Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சொல்வதும், சொல்லத் தவறுவதும் என்ற இரு அடிப்படையான சமூகப் பரிணாமங்களில், ஒன்றை முன்னிறுத்தியே கனகசபாபதியின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளது. அது நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றது. நோயின் மூலத்தை கண்டறிந்து, அதற்கு மருந்து கொடுப்பதைத் தவிர்க்கின்றது.

 

(30.03.2008 பிரான்சில் வெளியிட உள்ள இரு புத்தகங்கள் மீதான விமர்சனம். கூட்ட விபரம். http://www.mahajanan.com/New/Programme-30mar08-pdf.pdf ) )

 

1. மனம் எங்கே போகிறது. (இந்த நூல் தனி மனிதனுக்குள்ளும், குடும்ப உறவுகளுக்குள்ளும் நடக்கும் உளவியல் முரண்பாடுகளை, நெருக்கடிகளைப் பற்றி ஆராய்கின்றது. அத்துடன் மனிதன் வெளிப்படுத்தும் உணர்வுகள், உணாச்சிகளைப் பற்றி உடல் சார்ந்து பேசுகின்றது.)

 

2. திறவு கோல் (இந்த நூல் விலங்கியல் துறை சார்ந்தது. ஆனால் உலகளாவிய மருத்துவ ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பானது. இதன் ஊடாக மனித கலாச்சாரங்கள் முரண்பாடுகள் பற்றி சிலேடையாகவே பேசுகின்றது.)

 

இனி இந்த நூலுக்குள் வருவோம். இந்த இரண்டு நூல்களும், அவரின் முன்னைய நூல்கள் போல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதைவிட இவை மிக நுட்பமானவை. அதன் ஊடாக சொல்பவையோ சமூகம் தொடர்பானவை.

 

இலங்கைத் தமிழர்களின் இருண்ட சூனியமான வரலாற்றுப் போக்கில், இம் முயற்சிகள் சிறு அரும்புகள் தான். மனித சிந்தனையை சுயமாக சிந்திக்க வைக்கவும், சுய அறிவை மீளத் தேட வைக்கும் வகையில், உளவியல் ரீதியாக ஒவ்வொரு மனிதனையும் இது தூண்டுகின்றது.

 

இந்த நூல் உள்ளான விமர்சனங்களுக்கு அப்பால், அவர் தனது 74 வயதிலும் சமூகத்தை நுணுகி அணுக முடிந்த விடையங்கள் மிக முக்கியமானவை. இதை வாசித்தால் பாதிப்பின்றி, மாற்றமின்றி வெளிவர முடியாது. அந்தளவுக்கு மனிதம் சார்ந்து, அதன் ஒரு பக்கத்தைப் பேசுகின்றது.

 

இதை அவரின் எத்தனை பழைய மாணவர்கள் படிக்கின்றார்கள் என்பதே கேள்வி தான். முன்னாள் அதிபர், பழைய மாணவர் சங்கம் என்ற எல்லைக்குள், இதை வாங்குவதும் வெளியிடுவதும் என்ற சம்பிரதாயம் நடைமுறைகளே, பொதுவாக அதிகளவில் நிகழ்தகவாக நிகழ்கின்றது. இது மாற்றப்பாடாத வரை, இந்த மாதிரி நூல்கள் சொல்ல வரும் சமுதாய நலன் சார்ந்த விடையங்கள், வெறுமனே புத்தகத்தில் அச்சேறுவதுடன் முடிந்து போகின்றது.

 

நூல் பற்றி எனது விமர்சனம் என்பது, எதிர்காலத்தில் அவர் எழுத உள்ள தொடர்ச்சியான எழுத்தை, மேலும் ஒரு நுட்பமான சமூகவியலாளனாக அணுகிப் பார்க்கத் தூண்டுவது தான்.

 

இந்த இரு நூல்களும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சமூக விஞ்ஞானமாகவே பேசுகின்றது. ஆனால் இது ஒருபுறம் விஞ்ஞானமாக இருக்கின்ற அதே தளத்தில், விஞ்ஞானத்துக்கு நேர் முரணாகவும் அணுகுகின்றது. இதில் மதம் கற்பனையில் புலம்பியவைகளை அறிவாகவும், சினிமா குப்பையில் இருந்து பொறுக்கியதை அழுத்தமாகவும், பழைய தமிழ் இலக்கிய ஒப்பீட்டு எடுகோள்களையும் இதற்குள் ஆங்காங்கே புகுத்தியது என்பது, விஞ்ஞான அறிவியல் முறைக்கே நேர்மாறானது. இதன் விளைவு என்பது, பாக்கு நீரிணையை பற்றிய அறிவியலை, இராமன் பாலம் என்று கூறும் மூடத்தனத்துக்கு ஒப்பானதாக்கி விடுகின்து. இது இந்த நூலின் மீதான பொதுவான விமர்சனங்களில் ஒன்று.

