Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்னை யார் என்று தெரிந்து கொண்டு, அதன் ஊடாக என் மீது தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர். இதை மூடிமறைக்கவே, நான் தனிமனித தாக்குதல் நடத்துவதாக கோயபல்ஸ் பாணியல் கூறுவதே, புலியல்லாதவர்களின் அரசியல் எதிர்வினையாகின்றது.

 


நான் யார் என்று தெரியாவிட்டால், என்னை எப்படி எதிர் கொள்வர்? அப்படி எதிர்கொள்ள, ஏதாவது மக்கள் அரசியல் அவர்களிடம் உண்டா? கிடையவே கிடையாது. மாறாக இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக அடிவருடுவதும், புலிப் பாசிசத்துக்கு ஆடுவதுமே இவர்கள் கொண்டுள்ள அரசியல். இதனால் எமது மக்கள் நலன் சார்ந்த அரசியலை எதிர்த்து நிற்க முடிவதில்லை. இதன் விளைவால் தான் இவர்கள் ஒருபுறத்தில் படுகொலை அரசியலை செய்கின்றனர் என்றால், மறுதளத்தில் தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர்.


எனது அரசியலைக் கடந்து நின்று, என்னைச் சுற்றித் தேடுகின்றனர். கற்பனைக்குள் என்னைப் புகுத்தி, சமூகம் மீது என்னைப்பற்றி காறி உமிழ்கின்றனர். அண்மையில் தேசம் ஆதாரம் உண்டு என்று கருதி வெளியிட்ட செய்தியில், நான் சேரனை அண்மையில் சந்தித்தேன் என்றது. அதற்கு ஆதாரம் உண்டு என்று கூட எழுதியது. மற்றொரு அவதூறு தகவலில் நான் மகாஜனா கல்லூரி பழைய மாணவர் என்று எழுதியது.

இப்படி எத்தனை, இல்லாத பொல்லாததை எல்லாம், தமது கற்பனையில் வடிக்கின்றனர். இப்படி ஆதாரமற்ற தரம் கெட்ட தனிநபர் தாக்குதலையே அரசியலாக நடத்துகின்றனர். இதில் நான் முந்திய இருந்த அமைப்பு செய்த நடவடிக்கையை வைத்து, தனிநபரான என்னை தாக்குகின்றனர். இதன் பின் புனையும் கற்பனைகள் பற்பல.

தேசம் ஆசிரியர் பக்காக் கிரிமினல்களுக்கு எல்லாம் குரு என்பதால், அவரே அதற்கு பிள்ளையார் சுழி போடுகின்றார். 'என்எல்எப்ரியின் வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து என்எல்எப்ரி - பிஎல்எப்ரி என்று பிரிந்தது. எடுத்ததைப் பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்கின்றார். ஒரு ஊடகவியலான் என்ற கூறிக்கொள்ளும் இந்த பன்னாடை, இதை 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும்" உட்பட்டு கூறுகின்றதாம். இதையும் வரலாற்று ஆதாரத்துடன் கூறுகின்றதாம்.

தான் கூறிய எல்லைக்குள் நின்று, அதாவது 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்ற அடிப்படையில், இந்த பன்னாடை இதை உறுதி செய்தா கூறுகின்றது? 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று கூறும் இந்த பன்னாடை, இதன் மூலம் எடுக்கும் அரசியல் என்ன?

'என்எல்எப்ரியின் வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து என்எல்எப்ரி - பிஎல்எப்ரி என்று பிரிந்தது. எடுத்ததைப் பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று கூறுகின்றதே, வரலாறு அப்படியா சொல்லுகின்றது. நடந்த வரலாற்றை இருட்டடிப்புக்கும், திரிப்புக்கும் உள்ளாக்கும், இந்த பன்னாடைத் தனம் தான் ஊடகவியலாகின்றது.

என்எல்எப்ரி - பிஎல்எப்ரி பிரிந்தது எப்போது? இப்படி எழுத முனனர் அதையாவது தெரிந்த பின்னர் எழுதினரா? இது நடந்து இரண்டு வருடத்தின் பின்னாலே தான், புலிகள் என்னைக் கடத்தியது. அது தெரியுமா? அதன் பின் தான் நான் விஜிதரன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினேன். அது தெரியுமா? மூன்று வருடத்தின் பின், இந்தியா புலிகள் யுத்தம் தொடங்கிய பின் இந்தியாவுக்கு எதிரான முதலாவது வெகுஜனப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினேன். அதாவது தெரியுமா? நாலு வருடத்தின் பின் விமலேஸ்வரனை புலிகள் சுட்டு கொன்ற போது, அந்த உடலை பல்கலைக்கழகம் கொண்டு வர முனைந்தேன். அது தெரியுமா? அதே ஆண்டு ராக்கிங்குக்கு எதிரான போராட்டத்துக்கு, தலைமை தாங்கி போராடியது தெரியுமா? இதெல்லாம் தெரியாது, ஊடகவியல் பெயரில் அவதூறு அரசியலா நடத்துகின்றீர்கள்!

