""பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் திரளும் இடங்களில் குண்டு வைப்பார்கள்; மக்கள் திரளுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக அவர்களைச் சுட்டுக் கொல்வார்கள்'' இவை பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் எளிய இலக்கண வரையறை. இந்த வரையறையின்படி பார்த்தாலும், இன்று உலகின் மிகக் கொடிய பயங்கரவாதி அமெரிக்காவாகத்தான் இருக்கமுடியும்.

 

பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொல்லி, ஈராக்கில் நுழைந்த அமெரிக்கா கொன்றிருக்கும் அப்பாவி ஈராக் மக்கள் தொடங்கி, பயங்கரவாத எதிர்ப்புப் போர் எனும் பெயரால் ஆப்கானிஸ்தானிலும், அதன் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் வஜீரிஸ்தானிலும் கொல்லப்பட்ட பழங்குடியினர், சோமாலிய உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்டோர் என அமெரிக்காவின் பயங்கரவாதத் தாக்குதல்கள் நீள்கின்றன. போர்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய ஜெனீவா போர் நெறிமுறைகள் அனைத்தையும் காலில்போட்டு நசுக்கியபடியே அதன் கொலைகள் தொடர்கின்றன. நோயாளிகளோ, குழந்தைகளோ, கர்ப்பிணிகளோ அதன் இலக்கிலிருந்து தப்புவதில்லை.

 

அநீதியான போரைத் தொடுத்திருக்கும் அமெரிக்காவுக்கு திடீர் கொரில்லா தாக்குதல்கள், கண்ணிவெடிகள், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தனர் தாலிபான்கள். இத்தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் தாலிபான்கள், ஆப்கனின் எல்லையை ஒட்டி பாகிஸ்தானுக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டறிவதில் உள்ள சிரமம், அடுத்தடுத்த தாக்குதல்களில் உயிரிழக்கும் அமெரிக்க வீரர்களின் பிணங்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுத்திவரும் எதிர்ப்பு, முடிவே இல்லாமல் தொடரும் போரின் காரணமாக அமெரிக்காவின் கூட்டணி நாட்டு படையினர் மத்தியிலும் பரவி வரும் வெறுப்பு — ஆகிய எதிர் விளைவுகளிலிருந்து ஆக்கிரமிப்பாளனாகிய அமெரிக்க அரசு தப்ப முடியவில்லை.

 

போரைத் தொடரவேண்டும், அதே நேரத்தில் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கும் அமெரிக்க அரசு, கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் தொடுக்கிறது. இன்னொருபுறம், தனியார் கூலிப்படைகளையும் களத்தில் இறக்கியிருக்கிறது. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் தாலிபான் இயக்கத்தினரை அடையாளம் கண்டு, அவர்களின் ஆயுதக் கிடங்குகளைக் கண்காணித்து, ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் வழித்தடங்களையும், நெடுஞ்சாலைகளில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கும் வரைபடத்தையும் கண்டறிந்து தகவல்களைத் தொகுக்கின்றன. அமெரிக்காவின் சிறப்புப்படையினர், கிழக்கு, தெற்கு ஆப்கனில் தாலிபான் தலைவர்களையும், குண்டு தயாரிப்போரின் ஒருங்கிணைப்பையும் தொடர்ந்து கண்காணித்துத் தாக்க இரண்டு மூன்று ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் கூட்டு வேலையில் ஈடுபடுத்துகின்றனர். 400 மணிநேரத்துக்கும் அதிகமாக ஓடக்கூடிய வீடியோக்களை தினமும் படம் பிடித்து அனுப்புகின்றனர்.

 

இத்தகைய விமானங்களின் வீடியோ காமிராக்கள் 20 மணிநேரம் வரை அவ்வட்டாரத்தில் தாலிபான்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டபடியே உள்ளன. இவ்விமானங்களுக்கான விமானிகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அவர்கள் இத்தகவல்களை எல்லாம் பகுப்பாய்வு செய்து தரைப்படை தளபதிகளின் கணினிகளுக்கு அனுப்பிவைக்கின்றனர். மக்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்காமலே தாலிபான்கள் மீது சாப்ட்வேர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை உடனடியாகத் தொடங்கி குறிவைக்கப்பட்ட இலக்கை அழித்து முடிக்கின்றனர்.