 

இரண்டாவது முக்கிய விமர்சனம், பொதுவான இந்த உலக ஏற்பாட்டை எதிர்ப்பின்றி போராட்டமின்றி ஏற்றுக்கொள்வது. அனைத்துக் கட்டுரைகளும் இதையே சாரமாக கொண்டது. எந்த மாற்றமும் இயல்பாக்கம் பெற்று அதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட முடியும், எனவே சரணடை என்கின்றது.

 

குறிப்பான விமர்சனமூடாக, சில உதாரணங்கள் ஊடாக நுணுகிப் பார்ப்போம். 'கலை என்ற பெயரில் வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்களை அமைத்து அவைகளைப் பார்க்கவோ வாசிக்கவோ நாம் வழிசெய்து கொடுத்தபின் அவர்கள் அதன் வழிநடக்கும் போது அவர்களைக் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?" மிகச் சரியானதும், துல்லியமானதுமான கருதுகோள் தான்.

 

அப்படியாயின் யாரை ஏன் எப்படி எதற்காக குற்றம் சாட்டுவது? பாதிக்கப்பட்ட வரை குற்றம் சாட்டமுடியாது என்பது மிகச் சரியானது, இந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் குற்றவாளிகள் அல்லவா? இந்த நூல் இதை விவாதிக்க மறுப்பதும், குற்றம்சாட்ட மறுப்பதும் ஏன்? இந்த பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி? இந்த நூல் இதைச் சொல்லத் தவறுகின்றதே ஏன்? அனைத்துக் கட்டுரையும் இதை அடிப்படையாக கொண்டது.

 

இதை உருவாக்குபவனுக்கு எதிராக எதிர்வினையின்றி, இதன் பாதிப்பை அனுசரிக்கின்ற நழுவல் தீர்வுகளையும், ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பற்றியே படைப்புகள் பேசுகின்றது.

 

இதில் உள்ள முரண்பாட்டு வாதம், இதை நியாயப்படுத்திவிடுகின்றது. எதார்த்தமான நிலைமை இதுவென்று சொல்லி, இதை எப்படி இணக்கமாக்கி வாழ்க்கையாக்குவது என்ற உள்ளடக்கத்தில் தான் கட்டுரைகள் பெரும்பாலும் அமைகின்றது. நூல் ஆசிரியர் தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளும் நூல்கள் இதற்குள் அமைவதால், அது ஏற்படுத்தும் செல்வாக்கா? அல்லது ஆசிரியரின் நிலைப்பாடே இதுவா?

 

விமர்சனத்தின் மையமான விடையமே இது தான். 'கலை என்ற பெயரில் வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்களை அமைத்து அவைகளைப் பாhக்கவோ வாசிக்கவோ நாம் வழிசெய்து கொடுத்தபின்.." என்ற விடையத்தில், 'வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்க"ள் ஏன் படைக்கப்படுகின்றது. யாரால் எதற்காக இவ்வளவும்? ஆசிரியர் அதற்கு எதிரான அபிப்பிராயங்களை முன்வைக்க மறுப்பது தான், மையமான விமர்சனம்.

 

மனித நலனுக்கு எதிரான இவற்றுடன், எப்படித் தான் எம்மால் அனுசரித்துப் போக முடியும்? சமூக விஞ்ஞானி இதை ஏற்றுக்கொள்வானா? ஆசிரியரே இது போன்ற 'வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற" சினிமாவில் இருந்து, மதத்தில் இருந்தும் தனது கருத்தை வலுப்படுத்த உதாரணம் காட்டுகின்றார். நூலின் நோக்கத்துக்கே முரணான ஆச்சரியம் தான்.

 

1. சமுதாயம் இப்படி இருக்கின்றது அல்லது மாறுகின்றது என்பதால், இருப்பதை நியாயப்படுத்தி, அதற்குள் விலங்கு மீன் போல் நழுவி வாழும் வகையில் தீர்வை வைக்கின்றார்.

