மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தப்பிப் பெய்த மழைதான் வெங்காய விலையேற்றத்துக்குக் காரணம் என மைய அரசு கூறி வருகிறது. ஆனால், அதனைவிட, மன்மோகன் சிங் அரசின் ஏற்றுமதிக் கொள்கைதான் வெங்காயத்தின் விலையேற்றத்திற்கு முக்கியமான காரணம் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாக அம்பலமாகிவிட்டது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தப்பிப் பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்படும் எனத் தெரிந்திருந்தபோதும், மைய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு உடனடியாக எந்தத் தடையும் விதிக்கவில்லை. மாறாக, மழை கொட்டி தீர்த்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெங்காய ஏற்றுமதிக்கான அடிப்படை ஆதார விலையைக் கூட்டிக் கொடுத்து, வெங்காய ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மொத்த வியாபாரிகள் அம்மாதங்களில் 1.33 இலட்சம் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் உள்நாட்டில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கிய மொத்த வியாபாரிகள் கூட்டணி, அத்தட்டுப்பாட்டைக் காட்டி வெங்காயத்தின் விலையையும் எகிற வைத்தனர்.

 

இதன் பின் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்த மன்மோகன் சிங் அரசு, இத்தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்யும் முடிவை எடுத்தது. வெங்காயத்தை ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் பார்த்த மொத்த வியாபாரிகளே, அதனை வரிகளின்றி, அதாவது மானியத்தோடு இறக்குமதி செய்து கொழுத்த இலாபம் பார்க்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது, மன்மோகன் சிங் அரசு.

 

வெங்காயம் மட்டுமின்றி, தக்காளி, பூண்டு, முருங்கைக்காய், பருப்பு, சமையல் எண்ணெய், பால், இறைச்சி எனப் பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சமீபகாலமாக ஒன்று மாற்றி ஒன்று என உயர்ந்து வருகின்றன. மேலும், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது வாடிக்கையான நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. ""பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இந்திய மக்கள் அதிகமாக நுகரத் தொடங்கிவிட்டதாகவும், ஆனால், அதற்கேற்ப பொருட்கள் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவுவதால்தான் விலைவாசி அதிகரித்து வருவதாகவும்"" திரும்பத்திரும்பக் கூறி, ஒரு பொய்யை உண்மையாக்க முயலுகிறார்கள், ஆட்சியாளர்கள். ஆனால், போதுமான அளவு உற்பத்தியும், கையிருப்பும் உள்ள உணவுப் பொருட்களின் விலைகள் கூடத் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன என்பதுதான் கண்கூடு.

 

உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறும் அரசு, விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, உணவு உற்பத்தியில் ஏற்கெனவே நிலவி வரும் அரைகுறை தன்னிறைவை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளைத்தான் எடுத்துவருகிறது; உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதிலாக, பற்றாக்குறையை இறக்குமதி செய்வதன் மூலம் ஈடுகட்டுவது என்ற பன்னாட்டு விவசாயக் கழகங்களுக்குச் சாதகமான கொள்கையை முன்னிறுத்துகிறது. இறக்குமதி செய்யும் பொறுப்பினையும் தற்பொழுது தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது, மைய அரசு. அதற்காக அத்தனியார் நிறுவனங்களுக்கு மானியம் தருவதோடு, இறக்குமதி செய்த உணவுப் பொருளை பொது ஏலத்தில் அதிக விலைக்கு விற்பதற்கும் துணை நிற்கிறது. துவரம் பருப்பு துயரம் பருப்பானது இப்படித்தான் எனச் சில்லறை வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, உணவுப் பொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க அரசு முன்வருவதில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் உணவுப் பொருட்களைக் கொள்முதல் செ#து, அவற்றை சர்வதேச சந்தையில் விற்று அமெரிக்க டாலர்களை இலாபமாக ஈட்டும் கொள்ளைக்கும் அரசே துணை நிற்கிறது. உள்நாட்டில் சர்க்கரை விலை எகிறிய பிறகும், அவசரப்பட்டு சர்க்கரை ஏற்றமதிக்குத் தடை விதித்துவிடக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறார், மன்மோகன் சிங். நிதியாதிக்கக் கும்பல்கள் முன் பேர வர்த்தகம், இணைய தள வர்த்தகம் என்ற பெயரில் உணவுப் பொருளை வைத்துச் சூதாட்டம் நடத்துவதுதான் விலைவாசி உயர்வுக்கு முதன்மையான காரணம் எனத் தெரிந்த பிறகும், அதனை முற்றிலுமாகத் தடை செ#ய மறுத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு.

 

மேலும், "பற்றாக்குறை' நிலவும் சமயத்தில்தான், நொறுக்குத் தீனி தயாரிப்பில் இறங்கியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களை மூட்டைமூட்டையாகக் கொள்முதல் செய்து "சேமித்து' வைத்துக் கொள்வது தடையின்றி அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறமோ, விவசாயிகளுக்குத் தேவைப்படும் குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தித் தராமல் இருப்பதன் மூலம் பல இலட்சம் டன் காய்கறிகளையும் பழங்களையும் அழுகிப் போக அனுமதிக்கிறது. வெங்காய விலை ஏறிக்கொண்டிருந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் 40 இலட்சம் டன் உருளைக்கிழங்கு அழுகிப் போகுமாறு கைவிடப்பட்டது. அதே சமயம் குளிர்பதனக் கிடங்குகளைக் கட்டிக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், அந்நிறுவனங்கள் சட்டப்படியே உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்துக் கொள்ளுவதற்கு வழி ஏற்படுத்தித் தரப்படுகிறது. இதற்கேற்ப அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

 

உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அவற்றின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, உர விலையை உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ளுமாறு அனுமதித்தது அரசு. இதன் மூலம் விவசாய உற்பத்திச் செலவை அதிகரிக்க வைத்த அரசு, பின்பு அதனையே காரணமாகக் காட்டி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என வாதாடி வருகிறது. அப்படி மலிவாகக் கொடுத்தால், விவசாயிகள் நட்டமடைவார்கள் என்றொரு பசப்பலான வாதத்தையும் முன்வைத்து வருகிறது, மன்மோகன் சிங் கும்பல்.