 

""வழக்கமான விமானத் தாக்குதலில் பொதுமக்களும் பலி ஆவார்கள் என்பதால்தான் இத்தகைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்'' என்றும், ""குறிவைக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் இதில் கொல்லப்பட மாட்டார்கள்'' என்றும் மாபெரும் ஜீவகாருண்யவாதியைப் போலப் பேசுகிறது அமெரிக்க அரசு. ஆனால் குறிதவறும் தாக்குதல்களில் கொத்துக் கொத்தாய் வஜீரிஸ்தான் பழங்குடி பெண்களும், குழந்தைகளும் தலைவேறு உடல்வேறாக சிதைக்கப்பட்டுக் கொல்லப்படும் கோரம் தொடர்கிறது. 2009ஆம் ஆண்டு பைதுல்லா மெசூத் எனும் பாகிஸ்தானிய தாலிபான் தலைவரைக் கொன்ற அமெரிக்கா, மெசூதைக் கொல்லும் முன் 14 முறை குறிதவறிய தாக்குதல்களை நடத்தி 300க்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றது. மெசூத் தங்கி இருந்த மக்கீன் நகரத்தில் 2009 ஜூன் 23 அன்று காலையில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் மக்கள் சிலர் கொல்லப்பட, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யச் சென்ற பொதுமக்கள் மீதும் ஆளற்ற விமானங்கள் ஏவுகணைகளை வீசின. இதில் 80 பேர்கள் உடல் சிதறிப் பலியானார்கள்.

 

2010 டிசம்பர் 17 அன்று ஸ்பீன் ட்ராங் எனும் பழங்குடி கிராமத்தில் கூடிப் பேசிக்கொண்டிருந்த போராளிகள் என உறுதி செய்யப்படாத 32 பேரை ஆளில்லா விமானங்கள் 3 ஏவுகணைகளை வீசிக் கொன்றன. அடுத்த சில மணி நேரங்களில் ஏவுகணைகளால் குறிவைத்து சில வீடுகள் தாக்கப்பட்டு, ஒரே நாளில் 60 பேர்களை சாம்பலாக்கினர்.

 

கடந்த டிசம்பர் 28 அன்று,குலாம்கான் எனும் பயங்கரவாதியைத் தாக்குகிறோம் எனச் சொல்லி பொதுமக்கள் 17 பேரைக் கொன்றுள்ளது, அமெரிக்கா. அடுத்தடுத்த தாக்குதல்களில், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றை அழித்து 6 பேர்களைக் கொன்றது. இந்த ஆண்டு தொடங்கி 20 நாட்கள் ஆகும் முன்னரே 5 பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்களும் தப்பவில்லை.

 

அமெரிக்காவின் இக்கொலைவெறித் தாக்குதல்களுக்கு பள்ளிகளும், வழிபாட்டுத் தலங்களும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களும் தப்பியதில்லை. 2009இல் 53 முறை தாக்கப்பட்ட அம்மலைப் பகுதி 2010இல் 118 முறை தாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணமும் அடுத்து நாம் தாக்கப்படுவோமோ எனும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர், அப்பழங்குடி மக்கள். மலை சூழ்ந்த வஜீரிஸ்தான் பகுதியில் காலம் காலமாக வாழ்ந்துவரும் பழங்குடியினர் இவ்வாறு கொல்லப்பட ஏதாவது காரணம் உண்டா? அப்பிராந்தியத்தில் தாலிபான்கள் நடமாடினர் எனும் காரணம் ஒன்றே அம் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் அழிக்க அமெரிக்காவுக்குப் போதுமானது போலும். இத்தகைய தானியங்கி விமானங்களால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் மட்டும் 2189 பேர் ஆவர்.

