Language Selection

நிலாதரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு இருபத்தாறு வருசத்துக்குப் பின்னர் இன்று தான் என்ரை பெரியப்பாவைச் சந்திக்கப் போகிறேன். ஜரோப்பிய நாடொன்றில் தம்பியிடம் ஒரு சில மாதங்கள் வந்து தங்கி விட்டுப் போவதாக வந்திருக்கிறார்.

பெரியப்பா என்றதும் என் நினைவலைகள் பொங்கி நுரைத்து வழியத் தொடங்கியது சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்போ பதினாறோ அல்லது பதினேழோ வயதிருக்கலாம். ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தகங்களில் வரும் பெண்களையும் விளம்பரப் படங்களையும் வெட்டிச் சேகரித்து அந்த பெண்களையும் அந்தப் புகைப்படங்களையும் ரசித்து ஏங்கிக் கொண்டிருந்த ஒரு கனாக் காலம்…

 

அந்த நேரத்தில் சின்னமாமா கப்பலில் இருந்து வந்த போது கொண்டு வந்த ஒரு யசிக்கா கமரா என்னுடைய அந்தப் பசிக்குத் தீனி போட்ட ஒரு நேரம். எங்கடை வீட்டிலே படமெடுத்துப் பழகி பின்னர் பக்கத்து வீட்டிலேயும் படமெடுத்து பிறகு ஊர்முழுதும் படமெடுத்து பின்னர் அயலூர்கள் எனப் படமெடுத்து ஓடித்திரிந்து ஆசையாயிருக்கு…

படமெடுப்பதென்றால் எனக்குச் சாப்பாடும் வேண்டாம் தண்ணியும் கூட வேண்டாம் அப்படி ஒரு சுகந்தமான சந்தோசம். படமெடுப்பது ஒரு தொழிலாக இல்லா விட்டாலும் அதை ஒரு கலையாகவும் எங்கடை சனம் அதைப் பார்க்கவில்லை ரசிக்கவில்லை என்று எனக்குச் சங்கடமாய் இருந்தாலும் அது ஒரு ஸ்ரயிலாக அப்போது எனக்குள்ளே இருந்தது..

கமராவை தோளில் தூக்கிக் கொண்டு திரியும் போது பல பெட்டையள் என்னைக் குறித்துப் பார்த்ததையும் பலபேரது முகங்கள் என் கண்ணுக்கள் அகப்பட்டது போல் பலபேரது கண்ணுக்குள்ளும் நானும் அகப்பட்டேன். நாளடைவில் எனது பெயர் எல்லா இடங்களிலும் அறிப்பட்டு பல பேருக்கு நானும் அறிமுகமானேன். இப்படித் தெரிந்த வகையில் அயல் கிராமத்திலுள்ள என்ரை நண்பன் ஒருவனின் சகோதரியின் திருமணத்துக்காகப் படமெடுக்கப் போயிருந்தேன். கலியாணம் முடிஞ்சு மாப்பிள்ளை பெண்ணுமாக ஊர்வலமாய் அழைத்துக் கொண்டு வரும் வழியில் இருந்த கோயிலில் நின்று எல்லோரும் கும்பிட்ட போது அங்கு நின்ற வயோதிபர் ஒருவர் தம்பி இதையும் ஒரு படமெடேன் என்று சொன்னார்.வெளிவாசலில் நின்று எல்லோரும் கும்பிட்டதால் நான் மண்டபத்தினுள் போய் நின்றால் தான் படமெடுக்கலாம் என்றும் அப்போது தான் முகம் தெரியும் என்று உள்ளே போய் வெளியே நின்ற மாப்பிளை பெண்பிளையோடு எல்லோரையும் படமெடுத்தேன்.

