தொடரும்…சீனா மீது ஜெயமோகன் வைத்திருக்கும் விமர்சனம் எதையும் மறுப்பதற்கில்லை. அது சமூக ஏகாதிபத்திய வல்லாதிக்க நாடுதான். ஆனால் இந்திய அரசின் சார்பில் அந்த விமர்சனந்த்தை வைக்க முடியுமா? அளவு வித்தியாசத்தைத்தவிர இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. சீனாவை விலக்கிவிட்டு இந்தப் பிரச்சனைகளை விவாதிப்பது அயோக்கியத்தனம் என்றால், இந்திய ஆளும்வர்க்கத்தின் சார்பில் இந்த விமர்சனங்களை வைப்பதும் அயோக்கியத்தனமானது தான். சாமான்ய புத்தியுடன் சிந்திப்பவர்களுக்கு கூட இந்திய சீன அரசியலை பின்புலமாக வைத்துத்தான் இதை யோசிக்க முடியும் என்று கூறிக்கொண்டே இந்தக் கட்டுரையின் இந்திய அரசியல் குறித்த விமர்சனம் எதையும் முன்வைக்காத அவரின் ஆளுமைக்கு கிடைத்த ஊதியமென்ன?
மாவோயிஸ்டுகள் தங்களின் போராட்டத்திற்காகவும் ஆயுதத்திற்காகவும் மக்கள் தரும் நிதியை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள், ஜமீந்தார்கள் என உள்ளூர் முதலாளிகளையும் சார்ந்திருக்கிறார்கள். அவர்களின் ஆயுத பலம் காவல் நிலையங்களை சூறையாடுவதையும் சார்ந்திருக்கிறது. இந்தக் தொடர்கட்டுரைகளுக்காக ஆங்காங்கே ஜெயமோகன் பயன்படுத்தியிருக்கும் படங்களில் கூட பயிற்சி செய்வதற்கு மாவோயிஸ்டுகள் காவல்நிலைய துப்பாக்கிகளை பயன்படுத்துவது தெளிவாகவே தெரிகிறது. அவர்களின் இராணுவவாதப் பாதையும், ஆயுதங்களுக்காக உள்ளூர் முதலாளிகளைச் சார்ந்திருப்பதும் சரியா தவறா என்பது வேறு. அடிப்படையின்றி சீனாவின் வளர்ப்பு மிருகங்கள் என்பது வேறு. முன்னது சித்தாந்தப் பிரச்சனை பின்னது ஆளும்வர்க்க அவதூறு. அவர்கள் போராடுவது மக்களுக்காக, அவர்களை வேட்டையாடும் அரசை எதிர்த்து. அவர்களின் பாதையில் தவறிருக்கிறது, அது வேறு விசயம். ஆனால் அவர்களின் அரசியலில் தவறு ஒன்றுமில்லை.
அவர் ஏன் அரசின் மீதான விமர்சனங்களை தவிர்க்கிறார் என்பதற்கான காரணம் ஆளும்வர்க்க அடிப்படையில் நின்று சீனா குறித்து பேசுவதில் வெளிப்படுகிறது. சீனா ஒரு கம்யூனிச நாடல்ல, அது ஒரு சமூக ஏகாதிபத்திய நாடு. பிராந்திய வல்லரசு, பிராந்திய அளவிலும், உலக அளவிலும் தன்னுடைய மேலாதிக்கத்தை பேணும் ஒரு ஆதிக்க நாடு. அதேநேரம் அளவிலும் பலத்திலும் குறைந்திருந்தாலும் இந்தியாவும் அப்படியான ஒரு நாடு தான். தன்னுடைய ஆதிக்க நலன்களுக்காக இந்தியாவுக்குள் சீனா உள்ளடி வேலைகளைச் செய்யக்கூடும். ஆனால் மாவோயிஸ்டுகள் அப்படியானவர்களா? இது எந்த அடிப்படையும் இல்லாமல் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்று பரப்பப்பட்டிருக்கும் கருத்தியலைப் போன்றது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அன்னியக் கைக்கூலிகள் எனும் ஆளும் வர்க்க கருத்தைத்தான் ஜெயமோகன் பிரதிபலிக்கிறார். இதற்கு ஆதரவாக ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.
மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் சுற்றி மக்களைக் கண்ட, எழுத்தாள மனோபாவத்தின் ஆளுமை அடுத்து வந்தடைய வேண்டிய மையப்புள்ளி அரசின் மீதான விமர்சனம் தான். ஆனால் அதை லாவகமாக தவிர்த்துவிட்டு அந்த விமர்சனத்தை மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் அறிவுத்துறையினரின் தனிச்செயல்பாடுகளின் மீது வைத்து அவர்கள் உண்ணும் உணவில் பாதியாவது அவர்களுக்கு கிடைக்க வேண்டாமா என்று தர்மகத்தா பாணி இரக்க உணர்ச்சியில் கொண்டுவந்து சேர்க்கிறார்.
அந்தப் பகுதி மக்கள் இன்னும் அரசியல்மயப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். அரசியல் ரீதியான விழிப்புணர்வுடன் மக்களை ஒன்று திரட்டி சமரசமற்ற போராட்டங்களை கட்டியமைத்து அரசுக்கு நெருக்குதல் தொடுத்திருக்க வேண்டும். இதில் மாவோயிஸ்டுகள் தவறியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அரசியலில் தவறொன்றுமில்லை. மவோயிஸ்டுகளின் இந்த தவறை முதன்மையானதாக எடுத்துக் கொண்டு அதையே கம்யூனிசத்திற்கு எதிராய் முன்வைத்த ஜெயமோகன்; நடப்பு முதலாளித்துவ ஊழல்களுக்கு ஆட்பட்டு. பசியிலிருந்து விடுதலை பெற்ற ஏனைய பகுதி மக்களைப் போலல்லாது நிலப்பிரபுத்துவத்திலேயே ஊறிக்கிடக்க வைக்கப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளைக் குற்றம் சாட்டும் ஜெயமோகன்; மாவோயிஸ்டுகள் வந்து வன்முறைப் பாதையைக் கையிலெடுத்தது சரியல்ல என்று கூறும் ஜெயமோகன், மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதியைக் கையிலெடுக்கும் வரை அந்த மக்களை கண்டுகொள்ளாமல் ஒதுக்கித்தள்ளி வைத்திருந்த அரசின் மீது செய்த விமர்சனம் என்ன?
இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்துவதும் அவசியமாகிறது. மாவோயிஸ்டுகளின் இராணுவாத கண்ணோட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியான நிலைபாடல்ல. இதில் ஜெயமோகன் விமர்சனத்திற்கும் எங்களுடைய விமர்சனத்திற்கும் (முதல் கட்டுரையில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது) இடையே ஒன்றுமை இருப்பது போல் தோன்றினாலும் இரண்டின் தளங்களும் வேறானவை. ஒரு கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட ஒரு மதத்தை விமர்சிப்பதற்கும், அந்த விமர்சனந்த்தை வேறொரு மதத்தை பின்பற்றும் ஒரு மதவாதி செய்வதற்கும் இடையிலான வேறுபாடு இதில் தொழிற்படுகிறது என்பது முக்கியமானது.
தமிழகத்தின் தென்பகுதியின் தேரிக்காடுகளில் அமைக்கபடவிருந்த டைட்டானியம் ஆலை மக்களின் அடையாளப் போராட்டங்களால் கைவிடப்பட்டது என்பது அப்பட்டமான பொய். அன்றைய கருணாநிதி அரசாங்கத்திற்கும் டாடாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், என்ன காரணத்தாலோ, அவர்களுக்கிடையேயான உள் ஒப்பந்தத்தில் உடன்பாடு காணப்படாததாலோ நிலத்தை கையகப்படுத்தித் தருவதிலிருந்து அரசு விலகி விட்டது. தேவைப்படும் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை அரசின் உதவியில்லாமல் கையகப்படுத்த முடியாத நிலை. விற்க முன்வந்த சிலரும் ஏக்கருக்கு ஐந்து லட்சம் கேட்க டாடாவின் தமிழக நிர்வாகி பி முத்துராமனோ ஏக்கருக்கு ஐம்பதினாயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். மட்டுமல்லாது திட்டத்திற்கான மொத்த செலவினம், மற்றும் ஆலை செயல்படும் போது வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு ஏற்படும் எதிர்ப்பு ஆகியவைகளை உத்தேசித்து திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு மறுபடியும் திமுக ஆட்சியின் கடைசியில் டாடா டைடானியம் தொழிற்சாலைக்கான முயற்சிகளை தொடங்கியது. உகந்த ஒரு சூழலில் அந்த ஆலை மீண்டும் ஏற்படுத்தப்படுவதற்கே வாய்ப்புள்ளது. இதை மக்கள் போராட்டங்களால் விரட்டி விடப்பட்டதைப் போல் காட்டுவதற்கு தேவையான துணிவு தம்மிடம் இருப்பதாக ஜெயமோகன் கருதுகிறார். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் துணிவு வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.
