Wed06032020

Last update02:08:07 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் யாழ் மாநகர சபையில் ஒரு வெறிநாய்! -விஜயகுமாரன்

யாழ் மாநகர சபையில் ஒரு வெறிநாய்! -விஜயகுமாரன்

  • PDF

“ஆயிரமாய் கவிதை சொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெற்றவளே உன் பெருமை
ஒத்தை வரி சொல்லவில்லையே”

பம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போராளி சுவரில் வரைந்த வரிகள் இவை. தமிழின விடுதலைக்காக தன் தாய், தந்தையை, உடன்பிறப்புக்களை விட்டு வெளியே வந்து போராடிய ஒருபெண் முள்ளிவாய்க்கால் முடிவின் பின் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும், பாலியல் கொடுமைகளையும் அனுபவித்த போது தன் தாயை நினைத்து, பெற்ற மடி தேடி மூடிய சிறைச்சுவர்களில் இரத்தத்தால் எழுதிய வரிகள் இவை.

 

 

 

“கம்பி அருகில்
காகிதம் தருவதற்காய்
நித்தம் நித்தம் காத்திருக்கிறேன்”

அந்தச் சிறையில் இருந்த மற்றொரு பெண் போராளியின் ஏக்கப் பெருமூச்சு இது. தன் படிப்பை, வேலையை, இளமையை, எதிர்காலத்தை விடுதலைக்காக விட்டெறிந்தவள்; இன்று தன் தனிமையை, தன்னுடல் இராணுவப் பேய்களால் பிய்த்தெறியப்பட்டதை, தன் ஆன்மா சிதைக்கப்பட்டதை ஒரு சிறு கடுதாசித்துண்டிலேனும் தன் அன்புக்குரியவர்களிற்கு சொல்ல வேண்டும் என்று பரிதவிப்புடன் குருதி வடியும் இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுதிய வரிகள் இவை.

“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல என்னுடைய உடல் இந்த மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.”

வறுமை நிறைந்த இருளர் பழங்குடி ஒன்றில் பிறந்த தோழி செங்கொடியின் இறுதி வரிகள் இவை. தமிழகத்தில் தன் குடும்பம் வறுமைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் இடையில் தவிப்பதையும் மறந்து தன் ஈழச்சகோதரர்களிற்காக தன்னுயிரை துச்சமாக தூக்கி எறிந்த ஒரு பெண்ணின் மரணப்பதிவு இது.

இப்படி எத்தனையோ ஆயிரம், ஆயிரம் பெண்கள் சமுதாயத்திற்காக தம்மை அர்ப்பணித்து போராடுகையில் பெண்கள் என்றாலே மார்பும், பெண்குறியும் தான் என்று சதைவெறி பிடித்து அலைகிறது யாழ் மாநகரசபை உறுப்பினரான காட்டுப்பன்னி ஒன்று. யாழ் மாநகரசபை பெண் ஊழியர் ஒருவரின் மார்பிலே பிடித்திருக்கின்றது இந்த பன்னி. அதை தட்டிக்கேட்டவர்களிடம் இதெல்லாம் சும்மா ஜாலியா செய்யிறது தான் என்று நக்கலடித்திருக்கிறது இது.

நாதாரித்தனம் பண்ணினாலும் நான் ஜென்டில்மேன் தான் என்னும் இவன் மேல் இவனது கட்சியைச் சேர்ந்த யாழ்நகர மேயர் நடவடிக்கை எடுக்கவில்லை. யாழ்ப்பாண பெண்களிற்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன என புலம்பும் யாழ் அரச அதிபரும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தமது கண்களிற்கு முன்னாலே நடந்த  ஒரு பாலியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இவர்கள் தான் யாழ்ப்பாண பெண்களை காப்பாற்ற போகிறார்களாம். இவர்கள் இருவருமே பெண்கள் என்பது தான் அதை விடக் கொடுமை. எதற்கும் இவர்கள் இரும்பிலே மார்புக்கச்சைகளை செய்து போடுவது நல்லது. அடுத்த முறை அந்த பன்னி இவர்கள் மேலேயும் கை வைக்கக் கூடும்.

அதிகாரத்திலே இருப்பதினாலேயே எதையும் செய்து விடலாம் என்பது தான் இவன் போன்றவர்களின் நினைப்பு. பெண்கள் துணிந்து எதிர்த்தால் இவர்கள் அடங்கிப்  போய் விடுவார்கள். பெரும்பாலும் மேலைநாடுகளில் இருக்கும்  Pedaphile எனப்படுபவர்கள் சிறுவயதுப்பெண்களையே நாசமாக்குவார்கள். பெரிய பெண்கள் எதிப்பார்கள், சிறுவயது பெண்களும், குழந்தைகளும் பயந்து விடுவார்கள் என்ற மனோவிகாரம் தான் இதற்கு காரணம். நாங்கள் பின்லாடனிற்கே குண்டு வைக்க பழக்கி விட்டவங்களாக்கும் என்பது மாதிரி கதை அளக்கும் இதுகளும் இப்படியான மனோவியாதியில் தான் வாழ்கிறார்கள். பெண்கள் தம் உடல், உள பலத்தை வளர்த்துக் கொள்வதன் மூலமும், தாம் வேலை செய்யும் இடங்களில் தொழிற்சங்கங்களில் இணைந்து கொள்வதன் மூலமும், பெண்கள் அமைப்புக்களை கட்டுவதன் மூலமுமே பெண்களிற்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும்.

இவனது கட்சிக்கொள்கை தான் இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம். ஜனநாயக குளத்திலே குதித்த காலத்திலே இருந்து  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பதவிக்காக காலிலே விழுவது தான் இவர்களது கொள்கை. தலைமை காலைப் பிடி என்று சொன்னதை இவன் மேலே பிடி என்று டெவலப் பண்ணி இருக்கிறான்.

யாழ் மாநகராட்சியில் வெறிநாய்களை ஒரு வண்டியிலே பிடித்து அடைத்துக் கொண்டு பொய் கொன்று விடுவார்கள். எத்தனை வெறிநாய்களை கொன்றோம் என்று கணக்கு காட்டுவதற்காக அவைகளின் வால்நுனிகளை வெட்டுவார்கள் என்று சிறு வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். விசர்நாய்களிற்கும் இவனிற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். வெறிநாய்களிற்கு பின்னாலே வாலை வெட்ட வேண்டும். இந்த நாயிற்கு முன்னாலே வெட்ட வேண்டும். ஒரு நாலு சென்ரிமீற்ரர் கூட வெட்டினால் எதிர்காலத்தில் இப்படியான பிரச்சனைகள் நடக்காது.

 

விஜயகுமாரன்

07/10/2011

நன்றி படங்கள்:  senppagam.blogspot.com

குறிப்பு: பம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த  பெண் போராளிகள் சுவரில் வரைந்த வரிகளை புகைப்படமாக செண்பகம் தளத்தில் காணலாம் .