1983 யூலை 23-இல் தமிழினம் மீது, சிங்கள அரச பேரினவாதம் நடத்திய வன்முறையை ஒத்ததுதான், 2011 யூலை 23-இல் நடக்கவுள்ள தேர்தல் என்ற "ஜனநாயக" கூத்து. இதே நாளில் தமிழினத்தை தேர்தல் மூலம் அடிமைகொள்ள சபதம் ஏற்று, இந்தப் பேரினவாதம் பாசிசமயமாகி கொக்கரிக்கின்றது. தேர்தல் "ஜனநாயகம்" என்ற தங்களின் போலி "ஜனநாயக"த்தைக் கூட, தமிழ் மக்கள் சுதந்திரமாக அனுபவிக்கக் கூடாது என்பதுதான் மகிந்தவின் இனவாதச் சிந்தனையாகும்.
எதிர்க் கட்சிகளும், தமிழினத்தை முன்னிறுத்திய குறுந்தேசிய இனவாத தமிழ்க் கட்சிகளும், 1983-போல் கூனிக் குறுகியபடி, தேர்தல் ஜனநாயகத்தை ஒட்டிய, தங்களுக்கே உரிய பச்சோந்தி வேசத்தைக் காப்பாற்ற போராடுகின்றன. 1983-ஆம் ஆண்டு, யூலை.23 என்ற நாளில், சிங்கள அரச பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடாத்திய இனச் சிதைப்புப்போல், 2011-ஆம் ஆண்டு, யூலை.23 என்ற அதே நாளில், தமிழ் வாக்காளர்களை அச்சுறுத்தி, தமிழினத்தை தொடர்ந்து அடக்கியொடுக்க முனைகிறது.
2009-ஆம் ஆண்டு, இலங்கையில் வெளிப்படையான தமிழின அழிப்பு யுத்தத்தை நடாத்தி முடித்த மகிந்த பாசிச அரசு, வடக்கு - கிழக்கில் இராணுவ ஆட்சியை திணித்திருக்கின்றது. இந்நிலையில் இந்தப் பாசிச அரசு தனது மனித வதைக் குற்றப் பின்னணிகளில் இருந்து தன்னை மூடிமறைத்துக் கொள்வதற்காக, தனக்கு ஜனநாயக முகமூடிகளை அணிந்துகொள்கின்றது. இந்த மகிந்த அரசு ஏதேதோ "ஜனநாயகம்" என்ற வண்ண சாயங்களை பூசியவாறு, ஊர் உலகத்தை ஏமாற்றவே "வடக்கில் உள்ளுராட்சி தேர்தல்" என்ற பாசிசக் கூத்தை ஆடுகின்றது.
2009-இல் அரங்கேற்றிய தமிழின அழிப்பு யுத்தத்தின் பின்னான இரண்டு வருட காலத்தில், வடக்கு - கிழக்கில் தமிழின அடையாளத்தையும், அவர்களின் சுய வாழ்வுக்கான ஜனநாயக இருப்பையும் அழித்தொழித்தபடி, அனைத்து வகையான இன அழிப்புத் திட்டங்களையும் மேற்கொள்கின்றது.
இதன் தொடராகவே 1983 யூலை.23-இல், பாசிச அரசு நடத்திய இன அழிப்பு நாளில், தேர்தல் நடாத்த முற்படுவதன் மூலமாக அந்த மக்களின் அபிலாசைகளையும், துயரங்களையும் தேர்தல் கூத்து மூலம் மறுதலிக்கின்றது. இதன் மூலமாக தமிழினத்தின் தேசியம் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் - கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி, அந்த நாளை ~ஜனநாயகம்| என்ற தேர்தல் கூத்தாக அரங்கேற்றுகின்றது.
மக்கள் மீது, குருதியால் பச்சை குத்தி, வடுக்களாகிப் பதிந்திருக்கும் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதை கூட அனுமதிக்காத அரசியல் சீரழிவை, இந்தப் பேரினவாத அரசியல் தொடராகத் திணிக்;கின்றது. இதில் தமது குறுகிய தமிழினவாத அரசியலால் தீர்க்க முடியாத மக்கள் விரோதக் கட்சிகள், இனவெறி அரசுகள் திணிக்கின்ற அனைத்து அழிவுத் திட்டங்களையும் ஏற்று, இந்த அரசுகள் போடும் ஊனுக்கும் - தீனிக்குமாக அவர்களுக்கு "ஜனநாயக" பரிவட்டம் கட்டி அழகு பார்ப்பதுடன், இந்த அரசிற்போக்கால் நொந்து நூலாகிப் போயிருக்கும் மக்களையும், அதனை ஏற்றுக் கொண்டாடுமாறு வன்முறையால் திணிக்கின்றனர். இப்படி இன அழிப்பின் ஒவ்வொரு நகர்விலும், தமக்கான இலாபம் எவ்வளவு என்பதே இந்த குறுந்தேசிய தமிழினவாத கூட்டமைப்பின் அடுக்குமொழி அரசியலாகும்.
இந்த யூலை 23-ஐ, தமிழ் மக்கள் மறக்காது வருடா வருடமாக் கொண்டாடவேண்டும் என மேடைகளில் முழங்கியவர்களே இவர்கள்தான். இன்று இதனை மறுதலித்து தேர்தல் கொண்டாட்டம் நடத்துகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானம் போட்டு, ஆயுதப் போராட்டம் வரை கூச்சல் போட்டவர்களான இவர்கள்தான், மீண்டும் தேர்தல் மூலம் கூத்தாடுகின்றனர். இந்தியாவையும், அமெரிக்காவையும் அடிவருடியபடி, "அரசியல் தீர்வு" என்ற பம்மாத்தை பற்றிப் பிடித்து ஊதிப் பெருக்குகின்றனர்.
மக்களை ஏய்த்து, அவர்களின் அர்ப்பணிப்புத் தியாகங்களை தங்களின் சொந்த நலனுக்கு ஏற்ப அரசியலாக்கி, தேர்தல் மூலமே தீர்வு என்கின்றனர். 1970-களில் நாடாளுமன்றத்திற்கான அரசியல் மூலம் ஆடிய அதே சதிராட்டத்தை, இனப்படுகொலை நடந்த அதே யூலை 23-இல், தமிழினத்தை தொடர்ந்து அடிமையாக்கும் அதே தேர்தல் என்ற இந்தச் சாக்கடையில், தங்களைப் போலவே வெட்கம் - மானம் - ரோசம் - சூடு சொரணை - ஒழுக்கமற்று, மக்களையும் அதில் முழ்கி எழக் கோருகின்றனர்.
1983 யூலை.23 இனப் படுகொலை நினைவுகளை முன்னிறுத்தி, தேர்தலை நிராகரிப்போம்!
தீர்வு கிடையாத - தேர்தல் என்ற சாக்கடையை தொடர்ச்சியாக நிராகரிப்போம்..!
குறுந்தேசிய கூட்டமைப்பு - புலி – எடுபிடி அரசியலை முழுமையாக நிராகரிப்போம்..!
எமக்கான நடைமுறையையும் - போராடும் வழிமுறையையும் நாமே உருவாக்குவோம்..!
மக்கள் தம்மைத் தாமே தலைமை தாங்கவும் - போராடவும் வழிசமைப்போம்..!
பேரினவாதத்தின் தொடர் அடக்குமுறையையும், அதன் அரசியலையும் இனம் காண்போம்..!
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
16.07.2011