 

வெங்காய விலையேற்றத்தால் ஆதாயமடைந்த ஒரு சிறு விவசாயியையாவது இவர்களால் அடையாளம் காட்ட முடியுமா? மாறாக, மகாராஷ்டிரா மாநில வெங்காய விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து, அதற்கு ஈடாக வெங்காயத்தைக் கொள்முதல் செ#து கொள்வது என்ற ஏற்பாட்டின்படி, மொத்த வியாபாரிகள் கூட்டணி விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, ஏற்றுமதி செ#தும், விலையை உயர்த்தியும் கொள்ளை இலாபம் அடைந்துள்ளனர்.

 

இப்படிபட்ட இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை மீட்பது என்ற பெயரில் இப்பொழுது விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் சிக்க வைக்கப்படுகின்றனர். இதற்காகவே, ஒப்பந்த விவசாயம், கார்ப்பரேட் நிறுவனங்களே விவசாயிகளிடமிருந்து @நரடியாகக் கொள்முதல் செ#துகொள்வதற்கு வசதியாக கிராமப்புறப் பகுதிகளில் கிடங்குகளை அமைத்துக்கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது ஆகிய திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகின்றன. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களே விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதற்கு வசதியாக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்துவிடலாம் என்ற ஆ@லாசனையும் தனியார்மய ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

 

உணவுப் பொருள் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு, விநியோகம் முதலான சமூக நலன் சார்ந்த கடமைகளிலிருந்து அரசு சிறிதுசிறிதாக விலகிக்கொண்டு, அந்த இடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்த பிறகுதான், உணவுப் பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்கின்றன. இதனை நிரூபிக்கும் பொருளாதாரப் புள்ளிவிவரங்களும் இப்பொழுது வெளிவந்துள்ளன. சில்லறை விற்பனையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்த பின், அவற்றின் இலாப விகிதம் சரிந்துவிடாதபடி, விலை உயர்வை அனுமதிப்பதைத்தான் தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, மன்மோகன் சிங் அரசு. விலைவாசி உயர்வை வளர்ச்சியின் ஆதாரமாகக் காட்டி நியாயப்படுத்தவும் இவர்கள் தயங்குவதில்லை.

 

""சூப்பர் மார்க்கெட்டு''களில் பொருட்களை வாங்கும் கலாச்சாரத்தில் மூழ்கித் திளைக்கும் மேல்தட்டு வர்க்கத்தை இந்த விலைவாசி உயர்வு எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. அதனால், அவர்களால் ஆதரிக்கப்படும் மன்மோகன் சிங் அரசு அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. மாறாக, விலைவாசி உயர்வு என்பது தமக்கும் தமது எஜமானர்களுக்கும் ஆதாயம் தரத்தக்கதாகவே கருதுகிறது. இலாபத்திற்காகத்தான் வியாபாரம் நடத்த முடியும் என வெளிப்படையாகவே பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குகிறார், சரத் பவார். உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் கொள்கை எதுவும் அரசிடம் கிடையாது என அறிவிக்கிறது, நுகர்வோர் விவகாரத் துறை.

 

சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ சண்டைக்காரனின் காலில் விழுவதைப் போல, விலையைக் குறைக்குமாறு மன்மோகனிடமே முறையிடுகின்றன. விலை உயர்வைக் கண்டித்து அரசை நிலைகுலைய வைக்கும் கலகங்களை நடத்துவதற்குப் பதிலாக, கேலிக்கூத்தான போராட்டங்களைத் தான் நடத்துகின்றன. இக்கட்சிகள் இப்பிரச்சினையை மறுகாலனியாதிக்கத் தாக்குதலாக மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, அக்கட்சிகளிடம் விலைவாசியைக் குறைக்க எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற வெற்று முழக்கத்தைத் தவிர, வேறேந்த மாற்றுப் பொருளாதாரக் கொள்கையும் கிடையாது.

 

அதனால்தான் மன்மோகன் சிங் துணிந்து விலைவாசியை மேலும்மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து வருகிறார். கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலையை இரண்டு முறை அதிகரித்திருக்கிறது, மைய அரசு. மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசகரான ரங்கராஜன், ""ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமையின் விலைகளைப் பண வீக்கத்திற்குத் தகுந்தவாறு ஏற்ற வேண்டும்'' என அறிவித்திருக்கிறார். உணவுப் பொருள் வர்த்தகத்தில் தனியார்மயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் விலைவாசியைக் குறைக்க முடியும் எனக் கூறி, அதற்கேற்ப சில்லறை விற்பனையில் 51 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. இவை அனைத்தும் அரசே விலைவாசி உயர்வை திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது என்பதைத்தான் நிரூபிக்கின்றன.