இயந்திரத்துப்பாக்கியுடன் கொலைவெறியில் தெருத்தெருவாக அலைந்துதிரிந்த எஸ்.ஆர். சிவராம்

புளொட்டினால் எம்மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்ட விசமத்தனமான பிரச்சாரங்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு, எமக்கு மிகவும் நம்பிக்கையானவர்களுடன் பேசுவதற்கு முதல்நபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இக்பால் என்பவராகும். இக்பாலை சந்திப்பதற்கு ஜீவனும் பாலாவும் செல்வதென்றும், எம்மால் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளை யாழ்நகரில் ஒட்டுவதற்கு விஜயன், தர்மலிங்கம், ரஞ்சன் ஆகியோருடன் நானும் செல்வதென்றும் முடிவு செய்தோம். அதேவேளை நாம் இந்தியா சென்று அங்கு சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களை சந்தித்துப் பேசுவது என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கத்தொடங்கியதோடு தளத்தில் நின்றே புளொட்டின் அராஜகங்களுக்கெதிராகப் போராடுவது என்ற கருத்துநிலைக்குச் சென்றோம்.

எஸ்.ஆர். சிவராம்

 

இதனால் இந்தியாவில் புளொட்டிலிருந்து சந்ததியார் தலைமையில் வெளியேறியவர்களை தளம்வரும்படியும், தளத்தில்தான் எம்மைப் புரிந்துகொண்ட மக்கள் இருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி கண்ணாடிச்சந்திரனால் விபுலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இந்திய முகவரிக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். இப்பொழுது எமது அனைத்து செயற்பாடுகளுக்கும் மக்கள் நடமாட்டம் குறைந்த இரவுநேரத்தையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. காரணம், புளொட்டின் இராணுவப் பிரிவினரைச் சேர்ந்தவர்களில் ஒருபகுதியினரும், எம்மை உளவு பார்ப்பதற்காக அமர்த்தப்பட்டவர்களும் பகல்வேளைகளில் எம்மை வேட்டையாடுவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு - ஈழவிடுதலைப் போராட்டத்தை ஒரே நோக்கமாகக் கொண்டல்ல - அலைந்து திரிந்தனர். நண்பர் தாசனின் வீட்டிலிருந்து ஜீவனும் பாலாவும் இக்பாலை சந்தித்துப் பேசுவதற்கென புறப்பட்டுச் சென்றனர். "தோழர்கள் எங்கே?" என்ற தலைப்பிட்ட சுவரொட்டிகளை தயாரித்து அந்தச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு விஜயன், தர்மலிங்கம், ரஞ்சன் ஆகியோருடன் நானும் யாழ்நகர் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.

நாம் குருநகர் சின்னக்கடைச் சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தபோது புளொட்டின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தீபநேசனும் எஸ்.ஆர். சிவராமும் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். இயந்திர துப்பாக்கி(எஸ்.எம்.ஜி)யை கையில் தாங்கியவாறு எஸ்.ஆர். சிவராம் மோட்டார் சைக்கிளின் பின்னே இருந்ததைக் காணமுடிந்தது. நாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவான பின் மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரனுடனும் இராணுவப்பிரிவினரில் ஒருபகுதியினருடனும் எம்மை அழிப்பதற்கென கொலைவெறியுடன் அலைந்த எஸ்.ஆர். சிவராம், எம்மை எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் சந்தித்தவுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எஸ்.எம்.ஜியுடன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கியவேளை எஸ்.ஆர். சிவராமின் கைகளிலிருந்த எஸ்.எம்.ஜியை நாம் பறித்தெடுத்துக் கொண்டோம். எஸ்.ஆர். சிவராமால் எம்மைக் கொல்வதெற்கென கொண்டுவரப்பட்ட எஸ்.எம்.ஜி இப்பொழுது எமது கைகளில் இருக்க குருநகர் சின்னக்கடைச் சந்தியில் எமக்கும் எஸ்.ஆர். சிவராமுக்குமிடையில் கடும் வாக்குவாதம் தொடங்கியது.

