Thu07092020

Last update12:49:40 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

  • PDF

புளொட்டின் சதிவலைக்குள் சிக்கிய ரீட்டா

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் போல் நண்பர் தாசன் அவர்களின் வீட்டுக்குள் எமது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஆனால் எமக்கு மரணதண்டனைக்கான திகதியோ, நேரமோ அன்றி இடமோ நிச்சயிக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் தலைமையின் - உமாமகேஸ்வரனின் - உத்தரவின் பேரில் நாம் கொல்லப்படலாம் என்ற நிலையே இருந்தது. நாம் ஒவ்வொருவரும் எமக்கு வரவிருக்கும் கொடிய ஆபத்தை நன்கு உணர்ந்து கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆபத்தானது இப்பொழுது இலங்கை அரசபடைகளிடமிருந்தல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரமான பாதையில் முன்னெடுக்கும் ஒரே தலைமை என்று கூறி நாமே வளர்த்துவிட்டிருந்த தலைமையால் வரப்போகும் கொடிய ஆபத்தாக இருந்தது. நாம் ஒருவரை ஒருவர் அனுதாபத்துடனும், வரவிருக்கும் எதிர்காலம் எவ்வளவு கொடியதாக இருக்குமோ என்ற ஒருவித கலக்கத்துடனும், அனைத்துமே எம்மிடமிருந்து அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையீனத்துடனும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினோம்.

 

 

சிறிதுநேர நிசப்தம் கலைந்து ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினோம். அடுத்தது என்ன என்பதே எம் எல்லோரிடமிருந்தும் எழும்பிய கேள்வியாக இருந்தது. நண்பர் தாசன் அவர்களின் உறுதிமொழிக்கமைய இந்தியா செல்வதற்கு காத்திருப்பதை தவிர வேறுவழி எதுவும் எம்முன் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்தியாவுக்கான கடல்மார்க்கப் பயணம் என்பது, அதுவும் தூரவிசைப்படகல்லாத மீன்பிடிப் படகுகளில் செல்வதும் கூட பெரும் ஆபத்து நிறைந்தொன்றானதாக மாறிவிட்டிருந்தது. ஏனெனில் இலங்கைக் கடற்படையினர் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இலங்கைக் கடற்பரப்பில் தமது ரோந்தை அதிகரித்து ஈழவிடுதலைப் போராளிகளை குறிவைத்துச் செயற்பட்டு வந்தனர். அத்துடன் கடற்பயணத்திற்கு காலநிலையும்கூட சாதகமாக அமைந்தாக வேண்டியிருந்தது.

 

நண்பர் தாசனும் அவர் மனைவியும் எதுவுமே தவறாக நடந்துவிடவில்லை என்பது போன்றதொரு பார்வை மேலிட்டவாறு இரவு உணவுடன் எம்முன் வந்துநின்றனர். இப்பொழுது இந்த உணவானது நாம் ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக போராடும் போராளிகள் என்பதற்காக கொடுக்கப்படும் உணவாக இருக்கவில்லை. வெறுமனவே நட்பின் அடிப்படையின்பாலானதாக, மனிதாபிமானத்தின்பாலானதாக கொடுக்கப்படும் உணவாக மட்டுமே இருந்தது. ஏனெனில், ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக போராடப் புறப்பட்ட நாம் எத்தகைய பிற்போக்குதனம் மிக்க தலைமையை வளர்த்து விட்டிருந்தோம் என்பதோடு, அந்த தலைமை ஈழ விடுதலையின் பேரால் அமைப்புக்குள் எத்தகைய அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது என்பதையும் விபுலும், தர்மலிங்கமும் தெளிவாகவே நண்பர் தாசனுக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