பிறகு மாப்பிள்ளையும் பெண்ணையும் உள்ளே வாங்கோ கிட்ட நின்று சாமிக்குப் பக்கத்திலே படம் எடுப்போம் என நினைத்து உள்ளே அழைக்க, அவர்கள் தயங்கத் தயங்க நானும் வில்லண்டப்பட்டு கிட்டவழைத்துப் அவர்களைப் படமெடுத்தேன்.எனக்கொன்றும் தெரியாது, ஆனால் வெளியிலே ஒரே குழப்பம். எல்லோரும் என்னை பயத்துடனும் ஒரு பதட்டத்துடனும் பார்ப்பதை உணர்ந்தாலும் அதைப் பெரிது படுத்தாமலும் அதை விளங்கிக் கொள்ளாமலும் வெளியில் வந்து எல்லாம் முடிச்சு வீட்டையும் வந்து விட்டேன்.

ஒரு பின்னேரம் போல் என்ரை பெரியப்பா வந்து என்னைக் கண்டபடி கடுங் கோபத்துடன் கண்டித்துப் பேசினார்.

டேய் நீ என்ன….கீரோவோ… உனக்கு எம்.சி.யார்… என்ற நினைப்போ…என்ன துணிவிலையடா….அவங்கடை கோயிலுக்குள்ளே போனனி… கொஞ்சம் என்றால் அந்த ஊராக்கள் வந்து உன்னை அடிச்சுச் சாக்காட்டியிருப்பாங்கள். அந்தச் சனங்களும் உனக்கு உதவியிருக்க மாட்டினம். உன்னாலே பெரிய கலவரம் ஒன்றே வந்திருக்கும் நல்ல காலம் தப்பிவந்திட்டாய் எனக்கடிந்து கொண்டார்.

அந்த மாப்பிளை பெம்பிளை அந்தக் கோயிலுக்குள்ளே உள்ளட்டதால் அந்த ஜயர் இனிமேல் பூசை வைக்க மாட்டேன் என்றும் சொல்லிப் போட்டாராம் அந்த ஊர்சனங்களும் இண்டிரவுக்கு என்ன நடக்கப் போகுதோ என்று பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், உதுக்கெல்லாம் நீ தான் காரணமும் என்றார்.நான் ஏன் உள்ளே போனனான் என்பதையும் அங்கு நடந்ததையும் பற்றித் தெளிவாக விளக்கினேன்.

அது சரி. ஆனால் வெளியிலே நிண்டு கும்பிடுறது பிழை என்று தெரிந்தால் அவர்களுக்கு விளங்கப்படுத்திப் போட்டு அன்று உள்ளே போகாமலல்லோ வந்திருக்க வேண்டும். அதற்கு வேறொரு நேரம் பார்த்து சந்தித்து விளங்கப்படுத்தி அவர்கள் எல்லோரையும் சுயவிருப்பத்தோடு உள்ளே போக வழி செய்ய வேண்டுமே தவிர இப்படி சினிமாப்பட பாணியிலே கதாநாயகர்கள் வந்து பாய்வது போல் பாயக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

மக்களுக்கு எப்படியான பிரச்சினைகள் இருந்தாலும், அதை அவர்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு அவர்களாலேயே அதற்கு முன்வந்த முகம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அந்தப் போராட்டம் வெற்றி பெறும் என்றார். இனி இப்படியான மோட்டு வேலையிலே போய் மாட்டுப்படக் கூடாது என்றும் கண்டித்தும் வைத்தார்.

பிறகு இரண்டு மூன்று வருசத்தின் பின்னர் நானும் ரகுவத்தானும் வந்து கொண்டிருந்த போது எங்கடை கிராமத்திலுள்ள வெண்காயத் தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த சில பெம்பிளயள் போத்திலேயும் அந்தத் தோட்டக்கார ராயன் என்பவர் கிளாசிலேயும் தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குச் சரியான கோபம் வந்தது. பாரடா இவன் சரியான சாதித் திமிர் பிடிச்சவன் என்றும், இவனையும் இவனைப் போன்ற ஆட்களையும் இப்படி விடக்குடாது என்றும் கதைச்சபடிப் போக வாசிகசாலையடியில் நின்றசிவலிங்கண்ணாவுக்கும் திரவியத்துக்கும் சிறுவண்ணாவுக்கும் இதைச் சொல்ல அவர்களும் கோபப்பட்டு அடுத்த நாள் போய் அவனைக் கண்டிப்போம் என முடிவெடுத்து அவன்றை தோட்டத்துக்குள்ளே காலையிலே போய் இறங்கினோம்.

