

1975கள் முதல் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் இணைந்து செயற்பட்டதாக தன்னை காட்டிக் கொள்ளும் மணியம், உண்மையில் செயல்பட்டாரா? அப்படி செயல்பட்டு இருந்தால், இந்த இனவாத முரண்பாடு பிரதான முரண்பாடாக மாறியதற்கான சுயவிமர்சனத்தை செய்யவேண்டும். இன்றும் இந்த இனமுரண்பாடு பிரதான முரண்பாடாக இலங்கையில் தொடர்வதை தடுக்க, இவர்கள் தங்கள் "மார்க்சியம்" மூலம் முன்வைக்கும் அரசியல் தான் என்ன? புலியை அழித்தால், புலி அரசியலை எதிர்த்தால் இனமுரண்பாடு தீர்ந்துவிடுமா? பேரினவாதத்தை எதிர்க்காது, பேரினவாதத்துடன் கூடி, புலித் தேசிய அரசியலை எதிர்ப்பது தான் "மார்க்சியம்" என்று குருட்டு விளக்கம் கொடுக்கின்றனர்.

மணியம் கூறுகின்றார் "என்.எல்.எப்.ரி – பி.எல்.எப்.ரி என்பனவற்றின் முன்னணி உறுப்பினரான மனோரஞ்சன் அவர்களும் அன்ரனின் பள்ளித்தோழன் என்பது குறிப்பிடத்தக்கது. … அவரது இயக்கத்தில் தமிழ் தேசியவாத அலை காரணமாக உள்வாங்கப்பட்டு, அதன் அடிப்படையில் செயற்பட்டவர்கள் சிலர் போலல்லாது, இந்தத் தேசியவாதப் போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்." என்கின்றார்.

பாசிசப் புலிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அன்ரன் பற்றி கூறும் போது, அவர் மனோரஞ்சன் போல் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்தே இயங்கி இருப்பார் என்று கூறுகின்ற வக்கிரம் அசட்டுத் துணிச்சல் சார்ந்தது. "மனோரஞ்சன் அவர்களும் அன்ரனின் பள்ளித்தோழன்" என்பதால், கட்டாயம் அவர் அவரைப்போல் அரசுடன் சேர்ந்து இயங்கி இருப்பார் என்று கூறி மணியம் நடத்தும் அரசியல் சோடனைகளையே, நாம் இங்கு பார்க்கின்றோம்.

மனோரஞ்சன் சந்திரிகா காலத்தில் அரச பத்திரிகையிலும், சமாதானத்தின் பெயரில் பேரினவாத அரசுக்கு தலைமைதாங்கிய சந்திரிகாவுக்காக உலகு எங்கும் காலட்சேபம் நடத்தியவர். "சிலர் போலல்லாது… போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக எப்படி விற்று தின்னலாம் என்பதில் அவர் ஈடு இணையற்றவர். அவர் பற்றி நாம் முன்பு எழுதிய சிலவற்றிக்கான இணைப்புகளை இங்கு பார்க்கவும்.

 

1. சமாதானம்! ஆம் , ஜனநாயகத்துடன் …. என்ற மகஜர் மக்களை மந்தைகளாக மாற்றுவதே!

2. அரசுக்கு ஆதரவு வழங்குவதே 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றனர் 'ஜனநாயகவாதிகள்"

3. மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல

இன்று அவர் மணியத்துடன் கூட்டுச்சேர்ந்த, புலி தமிழ் தேசியத்தை அழிப்பதாக கூறி, அரசுக்கு ஆதரவாக "மண் சுமக்கின்றனர்". "போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக" பயன்படுத்துவதில் "சிலர் போலல்லாத" மிகத் தெளிவாகவிருந்த மனோரஞ்சன், அதற்காக என்ன செய்கின்றார்? மணியம் தான் சொல்லவேண்டும். சரி "மார்க்சியவாதியாக" தன்னை கூறும் மணியம் என்னதான் செய்கின்றார்!? "சிலர் போலல்லாத" அவர், மக்களை வர்க்கப் போராட்டத்துகாகவா அணிதிரட்டுகின்றார்!? புலியையும், தேசியத்தையும், தமிழ் இனத்தையும் அழிக்கும் அரசுடன் சேர்ந்து, "போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும்" என்ற கூர்ந்த தெளிவுடன் தான் இதையெல்லாம் செய்கின்றீர்களோ! சொல்லுங்கள். உங்கள் தெளிவான நோக்கம் தான் என்ன?

இங்கு வார்த்தை மோசடியானவை. நேர்மையற்றவை. மற்றவன் பற்றி கூறும் போது "போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும்" என்ற தெளிவு இருந்ததாக கூறும் நீங்கள், "என்ன நோக்கத்துக்காக" இதை எழுதுகின்றீர்கள்? உங்கள் நோக்கம் நேர்மையானதா? சொல்லுங்கள். மார்க்சியம் முன்வைக்கும் வர்க்கப் போராட்டத்தைத்தான், நீங்கள் முன்னெடுக்கின்றீர்களா? சொல்லுங்கள். மார்சியத்தின் பெயரில் யாரை ஏமாற்ற விரும்புகின்றீர்கள்? அதையாவது சொல்லுங்கள்.

"தேசியவாதப் போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்." என்ற கூற்றை அன்ரன் சரி, விசு சரி, இன்றைய உங்கள் நோக்கத்துக்கும் நடத்தைக்கும் முரணாகத்தான் கொண்டிருந்தனர். இங்கு அன்ரன், விசு என்.எல்.எப்.ரியில் இருந்து பிரிந்து பி.எல்.எப்.ரி க்கு சென்ற போது, அங்கு ஏற்பட்ட கோட்பாட்டு ரீதியான முரண்பாடுகளை மணியம் இன்று எதிர்நிலையில் வைத்து திரித்து முன்வைக்கின்றார். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி பற்றி, இதில் தன்னைப் பற்றிய பிரமைகளை இட்டுக்கட்டி முன்வைக்கின்றார். அதை அடுத்து பார்ப்போம்.

 

பி.இரயாகரன்

20.11.2011

1. புலிகளின் வதையை அனுபவித்த மணியண்ணை, பேரினவாதத்துடன் நின்று அதை வரலாறாக்குகின்றார் - (மணியத்தின் அரசு ஆதாரவு அரசியல் - 01)

2. "தமிழ் ஈழ" கோரிக்கையும், மணியண்ணையின் புரட்டும் - (மணியத்தின் அரசு ஆதாரவு அரசியல் - 02)

3. புலிகள் மட்டும்தான் குற்றங்கள் செய்தனராம்! இராணுவம் குற்றங்கள் செய்யவில்லையாம்! – (மணியத்தின் அரசு ஆதரவு அரசியல் - 03)