குறுந்தேசியம் - பேரினவாத தேசியம் இவ்விரண்டுக்கும் பின்னால் இடதுசாரியம் காணாமல் போனது. முரணற்ற தேசியத்தையும், அதனடிப்படையிலான சுயநிர்ணயத்தையும் உயர்த்தி மக்களை சார்ந்து நிற்கத் தவறியது. இந்த இடதுசாரியம் குறுகிய இனவாதிகளின் பின் மக்கள் நிற்பதாக கூறிக் கொண்டு, இனவாதிகளுக்கு ஏற்ற அரசியலை முன்னெடுத்துக்கொண்டு, மக்கள் போராட்டத்தை இல்லாதாக்கியது. இந்த அடிப்படையிலான இடதுசாரிய அரசியலே இன்னமும் தொடருகின்றது. இதன் விளைவாக இன்று வரை புலம் - தமிழகம் - இலங்கை என்று எங்கும், இனவாதிகள் தான் தீர்மானகரமான சக்திகளாக தொடர்ந்து நீடிக்கின்றனர்.

 

 

 

தேசியத்தின்பாலான தவறான சந்தர்ப்பவாத இடதுசாரிய சித்தாந்தம், பலரை இடதுசாரியத்தைக் கைவிட்டு பிற்போக்கான தேசியவாதிகளாக்கியது. தமிழ் குறுந்தேசியம் - சிங்கள பேரினவாத தேசியம் முறையே "தேசியம்" "ஜனநாயகம்" என்ற கோசத்துக்குள் தம்மை "முற்போக்காக" புனைந்து இடதுசாரியத்தின் அரசியல் பலத்தை, அரசியல் ரீதியாக இல்லாதாக்கினர்.

தேசியம் நாட்டின் பிரதான முரண்பாடாக மாறிய நிலையில், இந்த முரண்பாட்டை முற்போக்கு சக்திகள் தங்கள் கையில் எடுக்கத் தவறிய நிலையில், பிற்போக்குத் தேசியத்தின் பின் இடதுசாரியம் படிப்படியாக சீரழிந்தது. புலம், இந்தியா, இலங்கை என எங்கும் இதை நாம் காணமுடியும். குறிப்பாக தேசியம் ஊடாக இடதுசாரியத்தை புரிந்து அதை அரையும் குறையுமாக தழுவிக் கொண்டவர்கள், இடதுசாரியத்தை கைவிட்டு பிற்போக்கு தேசியவாதிகளானார்கள். மற்றவர்கள் அங்குமிங்குமாக ஊசலாடினார்கள். உண்மையில் தேசியத்தின்பாலான முரணற்ற தேசியத்தையும், சுயநிர்ணயத்தையும் அரசியல் கிளர்ச்சியாக பிரச்சாரமாக முன்னெடுக்கத் தவறியது மட்டுமின்றி, இவ்வாறான போக்கை அம்பலப்படுத்தவும் தவறி, பிற்போக்குத் தேசியத்தை பலப்படுத்திய அரசியல் போக்குகளையே எங்கும் காணமுடியும்;. இதில் பலர் அரசியல் ரீதியாக காணாமல் போனார்கள்.

முரணற்ற தேசியத்தை அதன் அடிப்படையிலான சுயநிர்ணயத்தை உயர்த்திப் பிடிக்கத் தவறிய அரசியல் திரிபுகள் ஊடாக இவை அரங்கேறியது. இது தேசியத்தின் பின்னான இடதுசாரியத் திரிபாக மாறியது. தேசியம் பற்றிய மார்க்சிய வரையறையை முன்னிறுத்தி, அரசியல் பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் முன்னெடுக்க வேண்டியதே பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கடமையாகும். இதை இலங்கை, இந்தியப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் ஒரு தொடர்ச்சியான அரசியல் கிளர்ச்சியாக, பிரச்சாரமாக செய்யவில்லை. இந்த நிலையில் தேசியத்தை பிற்போக்கு சக்திகள் தங்கள் கையில் எடுத்தது மட்டுமின்றி, முரணான பிரிந்து செல்லும் தேசியத்தைக் கோரினர் அல்லது அதை அம்பலப்படுத்தாது சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்தனர். முரணற்ற தேசியத்தை முன்னிறுத்த வேண்டிய பாட்டாளிவர்க்கம், செயலற்ற முரணான தேசியக் கூறாக மாறியது. இலங்கை இந்தியா எங்கும் பிற்போக்கான தேசியக் கூறுகள், தீர்மானகரமான அரசியல் சக்தியாக மாறியது. இது இடதுசாரியத்தை படிப்படியாக முரணற்ற தேசியத்துக்கு பதில், முரணுள்ள தேசியத்தைச் சார்ந்த இடதுசாரியமாக வீழ்ச்சியுற வைத்தது.