அவனோடு சண்டை பிடிச்சது மட்டுமல்லாது அவன்றை வெண்காயத் தோட்டத்தையும் உழக்கி குழப்பிப் போட்டு வர, அங்கு வேலை செய்த மனுசிகள் சில பேர் தம்பிமாரே ஏனப்பு எங்கடை உழைப்பிலே மண்ணைத் தூவி எங்கடை வாழ்க்கையைக் கெடுக்க வந்தையளோ எனக் கேட்க நாங்களும் வெளியாலே வந்திட்டம்.

பின்னேரம் பெரியப்பா வந்தார் சரியான கோபத்திலே நின்றபடி டேய் உனக்கென்ன மண்டை பிழைச்சுப் போச்சே…. ஏன்ரா அவன் ராயன்றை தோட்டத்துக்குள்ளே போய் நீயும் ரகுவும் பிரச்சினை பண்ணினியளாம் என்றும் பொலிசுக்குப் போகப் போறானாம் எண்டும் வெருட்டினார். நானும் நடந்தவற்றைச் சொல்லி எனது எண்ணங்களையும் நியாயப்படுத்தி தெளிவுபடுத்தினேன்.

அது சரி போத்தலிலே குடிப்பது பிழை என்றால் அங்கே வேலை செய்யிற மனுசிகள் எல்லோ அது பிழை என்று உணர வேண்டும். அல்லது எங்களுக்கும் கிளாசிலே தரும் படி தங்கள் உரிமையை அவர்களல்லோ கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு ஒரு நேரம் பார்த்து அதுகளுடன் கதைத்து அது உங்களின் அடிப்படை உரிமைகள் என்று விளங்கப்படுத்தி அவர்களாலே தான் அது முன்னெடுக்கப் படல் வேண்டும். இல்லாவிட்டால் இதிலே ஒரு பிரியோசனும் இல்லை. உங்கடை சண்டைக்கும் சண்டித்தனத்துக்கும் பயந்து கிளாசிலே உடனே அவன் கொடுத்தாலும் அந்த வெற்றியும் நிரந்தரமாயிருக்க மாட்டாது.

நீ திருந்தவே மாட்டாய் போல கிடக்கு என்றும் உன்ரை படிக்கிற வேலையிலே மாத்திரம் கவனமெடு… இதுகள் உனக்குத் தேவையில்லா வேலை என்று பேசிப் போட்டு இனிமேல் இப்படி ஏதும் அறிஞ்சா என்ன நடக்கும் பார் என்று சொல்லி வெருட்டி விட்டுப் போய் விட்டார்.

காலம் மெல்ல மெல்ல உருண்டு நகர்ந்து கொண்டிருந்தது. என்னுடன் கூடித் திரிந்த ராமநாதன் ஒரு நாள் காணாமல் போய்விட்டான். பிறகு யோகனும் காணாமல் போனான். அதன் பிறகு கணேசும் சிதம்பரன் என்று இப்படியே எல்லோரும் துலைந்து கொண்டிருக்க இயக்கங்கடை பேருகளும் கதைகளும் அடிபட இனிமேல் இவங்களை இஞ்சை வைச்சிருக்க முடியாது சின்னத்தம்பி யாரைப் பிடிச்சாவது இவங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போடு என்று மாமாவிடம் சொல்லி விட்டார்.

பிறகு ஒருநாள் என்னைக் கூப்பிட்டு இனி இங்கே இருக்க முடியாத ஒரு பயங்கர நிலை வரப்போகுது என்றும் இந்தத் தமிழ் மக்கள் பெரிய அழிவையும் இழப்புக்களையும் சந்திக்கப் போகிறார்கள் என்றும் கெதியா நீங்கள் எங்கேயாவது போய் உயிர் வாழ வேண்டும் என்ற அரசியல் பற்றியும் வெவ்வேறு நாடுகளில் எப்படியெல்லாம் இயக்கங்கள் வளர்ந்தது என்றும். பின்னர் சில இடங்களில் இயக்கங்கள் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது என்றும் கனக்கச் சொல்லி எனக்குவிளங்கப்படுத்தினார்.

