வன்னி மக்களிடம் எதுவும் எஞ்சக் கூடாது என்பது தான் அரசின் கொள்கை. அந்த மக்களிடம் எஞ்சி இருந்ததை சட்டப்படி பறிக்க முடியாது. அதை சட்டப்படி பறிக்கும் வண்ணம், மீள்குடியேற்றத்தை பன்நாட்டு கம்பனிகளுடன் இணைந்து மிக நுட்பமாக நடத்தி முடித்திருக்கின்றது. யுத்தத்தின் பின்னான மீள்குடியேற்றம் மூலம், அந்த மக்கள் தம்மிடம் எஞ்சியதையும் இழந்துள்ளனர். இது எப்படி திட்டமிட்டு அரங்கேற்றபட்டது என்பதைப் பார்ப்போம்.

 

 

 

மீள்குடியேற்றத்தின் பெயரில் இரண்டு தகரங்களைக் கொடுத்த அரசு, மக்களை மீளக் குடியிருக்கக் கோரியது. ஆனால் அந்த மக்கள் சொந்த மண்ணில் குடியிருக்க முன்னமே, அந்த மக்களைச் சூறையாடும் வண்ணம் 10 க்கு மேற்பட்ட வங்கிகளும், பன்னாட்டு விவசாயப் பொருட்களை விற்கும் பாரிய கடைகளும், நூற்றுக்கணக்கில்; வன்னி நிலப்பரப்பில் திறக்கப்பட்டது. இதில் வங்கிகள் உழவு இயந்திரங்கள் முதல் பல விவசாய உபகரணங்கள் விற்கும் காட்சியகங்களை கொண்டுதான் நிறுவப்பட்டு இருந்தது.

மக்கள் இரண்டு தகரங்களையும் தலைக்கு மேல் நிறுத்த, தடிகளை நாட்டிக் கொண்டிருந்த போது, அவர்களைச் சுற்றி வங்கி விற்கும் பொருட்கள் சார்ந்த விளம்பரங்கள் ஆக்கிரமித்திருந்தன. இலகுவான வகையில் உழவு இயந்திரத்தை வாங்கும் வண்ணம், மக்களைக் கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு விளம்பரங்கள் கொண்டு வந்தன. இலகுவான தவணைக் கடன் அடிப்படையில், சிறிய முதலீட்டுடன் உழவு இயந்திரம் முதல் அனைத்தையும் உங்களுடையதாகக் கொண்டு, நீங்கள் இலகுவாகவும் சொகுசாகவும் வாழலாம் என்று மகிந்த சிந்தனையில் உருவான விளம்பரங்கள் சொன்னது. இப்படித்தான் பன்னாட்டுச் சந்தை, வன்னி மக்களிடம் கடைவிரித்து உருவத்தொடங்கியது.

கனவுலகில் இதை அடைய நிஜ உலகில் உழைப்பில் ஈடுபட்ட மக்கள் முன் தான் இது விளம்பரமானது. இதை நிஜ உலகில் உழைப்பின்றி இலகுவாக அடையும் வழி, கண்முன் தெரிந்தது. இது தம்மிடம் எஞ்சி இருப்பதை புடுங்;கும் சதித்திட்டம் என்பதை புரியும் நிலையில், அந்த மக்கள் இருக்கவில்லை. எந்த சமூக நோக்குடனும் இதை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையில், இலங்கையில் யாரும் இருக்கவில்லை.

தவணைக் கடனுக்கு தேவையான முதலீட்டுக்கு, வன்னி மக்கள் தம்மிடம் எஞ்சிய எதை எதையோ விற்;றார்கள், அடைமானம் வைத்தார்கள். இப்படித்தான் தங்கள் கடந்தகால கனவுலகை அடைய உழைத்த எல்லாவற்றையும் விற்று, நிஜ உலகத்தில் அதைப்பெற்று சஞ்சரிக்கத் தொடங்கினர்.

இப்படி விளம்பரம் மூலம், சந்தை களை கட்டத்தொடங்கியது. வன்னி மக்கள் கொட்டில் போட்ட கையுடன் உழவு இயந்திரங்களை வாங்க தம்மை அடகு வைத்தனர். போட்ட கொட்டில் தாம் வாழ்வதற்காகவா அல்லது வாங்கி அந்த பொருட்களை நிறுத்துவதற்காகவா என்பதையும் தீர்மானிக்க கோரியது. அவ்வளவு வேகமாக, அந்த மக்களை சந்தை ஆக்கிரமித்தது. வங்கிகள் இலகுவான தவணைக் கடன் அடிப்படையில், தானே ரைக்கர்கள் முதல் விவசாய நவீன இயந்திரங்களை வரை விற்கத் தொடங்கியது. ஆம், ஒரு பகுதியை முதலிடுவதன் மூலம் இவற்றை இலகுவாக வாங்கிவிட முடியும் என்று கூறித்தான் அந்த மக்களை இந்த வலையில் மிக நுட்பமாக இழுத்தது. இது இரண்டாவது முள்ளிவாய்க்கால் என்பதை மக்கள் அறியவில்லை.