 

நாம் எஸ்.எம்.ஜியுடன் வாக்குவாதத்தில் இறங்கியிருந்ததை வீதியோரங்களில் அவதானித்துக் கொண்டிருந்த குருநகர் மக்கள் கண்டதும் எம்மைச் சூழ்ந்து கொண்டனர். எம்மைக் கொலை செய்வதற்கென எஸ்.ஆர். சிவராமால் கொண்டுவரப்பட்ட எஸ்.எம்.ஜியை நாம் திருப்பிக் கையளிக்க முடியாது என வாதிட்டோம். எஸ்.எம்.ஜியை திருப்பிக் கொடுத்தால் தாம் அங்கிருந்து போய்விடுவதாக எஸ்.ஆர். சிவராமும் தீபநேசனும் தெரிவித்தனர். ஆனால் நாம் எஸ்.எம்.ஜியை திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. எமது நீண்டநேர வாக்குவாதத்தின் பின் அவர்கள் கொண்டுவந்த எஸ்.எம்.ஜியை அவர்களிடமே கொடுத்துவிட வேண்டுமென்ற குருநகர் மக்களின் தாழ்மையான வேண்டுதலின் பேரில் எஸ்.எம்.ஜியை எஸ்.ஆர். சிவராமிடம் கையளித்துவிட்டு யாழ்நகர் சென்று சுவரொட்டிகளை ஒட்டியபின் மீண்டும் நண்பர் தாசன் வீட்டுக்கே வந்து சேர்ந்தோம். ஜீவனும் பாலாவும் நீண்டநேரமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) யாழ் மாவட்ட அமைப்பாளர் இக்பாலுக்கு புளொட்டுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளையும், நாம் ஏன் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானோம் என்பதையும் தெளிவுபடுத்திய அதேவேளை, நாம் தலைமறைவாகத் தங்குவதற்கான உதவியையும் கோரியிருந்தனர். தனது வீட்டிலேயே சிலர் பாதுகாப்பாக தங்கமுடியும் என்று கூறிய இக்பாலின் சாதகமான பதிலுடன் பின்னிரவு நண்பர் தாசனின் வீட்டை ஜீவனும் பாலாவும் வந்தடைந்தனர்.

இராணுவப்பயிற்சி பெற்றிருக்காததோடு, எஸ்.எம்.ஜியை எப்படி உபயோகப்படுத்துவது என்றே அறிந்திராத எஸ்.ஆர். சிவராமிடமிருந்து குருநகர் சின்னக்கடைச் சந்தியில் எஸ்.எம்.ஜியை வெறுங்கைகளுடன் இருந்த எம்மால் பறித்தெடுக்கப்பட்ட சம்பவம் புளொட்டுக்கு நாம் சவால் விடுவதாக அமைந்திருந்ததுடன், நாம் எந்தப் பகுதியில் தலைமறைவாக இருக்கிறோம் அல்லது நடமாடுகிறோம் என்று இதுவரை அவர்களிடமிருந்த கேள்விக்கும் கூட பதில் கிடைத்தததாகவும் அமைந்துவிட்டிருந்தது.

குருநகர் சின்னக்கடைச் சந்தியில் எஸ்.ஆர். சிவராமிடமிடமிருந்து எஸ்.எம்.ஜியை பறித்தெடுத்த சம்பவம் நடந்த மறுநாள் குருநகர் பகுதியை மையப்படுத்தி புளொட் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தது. புளொட்டின் இராணுவப்பிரிவையும், உளவுப்பிரிவையும் சேர்ந்தவர்களின் அதிகரித்த நடமாட்டத்தை குருநகர்ப்பகுதி மக்கள் அவதானித்திருந்தனர். நாம் அனைவரும் நண்பர் தாசன் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தபோதும் புளொட்டினால் வரக்கூடிய ஆபத்தையும் நன்கு உணர்ந்து கொண்டவர்களாக இருந்தோம். நண்பர் தாசனும் நாம் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டதால் எம்மை வெவ்வேறு இடங்களில் தங்கவைப்பதற்கு முன்வந்தார். இதனடிப்படையில் நண்பர் தாசனின் வீட்டுக்கு முன்னிருந்த அவரது உறவினரின் வீட்டில் ஜீவனையும் என்னையும் தங்க வைத்தார். ஆனால் புளொட் இரர்ணுவப்பிரிவினரும் புளொட்டின் உளவுப் பிரிவினரும் எம்மைத் தேடியலைந்ததன் பயனாக நாம் தலைமறைவாக இருந்த தாசனின் வீட்டை அறிந்து கொண்டனர். ஜீவனும் நானும் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த அவர்களது உறவினரான பாடசாலை மாணவன் (கனடாவில் தற்போது வசிக்கும் அவர் பெயர் குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்கிறேன்) எம்முடன் புளொட் பற்றிய பலவிடயங்களையும் பேசிவிட்டு பின்னர் நாம் தலைமறைவாக இருக்கும் தகவலை புளொட் மாணவர் அமைப்பில் உள்ள அவரது பொறுப்பாளருக்கு தெரிவித்துள்ளார். புளொட் இராணுவப் பிரிவினருக்கு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தகவல் அனுப்பி வைத்தனர்.

