அரசும் சரி, புலியும் சரி, யார் அதிக மக்களைக் கொல்வது என்பதிலும் கூட போட்டிபோடுகின்றனர். மனித அறங்களை எல்லாம் கடந்து, நிர்வாணமாகவே நிற்கின்றனர். பழிக்குபழி, இரத்தத்துக்கு இரத்தம், கொலைக்கு கொலை என்று, அரச பயங்கரவாதமும் புலிப் பயங்கரவாதமும் போட்டி போடுகின்றது.
தாம் மக்கள் விரோதிகள் தான் என்பதை நிறுவி, அப்பாவி மக்கள் மேலான படுகொலை அரசியலை தொடர்ச்சியாகவே நடத்திக் காட்டுகின்றனர். மோதலுக்கு தயாராக உள்ளவர்கள் நேருக்கு நேரோ பதுங்கியோ கிடக்க, இவர்கள் அங்கு வீரம் காட்டுவதில்லை. அப்பாவி பொதுமக்கள் மேல் கொலை வெறியாட்டத்தை நடத்தி, அதை புலி விடுதலை என்றும், புலி மீட்பென்றும் நடத்துகின்ற பாசிச வெறியாட்டம் தான் நடக்கின்றது. இவை செய்தி பத்திரிகையில் இடம் பிடிக்கும் அளவுக்கு, இழிந்த அரசியல் விளம்பரமாகின்றது.
வாய்பொத்தி, ஊமையாக நடமாடும் மக்களோ, இன்று குண்டு வெடிப்புகளில் சிதறிப்போகின்றனர். ஏன் எதற்கு இப்படி மரணிக்கின்றோம் என்பதைக் கூட, அவர்கள் சிந்திக்க முடியாத சூனியம்.
யுத்தம் தான் பிரச்சனையைத் தீர்க்கும் என்று, புலிகளும் அரசும் கூட்டாகவே கோரினர். புலிகளின் தலைவருக்கு வேண்டுகோள் என்று மக்களின் பெயரால் புலிகள் விட்ட அறிக்கை முதல் ஜே.வி.பி கழிசடைகள் வரை யுத்தத்தையே தான் கோரினர். இந்த யுத்தத்தை இருபக்கமும் தலைமை தாங்கும் தலைவர்களின் அறிக்கைகளும், உரைகளும் ஒன்றையொன்று சளைக்காத வகையில் குவிந்தே கிடக்கின்றது.
அனைத்துக்கும் யுத்தம் தான் தீர்வு என்றனர். இப்படி சகல பிரச்சனையையும் யுத்தம் தீர்க்குமென்றனர். மக்களை ஈவிரக்கமின்றி கொல்வது தான், அவர்கள் விரும்பிக் கோரிய யுத்தம். பாசிட்டுக்களின் கடைகெட்டுப்போன குறுகிய வக்கிரம், அப்பாவி மக்களையே கொன்று குவிக்கின்றது. இங்கு தமிழ் சிங்கள வேறுபாடு கூட, இந்த புள்ளியில் இவர்களிடையே கிடையாது.
மனிதம் என்றால் என்னவெனத் தெரியாதவர்கள் யுத்தத்தைக் கோரினார்கள். இப்படி யுத்த வெறி பிடித்து, யுத்த அறங்களைக் கடந்து நிற்கின்றனர். இந்த இழிந்த அழுக்கான யுத்தத்தையே ஊக்கப்படுத்தினார்கள், மக்கள் விரோதிகள்.
இதை சமாதானத்துக்கான யுத்தமென்றனர். விடுதலைக்கான யுத்தம் என்றனர். தேசியத்துக்கான யுத்தம் என்றனர். தீர்வுக்கான யுத்தம் என்றனர். இப்படி யுத்தத்துக்கோ பற்பல வரைவிலக்கனம். மக்கள் அரசியலை முன்வைக்காது, சகல மக்கள் விரோதிகளினதும், மொத்த நிலை ஏதோ ஒரு தளத்தில் இந்த யுத்தத்தை ஊக்கப்படுத்துவதாக இருந்தது.
மக்களை நம்பி அவர்களுக்காக அரசியல் செய்யாத, செய்ய முனையாத எந்த பிரச்சாரமும், ஏதோ ஒரு வகையில் இந்த யுத்தத்துக்கு ஆதரவானது தான். இவை இந்தக் கொலை வெறியாட்டத்துக்கு பக்கபலமாக இருப்பவை தான்.