தமிழ் இயக்கங்கள் என்று ஒன்று ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு நாள் நான் சின்னனாய்இருந்த வேளை, ஒரு நாலைஞ்சு றக்கிலேயும் ஜுப்புக்களிலும் ஆமிக்காரர்கள் வந்து இவரைப் பிடிச்சுக் கொண்டு போன போது வீட்டுக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்தும் அவங்கள் இவரை விட்டிட்டுப் போகவில்லை. நாட்டிலே நடந்த சேக்குவரா சண்டைக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளது என்றும் இவர் ஏதோ சீனாக் கொமினிஸ்க்காரன் என்றும் இவரும் அந்த இயக்கத்திலே இருக்கிறார் என்றும் சனங்கள் அங்கே கதைச்சது எனக்கு ஞாபகத்தில் வந்தது.

அப்ப இவரும் ஏதோ ஒரு இயக்கத்திலே இருக்கிறார் என்றும் இவருக்கு இயக்கங்கள் பற்றி தெரியும் என்றும் அது தான் ஏதோ அறிந்து எங்களை அனுப்பினம் எண்டும் அப்போது நான் நினைத்ததுண்டு.

வெளிநாடு வாற புளுகில் மற்ற ஒன்றைப் பற்றியும் யோசியாமல் ஒரு மாதிரி வந்தும் சேர்ந்து விட்டேன்.

நான் இங்கே வெளிநாடு என்று வந்து கனகாலம் என்னென்று தெரியாமலும் எப்படியென்று புரியாமலும் காலங்கள் போயிடுத்து. சண்டையாலே தானே நாங்கள் இஞ்சை வந்தனாங்கள் இப்ப சண்டையும் முடிஞ்சும் போச்சு. இப்ப கனபேர் இந்தச் சண்டைகள் பற்றியும் எங்கடை நாட்டு அரசியல் பற்றியும் எங்கடை சனங்கள் பற்றியும் நிறையவே கதைக்கின்றார்கள். பேசுறார்கள் எழுதுகினம். அப்படிக் கனக்க கவலையும் படினம்.

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிஞ்சு போச்சு எண்டு ஒருசிலரும் இனித்தான் எங்கடை போராட்டம் ஆரம்பிக்கப் போகின்றது என்றும் இன்னும் பலரும் கதைக்கின்றார்கள்.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தாலே எல்லாத்தையும் வழைச்சுப் போடலாம் எண்டினம், கடைசியிலே எல்லாம் வழுக்கிக் கொண்டே போட்டுது. நாடுகடந்த தமிழிழத்தால் எல்லாம் நாட்டிப் போடலாம் எண்டினம், பிறகு அதுவும் நாறுநாறு எண்டு நாறிப் போச்சு…..

பேரரைவயாலே எல்லாத்தையும் புடுங்கிப் போடலாம் எண்டினம் இப்ப எல்லாம் பெயர்ந்து கொண்டே போட்டுது. மக்களவையாலே எல்லாம் மடக்கிப் போடலாம் எண்டினம் கடைசியிலே மக்களையே கைவிட்டிட்டினம். இப்படியாக கனவிசயம் கதைக்கினம். கன விசயங்கள் நடக்குது.

ஆனால் நான் கோயிலுக்குள்ளே உள்ளட்டது மாதிரியும் பிறகு ரகு அத்தானும் நானும் ராயன்றை தோட்டத்துக்கே உள்ளட்டு சண்டைப்பட்டு வெங்காயத் தோட்டத்தைக் குழப்பிய மாதிரித் தான் இந்த இயக்கங்கள் எல்லாம் சண்டைப்பட்டு அங்கேயும் இங்கேயும் எல்லாத்தையும் குழப்பி வைச்சிருக்கிறார்கள்.

