போலி தேர்தல் ஜனநாயகம் மூலம், மக்களை தெரிவு செய்த உறுப்பினர்கள் கூட வடக்கு கிழக்கில் சுதந்திரமாக இயங்க முடியாதுள்ளது. மிரட்டப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர், அவர்களின் பொதுக்கூட்டங்கள் அடித்து நொருக்கப்படுகின்றது. மக்களின் கதியை எண்ணிப்பாருங்கள். வடக்கில் வசந்தமும், கிழக்கின் உதயமும் இதுதான். இப்படி ஒரு குடும்பத்தின் ஆட்சி, தன் சர்வாதிகாரத்தை மகிந்த சிந்தனை என்கின்றது.

 

மகிந்த சிந்தனை வழிகாட்டும் இராணுவம் தான், இன்று வடக்கு கிழக்கை அடாவடித்தனம் செய்து ஆளுகின்றது. புலனாய்வின் பெயரில் அது உருவாக்கியுள்ள இரகசிய கொலைக் குழுக்கள், வடக்கில் கிழக்கில் சட்டத்ததை கையில் எடுத்து சட்டவிரோத செயல்களை செய்கின்றது. இதை மூடிமறைக்க இனந்தெரியாத கும்பலாக தன்னை மாற்றி, அதை முன் நிறுத்துகின்றது. இலங்கையில் புலானாய்வு என்றால் இரகசியமாக கடத்துதல், கொல்லுதல்தான். அதன் அதிகாரம் மூலம் கப்பம், ஆள்கடத்தி பணம்பறித்தல், பாலியல் வன்புணாச்சி என அனைத்தையும் அதுவே அரங்கேற்றுகின்றது.

இந்தவகையில் குடாநாட்டின் இராணுவத் தளபதி - அரச அதிபர் – டக்கிளஸ் அடிப்படையாக கொண்ட மூவர் கும்பல், இதற்கு இன்று தலைமை தாங்குகின்றது. தமக்குள் அதிகாரப் போட்டியை நடத்தியபடி, ஒருவரை ஒருவர் சார்ந்தும் குழிபறித்தபடியும், அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்கின்றது.

இனவழிப்பு செய்த இராணுவம், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவம், சரணடைந்தவர்களைக் கொன்ற இராணுவம், இன்று சிவில் சமூக செயல்பாடுகளை முடக்கி வருகின்றது.

இனப்பிரச்சனைக்கு தீர்வை வழங்க மறுக்கும் அரசுக்கு எதிராக, மக்கள் தேர்தல் மூலம் வெளிப்படுத்தும் அவர்களது உணர்வை தடுக்க முனைகின்றது. மக்களை அச்சுறுத்தி, அவர்கள் தமக்கு எதிராக வாக்களிப்பதைத் தடுக்க முனைகின்றது அரசு. சர்வதேசரீதியாக தனிமைப்பட்டுள்ள ஆட்சியாளர்கள், தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு நிற்பதை மூடிமறைக்க முனைகின்றனர். இந்த அடிப்படையில் வன்முறையை அந்த மக்கள் மேல் ஏவுகின்றனர். மகிந்த பாசிசம், இன்று தேர்தல் ஜனநாயகத்தைக் கூட கண்டு அஞ்சுகின்றது. தன்னை தக்கவைக்கவும், தனிமைப்படுவதில் இருந்து தற்பாதுகாப்பைப் பெறவும், இராணுவ ஆட்சியை வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த வகையில் இலங்கையை இராணுவ ஆட்சியின் கீழ் ஆள்வதை நோக்கி, மகிந்த குடும்பம் சிவில் சமூக கட்டமைப்புக்குள் இராணுவத்தை இலங்கை தளுவிய அளவில் திணிக்கின்றது. பாராளுமன்ற போலி ஜனநாயகத்தின் சடங்குகளைக் கூட சகிக்க முடியாத எல்லைக்குள், மகிந்தாவின் பாசிச சிந்தனை அதைக் கடித்துக் குதறுகின்றது.

