புலிகள் மட்டும் மக்களின் எதிரியல்ல. அரசும் மக்களின் எதிரி. அரசுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் இன்னாள் குழுக்களும் கூட மக்களின் எதிரி. இடதுசாரிய வர்க்க அரசியலை மறுக்கும் வலதுசாரிகள் கூட மக்களின் எதிரி. இந்த உண்மையைக் கடந்து, ஒரு எதிரிக்கு எதிராக மற்றைய எதிரியுடன் கூட்டுச்சேர முடியாது. மக்களின் எதிரிகளின் பின் இருப்பதோ மக்கள் விரோத அரசியல்.

இடதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி அரசியலும், இடதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி எதிர்ப்பு அரசியலும், வலதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி அரசியலும்;, வலதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி எதிர்ப்பு அரசியலும் பொதுவில் காணப்படுகின்றது. இந்தத் தரப்புடன் அங்குமிங்குமான கூட்டு அரசியலும், கூட்டுச்செயல்பாடுகள், சுய தணிக்கையுடன் கூடிய அரசியல் முன்னெடுப்புகளும், ஒன்றை மட்டும் குறிப்பாக முன்னிறுத்திய செயல்பாடுகளும், மக்களுக்கு எதிராக வர்க்க அரசியலுக்கு முழுக்கு போடுவதுதான்.

 

 

 

 

ஜனநாயகத்தை மறுப்பதை அடிப்படையாகக் கொண்டு, புலத்தில் புலிக்கு எதிராகவும், இலங்கையில் அரசுக்கு எதிராகவும் வர்க்க அரசியலைக் கைவிட்ட அணிக் சேர்க்கைகள், அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை கைவிட்டு துறந்தோட வைக்கின்றது. நீண்டகாலமாக இதுதான் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ஜனநாயகத்தை மறுப்பதைக் காட்டி புலத்தில் புலிக்கு எதிராக அரசு மற்றும் வலதுசாரியத்துடனான கூட்டும், மண்ணில் இலங்கை அரசுக்கு எதிராக குறுந்தேசிய மற்றும் வலதுசாரியத்துடனான கூட்டும் மார்க்சியத்தைக் கைவிட்ட இடதுசாரிய அரசியல் வங்குரோத்தாகும்.

வலதுசாரிகள், அரசுடன் சேர்ந்து நின்ற குழுக்கள், அரசு என்று புலிக்கு எதிரான அணியுடன் அல்லது தேசியத்துக்கு எதிரான அணியுடன் சேர்ந்து செய்யும் அரசியல், மக்களை குறுந்தேசிய அரசியலில் இருந்து விடுவிக்காது. மக்களுக்கு புலியைப் பற்றியும், குறுந்தேசியம் பற்றியுமான உண்மைகளை கூறுவதால் மட்டும், மாற்றங்கள் எதுவும் நிகழாது.

மக்கள் குறுந்தேசியத்தின் பின் நிற்பது என்பது, அரச ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான்;. குறுந்தேசியம் முன்தள்ளுகின்ற பொய்கள் புரட்டுகள் சார்ந்த பிரச்சாரம், அரச ஒடுக்குமுறையின் மேல் தான் செய்யப்படுகின்றது. மறுதளத்தில் யாழ் மையவாதம் சார்ந்த சாதியம், பிரதேசவாதம், ஆணாதிக்கம், சுரண்டல் சார்ந்த சமூக மேலாதிக்கக் கூறுகளை எதிர்ப்பதன் மூலம் மட்டும், தமிழ் குறுந்தேசிய அரசியலை இல்லாதாக்கிவிட முடியாது.

தமிழ் குறுந்தேசிய புரட்டுகளை எதிர்த்தும், யாழ் மையவாதத்துடன் சேர்ந்து இயங்கும் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்து முன்வைக்கப்படும் அரசியல், குறுகிய தளத்தில் தன்னை முன்னிறுத்தி தனிமைப்படுத்துகின்றது. மறுபக்கத்தில் இது பக்கச் சார்பானது. முழுமையான உண்மை சார்ந்ததுமல்ல.

