தமிழச்சியின் முன்வைக்கும் அரசியல் கோட்பாட்டை ஆராய்வதன் மூலம், அந்தக் கருத்தினை விமர்சிப்பது அவசியமாகின்றது. தமிழச்சிக்கு எதிராக நடத்திய படுபிற்போக்கான வலதுசாரிய செயற்தளம் மீது, நாம் கடந்த காலத்தில் எதிர்வினையாற்றி இருக்கின்றோம்.
ஆனால் இது தமிழச்சியின் சிந்தனை முறையையும், அது கொண்டுள்ள கோட்பாட்டையும் முற்று முழுதாய் ஆதரித்தல்ல.
எமது இந்த விமர்சனம் என்பது குறிப்பாக அவரின் சிந்தனை முறை மீதானதும், அவரின் கோட்பாட்டின் மேலானதுமாகும். இது அவரும், அவரைப் போன்றோரும், தமது கடந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுவதாகும். மாறாக வலதுசாரி பிற்போக்கு சக்திகள், தமிழச்சி மேல் நடத்துகின்ற எதிர்வினைக்கு எந்தவிதத்திலும் சார்பானதல்ல.
சரி தமிழச்சியின் சிந்தனை முறையும், அதன் கோட்பாடும் எப்படிப்பட்டது? இந்தக் கேள்வியை அவரே தேடிப் பார்க்கும் வகையில் அதை நாம் உடைத்துக் காட்ட முனைகின்றோம்.
சாதாரணமாக குண்டு வைக்கும் தனிநபர் பயங்கரவாதம் கொண்டுள்ள சிந்தனை முறை என்ன? அதன் பிரச்சாரம் எந்த வகைப்பட்டது? இதில் இருந்து தமிழச்சி எப்படி வேறுபடுகின்றார்?
இந்த கேள்விக்கான விடை, தமிழச்சியின் சிந்தனைமுறை இதற்குள் உட்பட்டு நிற்கின்றது.
தனிநபர் பயங்கரவாதி சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராகத்தான் குண்டை வைக்கின்றான். இது விடையங்களை தனித்து எதிர் கொள்வதன் விளைவாகும். சமூகக் கொடுமைகளுக்கு எதிராக, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, தனமனிதனாக தனித்து எதிர்கொள்கின்ற தனிமனித சிந்தனையின் விளைவு தான், தனிநபர் பயங்கரவாதம். சமூகத்தை சமூகக் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரட்டுவதில், இந்தக் கோட்பாடு நம்பிக்கையற்றது. தனிமனிதர்கள் தனித்து இதற்கு எதிராக புரட்சியை செய்ய முடியும் என்று நம்பிக் கொண்டு, குண்டை வைக்கின்றனர்.
இதன் விளைவால் மேலும் தனிமைவாதம் சூழ்ந்து, சமூக வெறுப்பாக மாறிவிடுகின்றது. படிப்படியாக படுபிற்போக்கான வலதுசாரி நிலை வரை, அது தானாக சீரழிகின்றது. இதனால் தனிநபர் புகழ், விளம்பரம், அதையொட்டிய செயல் என்று, இந்த எல்லைக்குள் சிந்தனை வட்டம், ஏன் செயல்வட்டம் எல்லாம் குறுகிவிடுகின்றது. இவை வெளிப்படையான செயல் சார்ந்த ஒன்றாக, இயல்பில் வெளிப்படுகின்றது.
தமிழச்சியின் சிந்தனை முறையும், அதன் கருத்தியல் தளமும், தனிநபர் பயங்கரவாதம் சார்ந்தது. சொல்லப்போனால் எந்த சமூக இயக்கத்தையும் உருவாக்கும் வகையில், எவ் வகை அரசியல் அடிப்படையுமற்றது. அரசியலையும், அரசியல் சார்பையும், அதன் செயற்பாட்டையும் மறுக்கும் தமிழச்சியின் கருத்துக்கள், இயல்பான தனிநபர் தன்மை கொண்ட தனிநபர் பயங்கரவாத சிந்தனை முறையாகிவிடுகின்றது.
அரசியல் என்பது என்ன? சமூகக் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் சமூக இயக்கம். இது வெளிப்படுத்தும் போக்கு, அரசியல் வெளிப்பாடாகின்றது. இது மக்களுக்கு எதிரான படுபிற்போக்காகவும், மக்களுக்கு சார்பான முற்போக்காகவும், இரண்டு தளத்தில் வெளிப்படுகின்றது.
