09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

புலுடா…..

சாமத்தியக் கொண்டாட்டம் முடிஞ்சவுடன் இரவுப் பார்ட்டிக்கு நீ கட்டாயம் நிற்க்க வேண்டும் என்ற சிவாண்னையின் வேண்டு கோளுக்கிணங்கத் தான் நான் இங்கு வரவேண்டிய நிலை. தவிர்க்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.


எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. குடிப்பதற்கல்ல இங்கே வருவதற்கு தான்.
போனால் குடிக்க வேண்டும்.
குடிச்சா கதைக்க வேண்டும்.
கதைச்சா அரசியலும் வரும்.
அரசியல் வந்தா சண்டை வரும்.
சண்டைவந்தா…

 

முன்பு போல் சண்டையும் படவும் முடியாது.

பிள்ளைகளும் வளர்ந்திடுத்துக்கள், மனுசியும் வளர்ந்திட்டுத்து.
யார் யார் எந்தப் பக்கத்தில் நிக்கிறார்களோ..?
யாரையும் நம்பவும் முடியாது.
யாரையும் புரிந்து கொள்ளவும் முடியாது.
இப்ப இது தான் இன்றைய நிலை.

உள்ளே நுழையும் போதே செல்வராசா அண்ணையின் வரவேற்பு, என்னை மகிழ்ச்சிப்படுத்தியதோடு ஒரு ஆறுதலாயும் இருந்தது. தெரிந்த ஒருவர் இருப்பதால் ஏதோ தப்பி விட்டேன் என்ற மனநிலையோடு போய் அமர்ந்து கொண்டேன். அங்கே நின்றவர்களில் வெறியில் சில பேர். நல்ல உச்ச நிலையிலும், சில பேர் ஒரு ஆரம்ப நிலையிலும், கொஞ்சப் பேர் ஆடி ஓடி வேலை செய்வதிலும்  ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.


செல்வராசா அண்ணை நல்ல கணகணப்பாய்த் தான் இருந்தார். எவ்வளவு தான் குடிச்சாலும் நிதானமாய் இருக்கும் ஒரு நல்ல மனிசன்.
இந்தா கிளாஸ் …விடுடா… குடியடா.
என்ன யூசா…தண்ணியா… கோலாவா…. என்றபடி என் பக்கத்தில் எல்லாம் எடுத்து வைத்தார்.


மாட்டிறைச்சி ரோஸின் மணமும்… கோழிக்கால் பொரியல்  மணமும் ஒரு தூக்கல் தூக்கியது.
ஒரு ரவுண்ட்… இரண்டாவது… மூன்றாவது… ரவுண்ட் எனப் போக, எல்லோரும் போதையின் உச்சத்தின்…தொங்கலில் நின்றார்கள்.
பல பகிடிகளும், சேட்டைகளும், சிரிப்புக்களுமாக…பார்ட்டி களை கட்டியது.

டேய் வாறாண்டா.. வாறாண்டா… இப்ப எல்லாத்தையும் குழப்பப் போறாண்டா என்று செல்வராசா அண்ணை சொல்லி முடிப்பதற்குள் சிவலிங்கமும் வந்து அமர்ந்து கொண்டான்.


சிகரட்டை இழுத்தபடியே என்ன நீ இதுக்கை வந்த நிக்கிறாய்.. சம்பந்தமில்லாமல் என்ற அண்ணையின் நக்கலை சிவலிங்கம் அசட்டுச் சிரிப்போடு சமாளிச்சுக் கொண்டபடி குமாரின் பக்கத்தில் பேசாமல் இருந்தான்.


குடிக்கும் இடங்களிலோ அல்லது பொதுவான இப்படிச் சந்திக்கும் நிகழ்வுகளிலோ சிவலிங்கம்  சேர்ந்து கொள்வது மிகக் குறைவு. ஆனால் அன்று வந்திருக்கிறான் என்றால், ஏதோ ஒரு முக்கிய விசையம் இருக்கத் தான் செய்யும். சொல்லு சொல்லு என்ற செல்வராசா அண்ணை நச்சரிக்க, இல்லை நான் இப்ப இங்கே ஏன் வந்தானான் என்றால், வாறமாதம் இங்கே எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்கப் போறம் அது தான் தெரிவிச்சுப் போகலாம் என்றான்.


என்ன அடையாள அட்டையோ… என்ன அங்கே நாட்டிலை மாதிரி இங்கேயும் ஆக்களை  செக் பண்ணி பிடிக்கப் போறையளோ…எனக் கேட்க எல்லோரும் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.சிவலிங்கத்துக்கும் அசடு வழிந்தது.