அரசின் இனவாதத்தையும் அதன் ஓடுக்குமுறையையும் கருத்தில் கொள்ளாத, புலி ஒடுக்குமுறையை மட்டும் கருத்தில் கொண்ட அணிசேர்க்கைகளும், நடத்தைகளும், செயல்பாடுகளும் மக்களை விடுவிக்காது. மக்கள் தமக்கு எதிரானதாக பார்க்கின்றனர்.

அரசு, அரசுடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் இன்னாள் குழுக்கள், அதனுடன் தன்னை இணைத்துள்ள தனிநபர்களுடன் சேர்ந்து, மக்களை சரியான பாதைக்கு வழிநடத்த முடியாது. அதுபோல் வலதுசாரிகள், புலியெதிர்ப்பு பேர்வழிகளுடன் சேர்ந்து மக்களை அரசியல் மயப்படுத்திவிட முடியாது. எதிரியின் எதிரி நண்பன் என்கின்ற கோட்பாட்டைக் கொண்டு, தேசியத்தை (புலியை) எதிரியாக காட்டி மக்களை அணிதிரட்டிவிட முடியாது.

நாம்

 

1. புலியை எப்படி அணுகுகின்றோமோ அப்படி தான் அரசையும், அரசுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் இன்னாள் குழுக்களையும் அணுக வேண்டும். இதில் சலுகைக்கும், கூட்டுக்கும், சேர்ந்து செயல்படுவதற்கும் எந்த இடமுமில்லை.

2. தனித்துவமான எமது வர்க்க அரசியலை சார்ந்து நின்று, குறுந்தேசியம் மற்றும் தேசிய ஒடுக்குமுறை சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும். இதைக் கைவிட்டு, இதைப் பேசாது புலியை மட்டும் குறிவைத்த செயல்பாடுகள் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.

3. பிரிவினைக்கு எதிராக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையையும், ஒடுக்கும் ஜக்கியத்துக்கு எதிராக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையையும் முன்னிறுத்தி முரணற்ற வகையில் நாம் போராட வேண்டும்.

இந்த வகையில் தனித்துவமான அரசியல் முன்னெடுப்புகள் அற்ற, கதம்பமான அரசியல் முன்னெடுப்புகள் மூலம் மக்களை சரியாக வென்றெடுக்கவும், வழிநடத்தவும் முடியாது. சரியான பிரச்சாரத்தை மக்களை சார்ந்து நின்று செய்யவும் முடியாது.

உதிரியாகிவிட்ட நாம் அல்லது சிறு குழுக்களாக உள்ள நாம், எந்த எதிரிக்கு எதிரான எதிரியுடனும் சேர்ந்து போராட்டத்தை நடத்தி பலத்தை திரட்டலாம் என்பது எதிர்மறையான அரசியல் விளைவுகளை கொண்டுவரும். கடந்தகால இந்த வகை அரசியல், இறுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பிரிவை அணிதிரட்டியதையே வரலாறு காட்டுகின்றது.

நாம் போராடுவது எதற்காக? மக்களை அணிதிரட்டத்தான் என்றால், எதிரிகளுடன் எந்தவகையில் அணிதிரளமுடியும். மக்கள் விரோதிகளுடன் சேர்ந்து மக்கள் ஜனநாயகத்தை மீட்கத்தான் முடியுமா? நாம் மக்களுக்காகத்தான் போராடுகின்றோம் என்றால், அதற்காகத்தான் அனைத்தையும் செய்கின்றோம் என்றால், எதிரியுடன் சேர்ந்து (உதிரியாக இருந்தாலும்) எதையும் முன்னெடுக்க முடியாது. இந்த அரசியல் தெளிவின்றி, மக்களை தவறான அரசியல் போக்கில் இருந்து ஒருநாளும் விடுவிக்க முடியாது.

பி.இரயாகரன்

01.11.2011