முற்போக்குத் தளத்தில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒன்றிணையும் போது அது அரசியலாக, அரசியல் இயக்கமாக மாறுகின்றது. தமிழச்சியின் சிந்தனை முறையில் இது கிடையாது. மாறாக சமூகக் கொடுமைகளை தனிநபர் தீர்க்க முடியும் என்ற கண்ணோட்டம், இது தனிநபர் சிந்தனையாக பயங்கரவாதமாக வெளிப்படுகின்றது. உதாரணமாக (வெறும் உதாரணம் தான்) கோணேஸ்வரி பற்றிய கலாவின் கவிதையை மறுத்த தமிழச்சியின் கருத்தைப் பாhப்போம்.
'வெறிகொண்டு அலையும் வீரர்களின்ஆண்குறியில் குண்டு கட்டி சிதறடிப்போம்"
'பத்து ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நாசப்படுத்தி யோனிக்குள் குண்டு வைத்து சிதைக்கும் போது, தமிழிச்சிகளே நீங்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு ஆணின் ஆண்குறிக்கு ஏன் குண்டு கட்ட முடியவில்லை"
பழிக்குப்பழி? அதே வகைப்பட்ட சிந்தனை முறை. இது எந்த வகையான சிந்தனை முறை? ஆணாதிக்க சமூக அமைப்பை இதன் மூலம் ஒழித்துக்கட்ட முடியுமா? இருக்கின்ற சட்டங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் இதற்கு தண்டனைகளை வழங்கவில்லையா? வழங்குகின்றது. ஏன் சில நூற்றாண்டுகளுக்கு முன் இதற்கு விதவிதமான மரண தண்டனைகள் கூட வழங்கினவே. குண்டை வைத்து சிதறடித்தால், இது ஒழிந்து விடுமா? எப்படி?
இதற்கு எதிரான உங்கள் சிந்தனை உணர்வு போல், இதைச் செய்யும் உணர்வு எங்கிருந்து எப்படி ஏன் வருகின்றது. எந்தச் சமூக அமைப்பில் இருந்து இது வருகின்றது. பிரச்சனையே சமூகத்தின் உள்ளேயல்லவா இருக்கின்றது. சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்ற இந்த விடையத்தை, வெறும் குண்டு வைத்து இல்லாததாக்கி விட முடியுமா?
இந்த மாதிரியான சிந்தனை முறை, சினிமாவில் வருகின்ற கதாநாய(கன்)கி வைக்கின்ற தீர்வை ஒத்தது. உள்ளடக்க ரீதியான தனிநபர் புரட்சி பற்றிய கனவை அடிப்படையாகக் கொண்டது. செயல்தளத்தில் தனிநபர் பயங்கரவாதம். சிந்தனையில் அதைப் பிரச்சாரம் செய்கின்றது.
கலாவினை மறுத்த தமிழச்சியின் கருத்து தனிநபர் பயங்கரவாத பிரச்சாரமாகும். பெண்விடுதலை என்பது இதுவா! எப்படி? பெண்களும், ஆண்களும் ஒரு சமூகமாக வாழ, இதையே இதற்கு எதிரான சமூகக் தீர்வாக கருதுகின்றது. சமூகத்தில் இந்தக் கொடுமை எதனால் எப்படி நடக்கின்;றது. பெண்ணின் உடல் பலவீனத்தாலா, நிச்சயமாக இல்லை. ஆண் உடல் பலம் பெண்ணின் உடல் பலவீனம் இதற்கு காரணமல்ல.
இந்த சமூகம் சுரண்டலால் உருவான ஆணாதிக்க அமைப்பு. இந்த சுரண்டல் ஆணாதிக்க சமூக அமைப்பில், தனிமனிதர்கள் அந்த சிந்தனை முறைக்குள் இயங்குகின்றனர். இது அத்துமீறலாக, சில வேளை இயல்பாகக் கூட நடக்கின்றது.
மனித சிந்தனை முறையே ஆணாதிக்கமாக இருக்கும் போது, எங்கே எப்படித் தான் குண்டு வைப்பது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை, முஸ்லீம் பெண்ணை கும்பலாக ஆண்கள் கற்பழிக்க முடியும். இதை ஒரு இந்துவின் அறமாக, ஆணாதிக்கம் அங்கீரிக்கின்றது. பெண்களும் கூடி நின்று கூத்தடிக்க, கற்பழிப்பை நடத்துகின்றது. இந்த நிகழ்வுகள் இந்தியாவில் சாதாரணமாகவே அரங்கேறுகின்றது. இங்கு எப்படி எங்கே யாருக்கு குண்டு வைப்பது. இதை செய்வதை பெண்கள் நியாயப்படுத்தவில்லையா? எப்படி எதனால்?