மக்கள் மிகவும் செறிந்துவாழும் இடமாகவும், எப்பொழுதுமே சனநடமாட்டமும் ஒருவித கலகலப்பும் நிறைந்த குருநகர்ப் பகுதியிலுள்ள நண்பர் தாசனின் வீடு புளொட் இராணுவப்பிரிவினரால் எம்மைக் கைதுசெய்து கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு இரவுநேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டது. இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டிருந்ததோ இல்லையோ, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளும், ஈழவிடுதலைப் போராட்டப் போராளிகள் மத்தியிலும் பெரும் மாற்றத்தை - அரசியலில் தெளிவற்றவர்களால் உருவாக்கி விடப்பட்ட ஆயுதக்கலாச்சாரத்தை, ஒரு கொலைக்கலாச்சாரத்தை - ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு எம்மீதான புளொட் இராணுவப் பிரிவின் சுற்றிவளைப்பும் கூட ஒரு எடுத்துக்காட்டாய் இருந்தது. ஆனால் நண்பர் தாசனின் வீட்டில் நாம் தலைமறைவாக இருந்ததை அயலவர்கள் அறிந்திருந்தனர். புளொட் இராணுவப் பிரிவின் அசாதாரண வருகையைக் கண்ணுற்ற நண்பர் தாசனின் வீட்டாரும் அயலவர்களும் முன்கூட்டியே எமக்குத் தகவல் கொடுத்ததால் நாம் தங்கியிருந்த வீடுகளிலிருந்தும் நண்பர் தாசனின் வீட்டிலிருந்தும் பின்புறமாக வெளியேறிவிட்டோம்.

நண்பர் தாசனின் வீட்டில் எம்மைக் கைது செய்யமுடியாமல் போனதால் தாசனின் வீட்டிற்குள் அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு ஆத்திரமுற்றவர்களாய் புளொட் இராணுவப் பிரிவினர் திரும்பினர்.

1984 ஆரம்பப் பகுதியில் கொக்குவில் இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது அந்த சுற்றிவளைப்பிலிருந்து பார்த்தனும் ஆனந்தனும் நானும் தப்பி வெளியேறியிருந்தோம். இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய எம்மை இன ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் ஒரு அரசைப் பாதுகாப்பதற்காக இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பாக அது அமைந்திருந்தது.

ஆனால் இப்போதோ இன ஒடுக்குமுறைக்கெதிராக, ஈழவிடுதலைக்காகப் பேராடுவதாகக் கூறிக்கொண்ட புளொட் அதே நோக்கங்களுக்காக அவர்களுடன் இணைந்து போராடிய எம்மை தமது இராணுவத்தைக் கொண்டு சுற்றிவளைத்து கைது செய்து கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட் எத்தகையதொரு பாத்திரத்தை வகிக்கிறது என்பதை எமக்கும் மக்களுக்கும் கூட வெளிக்காட்டி நின்றனர்.

புளொட் இராணுவத்தினரால் நண்பர் தாசனின் வீடு சுற்றிவளைக்கப்பட்டதிலிருந்து தப்பி ஓடிய நாம் மீண்டும் குருநகரிலேயே ஒன்றுகூடினோம். புளொட் இராணுவத்தினரின் செயலைப் பார்த்த குருநகர் மக்கள் மூக்கின் மேல் தமது விரலை வைத்தவர்களாக் காணப்பட்டனர். இதுவரை இலங்கை இராணுவத்தினரின் சுற்றிவளைப்புகளையே கண்டு கலக்கமடைந்தவர்களுக்கு விடுதலை இயக்கம் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒரு இயக்கம், அதுவும் முற்போக்குக் கருத்துக்களால் தன்னை ஒரு புரட்சிகர இயக்கமாக வெளிக்காட்டிக் கொண்ட ஒரு இயக்கம், நடைமுறையில் இலங்கை இராணுவத்திலிருந்து எந்தவகையிலும் மாறுபட்டதாக இருக்கவில்லை என்பதை எண்ணியவர்களாக வெதும்பிக் கொண்டனர். குருநகரில் தொடர்ந்து நாம் தங்கியிருப்பது எமதுயிருக்கு மிகவும் அச்சுறுத்தலான விடயம் என்பதோடு எம்மைத் தேடி கொலைவெறியில் திரியும் புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினரால் நாம் அனைவரும் அநியாயமாகக் கொல்லப்படலாம் என்ற நிலையில் எம்மை பாதுகாப்பான கிராமங்களுக்கு தப்பிச் சென்றுவிடுமாறு நண்பர் தாசனும் அவரது அயலவர்களும் ஆலோசனை வழங்கினர். தப்பிச் செல்வதற்காக நண்பர் தாசனும் அவரது அயலவர்களும் தமது சைக்கிள்களையும் தந்துதவினர்.