 

அமெரிக்காவில் கணினி முன்பாக அமர்ந்து கொண்டு சில பட்டன்களை அழுத்துவதன் மூலம் ஈராக்கிலோ, ஆப்கனிலோ, அல்லது தாலிபான்கள் ஒளிந்தி ருப்பதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானிய பழங்குடி கிராமத்திலோ ஏவுகணைகளை வீசி அப்பாவி மக்களைக் கொல்லும் வேலையைத்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போராக அமெரிக்கா சித்தரிக்கிறது. அமெரிக்க இராணுவத்தின் கொலைப்பட்டியலில் இடம் பெற்றிராத, தாலிபான் ஆதரவாளர்கள் பதுங்கியிருக்கும் கிராமங்களை அழிப்பதற்கும் ஒபாமாவின் நிர்வாகம் சி.ஐ.ஏ. வுக்கு ரகசிய ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

இந்தப் பச்சைப் படுகொலைகளுக்கு எதிரான கண்டனக் குரல்கள் வலுக்கவே, ""இதில்தான் செலவு குறைவு'' என்று கூறி கூச்சமே இல்லாமல் மனித உயிர்களை டாலர்களால் அளந்து காட்டுகிறது அமெரிக்க அரசு. ""கூட்டணிப்படையினர் துப்பாக்கிச்சூடு எல்லைக்குள் சிக்கிக் கொள்ளும்போதும், நமது படைகளுக்கு பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் சூழலிலும் மட்டுமே ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகிறோம்'' என்றும் படுகொலைகளை நியாயப்படுத்துகிறது. வழக்கமான ஏவுகணைத் தாக்குதல் நடத்தினாலும், இத்தகைய விளைவுகள் ஏற்படத்தான் செய்யும் என்று குறி தவறிய தாக்குதல்களை நியாயப்படுத்துகிறது.

 

இந்தப் படுகொலைகளுக்காக ஒருவேளை போர்க்குற்றம் சாட்டப்பட்டால், அதிலிருந்து அமெரிக்க ராணுவத்தைத் தப்பவைப்பதற்காகவே, பாகிஸ்தான் எல்லையிலிருந்து 13 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள அமெரிக்காவின் நேவடா மாகாணத்தில் இயங்கும் ஆறு தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் இந்த வேவு விமானங்களை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அமெரிக்க இராணுவம்.

"பயங்கரவாத எதிர்ப்புப் போரில்' அமெரிக்கா இழைத்து வரும் இக்குற்றங்கள் தற்செயலானவையோ தாலிபான் தளபதி க்வாஸ் லாலி என்பவரின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவன். தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

 

எதிர்பாராதவையோ அல்ல. தாலிபான் களையோ அல்கைதாவினரையோ உயிருடன் பிடிப்பதால், சிறை, நீதிவிசாரணை போன்ற தலைவலி பிடித்த வேலைகளைச் செய்யவேண்டி வரும் என்பதால், விசாரணை ஏதுமின்றி அவர்களையும், அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களையும் அழித்திடும் நாசகரப் போரை திட்டமிட்டேதான் அமெரிக்கா நடத்தி வருகிறது. பிடிபட்டுள்ள போர்க்கைதிகளை அமெரிக்க சிறையில் வைத்தால், எழக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவே, உலகெங்கும் அமெரிக்கா அமைத்திருக்கும் ரகசிய சித்திரவதை முகாம்களிலும், மிதக்கும் சிறைகளிலும் (போர்க்கப்பல்களிலேயே சித்திரவதை முகாம்கள்) அவர்களை அடைத்திருக்கிறது.

 

குவாண்டனாமோ சிறையில் உள்ள தாலிபான் கைதிகளின் மீது லாரியம் என்ற தடை செய்யப்பட்ட (மலேரியா எதிர்ப்பு மருந்து) மருந்தைச் செலுத்தி சோதனை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம். இம்மருந்து கடுமையான மனநோய்களையும், நரம்புச் சீர்கேடுகளையும், உருவாக்க வல்லது. கடும் மன அழுத்தம், புலனுணர்வுகள் தெளிவின்றிப் போதல், கொலை மற்றும் தற்கொலை எண்ணம் போன்றவற்றை இம்மருந்து உருவாக்க வல்லது என்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. லாரியம் மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமே, 1990களில் அதன் பக்கவிளைவாக தற்கொலை எண்ணம் அதிகரிப்பதாகப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க ராணுவம் கூட, மலேரியாவிற்கு இம்மருந்தைத் தவிர ஏனைய மருந்துகளைப் பயன்படுத்துமாறு விதிமுறைகளை வைத்துள்ளது.