உலகளவில் தனிமைப்பட்டுள்ள இலங்கை ஆட்சியாளர்கள், உள்நாட்டில் தம்மை தக்கவைக்க இராணுவ ஆட்சி வடிவத்தை குறிப்பாக்கி, அதைப் பலப்படுத்தி வருகின்றனர். உலகநாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்படும் தற்காப்பு சார்ந்த ஒன்றாக, இடதுசாரியத்தின் பெயரில் ஒரு கூட்டம் இன்று கூறுகின்றது. இதை நாளை ஏகாதிபத்திய எதிர்ப்பால் ஏற்பட்ட தவறு, குற்றம் என்று கூறத் தயங்காது. இதையொத்த வகையில் புலிகளின் பாசிச அரசியலை மறுத்து, தனிமைப்படுத்தப்பட்ட புலியின் தற்காப்பு சார்ந்த தவறு குற்றம் என்று கூறுகின்ற இடதுசாரி நவீன புரட்டை இன்று நாம் எதிர் கொள்கின்றோம்.

அரசியல் மூலங்களை மறுத்து, தற்காப்பு மற்றும் புறநிலைக் காரணங்களால் குற்றங்கள், தவறுகள் நிகழ்ந்ததாக கூறுகின்ற இடதுசாரிய அரசியல் புரட்டைக் கொண்ட பொது அரசியல் சூழலில், இந்த இராணுவமயமாக்கம் கூட ஆங்காங்கே நியாயப்படுத்தப்படுகின்றது. மக்களை இதற்கு எதிராக வழிகாட்ட, அரசியல் ரீதியாக புரியவைக்க இன்று யாரும் கிடையாது. தற்காப்பு மற்றும் புறநிலைக் காரணத்தால் ஏற்படும் இராணுவமயமாக்கமும், அதனால் ஏற்படும் தவறுகள், குற்றங்கள் என்று கூறுகின்ற அரசியல் பித்தலாட்டங்களைக் கடந்து, அரசியல் உண்மைகளில் இருந்து இதை இனங்காண வேண்டும்.

சர்வதேசரீதியான தனிமைப்படுதல், அதன் அரசியல் மூலங்களாலானது. இது புலிக்கும் பொருந்தும், அரசுக்கும் பொருந்தும்;. இலங்கை அரசு இனவழிப்பை யுத்தத்தை நடத்தி முடித்த நிலையில், பாரிய போர்க்குற்றங்களை யுத்தத்தின் பின்னும் தொடர்ந்து திட்டமிட்டு செய்தது. தொடர்ந்து வடக்கு கிழக்கு மக்களை இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருப்பதன் மூலம், அதை நாட்டின் பொது அரசியல் வழியாக மாற்றிவருகின்றது. தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வழங்காது தொடர்ந்து ஓடுக்கியாள முனைகின்றது.

இதன் பின்னணியில் வடக்கு கிழக்கில் மக்கள் மூச்சுக் கூட விட முடியாதுள்ளது. எங்கும் கண்காணிப்பு. மக்கள் தெரிவு செய்த உறுப்பினர்கள் கூட, சுயாதீனமாக மக்களுடன் உரையாட முடியாது. போலி ஜனநாயகம் சர்ர்ந்த தேர்தல் கூட்டங்கள் கூட, இராணுவத்தின் வன்முறைக்குள் இன்று சிதறடிக்கப்படுகின்றது.

இதற்கான தீர்வு தான் என்ன? தமிழ் சிங்கள மக்கள் இதற்கு எதிராக ஒன்றுபடுவதற்கான போராட்டம் தான், இதை அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தீர்வுகாணும். இதுவல்லாத அனைத்து வழியும், கடந்தகாலத்தில் தோல்விபெற்ற வரலாறாகவே நீண்டு கிடக்கின்றது.

பி.இரயாகரன்

17.06.2011