யுத்தம் செய்பவன், யுத்தம் செய்ய தயராகவுள்ளவனுடன் மோதுவது என்பது அருகி வருகின்றது. மாறாக பொது மக்கள் மீதான படுகொலைகள் மூலம், யுத்தம் நடத்தப்படுகின்றது. உண்மையில் அப்பாவி தமிழ் சிங்கள மக்கள் மீதான யுத்தம் காட்டுமிராண்டித்தனமாகவே நடத்தப்படுகின்றது.
அப்பாவி மக்களின் வாயையும் கையையும் கட்டிப் போட்டுவிட்டு, அவர்களை கொடூரமாகவே கொல்லுகின்றனர். பழிக்குப் பழி என்ற கொலைவெறியுடன், யுத்தமற்ற சூழலில் கொல்லப்படும் மக்கள் எண்ணிக்கையோ, பெருகி வருகின்றது. சிறுவர் சிறுமிகள் முதல் பெண்கள் வரை ஈவிரக்கமற்ற வெறியாட்டத்தை நடத்துகின்றனர்.
இதைக் கண்டிப்பதாக பலர் நடிக்கின்றனர். பக்கசார்புடன் ஒன்றை மட்டும் கண்டிகின்றனர். பரஸ்பரம் தமது எதிர்தரப்பை மட்டும் கண்டித்து, கொலையை ஊக்குவிக்கின்றனர். எங்கும் இந்தக் கண்டனங்கள் என்பது, மனித்தன்மை கொண்ட மனித அக்கறையின் பாலானதல்ல. மாறாக மலிவான அரசியலாகின்றது. வேஷதாரிகளின் நடிப்பாகின்றது.
மனித அவலங்களை தடுப்பது எப்படி? இதுவே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வி.
பொதுவாக இதை தடுக்க புலியைப் பலப்படுத்துங்கள், அல்லது அரசைப் பலப்படுத்துங்கள் என்ற எல்லைக்குள் தான், வழிகாட்டப்படுகின்றது. அதாவது தொடர்ந்து யுத்தத்தை ஊக்குவித்து, மனிதப்படுகொலைகளை தொடருங்கள் என்கின்றனர். கண்டிக்கும் பலரின் நிலையும் இது தான். புலியை ஒழித்தால் தான் விடுதலை என்றும், அரசை தோற்கடித்தால் தான், தமிழ் மக்களின் விடுதலை என்றும் கூறி, இந்த கொலைவெறியாட்ட யுத்தம் ஊக்குவிக்கப்படுகின்றது. இதற்குள் தான், இப்படித் தான், அரசியல் களம் முழுக்க காணப்படுகின்றது.
இதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிட முடியும் என்று, பொதுவாகவே இந்த அரசியல் எல்லைக்குள் முழு சமூகத்ததையும் இட்டுச்செல்லுகின்றனர். இதன் மூலம் மனிதப் படுகொலைகள் அதிகரிக்குமே ஒழிய இதைத் தீர்க்காது. சிலர் இதற்குள் ஒரு தீர்வை வைத்துவிடலாம் என்று கூறியே, யுத்த ஆதரவு அரசியல் செய்கின்றனர். இவை எவையும் மக்களை அமைதியான வாழ்வுக்கும், யத்தமற்ற சூழலுக்கும் எடுத்துச்செல்லாது. அதை கடுமையாக்கி, அதற்குள் மக்களை பலியாக்கும் அரசியலாகும்.
இப்படி யுத்தம் செய்வது பற்றி பலமான கருத்துப் போக்கு, இரண்டு தளத்திலும் உள்ளது. இதற்கு மாற்றாக கருத்து தளத்தில் வேறு எதிர்வினை கிடையாது. புலியை ஒழித்தல், அல்லது அரசை வெல்லுதல் என்பது, மக்களை சுடுகாட்டில் வைத்து எரிப்பது தான்.
இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்துவது எப்படி? மக்களால் மட்டும் தான் அது முடியும். செய்ய வேண்டியது தெளிவானது. யுத்த வெறியர்களை மக்களில் இருந்து தனிமைப்படுத்துவது மட்டும்தான், யுத்தத்தை நிறுத்தவுள்ள மாற்றுவழி.