காலையின் இளங்காற்று யன்னல் வழியே புகுந்து கதகதப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. கதிரவனின் எழுச்சி இயற்கை என்றும் போலவே இயங்கிக் கொண்டிருப்பதையும் அனைத்தையுமே மாற்றத்துக்குட்பட்டுக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்திய வண்ணமிருந்தது. ஆனால் இப்பொழுது நாம் புளொட் என்ற அமைப்பில் இல்லை. எமக்கெனப் பொறுப்புகளோ, நாம் செய்வதற்கு கடமைகளோ இருக்கவில்லை. புளொட்டின் தலைமையினுடைய தவறான போக்குகளையும், அதற்கு புளொட்டின் தலைமை கொடுக்கும் உண்மைக்குப் புறம்பான விளக்கங்களையும் நாம் மாவட்ட அமைப்பாளர்களுக்கோ, கீழணி உறுப்பினர்களுக்கோ அல்லது மக்களுக்கோ கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்துக் கொண்டிருக்கவில்லை என்ற திருப்தி ஏற்பட்டது. புளொட்டின் இராணுவப் பிரிவினருடன் அன்றாடம் தேவையற்ற முரண்பாடுகள் இனிமேலும் இருக்கப் போவதில்லை என்பதையிட்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. தவறான அமைப்பில் இருந்து ஒதுங்கிவிடுவது, தவறான அமைப்பையும் அதன் கருத்துக்களையும் அம்பலப்படுத்தி சரியான ஒரு கருத்துக்காகப் போராடுவது என்பதே எமது ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் நிலைமைகள் எதுவுமே நாம் எதிர்பார்த்தது போல் அமைந்துவிடவில்லை.

நாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவான விடயம் மிகவேகமாக புளொட்டுக்குள் வெளிவரத் தொடங்கியது. உமாமகேஸ்வரனால் வேண்டப்பட்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி உட்பட நாம் எல்லோரும் தலைமறைவான விடயம் உமாமகேஸ்வரனுக்கும் அவரைச் சுற்றியிருந்த தலைமைக்கும் மட்டுமின்றி புளொட்டில் உளசுத்தியுடனும், தன்னலமற்றும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாம் எதற்காக புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானோம் என்பது உமாமகேஸ்வரனுக்கு தெரியவாய்ப்பிருந்தபோதும் புளொட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் தலைமறைவானோம் என தெரிய வாய்ப்பிருக்கவில்லை. நாம் புளொட் என்ற அமைப்புடன் இனிமேலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் என்னால் கையளிக்கப்பட்டிருந்த புளொட்டின் ஆவணங்கள் அனைத்தையும் கொக்குவிலைச் சேர்ந்த ஆனந்தன் சின்னமென்டிஸிடம் கையளித்திருந்தார். "நேசன் எங்கே?" என்ற சின்னமென்டிஸின் கேள்விக்கு பதிலளித்த ஆனந்தன் "இவை அனைத்தையும் உங்களிடம் கையளிக்கும்படி நேசன் கூறினார், எனக்கு வேறு எதுவும் தெரியாது" என்று பதிலளித்து விட்டு திரும்பி விட்டார்.

இந்தியாவில் மத்தியகுழுக் கூட்டத்தின் பின் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களால் தனது எதிர்காலம் குறித்தும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் தனது தலைமைப் பாத்திரம் குறித்தும் எழுந்த கேள்விகளுடன் கொலைவெறியுடன் தூக்கமின்றி அலைந்த உமாமகேஸ்வரனுக்கும் அவரது உளவுப்படைக்கும் தளத்தில் நாமும் புளொட்டிலிருந்து வெளியேறிவிட்டிருந்தது பேரதிர்ச்சிதான். சந்ததியார் தலைமையில் வெளியேறிய கண்ணாடிச்சந்திரன் விரைந்து செயற்பட்டு NLFT மத்தியகுழு உறுப்பினர் விசுவானந்ததேவன் மூலம் விபுலுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதமும் கூட உமாமகேஸ்வரனின் தலைமையையிட்டு நாம் விழிப்படைந்ததற்கு ஒரு காரணம் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.

சந்ததியாரின் தலைமையில் இந்தியாவில் மத்தியகுழு உறுப்பினர்கள் புளொட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து, மக்களமைப்பைச் சேர்ந்தவர்களில் "சந்ததியாரின் ஆட்கள்" என்று உமாமகேஸ்வரன் சந்தேகிப்பவர்களை கண்காணிப்பதற்கு தனது உளவுப்படையை தளத்துக்கு விஸ்தரித்திருந்தார். உமாமகேஸ்வரனின் பணிப்பின் பேரில் தளத்தில் இத்தகையதொரு உளவுப்படை செயற்பட்டுக் கொண்டிருந்ததை நாம் வெளியேறும் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.

