புலியை தேசியத்தின் பேரில் ஆதரித்த "இடதுசாரியம்" போல் தான், புலிக்கு எதிராக தேசியத்தை எதிர்த்த "இடதுசாரிய" அரசியலும். இதன் அரசியல் சாரம் என்பது மக்களைச் சார்ந்ததல்ல. தனக்கென சொந்தமாக எந்த அரசியலுமற்றது. புலி எதிர்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. புலிக்கு எதிரான அனைவரையும் சார்ந்து நின்று தன்னை வெளிப்படுத்துகின்றது. இது அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை சோரம் போனது. தன்னைத்தான் "மார்க்சியவாதியாகவும்", "ஜனநாயகவாதியாகவும்" கூறிக்கொள்ளும் இந்தப் பிரிவு, புலிக்கு எதிராக அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னை இனம் காட்டுகின்றது. இதைத் தாண்டி அதனிடம் வேறு மக்கள் சார்ந்த கோட்பாடோ, நடைமுறையோ கிடையாது.

 

 

புலியை ஒழிக்க நாம் அரசைப் பலப்படுத்தவேண்டும் என்பது தொடங்கி, புலியை அரசுதான் அழித்தது என்பது வரையான குறுகிய குறுக்குத் தர்க்கங்கள் மூலம் தன்னைத்தான் நிலை நிறுத்துகின்றது.

மக்களை வழிகாட்ட முடியாது போன முன்னாள் இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும், தங்கள் புலமை சார்ந்த அறிவைக்கொண்டு பொழுதுபோக்கவும், குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கவும், அரசியல் வம்பளக்கவும் கொசிக்கவும், தங்கள் புலி எதிர்ப்பை காட்டி அரசை சார்ந்து நிற்கவும் தான் அரசியல் பேசுகின்றனர். புலியல்லாத அரசியல் தளத்தில் மக்களைச் சார்ந்து நிற்க முற்படுபவர்களுக்குள், இந்த ஒட்டுண்ணிக் கூட்டம் புரையோடி நிற்கின்றது. புலியல்லாத போக்கை, புலியெதிர்ப்பாக வெளிக்காட்டி அரசியல் சீரழிவாக்கின்றது.

இப்படி வரலாற்றில் மக்களை வழிகாட்ட வக்கற்றுப்போனவர்கள், மக்களைக் கைவிட்டு தங்கள் அறிவுகள் மூலம் மக்களை ஒடுக்குகின்ற கூட்டத்துக்கு உதவுகின்றவர்களாக மாறிவிட்டனர். புலிகள் மட்டும் தான் மக்களை ஒடுக்குகின்றனர் என்று தொடர்ந்து வசைபாடும் இந்த புல்லுருவிக் கூட்டம், மக்களை ஒடுக்குகின்ற பேரினவாத அரசை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்ரீதியாக ஆதரிக்கின்றனர்.

 

அரசை விட புலிகள்தான் கொடுமையானது கொடூரமானது என்று காட்டுவதன் மூலம், வரலாற்று உண்மைகளைப் புதைக்கின்றனர். கடந்து போன வரலாற்றில் புலியை விட அரசு தான் கொடுமையானதாக இயங்கி இருக்கின்றது. இலங்கையில் பல பத்தாயிரம் பேரை ஈவிரக்கமின்றி அது கொன்றிருக்கின்றது. கடத்தல், காணாமல் போதல் என்று சில ஆயிரம் பேரை நரைவேட்டை ஆடியிருக்கின்றது. புலியை விட 10 மடங்கு அதிகமாகவே அரசு செய்திருக்கின்றது. இப்படி உண்மைகள் இருக்க "மார்க்சியவாதியாகவும்", "ஜனநாயகவாதியாகவும்" கூறிக்கொள்ளும் இந்த புல்லுருவிகளின் கூட்டம், புலியை மட்டும் குறிவைத்து குலைக்கின்றது. அரசுக்கு ஆதரவாக வாலாட்டுகின்றது. எதற்காக ஏன் குலைக்கின்றது என்று ஆராய்ந்தால், அதனிடம் மக்களை வழிகாட்டும் எந்த மாற்று வழிமுறையும் சொந்தமாகக் கிடையாது. மாறாக குலைக்க முடிகின்றது.

மக்களைச் சார்ந்து நிற்கக் கோரும் அரசியலை புலி அரசியல், அரசு சார்பாக முத்திரை குத்துவது போல், புலியெதிர்ப்பு அரசியல் புலியாக முத்திரை குத்துகின்றது. இதற்குள் தான் இந்த இரு அரசியலும் குறுகி, முடங்கி இயங்குகின்றது.

புலிகளை எதிர்த்து ஜனநாயகத்தைக் கோரியது அரசுக்கு எதிராகப் போராடத்தானே ஒழிய, அரசை ஆதரிப்பதற்காக அல்ல. மார்க்சியம் கோருவது வர்க்கப் போராட்டத்தைத்தானே ஒழிய, அரசுக்கு பின்னால் நின்று புலியைச் சொல்லி கொசிப்பதற்காக அல்ல.

அரசுக்கு எதிராக மக்களைச் சார்ந்து நிற்கக் கூடிய மாற்று வழியை முன்மொழியாத அனைத்தும், தொடர்ந்து மக்களைப் படுகுழியில் தள்ளுவது தான். இந்த வகையில் குறுகிய "தமிழ் தேசியம்" போல் உருவான குறுகிய "ஜனநாயகம்" என இரண்டும், மக்களின் நியாயமான உரிமைகளையும் கோரிக்கைகளையும் மறுக்கின்ற அரசியலையே முன்தள்ளியது, தொடர்ந்து முன்தள்ளுகின்றது.

குறுகிய "தமிழ்தேசியம்" எப்படி யாழ் மையவாத கோட்பாடுகளால் தன்னை குறுக்கியதோ, அதே போல் யாழ் மையவாத கூறுகளை குறுக்கிக் காட்டி ஜனநாயகத்தை மறுக்கின்ற புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் கொண்டு வக்கற்றக் கூட்டம் இயங்குகின்றது. சாராம்சத்தில் இரண்டும் யாழ்மையவாதம் தான். இதற்கு வெளியில் இவ்விரண்டும் இயங்கவில்லை.

யாழ் மையவாதத்தைச் சார்ந்த தேசியவாதமும், யாழ் மையவாதத்தை எதிர்த்த தேசிய எதிர்ப்பு வாதமும், யாழ்மையவாத கோட்பாட்டாலானது. இங்கு தேசியத்தைச் சார்ந்த ஆதரவும், எதிர்ப்பும், குறுகிய எல்லைக்குள் நின்று மக்களுக்கு எதிராக இயங்குகின்றது.

இந்த இரு போக்கும் மக்களுக்கு எதிராக, புலி மற்றும் அரசை சார்ந்து நின்று ஒன்றை ஒன்று எதிர்த்தும் எதிரியாக காட்டியம் இயங்குகின்றது. மக்களைச் சார்ந்த எந்தக் கருத்தையும், செயலையும் இது முன்னிறுத்தி அதற்காக இயங்குவதில்லை.

 

பி.இரயாகரன்

23.10.2011