பிரிட்டிஸ் வன்முறைக்கு காரணம் யார்?

சமூகவெட்டுகள் மூலம் பிரிட்டிஸ் ஏழைகளிடம் பிடுங்கியதை, யாருக்கு கொடுக்கின்றது இந்தப் பிரிட்டிஸ் அரசு? பிரிட்டிஸ் சமூக அமைப்பில் செல்வம் யாரிடம் எப்படி எந்த வகையில் குவிக்கப்படுகின்றது? சமூகவெட்டு மூலம் நிதியை திரட்டும் அரசு, பணத்தை பல மடங்காக குவிப்பவனுக்கு வரி விலக்குகளையும் சலுகைகளையும் அழிப்பது ஏன்? இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் தான், இந்த வன்முறையைப் புரிந்து கொள்ளமுடியும்.

கல்வியை வியாபாரமாக்கி, கல்விக் கட்டணத்தை குடும்பத்தின் வருமானத்தை விட அதிகமாக்கி இளைய தலைமுறைக்கு கல்வியை மறுத்தவர்கள் யார்? சொல்லுங்கள். அவர்களை வேலைவெட்டியற்ற தனிமையில் வக்கிரமடைய வைத்தவர்கள் யார்? வரைமுறையற்ற நுகர்வு தான் வாழ்வு என்று புகட்டியவர்கள் யார்? சொல்லுங்கள்? இந்தப் பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் தான். மற்றவன் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த கூட்டம், மேலும் மேலும் கொழுக்க பிரிட்டிஸ் சமூகம் மீதான ஆளும் வர்க்கம் திணித்த கொள்கைதான் அராஜகவாத வன்முறைக்கான அரசியல் ஊற்று மூலம்.

நாட்டை ஆளுகின்ற வர்க்கம் உழையாது சுரண்டி வாழும் தனது சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைமையை பாதுகாக்கவும், மேலும் சோம்பேறித்தனமாக கொழுக்கவும் திணித்த சமூக வெட்டுகள் தான் பிரிட்டிஸ் வன்முறை. ஏழை எளிய மக்களின் சமூக நலத்திட்டங்களை வெட்டி, அதை பணக்காரருக்கு கொடுக்கும் சுயநலம் தான், அரசுக்கு எதிரான வன்முறை உணர்வாக மாறியது. சமூகப் பொறுப்பற்ற தனிமனித சுயநலன் தான், இழப்பதற்கு எதுவுமற்ற உதிரிகைளை உருவாக்கி சமூகம் மேலான அராஜகத்தை உருவாக்கியது.

இப்படியிருக்க பிரிட்டிஸ் பிரதமர் கேமரூன் கூறுகின்றார் "சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்கவும், ஒழுக்கம் உள்ள சமுதாயமாக ஆக்கவும் இன்னும் சில வாரங்களில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்" என்கின்றார். இப்படி சுரண்டி வாழும் தன் சொந்த வர்க்கத்தின் குணக் குறிகளை அடிப்படையாகக் கொண்டவர்கள் தான், இந்த வன்முறைக்கு காரணம் என்கின்றார்.

உண்மையில் மற்றவன் உழைப்பைத் திருடி வாழும் தன் வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்வை ஒத்ததாக காட்டிக் கூறுவது போல், அதாவது "சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம்" கொண்டவர்களா இந்த இளைஞர்கள்? இந்த இளைஞர்களை பல்கலைக்கழகக் கல்வியைக் கற்க முடியாத வண்ணம் ஆக்கியவர்கள் யார்? ஒரு தொழிலைக் கூட பெற முடியாத சூழலை உருவாக்கியவர்கள் யார்? இனம், நிறம், மதம், பணம் மூலம் இவர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி ஓதுக்கி ஒடுக்கியவர்கள் யார்? தங்கள் பெற்றோர்களின் வாழ்வை நாசமாக்கும் வண்ணம், சமூகவெட்டை நடத்தியவர்கள் யார்? சுரண்டி ஆளும் பிரிட்டிஸ் அரசு தான். இந்த வன்முறைக்கு காரணமே பிரிட்டிஸ் அரசு தான்.

இளைஞர்களின் "பொறுப்பற்ற" தனம் பற்றி பிரிட்டிஸ் பிரதமர் பொறுப்பற்ற தனத்துடன் பேசுகின்றார். பொறுப்புக் கூறும் பிரதமர், பிரிட்டிஸ் இளைய தலைமுறைக்கு பொறுப்பற்ற தனத்துடன் கொடுத்தது என்ன? இன்று பிரிட்டனில் ஒரு இளைஞன் பல்கலைக்கழகத்தில் கல்வியைக் கற்பதாயின் பணம் இருக்கவேண்டும். ஆனால் கல்விக்கான வருடாந்த கல்விக் கட்டணத்தை விட குறைவான வருட வருமானத்தையே, உழைத்து வாழும் பெரும்பாலான பிரிட்டிஸ் குடும்பங்கள் பெறுகின்றன. இப்படி சமூக பொறுப்பற்ற வியாபாரியாகி, கல்வியை வியாபாரமாக்கிய பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் தான், இளைஞர்களுக்கு கல்வியை மறுத்தும் வேலையை மறுத்தும், நுகர்வு உலகில் வக்கிரமடைய வைக்கின்றது. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தன் வர்க்க சுயநலத்துடன் பொறுப்புக் கூற மறுக்கின்றனர். தங்கள் சோம்பேறித்தனமாக வாழ்க்கைக்கு ஏற்ப சமூகத்தை சூறையாடுபவர்கள், அவன் வாழ்வதற்கான சமூக அடிப்படைகளை மறுத்துவிட்டு, அதை சேம்பேறித்தனம் என்கின்றனர்.

இந்தப் பொறுப்பற்ற சுயநலம் சார்ந்த அரசின் போக்கின் மேலான அதிருப்தி தான் இளைய தலைமுறையின் தவிர்க்கமுடியாத வன்முறையாக வெடித்தது. சீமான்கள் சீமாட்டிகளின் சோம்பேறித்தனமான பகட்டு வாழ்வு மேலான வன்முறையாகியது. அவர்கள் தான் கொய்யோ முறையோ என்று ஓப்பாரி வைக்கின்றனர்.

பி.இரயாகரன்

17.08.2011