Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அப்பாவிகளுக்கு குற்றவாளிகள் வழங்கிய தீர்ப்பு இதுதான். இந்தத் தூக்குத் தண்டனை, செய்த குற்றத்துக்கானதல்ல, செய்யாத குற்றத்துக்கானது. எந்த ஆதாரங்களும் இன்றி, சித்திரவதைகள் மூலம், தடா என்ற மனிதவிரோத திடீர் சட்டத்தின் கீழ்தான், பேரறிவாளன் - முருகன் - சாந்தனை குற்றவாளிகளாக்கி தூக்குத் தண்டனை வழங்கினர். இந்த வழக்கில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்களினதும், அவர்களின் வழக்கறிஞர்களின் வாதங்களையும் கருத்தில் எடுக்காது, தன் பிராந்திய வல்லாதிக்க நலனுக்காக வழங்கப்பட்ட கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்புத்தான் இந்த மரணதண்டனைத் தீர்ப்பு. 20 வருடங்களுக்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு சிறைகளில் கொடிய வதைகளை அனுபவித்தவர்களை, மீண்டும் கொல்வதன் மூலம் அரசியல் செய்ய முனைகின்றது இந்திய வல்லாதிக்க அரசு.

 

 

 

ராஜீவ் கொல்லப்பட்ட நிகழ்வின் பின்னணியில், இவர்கள் சம்மந்தப்பட்டவர்களுடன் கொண்டிருந்த சாதாரண மனிதத் தொடர்பை வைத்து குற்றவாளியாக்கியிருக்கின்றது, இந்த கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்பு. கொலை செய்த புலிகளுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதமும், பணமும் கொடுத்த இந்திய அரசை குற்றவாளியாக்காத தண்டனை. இது போன்ற கொலைகளை புலிகள் மற்றும் தன் கூலிக் குழுக்கள் மூலம் இலங்கையில் நடத்திய இந்திய அரசை, குற்றவாளியாக்காத தீர்ப்பு. இலங்கையை ஆக்கிரமித்து நடத்திய அக்கிரமங்களின் எதிர்வினையால் நடந்த படுகொலை என்பதை மூடிமறைத்து வழங்கிய கட்டைப் பஞ்சாயத்துத் தீர்ப்பு. உண்மைகளை மூடிமறைத்து தன்னை பாதுகாக்க, அப்பாவிகளை குற்றவாளியாக்கி தண்டணை வழங்குகின்றது.

குஜராத்தில், அயோத்தியில், பம்பாயில் ஆயிரக்கணக்கானவர்களை மதப் படுகொலை நடத்தியவர்களை தண்டிக்காத இந்தியச் சட்டமும் நீதியும், அப்பாவிகளை தண்டிப்பது தான் அதன் நடைமுறை. சாதியப் படுகொலைகள் முதல் காஸ்மீர் படுகொலைகளை அரங்கேற்றும் மனிதவிரோத குற்றங்களுக்கு தண்டனை வழங்காத இந்தியச் சட்டமும் நீதியும், அப்பாவிகளை கழுவேற்ற துடிக்கின்றது. போபல் விசவாயுக் கசிவின் சூத்திரதாரியை விடுதலைசெய்த இந்திய சட்டம், குற்றம் அற்றவர்களை துக்கிலிடத் துடிக்கின்றது.

இங்கு செய்த குற்றத்துக்கு தூக்கு அல்ல, செய்யாத குற்றத்துக்கு தூக்கு. இங்கு செய்யாத குற்றத்துக்கு 20 வருட தண்டனை அனுபவித்த பின், மீண்டும் தண்டனை. இப்படிப்பட்ட இந்தியச் சட்டமும் நீதியும் என்பது, மக்களுக்கானதல்ல. அது ஆளும் வர்க்கத்தின் நலனுக்கானது. இந்த வகையில், இந்த அப்பாவிகளுக்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை எதிர்த்;து, இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டமாக அணிதிரண்டு நடத்துமாறு அறை கூவுகின்றோம்.

இந்தத் தண்டனை போல் இன்னும் ஆயிரமாயிரம் அப்பாவிகளுக்கு தண்டனை வழங்குவது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். இந்த அமைப்பை தூக்கி எறியக் கோராத எந்தப் போராட்டமும், தீர்வும் தண்டிப்பதை நிறுத்திவிடாது. அம்மா (முதல் அமைச்சர்) மனம் வைத்தால், இந்த மரண தண்டனைகளை நிறுத்திவிட முடியும் என்பது தொடங்கி, மரணதண்டனையை இந்தியாவில் இல்லாதாக்கினால் இதை நிறுத்திவிட முடியும் என்றும் கூறுவதன் மூலம், எல்லாம் சரியாகிவிடும் என்று சிலர் கூறுகின்றனர். இது குற்றமற்ற பேரறிவாளன் - முருகன் - சாந்தனை குற்றவாளியாக்கி சிறையில் தொடர்ந்து வைத்திருக்கக் கோருகின்றது.

 

இதனால்:

• குற்றம் அற்றவர்களை இந்திய அரசியல் அமைப்பு தண்டிக்கின்ற சதிகள், நிந்தனைகள், துரோகங்கள், நின்றுவிடுமா?

• குற்றவாளிகளே அல்லாத பேரறிவாளன் - முருகன் - சாந்தன் மீதான தண்டனை குற்றமற்றதாகிவிடுமா?

இது குற்றவாளிகள் வரிசையில் குற்றம் அற்றவர்களையும் நிறுத்தி, குற்றவாளியாக்கி விடுகின்றது. ஒட்டுமொத்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே, மக்களுக்கு எதிரானது. அது அப்பாவிகளை குற்றவாளியாக்கி தண்டிக்கின்றது. அப்பாவிகளை தூக்கில் ஏற்றுகின்றது.

இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடாத அனைத்தும், பேரறிவாளன் - முருகன் - சாந்தனை குற்றவாளியாக்கிய இந்திய அமைப்பை நியாயப்படுத்துகின்றது.

இந்த பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அரசியல், கருணை மனுவைப் பற்றி பேசுகின்றது. மனிதாபிமானம் பற்றிப் பேசுகின்றது. மரண தண்டனையை ஒழிப்பது பற்றிப் பேசுகின்றது. பேரறிவாளன் - முருகன் - சாந்தன் குற்றம் அற்றவர்கள். அவர்களை குற்றவாளியாக்கிய இந்திய அமைப்பை தூக்கில் போடுவதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும்.

 

 பேரறிவாளன் - முருகன் - சாந்தன் ஆகியோரை தூக்கில் போடுவதை நிறுத்து!

 குற்றமற்ற பேரறிவாளன் - முருகன் - சாந்தன் ஆகியோர் மீதான பொய்க் குற்றச்சாட்டில் இருந்து நீக்கு!

 குற்றம் அற்றவர்களை குற்றவாளியாக்காதே!

 அப்பாவிகளை தண்டிக்கும் இந்திய அரசியல் அமைப்பை தூக்கில் போடு!

 குற்றவாளியான இந்திய அரசை தூக்கில் போடு!

 ஈழத்து மக்களே! இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்து இந்திய மக்களுடன் அணிதிரளுங்கள்!!

 இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை நடாத்துங்கள்!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

29.08.2011

துண்டுப்பிரசுர இலக்கம் 008