இலங்கை இராணுவத்தினதும், எம்மை தேடி கொலைவெறியில் திரியும் புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினரினதும் பிடிகளுக்குள் அகப்படாது தப்பிச்செல்வதும் பாதுகாப்பாக வேறொரு இடத்தை தெரிவுசெய்து தங்குவதும் நடைமுறைச்சாத்தியமற்றதாக தோன்றியது. ஆனால் கொலைவெறியுடன் எம்மைத் தேடி அலைந்த புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினர் குருநகரை மையப்படுத்தி தமது தேடுதல் நடவடிக்கைகளை மிகவும் பலப்படுத்தியிருந்ததால் குருநகரில் இருந்து நாம் வெளியேற வேண்டியவர்களாக இருந்தோம். எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்மலிங்கம் தனது ஊரான கைதடிக்குச் சென்றால் அங்கு நாம் பாதுகாப்பாகத் தங்குவதற்கு தேவையான அனைத்தையும் தன்னால் செய்யமுடியும் என்று கூறினார். இதனால் அனைவரும் கைதடிக்குச் செல்ல முடிவெடுத்தோம். நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களுடன் எம்மைத் தேடியலைந்த புளொட் இராணுவம் ஒருபுறமும், ரோந்துகளும், சோதனைகளும் என அலைந்துதிரியும் இலங்கை இராணுவம் மறுபுறமுமாக இருக்கையில் நிராயுதபாணிகளான நாம் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடியவாறு குருநகரிலிருந்து கோப்பாய் - கைதடி பாலம் வழியாக கைதடியை சென்றடைந்தோம்.

கைதடியில் புளொட் மக்கள் அமைப்பில் முன்னணியில் செயற்பட்ட சண்முகநாதன்(சண்) உட்பட மணியண்ணை, லிங்கம், யுவி, ஜெயா, ரவி போன்றோரும் மற்றும் பலரும் எமக்கு பாதுகாப்பு தருவதற்கு துணிச்சலுடன் முன்வந்தனர். நண்பர் தாசன் வீட்டில் நாம் அனைவரும் ஒன்றாக தலைமறைவாக இருந்தது போலல்லாமல், இப்போது வெவ்வேறு வீடுகளில் இருவர் இவராகத் தங்கியிருந்தோம். ஆனால் புளொட் இராணுவப் பிரிவினரும், உளவுப் பிரிவினரும் எம்மை தேடியலைந்த வண்ணம் இருந்தனர். இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்கென இளைஞர்களையும் யுவதிகளையும் அணிதிரட்டி உருவாக்கப்பட்ட புளொட் அமைப்பு இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக போராடுவது என்பதை பின்தள்ளி வைத்துவிட்டு, தமது அமைப்பில் செயற்பட்டவர்களை சுற்றி வளைத்து தேடி கொன்றொழிப்பதற்காக அலைவதிலுமேயே தமது முழுநேரத்தையும், ஆற்றலையும் செலுத்தி வந்தனர்.

நாம் கைதடியில் இரண்டு நாட்கள் தலைமறைவாக தங்கிவிட்டிருந்த நிலையில் புளொட்டின் தொழிற்சங்க அமைப்பில் செயற்பட்டு வந்த, ஆனால் நாம் புளொட்டில் இருந்து வெளியேறிய போது புளொட் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொண்ட சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோரை சந்தித்து நிலைமைகளை அறியவென விபுலும், பாண்டியும் திருநெல்வேலிக்கு சென்றனர். திருநெல்வேலியில் சுரேன், இடிஅமீன்(ஞானம்) போன்றோரை சந்தித்து நடப்பு நிலைமைகளை விபுலும் பாண்டியும் பேசிக் கொண்டிருந்த போது தகவலறிந்த புளொட்டின் இராணுவப் பிரிவினர் அவ்விடத்தை சுற்றி வளைத்துக் கொண்டனர். புளொட் இராணுவப் பிரிவின் ஒருபகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றி வளைப்பில் விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோர் புளொட் இராணுவத்தின் ஒரு பகுதியினரால் கைது செய்யப்பட்டனர். கொலை வெறித்தனத்துடன் அலைந்து திரிந்த புளொட்டின் இராணுவப் பிரிவின் திருநெல்வேலி சுற்றிவளைப்பில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்ட பாண்டி, தனது பல்கலைக்கழக நண்பனும் தமிழீழ விடுதலை இயக்க(TELO) அமைப்பில் அங்கம் வகித்தவருமான ஜே.பீ என்பவரை சந்தித்து தனக்கு ஏற்பட்ட கதியை எடுத்துக் கூறினார்.

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27