என்னதை தான் விடுங்கள். 'பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்தி" வெளியிடுகின்றீர்கள் இல்லையா. நன்று அந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள் 'இவர்களில் சிலர் ஐரோப்பியத் தமிழ் அரசியல் வெளியில் தோன்றினர்." என்று கூறுவதன் பின்னுள்ள அரசியல் நோக்கம் தான் என்ன? இந்த ஊடகப் பன்னாடை, மக்களுக்காக போராடியவர்களையும், அந்த அரசியலையும் கூட கேவலமாக்க தனது அரசியல் நிலையில் நின்று கொச்சைப்படுத்துகின்றது.

"இவர்களில் சிலர் ஐரோப்பியத் தமிழ் அரசியல் வெளியில் தோன்றினர்." என்று கூறும் இந்த பொய்களைக் கடந்து, அவர்கள் மக்களுக்காக மண்ணில் போராடினார்கள். இதன் பின் தான் விசு காணாமல் போனவர். இதன் பின் 10 பேரளவில் புலிகளால், வீதிகளில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின் கிட்டத்தட்ட 20 பேர்கள் வரையில் புலிகள் கடத்தி சென்ற பின், அவர்களைக் கொன்றனர். கைது, சித்திரவதைகள் என பலர் அனுபவித்தனர். இதெல்லாம் '.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்ற கூறியதுக்கு பிந்தைய, 5, 6 வருடத்தில் நடந்தவைகள். இப்படி பல, பல முனைகளில். 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்ற அடிப்படையிலானதா இது! இப்படிப்பட்ட ஒரு அரசியலும், அதற்கேற்ற பக்காக் கிரிமினல்களும் சேர்ந்து, கிரிமினல் அரசியல் நடத்துகின்றனர்.

சரி '.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று கூறி 'இவர்களில் சிலர் ஐரோப்பியத் தமிழ் அரசியல் வெளியில் தோன்றினர்." என்றால், யார் அவர்கள்? நானா?

பொதுப்படையாக சொல்லிச் சொல்ல முனைவது, என்னைத் தான். நான் என்எல்எப்ரி - பிஎல்எப்ரி பிரிந்த பிற்பாடு, 4 வருடங்கள் மண்ணில் இருந்துள்ளேன். பல போராட்டத்துக்கு தலைமை தாங்கியவன். ஏன் புலிகள் என்னைக் கொல்வதற்காக, இரகசியமாக கடத்தப்பட்டு காணாமல் போனபின், அவர்களிடம் இருந்து தப்பியவன். இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு. இப்படியிருக்க இந்த பன்னாடை இப்படி கூறுவது என்பது, தனிநபர் தாக்குதல் அல்லவா. ஆதாரமற்ற வெறும் கற்பனை ஊகங்கள் அல்லவா! இதற்கு ஒரு அரசியல் உண்டு அல்லவா! 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்பது பொய்யல்லவா!

புலிகள் இயங்கங்களை படுகொலை செய்து அவற்றை அழித்தொழித்த பின்பு, அவ் இயக்கங்கள் இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக மாறிய பின்பும், நாங்கள் மண்ணில் நின்று மக்களுக்காக போராடியவர்கள். அப்படிப் போராடியதால் நாம் பலரை இழந்தோம். இப்படியிருக்க, இந்த பன்னாடை '.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்று சேறடிக்கும் அரசியல், பக்காக் கிரிமினல் மயமானதே.

'.. பங்கிட்டு பின் கலைந்துவிட்டது. செயற்படவில்லை." என்ற கூறும் வக்கிரம், ஏதோ இதற்காகத்தான் பிரிந்தனர் என்று காட்டுகின்ற வக்கிரம், கிரிமினல்மயமான அரசியலாகின்றது. பங்கிடுதல் என்பது, பிரிவில் ஒரு அம்சமாக இருந்தது கிடையாது. இத் தொகை என்பது, அன்றைய பெறுமதிப்படி அண்ணளவாக 15 இலட்சம் ரூபா தொடர்புடையதே. இதை வைத்து கதையளக்கின்றவர்கள், அறிவும் நேர்மையுமற்ற கூலிக் கிரிமினல் அரசியல் செய்பவர்களாகும்.

