Language Selection

சீலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக 30.08.2011 அன்று இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாக பொய்க் குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கமைத்தது Tamil Solidarity (தமிழ் ஒருங்கமைப்புக் குழு) என்ற அமைப்பே. வழமையாக லண்டனில் ஒரு ஆர்பாட்டம் என்றாலோ அல்லது ஊர்வலம் என்றாலோ அதை ஒழுங்குபடுத்துவது புலிகளின் அமைப்புக்களே.


இம்முறை இவர்கள் ஒழுங்கு செய்யாமல்
Tamil Solidarity யினரை முன்னிறுத்தி ஒழுங்கு செய்ததிற்கு நிச்சயமாக அரசியல் தான் காரணம். இவர்கள்,  இது ஒரு இராஜ தந்திரமான செயற்பாடு அல்லது வளைந்து சுழித்துத் தான் சில விடயங்களை செய்ய வேண்டும் என நியாயம் கற்பிக்கலாம்.


எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளை சரியாக இணங்கண்டு அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தி  எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களிற்கும் இடமின்றி போராட்டத்தினை முன்னெடுப்பதுவும் போராட்டத்தின் நட்பு சக்திகளுடன் மட்டுமே இராஜ தந்திரமான செயற்பாடு அல்லது விட்டுக் கொடுத்துப் போவது என்பது சரியான போராட்ட வழிமுறையாகும். ஆனால் எமது போராட்ட வரலாற்றின் கடந்த காலம் துர்அதிஸ்டவசமாக அப்படி இருந்திருக்கவில்லை. மாறாக உள்நாட்டில்  தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய எத்தனையோ நல்ல சக்திகளையும், ஏனைய தேசிய இனங்களின் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்கத் தவறியதுடன்; எமது சொந்த மக்களையும் போராட்டத்தில் இணைக்காது பார்வையாளர்களாகவும் வைத்திருந்ததுடன், உலகெங்கும் இருக்கின்ற மக்களின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுடனும் மக்களுடனும் இணைய மறுத்து; பரந்துபட்ட உலக மக்களை அடக்கியாளும் வல்லாதிக்க அரசுகளை மட்டுமே நம்பி செயலாற்றியதன் விளைவு தான் எமது இன்றைய நிலைக்கு காரணமாகும்.

 

இன்று தூக்கினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மூவரும் புலிகளை நம்பியதால் புலிகளினால் ஏமாற்றப்பட்ட நபர்களே. இவர்களை விடுதலை செய்ய போராட முன் நிற்க வேண்டிய தார்மீக கடமை இந்த புலம்பெயர் புலிகளின் அமைப்புக்களுக்கே உரியது. ஆனால் இவர்கள் இதனை தவிர்க்கின்றமைக்கு  உண்மையான காரணம், இவர்கள் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியுடனும், பாரதிய ஜனதா  கட்சியுடனும் முரண்பட விரும்பாமையே. அண்மைக்காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மேல் மட்டத்தினருடன் புலம்பெயர் புலிகளின்  அமைப்புக்கள்  பல நெருக்கமான சந்திப்புக்களை நிகழ்த்திக் கொண்டிருப்பது அனைவரும் பத்திரிக்கை செய்திகளில் அறிந்த ஒன்றே. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இந்த தூக்கு தண்டனையினை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றனர்.

 

காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா அன்னையின் முகத்தில் இரக்கத்தினைக் கண்டவர்கள் தான் இந்த புலி அமைப்புக்களின் முக்கியஸ்த்தர்கள். இன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிட தீர்மானத்துள்ள போது எங்கே போனது இவர்கள் கண்ட அன்னையின் இரக்கம்?

 

முள்ளிவாய்காலில் மக்களும், புலிகளும்; இலங்கை அரசு, இந்தியா, மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகள் விரித்த பொறிக்குள் அகப்பட்டு உயிருக்காக அவலக்குரல் எழுப்பிய போது “இந்தியா கைவிடாது போரை நிறுத்தி அனைவரையும் காப்பாற்றும் அமெரிக்க கப்பல் வருகின்றது எல்லோரையும் காப்பாற்றும் என்று உண்மைக்கு புறம்பான கதைகளை கூறி இந்தியாவினதும் மேற்குலகினதும் திட்டத்திற்கு அமைவாக போலி நம்பிக்கைகளை வழங்கி பல ஆயிரக்கணக்கான எமது உறவுகளின் படுகொலைக்கு இந்த புலம்பெயர் புலிகளின் அமைப்புக்களில் இருந்த முக்கியஸ்த்தர்கள் பலர் காரணமாக இருந்தனர் என்பதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

 

புலம்பெயர் புலிகளின் அமைப்புக்களின் பிரமுகர்களின் இன்றைய நேரடியான இந்தியா மற்றும் மேற்குலக அரசுகளுடனான நெருக்கமான உறவுகளே மேலே கூறியவற்றினை அப்பட்டமாக உறுதி செய்கின்றன.