கோணஸ்வரிக்கு நடந்ததை ஒட்டி கலாவின் கவிதை, சமுதாய விழிப்புணர்ச்சியைக் கோருகின்றது. இது புலிக்கு சார்பான தனிநபர் பயங்கரவாதத்தைக் கோரவில்லை. ஒரு இனத்து பெண்ணுக்கு எதிராக இது நடந்தபோதும், அனைத்து பெண்களையும் இனம் கடந்து இந்த கொடுமை பெண்ணிய நோக்கில் நின்று இதைப் பார் என்று கோருகின்து. இது ஒப்பாரியல்ல. சமுதாய விழிப்புணர்ச்சி மட்டும் தான், இதை தடுத்த நிறுத்த முடியும். ஆண் குறிக்கு குண்டு வைப்பதால் இதை தடுத்த நிறுத்த முடியாது.
பத்து பெண்கள் உங்கள் சிந்தனையை ஏற்று, குண்டைக் கட்டி ஆண் குறிகளை வெடிக்க வைத்தால் என்ன நடக்கும். அது குறுகிய பயங்கரவாதமாக மாறிவிடும். இதனால் இந்த கொடுமை நிறுத்தப்பட்டு விடுமா? எப்படி? இதுதான் தீர்வென்றால், அனைத்து சமூக கொடுமைகளுக்கும் எதிராக பத்துப்பேர் குண்டை வைத்தே சமூகத்தை மாற்றிவிடலாமல்லவா?
இஸ்லாமிய தனிநபர் பயங்கரவாதத்தைப் பாருங்கள். அவர்கள் வைக்கும் குண்டுகள், மேற்கின் கொடூரங்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதா? இல்லையே! மாறாக இதைப் பயன்படுத்தி, மேலும் கொடூரமான இழிவான வன்முறையை செய்யத் தான் அவை உதவுகின்றது.
கோணேஸ்வரி சம்பவம் என்பது ஆணாதிக்கம் தான். ஆனால் அதற்கு பல முகம் உண்டு. இனவாத சிங்கள மேலாதிக்க அடிப்படை உண்டு. யுத்த சூழலை பயன்படுத்தி, தமிழ் பெண் என்ற குறியீட்டு அடையாளம் மீது அது நடத்தப்பட்டது. அந்த அடையாளத்தை அழிக்க, பெண் உறுப்பில் குண்டு வைக்கப்பட்டது.
இங்கு இந்த இடத்தில் ஒரு சிங்களப்பெண் என்றால், இது தவிர்க்கப்பட்டு இருக்கும். சூழல் இதற்கு எதிரானது. ஜே.வி.பி காலத்தில், சிங்களப் பெண்கள் இப்படிக் குதறப்பட்டனர். இந்தியாவில் சாதி வெறியர்களும், இந்து வெறியர்களும, தமது அல்லாத பெண்ணை குதறவில்லையா!
இவற்றை வெறும் ஆணாதிக்கமாக மட்டும் பார்க்க முடியாது. அதை வெறும் உடல் உறுப்பின் ஊடாக பார்க்க முடியாது. இப்படி பார்த்து குண்டு வைத்தால் தீர்வு என்பதே அபத்தம். பாதிக்கப்பட்ட ஒரு பெண், பழிவாங்குவது இதில் இருந்து முற்றிலும் வேறானது.
சமூக சிந்தனை என்பது இதைக் கடந்தது. இந்த கொடுமைக்கான காரண காரியங்களை சமூக ஓட்டத்தின் ஊடாக புரியவைத்தல் அவசியமானது. பத்துப் பெண்கள் குண்டு வைப்பது சரியென்றால், நீங்கள் வாழும் பிரான்சில் பெண் மீதான பாலியல் வன்முறைக்கு என்ன தான் தீர்வு. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு என்ன தான் தீர்வு. இங்கும் குண்டு வைக்கலாம் தானே. ஏன் நீங்கள் அதைச் செய்வதில்லை. ஏன் செய்ய முடிவதில்லை.
பாரிஸ் பிள்ளையார் ஊர்வலம் அன்று மட்டும் துண்டுப்பிரசுரம் கொடுப்பதும் இப்படிப்பட்டது. சமுதாயத்தை தொடர்ச்சியான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் ஊடாகத் தான், எதையும் அந்த மக்களால் சாதிக்க முடியும். எதையும் கதாநா(யகர்களால்)யகியால் சாதிக்க முடியாது. ஏன் இந்த பிள்ளையார் ஊர்வலத்தில் குண்டு வைப்பது போன்ற தீர்வை, சொல்ல முடிவதில்லை. உண்மையில் செய்ய முடியாது. ஏனென்றால் அது பயங்கரவாதமாகி விடுகின்றது. சமூகத்தை மாற்ற சமூகம் போராடுவது அவசியம். எதையும் குண்டுகளால் மாற்ற முடியாது.