இவர்களைப் போல் எத்தனை பேரைக் கண்டவன் இந்தச் சிவலிங்கன். வந்த காலத்திலிருந்து இன்று வரையும் காசு சேர்ப்பதற்கு பொறுப்பாயிருந்ததிலிருந்து ஊர்வலங்கள், அஞ்சலிக் கூட்டங்கள் என்றும்  முள்ளிவாயக்கலிலே எல்லாம் முடிவடைஞ்சு  பேச்சு என்றாலும் இன்றுவரையும்,  அது இது என்று ஏதோ சொல்லி இந்தச் சனங்களை மாய்ச்சு  தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கு இவர்கள் ஒரு சிறு தூசு.


‘எல்லோரும் ஒருக்கா கேளுங்கோ’ என்ற சிவலிங்கத்தின் அதிகாரத் தொனி எல்லோரையும் ஒரு கணம் மௌனமாக்கியது. ‘தமிழீழத்தைச் சேர்ந்தவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் எங்கடை நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தோடும் தமிழ்த் தேசியத்துக்கானவர்களுக்கு இந்த அடையாள அட்டையை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.’


என்ன சிவலிங்கண்ணை சும்மாவோ குடுக்கப் போறையள் என பக்கத்தில் இருந்தவன் கேட்க, அது வெறும் பதினைந்து டொலர்கள் தான் சொல்லி முடித்தான்.
அது தானே பார்த்தேன், சோழியன் குடும்பி  என்ன சும்மா ஆடுதென்று…
என்ன வெறும் பதினைந்து டொலரா…,   நாங்கள் என்ன பணத்தை மரத்திலையா புடுங்கிறம். எங்கடை அடையாளத்தை விட்டிட்டு உடுதுணியில்லாமல் உரிஞ்சு போட்டா திரியிறம். எல்லோரும் எங்கே வாழ்ந்தாலும் எங்கடை அடையாளத்தை காப்பாற்றிக் கொண்டு தானே இருக்கின்றோம். ஏன் இண்டைக்கு இவன் சிவாவின்றை மகளின் சாமத்திய வீடு பார்த்தனி தானே…  எங்கடை பெண்டுகள் எல்லாம் நல்ல சீலைகளும் கட்டி, எத்தனை ஆம்பிளையளும் வேட்டி கட்டிக் கொண்டு தானே நிண்டவங்கள். இந்தச் சின்னப் பிள்ளைகளும் எங்கடை உடுப்புக்களோடும் பூவும் பொட்டுகளும் வைச்சுக் கொண்டு என்ன வடிவாத் திரிஞசதுகள் தானே. செல்வராசா அண்ணை ஆவேசப்பட்டுக் கதைத்துக் கொண்டிருந்தார். இவர் அடக்கி வைச்சிருந்த பசிக்கு நல்ல  சாப்பாடு கிடைச்ச மாதிரி.

இல்லை தெரியாமல் தான் கேட்கிறன் உந்த அடையாள  அட்டையை வைச்சு என்ன செய்யப் போறையள். ஏதாவது கடைகிடையிலே சாமான் வாங்கும் போது ஏதாவுது விலையிலே கழிவு போட்டுத் தருவார்களோ…. இல்லா விட்டால் எங்கேயாவது பெற்றோல் அடிக்கும் போதாவது ஏதாவது குறைஞ்ச விலையில் அடிக்க விடுவாங்களோ……?


எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது. சிவலிங்கத்தையும் ஏன் பகைத்துக் கொள்வான் என நினைத்து அடக்கி கொண்டார்கள்.


நான் என்ன சொல்ல இந்தாள்  வெறியிலே என்ன சொல்லுது என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் பதில் சொல்லாமல் மௌனமாய் நின்றான் சிவலிங்கம்.
எல்லோரும் மௌனியாகவே இருந்தார்கள். இங்கே கனபேர் ஒன்றும் பேசாது மதில் மேல் பூனைகள் போல் பதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பிழை எனத் தெரிந்தாலும் ஏன் எதற்கு என்று கேட்காமல், ஏன் எனக்கு இந்தச் சோலி என்றும் வாய் பொத்தி மௌனிகளாகி பிணம் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏன் எனக்கு என்று பேசாமல் இருந்ததால் தான் இன்று இவ்வளவு நிலைக்கு வந்திருக்கின்றோம்.
என்னுடைய சந்தர்ப்பம் வரும் வரை பொறுத்திருப்போம். அது வரை மற்றவர்களைப் போல் நானும் பேசாமல் மௌனம் காத்து நின்றேன்.