 

எமது மக்களை முள்ளிவாய்க்காலில் வைத்து இனப்படுகொலை செய்வதற்கு பெரும் உடந்தையாக நின்று சகல உதவிகளையும் வழங்கியதுடன், புலிகளின் தலைவர்களை கைது செய்து பகிரங்கப்படுத்தாது படுகொலைகள் செய்வதற்கு ஆணையிட்டும்,  உலகத்திற்கு பொய்ப் பரப்புரைகளை பரப்பி இலங்கை சிங்கள பாசிச அரசிற்கு உற்ற துணையாக இருந்ததும் இந்தியா தான்.

 

ஆனால் புலம்பெயர் புலிகளின் அமைப்புக்களும் ஏனைய தமிழ் குறுந்தேசியவாத அமைப்புக்களும் இவற்றை எல்லாம் இலகுவாக மறைத்து விட்டு, எந்த பிராந்திய வல்லரசு எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை திட்டமிட்டு தனது அரசியல் பொருளாதார நலன்களிற்க்காக வளர்த்து, தனது நோக்கம் நிறைவேறியதும் அழித்து சின்னா பின்னமாக்கியதோ அந்த இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் ஆளும் வர்க்கம் எமக்கு ஒரு தீர்வினை பெற்றுத்தரும் என மீண்டும் மக்களை முட்டாள்கள் ஆக்க முனைகின்றனர்.


 

இந்த ஆர்பாட்டத்தை ஒழுங்கமைத்தது Tamil Solidarity (தமிழ் ஒருங்கமைப்புக் குழு). போராட்டத்தில் பங்கு பற்றும் அமைப்புக்கள் தத்தமது சொந்த கோசங்களுடன் பங்குபற்றவும், துண்டுப்பிரசுரங்களை வினையோகிக்கவும் அனுமதித்த இருந்த நிலையில்; புதிய திசைகளின் துண்டுப் பிரசுரத்தினை கொடுக்கவிடாமல் மாற்றுக் கருத்துக்கு இங்கு இடம் இல்லை என்று பறித்தனர் புலிகள்.தை Tamil Solidarity யினரும் கண்டிக்காது மௌனம் சாதிப்பதன் மூலம் மாற்றுக் கருத்துக்கான புலிகளின் அடாவடித்தனத்தை அங்கீகரிப்பவர்காளாகவே தம்மை அடையாளம் காட்டி நின்றனர்.

 

தமிழ் மக்களின் உரிமைகளை கோரி நடைபெறுகின்ற அனைத்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களில்; சிங்கள அரசினையோ அன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை தமது அரசியல் பொருளாதார நலன்களிற்க்காக பயன்படுத்த முனைகின்ற இந்தியா போன்ற நாடுகளை சார்ந்து இயங்காத அமைப்புக்கள், தனிநபர்களை ஒருங்கிணைத்து; அவர்களது கருத்துச் சுதந்திரத்தினை அங்கிரித்து ஒன்றுபட்ட அமைப்பாக இயங்கும் போது தான் பொது எதிரிக்கு எதிராக நாம் பலம்பெறுவதுடன், எமது தேசிய உரிமைகளை வென்றெடுப்பதற்க்கான வழியில் முன்செல்ல முடியும்.

கடந்த பல பத்து வருடங்களில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நேசித்தவர்களை, அவர்களது கருத்துக்களை உள்வாங்க மறுத்து மாற்றுக் கருத்தாளர்கள் என்ற காரணத்திற்க்காக அழித்தொழித்தது போன்ற செயற்பாடுகளை இனியும் தொடரவிடாது; தமிழ் மக்கள் போராட முன்வர வேண்டும். இது மக்களே உங்களின் வாழ்வுக்கான போராட்டம். நீங்கள் இதிலிருந்த ஒதுங்கினால் உங்களை மேய்த்து வருகின்ற பயனை அடைய இங்கு பல மேய்ப்பர்கள் உலாவருகின்றனர்.

சீலன்

2/09/2011