 

2. இந்த போக்கு சரியானதல்ல என்ற விடையம் உணரப்பட்டாலும், அதன் மீது விமர்சனத்தை முன்வைக்கவில்லை. அந்த பக்கத்தைப் புறக்கணிக்கின்றார். அதாவது கண்டும் காணாமல் வாழப் பழகுதல் அறிவு என்கின்றார்.

 

இதை இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் பார்த்தால், நோய் ஏற்பட்ட உடன் தடுப்பு மருந்து கொடுப்பது ஒருபுறம், மறுபக்கத்தில் நோய் தோன்றும் காரணமான சூழலை இனம் கண்டு அதை அகற்றுதல் என்ற இரண்டு பணிகள் உண்டு. இந்த இரண்டையும் ஒரு மருத்துவராக, அணுகவும் தீர்க்கவும் முற்படவில்லை.

 

ஒரு சமூகவியலாளன் இரண்டையும் செய்ய வேண்டும். இந்த நூல் தடுப்பு மருந்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகப் பேசுகின்றது, இந்த நோய் தோன்றுவதற்கான சூழலை மாற்றுவதைப் பற்றியும் அதற்கு மருந்து கொடுப்பதைப் பற்றியம் பேசவில்லை.

 

(கரப்பான் பூச்சிக்கான) கிருமி கொல்லி போன்றது இது. உடனடியாக அதை கொல்வதும், அதே நேரம் அது முற்றாக அழியாது மறுஉற்பத்தியை தூண்டுவதை அடிப்படையாக கொண்டே கிருமி கொல்லி தயாரிக்கப்படுகின்றது. கிருமி முற்றாக அழிந்தால், கிருமி கொல்லி விற்காது என்பதால், மீள் கிருமி உற்பத்தி தூண்டப்படுகின்றது. இதை அடிப்படையாக கொண்ட தத்துவம் தான் கட்டுரையின் சாரம்.

 

தொலைபேசி பற்றி 'காதலிப்பதற்கும் அது தேவை அல்லவா?" இதை அவர்கள் தெரிவு செய்கின்றனரா அல்லது தெரிவு செய்யத் தூண்டப்படுகின்றனரா? தேவைக்கு மாறாக தூண்டப்படுகின்றனர். இந்த தூண்டல் தான், விமர்சனமின்றி எங்கும் எதிலும் ஏற்கப்படுகின்றது. இதை ஆசிரியர் பிரதிபலிப்பது அபத்தம்.

 

மேலும் பார்ப்போம். '.. வியாபாரமாகும் பொழுதுதான் வாழ்வின் விழுமியங்கள் நொருங்கிப் போவதைக் காணமுடிகிறது" முழு உலகையும், இதற்கு ஊடாக புரிந்து கொள்ள இது போதும். ஆனால் இதுவே வாழ்வாகி, இது இயல்பில் உணரப்படுவதில்லை.

 

இதை எழுதிய ஆசிரியர், தனது கட்டுரைகளில் இதை போதுமானளவுக்கு விழிப்புணர்வுடன் இதைக் கையாளவில்லை. உண்மையில் ஒரு விளம்பர உதாரணத்தின் ஊடாக இதை அவரால் சொல்ல முடிந்தது. ஆனால் (விஞ்ஞான) அறிவியல் முதல் அனைத்தும் இதுவாகிவிட்டதை, தனது கட்டுரைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. (விஞ்ஞான) கண்டுபிடிப்புகள் இதற்காகத் தான் என்பதை அவர் காணவும், காட்டவும் தவறிவிடுகின்றார். சமூக நலனற்ற பொருள் உலகத்தில் அதை உள்வாங்கவும், நுகரவும், அதற்குள் இணங்கி வாழவும், செயற்கையாகவே மனிதன் மந்தையாக்கப்பட்டு தூண்டப்படுகின்றான். இதற்குள் தான் மனித உறவுகள் முதல் சிந்தனை வரை வக்கிரமாகி விட்டதை, நுணுகிப் பார்க்க முடிவதில்லை.

 

மனித உறவில் அனைத்தும் இதுவாகிவிட்டதை காணமறுப்பது, சமூகவியலாளனுக்கு உள்ள சிந்தனை முறையில் உள்ள அடிப்படைத் தவறாகும்.

 

இன்றைய விஞ்ஞானியின், இன்றைய மருத்துவரின் கண்டுபிடிப்புகள் முதல் அது எதுவாக இருந்தாலும், அவனின் அடிப்படையான நோக்கம் தான் என்ன? அவனின் சிந்தனை தான் என்ன? மனித குலம் மீதான, அக்கறையா அது? அதற்காகத் தான் அவன் அதில் ஈடுபடுகின்றானா? பதில் சொல்லவேண்டிய கடமை உண்டு.