இந்த அரசியல் உண்மையை மூடிமறைக்கும் இடதுசாரிய கோட்பாடுகள் உருவானது. முரணுள்ள தேசியத்தை அதாவது பிற்போக்குத் தேசியத்தை சார்ந்த இடதுசாரிய சித்தாந்தம் உருவானது. முரணான தேசியம் முன்னிறுத்திய அதே எதிரியை மையப்படுத்திக்கொண்டு, இடதுசாரிய திரிபுகளும், கோட்பாடுகளும், நடைமுறைகளும் உருவானது. இது முரணற்ற தேசியத்தை உயர்த்திய முற்போக்கு சக்திகளை, குறுங்குழுவாதிகளாகவும் வரட்டுவாதிகளாகவும் முத்திரை குத்தியது. இதன் மூலம் பிற்போக்குத் தேசியத்தின் பின்னான சித்தாந்தம் மற்றும் நடைமுறைகளையும் முன்தள்ளியது. சந்தர்ப்பவாத அரசியலே, தேசியத்தின் பாலான பிரதான அரசியலானது.

வெளிப்படையற்றதும், மூடிமறைத்ததுமான அரசியல் நடைமுறை உருவானது. எதிரியை மையப்படுத்திய இந்தச் சந்தர்ப்பவாதம், குறுந்தேசியத்தை தன் விமர்சனத்தில் இருந்து விலக்கியும், தன் அரசியல் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரத்தில் இருந்து விலக்கியும் அரசியல் ரீதியாக சலுகை வழங்கியது. முரணற்ற தேசியத்தையும், சுயநிர்ணயத்தையும் உயர்த்தியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டனர். இடதுசாரியத்தின் பெயரில், மார்க்சியத்தின் பெயரில் இதுதான் எங்கும் நடந்தது.

சம்பவங்கள் தரவுகள் திரிக்கப்பட்டும், மூடிமறைக்கப்பட்டும், புலித் தேசியம் முன்தள்ளியதை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்கு தேசியம் உயர்த்தப்பட்டது. இடதுசாரியத்தின் பெயரில் புலிச் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பரப்புரைகளை நிகழ்த்தினர். புலி அனுதாபிகள் என்ற முத்திரையுடனும், தவறாக வழிநடாத்தப்பட்ட சரியான தேசியவாதிகள் என்றும், சொந்த அனுபவத்தைச் சொல்பவர்கள் என்றும் கூறிக்கொண்டு, முரண் தேசியத்தை முரணற்ற தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்தினர். இது பொதுவான பிற்போக்கு தேசியத்தின்பாலான சமரசத்தடன் கூடிய பொது அணுகுமுறையின் அரசியல் நீட்சியாக வெளிவந்தது. வர்க்க சமூக அமைப்பில் எந்தக் கருத்தும் வர்க்க அடையாளம் கொண்டது என்பதை மறுத்தபடி, பொது அவலம் சார்ந்த உண்மைக்குள் இது புகுத்தப்பட்டது. வர்க்க அமைப்பில் வர்க்கச் சார்பு என்பது பிற்போக்கு தேசியத்தின்பாலும் இருக்கின்றது என்ற உண்மையை மூடிமறைத்துக் கொண்டு, பிற்போக்கு தேசியத்தை உயர்த்தியது. இங்கு பிற்போக்கு தேசியம் பலமான சித்தாந்த அடிப்படையில் தன்னை மிதப்பாக்கி எங்கும் நிறைந்த ஒரு அரசியல் சூழலில், அதே சித்தாந்தம் இடதுசாரியத்தின் பெயரிலும் முன்தள்ளப்பட்டது. முற்போக்கான முரணற்ற தேசியக்கூறுகளை முன்னிறுத்திய சுயநிர்ணயம் பலவீனமான நிலையில், கருத்தளவில் தன்னை முன்னிறுத்திப் போராடிய நிலையில், அதற்கு எதிராக இடதுசாரியம் ஊடான வலதுசாரிய பிரச்சாரம் இடதுசாரிகள் மத்தியில் திணிக்கப்பட்டது. இதைச் செய்யத் தவறுவது குறுங்குழுவாதமாகவும், வரட்டுவாதமாகவும் கூடக் காட்டப்பட்டது.