இலங்கையில் நடந்த இந்தக் கொடுமையை எப்படி எதிர்கொள்;வது. புலிகள் பாணி தற்கொலைத் தாக்குதல் மூலம், எந்த மக்கள் விடுதலையையும் மக்கள் பெற முடியாது. மாறாக அடிமைத்தனம் தான் கிடைக்கும்.
கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்பட்ட ஒரு நாட்டில், அதுவும் சிறிது காலமே தப்பிப்பிழைத்த சரிநிகரில், அப்பத்திரிகையில் எழுதுவதற்கே அஞ்சுகின்ற ஒரு நாட்டில், மூச்சு விட்டாலே மரணம் என்ற நிலையில், இந்தக் கவிதை சமுதாயத்தை நோக்கி அறை கூவுகின்றது. தமிழ் பெண்களை நோக்கியும், சிங்களப் பெண்ணை நோக்கியும் கூட, இது கை நீட்டி நிற்கின்றது. சமுதாயத்தின் உறக்கம் மீதான குற்ற உணர்வை அது வெளிக்கொண்டு வருகின்றது.
ஆணாதிக்கக் கொடுமைக்கு எதிராக, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக, அதிகார வெறிக்கு எதிராக, உனது எனது மௌனம் எம்மை பலியிடுவதா என்று சிந்திக்கத் தூண்டுகின்றது. மாறாக புலியைப் போல் குண்டு வைத்தல், அது தனிநபர் பயங்கரவாதமாகி போராட்டம் சிதைவது போல், இந்த விடையமும் குண்டு வைப்பதால் தீர்க்கப்படுவதில்லை.
இந்தக் கோணேஸ்வரி சம்பவம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, என்ன சொன்னார் தெரியுமா? கூரையை பிய்த்துக்கொண்டு வந்த குண்டு தானாம், யோனியில் விழுந்ததால், யோனி சிதறுண்டதாம். ஒரு பெண்ணான சந்திரிக்காவுக்கு எங்கே குண்டு வைப்பது? தனிநபர் பயங்கரவாத வழிகளில், இதற்கான காரண காரியங்களை தீர்க்க முடியாது.
தமிழ் மணத்தில் தொடர்ச்சியான சர்ச்சைக்கு உள்ளாகும் தமிழச்சியின் கருத்துகள், தனிநபர் முனைப்பு கொண்ட அரசியல் அடிப்படை பற்றியதே இந்த விமர்சனம். இது எந்த விதத்திலும் தமிழச்சியுடன் முரண்படும் ஆணாதிக்க மற்றும் சாதியவாதிகளுக்கு எதிரான தமிழச்சியின் கருத்துக்கு எதிரானதல்ல.
தமிழச்சி எடுத்துள்ள விடையம் சமூகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகப்பிரிவுகளின் மீதானது. அதை எப்படி எந்த வகையில் சொல்ல முனைகின்றார் என்பதும், இதை தீர்க்க வைக்கும் தீர்வுகள் மீதானதே எமது விமர்சனம்.
நடைமுறையிலான செயற்பாட்டு அடிப்படை அல்லாத, கருத்துத்தளத்திலான தமிழச்சியின் சிந்தனை முறை, அது சொல்லுகின்ற வழிமுறை தனிநபர் பயங்கரவாத அடிப்படையைக் கொண்டது. அதாவது அராஜக (அனார்க்கிஸ்ட்) வழிப்பட்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
இது சமூக இயக்கத்தில் இருந்து அன்னியமானது. சமூகத்தை அவர்களின் சொந்த அரசியல் புரட்சிக்கு தயார் படுத்துகின்ற அரசியல் பணிக்கு மாறானது. தனிநபர்கள், சிலர் புரட்சி செய்துவிட முடியும் என்பதை அடிப்படையாக கொண்ட புரட்சிவாதம்.
இதற்கு மாறாக சமுதாயத்தை புரட்சி செய்ய கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும் அவசியம். தமிழச்சி இதைக் கற்றுக்கொள்வது அவசியமானது. பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்வதும், சொல்ல வருவதை தெளிவாக, மற்றவர்கள் மேலும் சமுதாயத்துக்காக சிந்திக்கும் வண்ணமும் கூறுவது அவசியம்.
பி.இரயாகரன்
14.03.2008