சென்னையிலுள்ள அரசகல்லூரிகள், அரச உதவி பெறும் கல்லூரிகளில் படித்துவரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் 21 அன்று சென்னை அண்ணா சாலையில் நடத்திய சாலை மறியல் போராட்டம், அம்மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகத் தமிழக அரசால் நடத்தப்படும் நல விடுதிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

 

""கடந்த பல ஆண்டுகளாகவே முறையாகப் பராமரிக்கப்படாத தால், சிதிலமடைந்துவிட்ட கட்டிடங்கள்; உடைந்து போன கழிவு நீர் செல்லும் குழாய்கள் மாற்றப்படாததால், மலமும், சிறுநீரும் விடுதிக்குள்ளேயே குட்டையைப் போலத் தேங்கி நின்று, அதனால் வீசும் துர்நாற்றம்; 52 அறைகளில் 595 மாணவர்கள் தங்க வேண்டும் என்ற அரசின் கணக்கே அளவுக்கு அதிக மானது எனும்பொழுது, இப்பொழுது அந்த 52 அறைகளில் 1,600 மாணவர்கள் (ஒரு அறைக்கு 30 மாணவர்கள்) அடைபட்டுக் கிடக்கும் அவலம்.'' இதுதான் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.

 

சென்னையிலுள்ள மற்ற 16 விடுதிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள விடுதிகளும் எம்.சி.ராஜா விடுதியைப் போன்று அல்லது அதைவிடக் கேவலமான நிலைமையில்தான் இருக்கின்றன.

இவ்விடுதிகள் ஒவ்வொன்றிலும் மாவரைக்கும் இயந்திரங்கள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், குடிநீரைச் சுத்திகரிப்பதற்கான கருவிகள் இருக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத் துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது. ஆனால், இவ்விடுதிகளில் காலைக் கடன்களைக் கழிப்பதற்கும், குளிப்பதற்கும்கூட முறையான, போதுமான வசதிகள் கிடையாது என்பதுதான் உண்மை.

 

இவ் விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஒவ்வொரு கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவனின் உணவிற்காக மாதமொன்றுக்கு ரூ.550/ வரை நிதி ஒதுக்கப் படுவதாக அரசு கூறுகிறது. இந்த ஒதுக்கீடைத் தின்று தீர்ப்பது அதிகார வர்க்கம் தான் என்பதை இவ்விடுதிகளால் போடப்படும் உணவே காட்டிக் கொடுத்துவிடுகிறது. புழுத்துப் போன அரிசிச் சோறுதான் இவ்விடுதிகளால் போடப்படும் ஒரே "சத்தான' உணவு. குழம்புக்கும் காய்கறிக்கும் மாணவர்கள் தங்கள் கைக்காசைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். உணவிற்காகவும், கல்விச் செலவிற்காகவும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்குப் போவதாகக் குறிப்பிடுகிறார்கள், இம்மாணவர்கள். . இப்படிபட்ட இழிந்த சூழ்நிலையில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ள ஏழை தாழ்த்தப்பட்ட மாணவனால், தனது படிப்பில் முழுமையான கவனத்தை எப்படிச் செலுத்த முடியும்?

 

அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய கடமையை அரசு புறக்கணிக்கிறது என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டுள்ள திரு மா., ரவிக்குமார் போன்றவர்களால் ஆதரிக்கப்படும் தி.மு.க. ஆட்சி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீது கொண்டுள்ள தீண்டாமை மனோபாவத்தையும் பிரதிபலிப்பதாகவே இதனைப் பார்க்க முடியும்.