இந்த உளவுப்படையில் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஒரு சிறுபகுதியினரும், இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும், மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களில் ஒரு சிறுபகுதியினரும், "SR" என்றழைக்கப்பட்ட சிவராமை தலைமையாகக் கொண்டு சிவராமைச் சுற்றி அணிதிரண்டவர்களில் ஒரு பகுதியினரும் அமர்த்தப்பட்டிருந்தனர். இதில் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவரும் சின்னமென்ஸுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவருமான சத்தியா மற்றும், ரீட்டா, சுந்தரி போன்றோரும் புளொட்டின் உளவுப்படையினரால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தனர். நாம் சந்திப்புக்களை மேற்கொள்ளும் இடமான திருநெல்வேலி சனசமூக நிலையத்துக்கு முன் சத்தியா வந்துசெல்வதும், நிற்பதும் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் சத்தியாவை சந்தித்துச் செல்வதும் மக்கள் அமைப்பைச் சேர்ந்த எம்மை உளவுபார்ப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தது. நாம் தலைமறைவாவதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட விஜயன், பாண்டி, மைக்கல் ஆகியோரைச் சந்தித்து இந்தியாவிலுள்ள நிலைமைகள் பற்றி பேசவிரும்புவதாக கூறிய மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலியிலிருந்த சுந்தரியின் வீட்டில் அதற்கான சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தனர். சத்தியா, ரீட்டா, சுந்தரி உட்பட பல மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாண்டி புளொட்டின் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததோடு, இந்தியாவில் பயிற்சிமுகாம்கள் சித்திரவதை முகாம்களாக மாறிவிட்டிருந்தது குறித்தும், உடுவில் சிவனேஸ்வரன் உட்பட அகிலன், பவான் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்தும், சந்ததியார் புளொட்டுடன் உறவை முறித்துக் கொண்டது பற்றியும், உமாமகேஸ்வரனினதும் அவரினால் வழிநடத்தப்படும் உளவுப்படையின் கொலைவெறித்தனங்களையும் கூட அனைவருக்கும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து விட்டிருந்தார். இவை அனைத்தையும் தனது ஒலிப்பதிவு நாடாவில் இரகசியமாக பதிவு செய்துவிட்டிருந்த சத்தியா அந்த ஒலிப்பதிவு நாடாவை மென்டிஸிடம் கொடுத்து விட்டிருந்தார். இதேபோல் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும், சிவராமும், சிவராமைச் சுற்றி அணிதிரண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினரும், மக்கள் அமைப்பைச் சேர்ந்த "சந்ததியாரின் ஆட்களை" உளவு பார்ப்பதில் முன்னணி வகித்தனர். மேற்கு ஜரோப்பாவில் வசிப்பவரும், சிவராமுக்கு மிகவும் நெருக்கமானவரும், புளொட்டில் அரசியல் பாசறைகளில் வகுப்புகளை நடத்தியவருமான ஒருவர் பின்நாட்களில் என்னுடன் பேசும்போது "உங்களை நாங்கள் உளவு பார்த்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய அனைத்து உளவுவேலைகளையும் தளத்தில் திட்டமிட்டுச் செய்த உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையும் விடுதலைப் போராட்டத்துக்கென முன்வந்து புளொட்டுடன் இணைந்தவர்களை தவறான பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்தனர். முப்பத்தைந்து இலட்சம் மக்களுக்கு தலைமை தாங்குவதற்கான அனைத்து தகுதியும் தன்னிடத்தே உள்ளதென இறுமாப்புடன் நம்பியிருந்த உமாமகேஸ்வரன் ஜீவன், விபுல், சிவானந்தி ஆகிய மூவரையும் இந்தியா கொண்டு சென்று சித்திரவதை செய்து கொலை செய்யும் திட்டத்தில் தான் தோற்றுப் போய்விட்டதாகக் கருதியதும் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்த எம்மை கைதுசெய்யும்படியும் அல்லது கைது செய்து கொலை செய்யும்படியும் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் சின்னமென்டிஸுக்கு அனுப்பியதில் வியப்பேதுமில்லை.