புலி அனுதாபிகள், நேர்மையான தேசியவாதிகள், சொந்த அனுபவத்தைச் சொல்பவர்கள் என்று கூறிக்கொண்டு, வர்க்கம் கடந்த தேசியம் ஊடான பிற்போக்குக் கூறுகள் இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கப்பட்டது. முரணற்ற தேசியத்தையும் சுயநிர்ணயத்தையும் மறுதலித்த "நேர்மை" "அனுபவம்" இடதுசாரிகள் மத்தியில் திணிக்கப்பட்டது.

பிற்போக்கு முரணான தேசியத்துடன் இணங்கிச் செல்வதே, முற்போக்கான முரணற்ற தேசியத்தின் கடமையாக முன்தள்ளப்பட்டது.

இது ஆதிக்கம் பெற்ற பிற்போக்கான தேசியவாத சிந்தனை மற்றும் சித்தாந்த ஓட்டத்துக்கு பின்னால் நின்று, மார்க்சியத்தை திரித்தலாகும். இலங்கையில் பிற்போக்கான புலித் தேசியம் தன்னை தான் நிலைநிறுத்த, முற்போக்கு தேசியத்தை வன்முறை மூலம் ஒடுக்கியது. இது தனக்கேற்ற வரலாற்றையும், புனைவுகளையும், கற்பனைகளையும் அடிப்படையாகக் கொண்ட சித்தாந்த முறையை உருவாக்கியது. அதை "அனுபவமாக", "நேர்மையாக" கொண்டதுதான் தமிழ்தேசியம் என்ற கருதுகோளை உருவாக்கியது. இதைத்தான் இடதுசாரியத்தின் பெயரில், மார்க்சியத்தின் பெயரில் மீளக் கூறினர்.

இந்தச் சித்தாந்த முறைமைக்குள் நின்று கருத்துரைப்பது, வரலாற்றைச் சொல்வது, தன் சொந்த அனுபவமாக கூறுவது என அனைத்தும், புலியின் பிற்போக்கான தேசியம் சார்ந்த அதன் அரசியல் சித்தாந்தம் தான். இதைத் தாண்டி புலித்தேசிய சித்தாந்தம் எதுவும் தனியாக இருப்பதில்லை.

பொது மகன், பாதிக்கப்பட்டவரின் சொந்த அனுபவம் என்று, இது பலதளத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சித்தாந்தத்தின் அரசியல் சாரம் என்பது, பிற்போக்கு (புலித்) குறுந்தேசியத்தை பாதுகாத்தல்தான்.

இது வலதுசாரிய தேசிய விரோத குறுந்தேசிய கோட்பாட்டால் ஆனது என்ற உண்மையை மூடிமறைக்க, அது தனக்குத்தானே வேஷம் போட்டு வந்திருக்கின்றது. இதை மூடிமறைத்து, இதை பாதுகாக்கும் இடதுசாரிய அரசியல் போக்குகள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்திருக்கின்றது. முரணற்ற தேசியத்தை முன்னிறுத்திய தேசியத்தின் பால் தங்களை முன்னிறுத்தும் அரசியலை முன்னெடுக்காத இடதுசாரிய அரசியல், வலதுசாரியத்தை மீளப் பிரச்சாரம் செய்யும் அரசியலையே முன்தள்ளியது. புலம், இந்தியா, இலங்கை எங்கும் இந்த இடதுசாரிய சந்தர்ப்பவாதப் போக்கு வலதுசாரிய தேசியத்தை ஊக்குவித்தது. தமிழ் தேசியத்தை மட்டும் அரசியலாகக் கொண்ட இடதுசாரியம், (புலித்) தேசியத்தின் பின் காணாமல் போனது. தேசியம் சார்ந்து உருவாகாத இடதுசாரிகள் மட்டும்தான், தேசியத்தின் பின் காணாமல் போதலில் இருந்து தப்பிப் பிழைத்தனர். இதைப் புலம் - இந்தியா - இலங்கை எங்கும் நாம் காணமுடியும். இதில் ஒரு பகுதிதான் முரணற்ற தேசியத்தை உயர்த்தி சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில் குறைந்தபட்சம் கொள்கை அளவில் கூட ஊன்றி நிற்கின்றனர்.

 

பி.இரயாகரன்

21.07.2011