இந்த யுத்த வெறியர்களின் மனித வெறுப்பு கொண்ட கொலை வெறியாட்டத்தை, அதன் அரசியல் அடிப்படையை மேலும் மேலும் தனிமைப்படுத்தும் வகையில், கருத்து தளத்தை மாற்றி அமைப்பது மட்டும் தான், மக்களை சிந்தனைத் தளத்தில் செயலுள்ளதாக்கும். இதன் மூலம் யுத்தம் செய்பவர்கள் முற்றாக தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன் மூலம் மட்டும் தான், எந்தத் தீர்வையும், ஏன் யுத்தமற்ற சூழலையும் உருவாக்கமுடியும். இதைவிட எந்த மாற்றும், இந்த யுத்தவெறி அரசியலுக்கு வெளியில் கிடையாது.
யுத்த சூழலும், யுத்த நிலைமையும், மேலும் மோசமாகின்றது. இவர்கள் விரும்பித் தொடங்கிய யுத்தம், புலிக்கு பாதகமாகவே மாறியுள்ளது.
புலிகள் சுற்றிவளைக்கப்பட்டு நாள் தோறும் பலர் கொல்லப்படும் நிலைக்குள், யுத்தம் புலிகளை நெருக்குவாரம் செய்கின்றது. புலிகள் இதில் இருந்து மீள்வதற்கான மாற்றுவழி எதுவுமின்றி தவிக்கின்றனர். எதிரியுடன் யுத்த முனையில் மோதி வெல்வது அருகிவருகின்றது. தாம் ஒரு விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இராணுவம் என்று கூறிக்கொண்டதை காப்பாற்றுவதில் இருந்து கூட, அது விலகிச் செல்லுகின்றது. பொதுமக்கள் மேலான படுகொலைகளளப் புரிவதன் மூலம், யுத்தத்தை வெல்ல முடியும் என்று நம்பும் அளவுக்கு, மேலும் அது சிதைந்து வருகின்றது. இதனால் இலக்கற்ற நெறியற்ற தாக்குதலை, பொதுமக்கள் மீது ஏவி விடுகின்றது.
இந்த நிலையில் இந்த இலக்கற்ற தாக்குதல் என்ற நிலைக்கு, பண்பு வகைப்பட்ட வகையில் மாற்றம் கண்டுள்ளது. குறிகோளற்ற போராட்டம் போல், இலக்கற்ற தாக்குதல் என்ற எல்லைக்குள், புலிகளின் இராணுவ வடிவம் சிதைந்து போராட்டம் மேலும் ஆழமாக ஒரு புள்ளியாகி அழிகின்றது.
பேரினவாதிகளின் யுத்தக் கூச்சலும், கண்மூடித்தனமான மனித உரிமை மீறல்களும் அம்பலப்பட்டு நிற்கின்ற ஒரு நிலையிலும், புலிகள் தமது அழிவென்னும் யுத்த நெருக்கடியில் சிக்கி நிற்கின்றனர். இந்த நிலையில் இதில் மீளும் வழி என்பது, புலிகளின் பாசிசத்தின் முன் கிடையாது. மாறாக கண்மூடித்தனமான மக்கள் படுகொலைகளை போட்டியாக தானும் நடத்தி, தப்பிப்பிழைக்க முடியும் என்று நம்புகின்றது. இதன் விளைவோ எதிர் மறையானது. அரசின் தொடர்ச்சியான மனிதவுரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்கள் அம்பலமாவதைவிடவும், அதையும் முந்திக்கொண்டு புலிகள் தமது சொந்த செயல்களால் மேலும் தனிமையாகின்றனர்.
இப்படி மக்கள் மீட்சியற்ற, அழிவு யுத்தம் செய்கின்ற யுத்த வெறியர்களின் பாசிச சுழற்சிக்குள் சிக்கிவிட்டனர். இந்த இரண்டு யுத்த வெறியர்களையும் தனிமைப்படுத்தும் அரசியல் மூலம் தான், யுத்தத்தை நிறுத்த முடியும். அவர்களின் யுத்த நோக்கத்தையும், அதன் மக்கள் விரோதத் தன்மையையும், அதன் கோர முகத்தையும் அம்பலப்படுத்துவதன் மூலம் தான், மக்கள் தமது சொந்த செயலுக்கான வழிகளில் இந்த யுத்தத்ததை தடுத்து நிறுத்த முடியும். இதற்கு மாறாக யுத்தத்தைப் பலப்படுத்துதல் என்பது, மக்களை மேலும் மேலும் பலியிடப்படுவதை ஊக்குவிப்பது தான்.
பி.இரயாகரன்
05.02.2008