ஆனால் தளத்தில் விடயங்களை கையாளுவது எப்படி? எம்மை கைது செய்வது எப்படி? எத்தகைய காரணக்களை முன்வைத்து கொலை செய்வது? என்பனவெல்லாம் உமாமகேஸ்வரனினதும் அவரது உளவுப்படையினதும் முன்னுள்ள கேள்விகளாக இருந்தன. புளொட்டின் பணத்தை கையாடி தலைமறைவாகி விட்டோம் என எம்மீது குற்றம் சுமத்தினர். புளொட்டின் ஆயுதங்களுடன் தலைமறைவாகிவிட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தினர். மகளீர் அமைப்பை சேர்ந்த ரீட்டாவை பலாத்காரம் செய்து விட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தினர். ஒட்டுமொத்தத்தில் நாம் புளொட்டில் இருந்து வெளியேறும் உரிமையை மறுத்ததுடன் மேற்படி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்துவதன் மூலம் எம்மை அழித்தொழிப்பதே உமாமகேஸ்வரனினதும் அவரது கொலைகார கும்பலினதும் ஒரே நோக்கமாக இருந்தது. எம்மைப் பற்றிய உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை புளொட்டுக்குள்ளும் மக்கள் மத்தியிலும் எடுத்து சென்றனர். புளொட்டுக்குள் ஒரு பகுதியினர் எம்மைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எதையும் நம்பமுடியாதவர்களாக விக்கித்து நின்றனர். இன்னொரு பகுதியினரோ எம்மீதான குற்றச்சாட்டுகளை மேலும் பெரிதுபடுத்தி தாம் உமாமகேஸ்வரனுக்கு மிகவிசுவாசமானவர்களாக, நம்பிக்கையானவர்களாக காட்ட முற்பட்டதோடு அமைப்பில் தாம் முன்னணிக்கு வர தம்மாலான அனைத்தையும் செய்தனர். புளொட்டின் பணத்தை கையாடிக் கொண்டு தலைமறைவாகி விட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தி இருந்தனர்: தளத்தை பொறுத்தவரை புளொட்டின் "நிதிவளம்" என்பது மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இருந்து வந்தது. மக்களிடம் இருந்தே நாம் பணத்தை சேகரித்து வந்தோம். அவற்றிற்கான பற்றுச்சீட்டுகளும்கூட வழங்கப்பட்டு வந்தன. எமக்கான உணவுத்தேவைக்கு பெருமளவுக்கு மக்களையே சார்ந்திருந்தோம். நாம் புளொட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகும் போது பணம் சேகரிப்பதற்கான பற்றுச்சீட்டுகள், மற்றும் பணத்திற்கான கணக்குகள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தையும் ஆனந்தனூடாக சின்னமென்டிஸிடம் கையளித்திருந்தோம்.

புளொட்டின் ஆயுதங்களுடன் தலைமறைவாகிவிட்டோம் என்று எம்மில் குற்றம் சுமர்த்தி இருந்தனர்: புளொட்டின் படைத்துறை பொறுப்பாளராக பார்த்தன் செயற்பட்ட காலகட்டத்திலும், பார்த்தனின் மரணத்தின் பின் இராணுவப் பொறுப்பை தற்காலிகமாக கண்ணாடிச்சந்திரன் பொறுப்பெடுத்திருந்த காலகட்டத்திலும் புளொட்டினது இராணுவப்பிரிவு மக்களமைப்பை சார்ந்தும் மக்களமைப்புடன் பரஸ்பரம் இணைந்தும் செயற்பட்டு வந்தது. இந்தியாவில் இருந்து படைத்துறைச் செயலர் கண்ணனின் வருகையும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி முடித்து தளம் வந்தவர்களை இராணுவப் பொறுப்பாளர்களாக நியமித்ததன் பின்னான காலகட்டத்திலிருந்து இராணுவப்பிரிவும் அரசியல் பிரிவும் பல்வேறுபட்ட முரண்பாடுகளுடன் வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தன. எனவே மக்கள் அமைப்பை சேர்ந்த நாம் எடுத்து செல்வதற்கு ஆயுதங்கள் எதுவும் எம்மிடம் இருந்திருக்கவில்லை.