பெரியப்பா சொன்ன மாதிரி அந்தச் சனங்கள் கோயிலுக்குள்ளே உள்ளட விரும்பாதமாதிரியும் தோட்டத்திலே வேலை செய்த மனுசியள் தங்களுக்கும் கிளாசிலே தேத்தண்ணி தரவேண்டும் என்று கேடக்காத நிலையிலும் போராட்டங்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டாது.

இந்த நினைவுகளுடன் போயிறங்க, சுரேஸ் வந்து தான் என்னைக் கூட்டிக்கொண்டு போனான். நினைத்ததை விட பெரியப்பா அந்தளவு பெரிதாக மாறியிருக்கவில்லை.வெள்ளிக் கம்பி போன்ற மயிர் கொட்டுப்படாமல் அப்படியே இருக்க கம்பீரமாய்த் தான் காட்சியளித்தார்.

சாப்பிட்டு முடிச்சு கனகதை கதைச்சு அந்தக்கதை இந்தக்கதை என ஆரம்பச்சு கடைசியில் அரசியலுக்குள்ளே கதை வந்து நின்றது. தம்பி நாங்கள் இப்பவும் தான் சொல்லுறம் இந்தத் தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு. இதை திரும்பத் திரும்ப போட்டு அரைச்சுக் கொண்டு இருப்பதால் ஒருவருக்கும் ஒரு பிரியோசனமும் இல்லை. சும்மா இந்தச் சனங்களைப் போட்டுப் பேய்க்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

முந்தித்தான் பெரியப்பாவிடம் ஏன் என்றோ எதுக்கெண்டோ கேட்க முடியாது… இப்ப கேட்கலாம் தானே என்ற துணிவுடன் அவரைக் கேட்டேன்.அப்போ… இவ்வளவு நடந்த பின்னரும் உந்தச் சிங்களவரோடை சேர்ந்து வாழலாமெண்டு நினைக்கிறையளோ..?இந்தியன் படத்திலே வாற கமல் தாத்தா போலவே இவரும் சிரித்தார். ம்..ம்ம்ம்….கேட்பியள்கேட்பியள்…அப்ப தமிழரோடு சேர்ந்து வாழலாம் எண்டு நினைக்கிறையோ…?ஒன்றுமே பேசாது மௌனமானேன்.தம்பி இலங்கையிலே எத்தனையோ கலவரங்கள் நடந்தும் திரும்பத் திரும்ப தமிழன் ஏன் அந்தச் சிங்கள இடத்தை தேடிப் போகிறான்.…?. வெறும் வேலைக்கு மாத்திரம் தான் என்று சொல்ல முடியாது. நட்பும் தோழமையும் சகோதரத்துவமும் நிறையவே அந்தச் சிங்கள மக்களிடத்தில் இருக்கிறது. அது தான் உண்மையும்.

நீங்கள் தமிழ் தமிழ் எண்டும் கத்துறையள். உனக்கத் தெரியுமே உந்த யாழ்ப்பாணத்திலே சாதி என்ற பெயராலே நடந்த கொடுமைகளும் அக்கிரமங்களும் இண்டைக்கும் தமிழர்களுக்கு இவ்வளவு நடந்து முடிஞ்ச பிறகும் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்பகடுகின்றவர்கள் உள்ளே போக முடியாத எத்தனையோ கோவில்களும் தண்ணியள்ளிக் குடிக்க முடியாத எத்தனையோ கிணறுகளும் இப்பவும் இருக்கு…..

இப்ப யாழ்ப்பாணத்திலே சண்டைக்கே தூங்கிக் கொண்டிருந்த இந்தச் சாதி இப்ப திரும்பவும் தன்றை விஸ்பரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. சரி அங்கே தான் போர் என்றும் சண்டையென்றும் இருந்ததாலே மக்கள் அறிவு வளரவில்லை என்று சொல்லலாம். ஆனால் இங்கே இந்தப் புலம்பெயர் நாடுகளில் சாதிப் பிரச்சினைகள்இல்லையெண்டு நினைக்கிறையயோ…?. எங்களுக்கள்ளேயே இவ்வளவு சீத்தக் கேடுகளும் இருக்கும் போது ஏன் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ முடியாது…?