ஒருபகுதி முதலாளிகளுக்கு தேவைப்படாதபோது அங்கு அரசு எந்த வசதிகளையும் ஏற்படுத்தாது மக்களை ஏழ்மையிலும் நிலப்பிரபுத்துவத்திலும் உழலவிடும். அதே பகுதிகளில் முதலாளிகள் தங்கள் லாபத்தைக் கண்டு கொண்டாலோ, அங்குள்ள மக்கள் அதுவரை தங்கள் வாழ்வாதாரங்களுக்கு எதை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் துறந்துவிட்டு அரசு கை காட்டும் இடத்திற்கு இடம்பெயர்ந்துவிட வேண்டும். நலத்திட்டங்கள் எனும் பெயரில் அவர்கள் அதுவரை செய்து கொண்டிருந்த மரபு சார்ந்த இயற்கை சார்ந்த தொழிலகளையும், விவசாயம் இன்னபிறவற்றையும் விட்டுவிட்டு அரசிடம் கையேந்த வேண்டும். அப்படிச் செய்தால் ஊழல் மலிந்திருந்தாலும் முதலாளித்துவம் அவர்களின் பசியைப் போக்கிவிட்டது என்று குதூகலிக்கலாம், எழுதித்தள்ளலாம். ஆனால் அந்தப் பகுதிகளிலேயே மக்களின் விருப்பங்களை கணக்கில் கொண்டு அவர்களின் மரபுமுறைகளை மேம்படுத்த அரசு செயல்பட்டால் ஊழல் மிகுந்த முதலாளித்துவம் பசியாற்றியதைவிட அவர்கள் சிறப்பாக இருப்பார்களே எனும் சிந்தனை மட்டும் வந்து விடக் கூடாது. வந்துவிட்டால் அது எழுத்தாள ஆளுமைக்கு பங்கமாகிவிடும்,
இந்திய சூழலில் நடப்பிலிருக்கும் ஜனநாயகமான வழிமுறைப் போராட்டங்களின் மூலம் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிராக மக்கள் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என்பது கற்பிதமாகவே இருக்க முடியும். பீகாரில் கடந்த சில ஆண்டுகளாக போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் நுழைவதற்கே கூட தடைவிதிக்குமளவிற்கு அவர்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று போஸ்கோ நிறுவனம் தன்னுடைய திட்டத்தை கைவிட்டுவிடவில்லை. ஆனால் நந்தி கிராமில் டாடா வெருண்டோடியது. நடப்பு ஜனநாயக வழிமுறை போராட்டங்கள் அரசுக்கெதிராகவும், பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் குறிப்பிடத்தகுந்த எந்த வெற்றியையும் பெற்றுவிடவில்லை என்பதற்கு ஏராள எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கு அரசு என்ன மதிப்பளித்தது? நர்மதா அணைக்கட்டு இழப்பீடுகளுக்காக இருந்த உண்ணாவிரதங்கள் என்ன பலனை சாதித்தன? அரசோ, எந்த ஒரு நிறுவனனமுமோ தாங்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை எப்படி சரிசெய்வது எனும் கோணத்தில் தான் சிந்திக்கின்றனவே அன்றி அவர்களின் எதிர்ப்புக்கு மதிப்பளிப்பதில்லை, கவனத்தில் கொள்வதில்லை. சத்திஸ்கர் மக்களின் போராட்டங்கள் தீவிரவாதமாக சித்தரிக்கப்பட்டன. அதனால் சல்வாஜுடும் எனும் கூலிப்படை அமைப்பை அரசே ஏற்படுத்தியது. அவர்கள் கிராமம் கிராமமாக கொழுத்திய போது மக்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா?
ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் கடைசிப் பகுதியில் சில கேள்விகளை எழுப்புகிறார். முதலில் பொருளியலில் பின் தங்கியிருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லையா? எனக் கேள்வி எழுப்பி தமிழகத்தின் தென்பகுதியில் தேரிக்காட்டில் டாடா டைட்டானிய ஆலை அமைக்க முற்பட்டதை மக்கள் ஜனநாயக போராட்ட வழிகளில் விரட்டிக் காட்டவில்லையா என எடுத்துக்காட்டும் வழங்கியிருக்கிறார்.
மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் - 3
மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2
மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1
http://senkodi.wordpress.com/2011/08/04/mavoist-jeyamokan-2/