மகளீர் அமைப்பை சேர்ந்த ரீட்டாவை பலாத்காரம் செய்தோம் என்று குற்றம் சுமத்தியிருந்தனர்:

புளொட் மகளீர் அமைப்பில் மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர்களில் ஒருவரான ரீட்டா புளொட்டின் தலைமையால் தவறாக வழிநடத்தப்பட்டவர்களில் ஒருவர். உமாமகேஸ்வரனின் "தலைமைக்கு எதிரானவர்கள்" அல்லது "சந்ததியாரின் ஆட்கள்" என முத்திரை குத்தப்பட்ட எம்மை உளவுபார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சிலரில் இளவயதினை உடையவரான ரீட்டாவும் ஒருவராக காணப்பட்டார். விபுலின் மிக நெருங்கிய நண்பனான ரீட்டாவின் சகோதரன் உட்பட ரீட்டாவினது குடும்பம் புளொட்டின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உதவி புரிந்திருந்தனர். ரீட்டாவின் சகோதரி கூட இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்கென சென்றிருந்தார். நாம் புளொட்டில் இருந்து வெளியேறி நண்பர் தாசன் வீட்டில் தலைமறைவாக இருந்தபோதுதான் ரீட்டா மீதான பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டதாக கொலைவெறியுடன் அலைந்து திரிந்த இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினரால் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்டம் என்று கூறி தமது அமைப்பில் செயற்பட்டவர்களையே உளவு பார்த்தவர்கள், விடுதலைப் போராட்டத்துக்கென தியாகமனப்பான்மையுடன் இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்ற தமது சொந்த தோழர்களையே பயிற்சிமுகாம்களில் சித்திரவதை செய்து கொன்று புதைத்தவர்கள், மக்கள் அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவுக்கு பொறுப்புக்களை பகிர்ந்தெடுக்க வரும்படி அழைத்து, சித்திரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள், தனது இளவயதிலேயே விடுதலைப் போராட்டத்துக்கென புளொட்டுடன் இணைந்து கொண்ட பெண் ஒருவரை தமது சதித்திட்டத்துக்கு பலியாக்கிவிட்டதில் நாம் வியப்பதற்கு எதுவுமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஆறு இளைஞர்களை சுழிபுரத்தில் படுகொலை செய்துவிட்டு அதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சதிவேலை என்று கூறியவர்கள், தமிழீழ விடுதலை இராணுவத்தை(TELA) உட்சதிகள் மூலம் அழித்தொழித்தவர்கள், நீண்டகாலமாக புளொட்டின் வளர்ச்சிக்காக உழைத்த உடுவில் சிவனேஸ்வரன் உட்பட சுன்னாகம் அகிலன், பவான், சதீஸ், சின்னத்தம்பி ஆகியோரையும் ஈழ விடுதலை போராட்டத்துக்காக புளொட்டை நம்பி இந்தியாவிற்கு பயிற்சிக்கென சென்ற பல இளைஞர்களையும் தமது சொந்த பயிற்சிமுகாம்களிலேயே சித்திரவதை செய்து கொன்றொழித்தவர்கள், ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை கொன்றொழிக்க சதித் திட்டம் தீட்டியவர்கள் என்ற நீண்டபட்டியலின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட உமாமகேஸ்வரனின் திட்டமிட்ட சதியே ரீட்டா மீதான பாலியல் பலாத்காரம் என்கின்ற விவகாரமாகும்.

எம்மீதான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுடன் புளொட்டின் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் எம்மை வேட்டையாடத் தயாராகினர். தளத்தில் எம்மை உளவு பார்ப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட உளவுப்படை அதன் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

நாம் தலைமறைவாகி இருக்கும் இடம் பற்றிய தகவல் அறிய ஒரு வகை வெறியுடன் யாழ்ப்பாணம் எங்கும் அலைந்து திரிந்தனர். நாம் நண்பர் தாசனின் வீட்டில் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடந்தோம். புளொட்டில் இருந்து விலகிச் செல்வதற்கான எமது உரிமையை மறுத்தமை, எம்மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தமை என்பன எம்மை இக்குற்றச் சாட்டுகளுக்கெதிராக வீரியத்துடன் செயற்படுமாறு தூண்டியது. நாம் இந்தியா செல்வது குறித்த விடயத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனால் எமக்கு நம்பிக்கையானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி எமது நிலையை தெளிவு படுத்துவது என்றும் அதேவேளை அவர்களிடத்திலிருந்து எமது பாதுகாப்பிற்கு உதவியும் பெறமுயன்றோம். புளொட்டினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த எம்மைப் பற்றிய உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு யாழ் நகர்ப்பகுதிகளில் சுவரொட்டிகளை ஓட்டுவது எனவும் முடிவெடுத்தோம்.

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

Last Updated on Sunday, 30 October 2011 22:17