ஒடுக்கப்பபட்ட தேசிய இனப் பாட்டாளிவர்க்கம் தன் வர்க்க அரசியல் கடமையை மறுப்பதன் மூலம், பிரிவினைவாதமே தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் என்ற திரிக்கின்றது. இந்த நிலையில் லெனின் ஒடுக்கப்பபட்ட தேசிய இனப் பாட்டாளிவர்க்கம் தொடர்பாக என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். "ஒடுக்கும் தேசிய இனங்களின் சமூக-ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சமூக-ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும் வெவ்வேறானவை என்று வேறுபடுத்தி அறிய வேண்டியதன் அவசியத்தை" லெனின் இங்கு மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றார். ஆனால் இதை மறுத்தும், திரித்தும், "ஸ்தூலமான கடமைகளை" எதிர்நிலையில் முன்னிறுத்தியும் தான், மார்க்சியத்தின் பெயரில் பிரிவினைவாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்தவகையில் தான் மார்க்சியத்தின் பெயரிலான பிரிவினைவாத மறுப்பும் கூட முன்வைக்கப்படுகின்றது. இங்கு மார்க்சியவாதிகளின் வேறுபட்ட ஸ்தூலமான கடமைகள் மிகத்தெளிவானது.

 

 

 

லெனின் இது பற்றி மேலும் மிகத்தெளிவான "ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள் "பிரிந்த போகும் உரிமையை" வலியுறுத்துவதும், அதே சமயம் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்த சமூக-ஜனநாயகவாதிகள் "ஜக்கியமுறும் உரிமையையும்" வலியுறுத்தும் .." அவசியம் என்றார். இது முரணானதல்ல. இதுதான் மார்க்சியம் முன்வைக்கும் சர்வதேசியம். இங்கு பிரிந்து போகும், ஜக்கியப்படும் உரிமையை முன்னிறுத்தி, ஸ்தூலமான கடமைகளை சுயநிர்ணயம் வரையறுக்கின்றது.

இதற்கு மாறானது பிரிவினை வாதமும், பிரிவினை மறுப்பு வாதமும். பிரிவினைவாதமோ தேசவிடுதலை என்ற கோசத்தின் பின் நின்று கொண்டு, ஒடுக்கும் இன தொழிலாளர் வர்க்கத்தை தன் எதிரியாகக் காட்டிவருகின்றது. இது பற்றி லெனின் கூறும் போது "ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் இடையிலான முழுமையான, நிபந்தனைகளற்ற ஐக்கியத்தை - ஸதாபன ரீதியான ஐக்கியம் உட்பட – ஆதரித்து காத்து நடைமுறை ரீதியில் செயல்படுத்துவது ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த சோஷலிஸ்டுகள் குறிப்பாகச் செய்ய வேண்டியதாகும். இதைச் செய்யாமல் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான கொள்கையை ஆதரித்து காப்பது சாத்தியமில்லை. பூர்ஷ்வாக்களின் எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் துரோகத்தையும் ஏமாற்று வித்தைகளையும் எதிர்த்து மற்ற நாடுகளின் பாட்டாளி வர்க்கத்துடன் தங்களது வர்க்க ஒருமைப்பாட்டை ஆதரித்துக் காப்பது சாத்தியமில்லை. தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக தேசிய விடுதலை என்ற கோசத்தை ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பூர்ஷ்வாக்கள் விடாப்பிடியாக உபயோகித்து வருகிறார்கள். ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் பூர்ஷ்வாக்களுடன் பிற்போக்குத்தனமான ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்காக…." ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு இடையில் பிளவை விதைக்கின்றனர். ஒடுக்கும் வர்க்கங்கள் தமக்குள் ஓரு இணக்கப்பாடு காண, ஒடுக்கப்பட்ட மக்களை எதிரியாக்குகின்றனர். லெனின் கூறியது போல், எமது தேசியப் போராட்டதின் பின் இது பல முனையில் நடந்தேறியது. லெனின் கூறிய இந்த உண்மையை புறக்கணித்த எமது சொந்த வரலாறு, இங்கிருந்து மீள்பரிசோதனைக்கு உள்ளாக்க மறுப்பது நடக்கின்றது. மறுபடியும் சுயநிர்ணயம் என்றால் பிரிவினை தான் என்று, ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்து முன்வைப்பதுடன் இதுதான் மார்க்சியம் என்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை எதிரியாக்குகின்ற இந்த அரசியலுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஜக்கியத்தை உருவாக்கப் போராடுவது தான் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கக் கடமையாகும். இந்த வகையில்தான் மார்க்சிய சுயநிர்ணய உரிமை முன்வைக்கப்படுகின்றது.

இப்படியிருக்க மார்க்சியத்தின் பெயரிலான பிரிவினைவாதம், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுத்துதான் முன்வைக்கப்படுகின்றது. இதற்குள் உள்ள அரசியல் வேறுபாட்டை மறுத்து, இதை ஒன்றாகக் காட்டுகின்ற திரிபை மார்க்சியத்தின் பெயரில் செய்கின்றனர். எந்த பிரிவினைவாதியும் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை முன்வைத்துப் பேசுவது என்பது ஒரு அரசியல் மோசடியாகும். பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையும், பிரிவினையும் இரு வேறு வர்க்கங்களின் அரசியல் மட்டுமின்றி, ஒன்றுக்கு ஒன்று நேரெதிரானதும் கூட. இதை ஒன்றாக காட்டுவதற்கு பூர்சுவா வர்க்கம் முனைவது போல், மார்க்சியத்தின் பெயரில் இயங்கும் சந்தர்ப்பவாதிகளும் மற்றும் குட்டிபூர்சுவா வர்க்கமும் முனைகின்றது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட தேசியத்தை, வர்க்கங் கடந்த ஒன்றாக, அனைத்து வர்க்க தேசியமாக காட்ட முனைகின்றனர்.

இந்தப் பின்னணியில் மார்க்சியம் முன்வைக்கும் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுத்து திரித்துவிடுவது என்பது குறிப்பாக

1. சுயநிர்ணயத்தை அதன் உள்ளார்ந்த அரசியல் உள்ளடக்கத்தை மறுத்து திரித்துக் காட்டுதல்

2. ஒடுக்கப்பட்ட தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தினதும், ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தினதும் வேறுபட்ட அரசியல் மற்றும் ஸதூலமான கடமைகளை தலைகீழாகத் தமக்கு பொருத்திக் காட்டுவதன் மூலம், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுத்து அதை பிரிவினையாகவும் பிரிவினை மறுப்பாகவும் முன்வைக்கின்றனர்.

ஒன்றைச் ஒன்று சார்ந்து, ஒன்று திரிப்பதை மறுத்து மற்றைய திரிபு முன்வைக்கப்படுவதுடன், மார்க்சியத்தின் பெயரில் மார்க்சிய மறுப்பை முன்வைக்கின்றது.

பிரிந்த செல்லும் சுயநிர்ணய உரிமை முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் ஒடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் நின்று அணுகக் கோருவதுதான் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையாகும். இது பிரிவினை மற்றும் பிரிவினை வாதத்துக்கான மறுப்பு என இரண்டுக்கும் எதிரானது. இதை மறுப்பது மார்க்சியமல்ல.

 

பி.இரயாகரன்

15.09.2011

 

1. பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)

2. பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)