எங்கடை மண்ணைப் பிடிக்கிறான் எண்டும், எங்கடை சொத்துக்களையும் அள்ளுறான் எண்டும், கத்துறம் குளறுறம். உண்மை தான். இல்லையெண்டு சொல்ல வரேல்லை. அங்கத்தைச் சனங்களும் எங்கடை ஆட்கள் போல் வேலைக்கெண்டும் உழைப்பெண்டும் இங்கே வந்து குடியேறுவது எல்லோரைப் போலும் சாதாரணமான ஒன்று தான். அது பிழையும் சொல்வதற்கில்லை. ஆனால் தமிழ் மண்ணை அபகரிக்கும் நோக்கத்தோடு அடாவடித்தனமான முறையிலே சிங்களவர்களை வில்லண்டமாகக் கொண்டு வந்து திட்டமிட்டுக் குடியேற்றுவது தான் மன்னிக்க முடியாதது.

ஒரு புத்த விகாரையைக் கொண்டு வந்திட்டான் எண்டு எத்தனை துள்ளுத் துள்ளிறம். அவங்கடை இடத்திலே எத்தனை இந்துக் கோயில்களும் குளங்களும் கட்டியிருக்கிறோம் எண்டு எப்போதாவது நாங்கள் நினைத்திருக்கின்றோமா….?

தம்பி நாங்கள் சிங்கள மக்களோடும் தான் சேர்ந்து வாழ வேண்டும். இதிலே எந்தவிதமானசந்தேகங்களும் வரப்படா…

தமிழ்த் தலைவர்களும் உந்தச் சிங்களத் தலைவர்களும் சேர்ந்து தான் இந்த நிலையை உருவாக்கி இண்டைக்கு தமிழ்ச் சனங்களும் சிங்களச் சனங்களும் சேர்ந்து வாழ முடியாத எதிரிகள் போல் இந்தச் அப்பாவிச் சனங்கள் மத்தியில துவேசங்களை விதைத்து விட்டிருக்கிறார்கள்.

திரும்பவும் இந்த இனங்களுக்கிடையில் உறவையும் நட்பையும் வளர்ந்தெடுக்கலாம் என்ற நம்பிக்கை என்னைப் போன்றவர்களுக்கு இருப்பது போல் சிங்கள மக்கள் மத்தியிலும் பல முற்போக்குச் சக்கிகளுக்கும் இந்த நம்பிக்கை நிறையவே இருக்கின்றது.

நீ எப்படி தமிழ் மக்களின் வாழ்வு பற்றி நினைக்கிறாயோ அப்படித்தான் சாதரண சிங்கள மக்களின் வாழ்க்கையும். உண்மையைச் சொல்லப் போனால் எங்கடை சனத்தை விட அதுகள் தான் சரியான பாவங்கள்.

முதலிலே இந்தச் தமிழ்ச் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள தியாகிகள் துரோகிகள் என்ற நிலை மாறி எல்லோரும் ஒற்றுமைப்படல் வேண்டும். அத்தோடு எங்கடை மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட முஸ்லீம் சகோதரர்களைச் சேர்த்துக் கொண்டும் சிங்கள மக்களையும் முற்போக்குச் சக்திகளையும் இணைத்து வேலை செய்வோமாக இருந்தால் உண்மையிலே ஒரு நல்ல வாழக்கை எல்லா இனத்தவர்களுக்கும் கிடைக்கும்.

நான் வெளிநாடு செல்வதற்கு முன்னர் எப்படி எப்படியெல்லாம் நடந்து முடியப்போகுது என்று சொல்லி என்னை வழியனுப்பி வைச்சாரோ அப்படியெல்லாம் நடந்து முடிந்தது போல்.. இப்ப இவர் சொல்லுவது போல் தான் நடக்க வேண்டும்.

இது தான் இப்ப எங்கள் எல்லோருக்கும் உள்ள மிக முக்கியமான அரசியலும்அவசியமானதுமாகும்.

காலங்கள் தான் கடந்தாலும் இது தான் நடக்கவும் வேண்டும்.