 

74 வயதிலும் தொடர்ந்து கற்றும், கற்பிக்கும் உங்கள் முயற்சி, நூல் மூலம் புகழ் பணம் சம்பாதிக்கவல்ல என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். உங்களுக்கு என்று ஒரு சமூக அக்கறையும், சமூக நோக்கமும் உண்டு, இதில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நோக்கம் நேர்மையானது, வெளிப்படையானது.

 

இந்த அடிப்படையில் தானா இன்றைய விஞ்ஞானமும், அறிவியலும் முன்னேறுகின்றது. இல்லை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அதை சொல்ல தவறுவது என்பது, அல்லது அதை முதன்மையானதாக உணராது இருப்பது என்பதே எமது விமர்சனம்.

 

நீங்கள் சொல்லும் விடையத்தைப் பாருங்கள். '..பெரிய உடலமைப்பைக் கொண்ட பண்ணை விலங்குகளை உருவாக்குவதால் பெரிய இலாபம் விலங்கு பண்ணை நடத்துவோருக்குக் கிடைக்க முடியும்" உங்கள் மற்றொரு கட்டுரையில் 'வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் முகமாக ஆடு, கோழிகளுக்கு புர் என அழைக்கப்படும் வளர்ச்சி ஓமோன் ஊட்டப்படுகின்றது. .. குழந்தைகள் அந்த இறைச்சியை உட்கொள்ளும் போது அதீத வளர்ச்சியைத் தூண்டுகின்றது" இதன் விளைவு, சமூக நெருக்கடிகள், தனிமனித அவலங்களும் கூட தோன்றுகின்றது. இதக்கு முரணானதாக உங்கள் முதல் கூற்று உள்ளது. அதை ஆதரிக்கின்றீர்கள். இரண்டாவது ஏற்படுத்தும் விளைவுகளை சரிக்கட்ட முனைகின்றீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

 

இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது, அதீத வளர்ச்சி மருந்து ஜரோப்பாவில் மிருகங்களுக்கு கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை சட்டவிரோதமாக, மாபியா கடத்தி வருவதும், விவசாயிகள் இதை பயன்படுத்தியதை கண்டுபிடித்த விவசாய அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

பயன்பாட்டின் விளைவுக்கான தீர்வு, மறுபக்கம் பயன்பாட்டின் நோக்கத்தை தடுக்கும் வகையில் எதிர்வினை என்ற இரண்டு கூறுகள் உண்டு. ஒரு அறிவினை கண்ணை மூடி ஆதரிப்பது என்பது கட்டுரையாளரின் நோக்கமானால், அதுவும் அறிவாகாது.

 

இங்கு இயற்கையின் தேர்வை ஆசிரியர் தனது கவனத்தில் எடுக்கத் தவறுவது வெளிப்படுகின்றது. இயற்கையில் தேர்வை அழித்து மனிதன் வாழமுடியாது. இயற்கையின் தேர்வினைப் பயன்படுத்தி இணங்கி வாழ முடியும். அதை மறுத்ததல்ல. இன்றைய அறிவியலும் அறிவியல் முறைகளும், வாழ்வியலும் வாழ்வியல் முறைகளும், விஞ்ஞானமும் இயற்கையை மறுக்கின்றது. இயற்கையை அழிக்கின்றது. இவையெல்லாம் எதற்காக? மனித நல்வாழ்வுக்காகவா? அல்லது பணம் சம்பாதிப்பதற்காகவா?

 

நோக்கம் தவறானதாக உள்ள போது, அறிவியல் மனிதனுக்கு எதிராகவே கையாளப்படுகின்றது. அதாவது குறுகிய பயன்பாட்டின் மீது, குறுகிய நோக்கில் அதை முழு சமூகம் மீதும் திணித்து அது இயக்கப்படுகின்றது. ஏன், இது முழு இயற்கைக்கும் எதிராகவே இயக்கப்படுகின்து.

 

இதன் விளைவுகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தான், அறிவியல் தகவலுக்கு அப்பால் இந்த நூல் கூற முனைகின்றது. ஆனால் இதை முன்கூட்டியே தடுப்பது எப்படி என்பதை, இந்த நூல் பேச மறுக்கின்றது. இதனால் அதை ஆதரித்து விடுகின்ற தவறு, அதன் உள்ளடக்கமாகி விடுகின்றது.

 

பி.இரயாகரன்
26.03.2008