உலகத்தின் சமாதானப் புறா இன்று சமாதானத்தினை தொலைத்து கண்ணீரோடு நிற்கிறது. ஒஸ்லோ என்ற அழகிய நகரம் அழகினைத் தொலைத்து விட்டு சோகமாக காட்சியளிக்கிறது. கணப்பொழுதில் தங்கள் வாழ்க்கையினைத் தொலைத்து விட்ட அப்பாவி உயிர்களின் இரத்தம் உறவுகளையும், உலக மனிதத்தினையும் உறைய வைத்துவிட்டது. உலகில் எந்த உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆகிவிட்டது.

ஒரு தனிமனிதனின் சிந்தனை எத்தனை உயிர்களைப் பலி கொண்டுவிட்டது. அன்று ஜேர்மன் மண்ணில் ஆரம்பித்து இன்று நோர்வே மண்ணிலே வந்து நிற்கின்றது. நாளை இது எந்த மண்ணில் யார் உயிரை எடுக்குமோ என்ற கேள்விகள் அதிகாரவர்க்கம் தொட்டு அப்பாவி மக்கள் வரை மனதில் நினைவாக நிழலாடுகிறது. உண்மையில் இது இன்னும் தொடருமா.., இல்லை நோர்வேயோடு நின்று விடுமா..?

 

 

 

 

அன்று கிட்லரும் நேற்று மகிந்தாவும் அதிகாரத்தினை கையில் வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவிகளை அழித்தார்கள். அதே அதிகாரத்தின் துணையுடன் சிங்களக் காடையர்கள் அப்பாவித் தமிழர்களை அழித்தார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு பயங்கரவாத விமானத் தாக்குதல் மூலம் உயர்ந்த கட்டிடத்தின் சீமெந்துப் பாறைக்குள் பல ஆயிரம் உயிர்களைப் புதைத்தார்கள். இது இப்படியே தொடர்ந்து பம்பாய், பாகிஸ்த்தான், ஈராக்…, என்று இப்போது நோர்வே வரை வந்து நிற்கின்றது.

ஏன் இது தொடர்கிறது..? இதை தடுத்து நிறுத்த முடியாதா..? யார் இதை தடுத்து நிறுத்துவது..? யாரால் அது முடியும்..?

ஒபாமாவாலா.., மன்மோகன் சிங்காலா.., மகிந்தாவாலா அல்லது ஐ.நா. வினாலா…?

பிரபாகரனை ஒழித்து விட்டதால் இலங்கைக்கு அமைதி வந்துவிட்டது. ஒசாமாவை ஒழித்து விட்டதால் அமெரிக்கா பாதுகாக்கப்பட்டு விட்டது. முஸ்லீம்களை அடக்குவதன் மூலம் இந்தியர்கள் சந்தோசமாக வாழ முடியும் என்ற ஆட்சியாளர்களின் கருத்துக்களும் அடக்குமுறைகளும் எந்த உலகத்தில் எந்த மக்களையும் அமைதியாக வாழ வைக்கவில்லை. உலகம் அமைதியாகவில்லை, மக்கள் சந்தோசமடையவில்லை.

ஒஸ்லோவில் நடந்த இந்தப் படுகொலைக்காக யுனெநசளடீ.டீசநiஎமை என்ற தனிமனிதனை திட்டித் தீர்த்து அவன் மேல் ஆத்திரத்தினைக் கொட்டுகிறோம். ஆனால் அவனை அப்படி ஒரு மனநிலைக்கு வளர வைத்த இந்த அதிகாரவர்க்க ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை கருத்தில் எடுக்க மறந்துவிடுகிறோம். தங்கள் நலனுக்காக, தங்களுடைய இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் நிறவெறியினையும், இனத்துவேச உணர்வுகளையும், மதமுரண்பாடுகளையும் மக்கள் மனதில் உருவாக்கிவிடும் அதிகாரவர்க்கத்தினதும் அரசியற் பிரமுகர்களினதும் கருத்துக்களே இந்த பயங்கரவாதத்திற்கு வழிசமைக்கிறது. தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள காடையர்களின் தாக்குதலும் இலண்டன் நகரில் ராமுக்கு எதிராக நடந்த காடைத்தனமான தாக்குதலும் இந்த சுயநல அரசியல் ரவுடிகள் தூண்டிவிடும் தவறான உணர்ச்சிக் கருத்துக்களின் வெளிப்பாடுதான். எங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவும் ஏனைய அப்பாவி மக்களுக்கு எதிராகவும் இளைஞர்களின் சிந்தனையினையும் உணர்வினையும் திசைதிருப்பி தங்கள் பிச்சைப் பிழைப்பினை பாதுகாத்து வரும் அரசியல்வாதிகளின் கருத்துக்களும் எப்போதும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிக் கொள்ளும் அதிகாரவர்க்கம் தான் பயங்கரவாதத்தினையும் உருவாக்குகிறது. அப்பாவி இளைஞர்களின் மனதில் வன்முறை உணர்வுகளை வளரவைத்து பயங்கரவாதிகளாக உருவாக்குகிறது இந்த அதிகார வர்க்கம். ஆனால் இதன் பாதிப்பும், உயிரிழப்பும், கண்ணீரும் எப்போதும் அப்பாவி மக்களுக்குத் தான்.