தம்பி சிவலிங்கம், உங்களை நம்பி நாங்கள் ஏமாந்தது காணும். இனிமேல் நாடென்றும் மக்கள் என்றும் இந்தப்பக்கம் தலை காட்டப்படா…
இனிமேல் நீங்கள் காசு கீசெண்டு என்ரை வீட்டுப்பக்கம் வரப்படா.. கண்டியோ முந்தி அந்த நிதி இந்த நிதியெண்டும் எத்தனை தரம் வந்து அள்ளிக்கொண்டு போனையள் கடைசியிலே  நாட்டைப் பிரகடனப்படுத்தப் போறம் பெருந்தொகையா தாங்கோ இனிமேல் வரமாட்டோம் என்றியள்,  பிறகு வணங்கா மண் என்று வந்தியள். அதுக்கும் அள்ளித் தந்தம். வன்னியிலே செத்த சனங்களின் பிணவாடை கூட இன்னும் மாறவேயில்லை. அதுக்குள்ளே கண்டறியாத நாடுகடந்த அரசாங்கமும் அதுக்கு அடையாள அட்டையும் குடுக்கப் போகினமாம். இப்படி எத்தனை தரமடா வந்து இந்தச் சனத்தைப் பேக்காட்டிக் கொண்டிருக்கிறையள். செல்வராசா அண்ணை கோபப்பட்டாலும் அவரது குரல்  தளதளத்தது.  கோபம் அடங்கி கொஞ்சம் தணிந்தே போனார்.


சிவலிங்கம் கொஞ்சம் நிலைகுலைந்து தான்  போனான். இதில் யார் யார் தனக்கு சாதகமாக நிற்பாங்களோ யார் யார் தனக்கு எதிரானவர்களோ… ? தங்களுக்கு காசு தந்தவங்களும் இப்ப வெறியிலே நிக்கிறாங்கள். தானும் கோபப்பட்டாமல் சமாளித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாக நின்றான். சீ என்ன செய்வது நாட்டிலே எல்லாம் முடிஞ்சு போச்சு. அங்கே இயக்கம் இப்பவும் இருந்திதால், இவரைப் போல் கனபேருக்கப் பாடம் படிப்பிச்சுக் காட்டியிருக்கலாம்.  என்ன செய்வது என மனதுக்குள் வெடித்துப் புளுங்கிக் கொண்டான் சிவலிங்கம்.


நாங்கள் எங்கடை மக்களையும் எங்களுடைய மண்ணையும் மீட்டெடுக்கப் போராட வேண்டும். அதற்காகத் தான் இந்த நாடுகடந்த அரசும் எமது செயற்பாடுகளும்..


அங்கே தமிழீழம் இப்ப வருகுது நாளைக்கு வருகுது என்று முப்பது வருசமும்  இந்த அப்பாவிச் சனங்களை வைச்சுக் கிழிச்சுக் கொட்டினது காணும். உங்களைப் போன்ற ஆக்களால்த் தான் அங்கேயிருக்கின்ற அப்பாவிச் சனங்களுக்கு இன்னும் அங்கே கெடிபிடியாய் இருக்கின்றது. போர் முடிஞ்சும் முடியாத நிலை போல வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலே நீங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏதாவது செய்ய  வேண்டும் என்று விரும்பினால், வாயைப் பொத்திக் கொண்டு பேசாமல் கிடவுங்கோ.. இதுவே நீங்கள் செய்யும் பெரிய புண்ணியமாகும். மாற்றுக் கருத்துள்ள மற்றவர்கள் அந்த மக்களின் விடிவுக்காய் போராடப் புறப்பட்டு விட்டார்கள்.
பேரவை என்றும்,  வட்டுக்கோட்டை என்றும், நாடு கடந்த தமிழீழம் என்றும், மக்களவை என்றும் புலுடாக்கள் விட்டது காணும். இனிமேல் எங்களாலே இதுகளைத் தாங்கேலாது.


மௌனமாயிருந்த அனைவரும்; சரியென ஆமோதிப்பது போல் சிவலிங்கத்தை உற்று நோக்கி முறைத்துப் பார்த்தனர்.


பிழையென்று எதிர்த்து ஒரு பதிலும் சொல்ல முடியாதவனாய் மெல்லத் தலைகுனிந்த படியே எழுந்து அவ்விடத்தை விட்டு கழரத் தொடங்கினான்.
கனகாலத்திற்குப் பிறகு ஒரு நல்ல பார்ட்டியில் இருந்த உணர்வு மேலோங்க,
எங்கேயோ திறந்து விடப்பட்ட ஐன்னலினுடாக வந்த குளிர்காற்று
சூடாய் இருந்த உடம்புக்கும் மனதுக்கும் இதமாயிருந்தது…

நிலாந்தன்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்