கடந்த வரலாற்றை தெரிந்து கொள்ள தயாரற்றவர்கள், ஊடகவியலாளன் என்ற பெயரில் வரலாற்றையே சேறடித்து பினாத்த முடிகின்றது.

நான் இயக்கத்தை விட்டு விலகிய பின்பும் என்எல்எப்ரி இயக்கம் இயங்கியது. 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்ற உங்கள் வரையறையில் இதைக் கூட அறிய முடியாது, ஆபாசமாக அவதூறுகளை தனிமனிதனை நோக்கி வாரிக்கொட்டுவது அபத்தம்.

இது ஒரு அரசியல் சார்புத் தன்மையுடன், தனக்கென்ற ஒரு நிலையெடுத்து, தனிமனித அவதூறுகள் மூலம் இயங்குவது வெளிப்படையானது. இங்கு அரசியல் காழ்ப்புக் கொண்ட உள்நோக்கமே, அரசியல் அவதூறுக்கான அடிப்படையாகும்.

என்எல்எப்ரி கணக்கு பற்றி அக்கறை எதனால் இந்த பொறுக்கிகளிடம் எழுகின்றது. ஒரு மக்கள் நலன்சார் அரசியல் நோக்கத்தின் பால், சமூக அக்கறையின் பால் எழவில்லை. கடந்தகால இயக்க உட்படுகொலைகளை, இந்திய இலங்கை கூலிக் கும்பலாக கும்மியடித்த வரலாறு எதையும், சமூக அக்கறையுடன் முன்வைப்பவர்கள் அல்ல. மாறாக வரலாற்றில் இதை மூடிமறைக்கின்ற கும்பல். அதை செய்கின்றவர்கள் அல்லது அதை செய்வதை ஆதரிப்பவர்கள்.

இதை எதிர்த்து அம்பலப்படுத்தும் ஒரே காரணத்தினால், என்எல்எப்ரி பணத்தைப்பற்றி மட்டும் கதைக்கின்றனர். எனது அரசியலை எதிர்கொள்ள முடியாதவனின் காழ்ப்பு, அரசியலுக்கு அப்பால் தனிமனித தாக்குதலாகிவிடுகின்றது. தனிமனிதனிடம் கணக்கு கோருவதாகின்றது. இந்த அமைப்பு என்ன செய்தது, யாருக்கு எதிராக எப்படி போராடியது என்ற விடையங்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது.

என்னை, எனது அரசியல் நிலைப்பாட்டை தடுக்க, கணக்கு என்ற விடையம் உதவும் என்றே மனப்பால் குடிக்கின்றனர். இதனால் தான் சமூக அக்கறையுள்ள பலருக்கும் தெரிந்த என்எல்எப்ரி வரலாற்றை, இந்த தளத்தில் இந்த இடத்தில் நாம் முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

காலத்தின் தேவையை ஒட்டி அதை நாம் வைப்போம். நான் எழுதி முடித்துள்ள புலிகளின் வதை முகாமில் நான் என்ற எனது கதையும், நான் எழுதி வரும் என்எல்எப்ரி வரலாறும், யாழ் பல்கலைக்கழக மணவர்களின் ஜனநாயகப் போராட்டம் மற்றும் முழுமையான தமிழ் போராட்ட வரலாறும் வெளிவரும் போது, அது சமூகத்தின் வரலாற்றுத் தேவையுடன் அனைத்து புனைவுகளையும் பொய்களையும் தகர்த்தெறியும்.

அதுவே சமூகத்தின் வளாச்சிக்குத் தேவை. இதைவிட்டுவிட்டு நாலாம்தரமான கிரிமினல்மயமான அரசியல் பொறுக்கிகளுக்கு, வரலாற்றை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் இதற்குள் செய்யமுனைவது, பொறுக்கி கொசிக்கவும், இந்திய இலங்கை அடிவருடி அரசியலை நாலுகாலில் நின்று செய்யவும், புலிகளின் பாசிச கொலை வெறியாட்ட அரசியலை செய்யவுமே. இப்படி சமூகத்துக்கு எதிரான இந்தக் குற்றவாளிக் கும்பல்களின் யோக்கியதைக்கும், அதன் இழிவான மலிவான கொசிப்புக்கும் ஏற்ப, என் மீதான அவதூறை வலைவிரித்து தேடுகின்றனர். இவர்கள் மக்கள் நலனை முன்வைக்கும் எந்த அரசியலையும், நடைமுறையையும் கொண்டவர்கள் அல்ல. மாறாக அதை நலமடிக்கின்ற அரசியல் போக்கிரிகள் தான் இவர்கள்.

 

பி.இரயாகரன்
30.01.2008