இப்படித்தான் இரண்டு தகரங்களை கொடுத்து அரசு குடியேற்றிய வன்னி மக்கள் முன், கடைவிரித்திருந்தன பன்னாட்டு நிறுவனங்களும் அதன் ஏஜண்டுகளும். இதற்காக மக்கள் தம்மிடம் எஞ்சி இருந்ததை விற்றனர். வெளிநாட்டில் உறவினர்pடம் இருந்து பெற்றதைக் கொடுத்தனர். அரசு கொடுத்த ஆரம்ப நிதியைக் கொண்டு போய் மீளக்கொடுத்தனர். இப்படி இந்த வங்கிகள் மற்றும் கடைகளின், தவணை அடிப்படையில் பொருட்களை வாங்கினர்.

இராணுவ வாகனங்கள் ஓடிய தெருவில், போட்டிக்கு பன்னாட்டு விவசாய வகனங்கள் ஓடத்தொடங்கியது. படலைக்குப் படலை நவீன புதிய விவசாய இயந்திரங்கள். இப்படி மக்கள் யுத்தத்தில் இழந்தது போக எஞ்சியதை உருவின பன்னாட்டு கம்பனிகள். இப்படி உருவியவர்கள், அதை மீளப் பறிக்கும் கதை இன்று அரங்கேறுகின்றது.

என்ன நடந்தது! என்ன நடக்கின்றது!!

தவணை விளம்பரங்கள் மூலம் பாரிய அளவில் விற்ற விவசாய இயந்திரங்களுக்கான தவணை பணத்தை தொடர்ந்து அறவிட்டன வங்கிகள். மக்கள் இதை கட்ட, தவணைக்கு தவணை தம்மை விற்றனர். தொடர்ந்து தவணையைக் கட்டமுடியாது போயிருக்கின்றது.

விளைவு இன்று நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 விவசாய உபகரணங்கள் வன்னியில் பறிமுதல் ஆகின்றது. இருந்த முதலீட்டையும், வங்கிகளிடம் இழந்து, கடன்காரராக மாறிய அவர்கள் வெறும் கூலிகளாக மாற்றப்படுகின்றனர்.

இப்படி இலகுவான தவணை அடிப்படையிலான சந்தையைக் கொண்டு, அந்த மக்களையே மீளக் சூறையாடியிருக்கின்றது அரசு. சொந்த நிலத்தை விற்க வேண்டிய அவலம். இப்படி இரண்டாவது முள்ளிவாய்க்கால் அவலம் அரங்கேறுகின்றது.

விவசாய இயந்திரங்களை மக்களை ஏமாற்றி திணித்த போது, அவர்களின் ஆரம்ப மூலதனத்தை இல்லாதாக்கினர். இதன் மூலம் தன் நிலத்தைக் கூட உழ முடியாதளவுக்கு, அவனிடம் பணம் இருக்கவில்லை. சரி மற்றவனுக்கு உழலாம் என்றால், அவனிடம் இதே பொருட்கள் அரசு கொடுத்த இரண்டு தகரத்துக்கு கீழ் மிகப் பாதுகாப்பாக நிற்கின்றது. அதற்கும் எந்த உழைப்புமின்றி, எந்த சேதாரமுமின்றி நிற்கின்றது. புதிதாக உருவாகிவிட்ட பணக்காரனோ, அனைத்தையும் சொந்தமாக வைத்து உழுகின்றான். ஆக வாங்கிய உபகரணத்தைக் கொண்டு, எங்கும் உழ முடியாது. தனக்கும் உழ முடியாது. கிடைக்கும் உழவு கூட பாரிய போட்டிக்கு இடையில், எந்தக் கட்டுப்படியான விலைக்குள்ளும் செய்யமுடியாது. ஆக தவணைப் பணம் கட்ட முடியாது போகின்றது. இன்று அவை நாள்தோறும் பறி போகின்றது. மகிந்த சிந்தனையின் மகத்துவம் இதுதான். மீள் குடியேற்றத்தின் வெட்டுமுகம் இதுதான். இதனால் வன்னி மக்கள் இனி சுயவிவசாயிகளாக வாழமுடியாது. மீள் குடியேற்றத்தின் பெயரில், விவசாயிகளின் நலனின் பெயரில், அதைக் கொண்டு அவர்களை சூறையாடினர். இந்த எதார்த்ததையும், இதை திட்டமிட்டு உருவாக்கிய பன்நாட்டு சதியையும் கூட, இலங்கையில் எந்த அரசியல் பிரிவினரும் உணர்ந்து கொள்ளவில்லை என்ற உண்மை மேலும் இதை அதிரவைக்கின்றது. இது மாற்றத்துக்கான, போராட்டத்துக்கான அனைத்து கதவையும் மூடிவைத்திருக்கின்றது.

 

பி.இரயாகரன்

11.06.2011