 

குவான்டனாமோ சிறை அமைந்துள்ள கியூபத் தீவில் கடந்த 50 ஆண்டுகளாக மலேரியா நோயே இல்லை. அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு லாரியம் மருந்தைத் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர். அங்குள்ள ஆப்கன் கைதிகளில் 40 சதவீதத்தினருக்கு இப்போது மலேரியா நோய் வந்துள்ளது. அமெரிக்க அரசின் சட்டப்படியே குவாண்டனாமோவில் இந்த மருந்தைப் பயன்படுத்தி இருப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, ஐ.நா.வின் சித்திரவதைக்கெதிரான விதிமுறைகளையும் மீறியதாகும். ஆனால் அமெரிக்காவோ, "பயங்கரவாதத்திற்கெதிரான போரில்' பிடிபட்டவர்களுக்கு எல்லாம் இவ்விதிமுறைகள் பொருந்தாது என ஈவிரக்கமின்றி சொல்லி கைதிகளிடம் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் வக்கிரத்தை அரங்கேற்றி இருக்கிறது.

 

உலகப்போரின்போது சீனமக்கள் மீது ஜப்பானும், ரஷ்ய மக்கள் மீதும், யூதர்கள் மீதும் ஜெர்மனியும் இத்தகைய மருந்துப் பரிசோதனைகளைச் செய்து பார்த்தன. நாஜிகளால் ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் யூதர்களின் மீது பரிசோதனை மருந்துகள் செலுத்தப்பட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அக்குற்றங்கள் நியூரம்பர்க் விசாரணையில் போர்க்குற்றங்களாக அறிவிக்கப்பட்டு அக்குற்றமிழைத்தவர்களுக்கு மரண தண்டனை தரப்பட்டது. இவற்றை அன்று போர்க்குற்றங்கள் என்று சொன்ன அமெரிக்கா, அதே போர்க்குற்றங்களைத்தான் குவாண்டனாமோ சிறையில் செய்து கொண்டிருக்கிறது.

 

பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் இந்த வழிமுறைகளை எல்லா நாட்டு ஆளும் வர்க்கங்களும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வெகு நீண்ட காலமாகவே இசுரேல் இத்தகைய நெறியற்ற பயங்கரவாதப் போர்முறைகளைப் பயன்படுத்தி வருகிறது.

 

இலங்கையில் இன அழிப்புப் போரின்போது வேவு விமான நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதற்கான சேவைகளை "ஒப்பந்தங்கள்' மூலம் செய்து தர தொழில் நுட்ப நிபுணர்கள் அமர்த்தப்பட்டனர். புலி அழிப்பு என்ற பெயரில் தமிழின அழிப்பை ராஜபக்சே அரசு நியாயப்படுத்தியது. சோமாலிய "கடற்கொள்ளையர்'களைத் தாக்குவதற்கு பிளாக் வாட்டர்ஸ் எனும் தனியார் பாது காப்பு நிறுவனப் படை அமர்த்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போரில், சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை களத்தில் இறக்கி தோல்வி கண்ட அரசு, இப்போது ஆளற்ற விமானங்கள் மூலம் மாவோயிஸ்டுகள் மீது "குறி வைத்து தாக்குதல் நடத்த' தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கென இஸ்ரேல் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது.

 

தன்னுடைய ஆக்கிரமிப்புப் போர்களில் பயங்கரவாத முறைகளைப் பின்பற்றுவது மட்டுமின்றி, அதே வழிமுறைகளில் எல்லா நாடுகளின் ஆளும் வர்க்கங்களையும், அரசுகளையும், இராணுவங்களையும் பயிற்றுவிக்கிறது அமெரிக்க அரசு. உலகின் கொடிய பயங்கரவாதி மட்டுமல்ல, பல்வேறு பாசிச பயங்கரவாத அரசுகள் அனைத்துக்கும் ""காட்ஃபாதர்'' அமெரிக்காதான். · அழகு