ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பதாகக் கூறப்படும் நான்கு தூண்களில் மூன்றை நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், பத்திரிகை ஆகியவற்றை அலைக்கற்றை ஊழலும், வெளியே கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களும் சந்தி சிரிக்க வைத்துவிட்ட நிலையில், இப் போலி ஜனநாயகத்தை ஊழலில் இருந்து காத்து ரக்ஷிக்கும் கடவுளர்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்றனர். இவ்வூழலை விசாரிக்கும் சாக்கில் நீதிபதிகள் உதிர்த்து வரும் விமர்சனங்களைக் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டு, அதன் மூலம் நீதிமன்றம் பற்றிய பிரமையை மக்களின் மனதில் திணிக்கின்றன ஊடகங்கள்.
அலைக்கற்றை ஊழல் தொடர்பாக இன்று வரை யார் மீதும் வழக்குகூடப் பதிவாகவில்லை. ஆனாலும் ஊடகங்கள், இவ்வூழல் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வாயிலிருந்து வெளியே வரும் ஒவ்வொரு வார்த்தையையும் இந்த ஊழலுக்கு எதிரான தீர்ப்புகளைப் போல உருவேற்றி வெளியிடுகின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பத்திரிகைகளுக்குத் தீனி போடும் விதத்தில், ""ராசா பிரதமரை மதிக்கவில்லை'' என்பது போன்ற இந்த விசாரணைக்குத் தொடர்பற்ற பல விமர்சனங்களைத் தமது மனம்போனபடிக் கொளுத்திப் போட்டு வருகின்றனர்.
அரசும் அதிகார வர்க்கமும் உச்ச நீதிமன்றத்தின் இந்த சவடால்களையெல்லாம் கேட்டு ஒன்றும் நடுநடுங்கிப் போய்விடவில்லை. வழக்கு விசாரணையின் பொழுது நீதிபதிகளிடமிருந்து பொங்கும் தார்மீக கோபத்திற்கும், இறுதியில் அவர்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காதென்பது ஆளும் கட்சிக்கும் அதிகார வர்க்கத்திற்கும் நன்கு தெரியும். ஜார்கண்ட் முக்தி மோர்சா எம்.பி.களை நர சிம்ம ராவ் விலைக்கு வாங்கிய வழக்கில், இலஞ்சத்திற்கு ஆதரவாகத் தீர்ப்புக் கொடுத்த உத்தமர்கள்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்பது நமக்கும் தெரிந்த விசயம்தானே!
முன்சீப் கோர்ட் நீதிபதி தொடங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டு அனைவரும் தத்தம் பதவி உயர்வு, இடமாற்றம் முதல் குறைந்த விலையில் வீட்டு மனைகள், ஓய்வு பெற்ற பிறகு ஏதேனுமொரு கமிசன் தலைவர் பதவி போன்ற சன்மானங்களை அரசிடமிருந்து பெறுவதற்குத்தான் காத்திருக்கிறார்கள். தமது பதவியைப் பயன்படுத்தி தாங்கள் அனுபவிக்கும் சுகங்கள் அனைத்திற்கும் அலுவலக வேலையாகச் செல்லும் வெளியூர்ப் பயணம் முதல் குடும்பச் சுற்றுலா வரையில் தங்களைப் பேணுவதும் பராமரிப்பதும் இலஞ்ச ஊழலில் ஊறித்திளைக்கும் போலீசும் வருவாய்த் துறையும்தான் என்பது அவர்களுக்குத் தெரியாததல்ல.
நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ஊழல் புரையோடி ப்போன இந்த அரசின் ஓர் அங்கம்தான் என்பதுடன் நீதிபதிகள் அனைவரும் ஊழலோடு சமாதான சகவாழ்வு வாழ்பவர்கள்தான். அது மட்டுமல்ல, நீதிபதிகள் போக்குவரத்து போலீசின் தரத்துக்கு இறங்கி இலஞ்சம் வாங்கவும் தயங்காதவர்கள்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுள் பெரும்பாலோர் பணம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு எழுதுகிறார்கள் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்ட செய்தியும்; இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக இருந்த 16 நீதிபதிகளுள் 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல் பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் பல்வேறு ஆதாரங்களோடு உச்சநீதி மன்றத்திடமே மனு அளித்திருப்பதும் நீதித்துறையின் யோக்கியதையை அம்பலப்படுத்துகின்றன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய சாந்தி பூஷணின் மகனும் வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் நடத்தி வருகிறது. இவ்வழக்கு விசாரணையின்பொழுது சாந்தி பூஷண் , ""தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகவும், தன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நடத்த வேண்டு ம்'' எனக் கூறிய பின்னரும், ""மன்னிப்புக் கோருங்கள், வழக்கை முடித்துக் கொள்வோம்'' என்று மன்றாடுகிறார்கள் நீதிபதிகள். மன்னிப்பு கேட்க சாந்தி பூஷண் தயாராக இல்லாததால், அவர் மனு மீதான விசாரணையையே கிடப்பில் போட்டுள்ளனர்.
மைய ஊழல் கண்காணிப்பு ஆணையர் தாமஸ் கேரள மாநிலத்தில் பணியாற்றிய போது அவர் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பது தெரிந்ததும், அவரை அந்தப் பதவியில் நியமித்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், "" இத்தகைய பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள் அப்பழுக்கற்ற நடத்தை உள்ளவர்களாக இருக்கவேண்டாமா?'' என்று கேள்வி எழுப்பினர்.
""அப்பழுக்கற்றவர்களை மட்டும் தான் நியமிக்கமுடியும் என்பதை ஒரு விதியாகக் கொண்டால், பல நீதிபதிகளின் நியமனங்களே கேள்விக்குள்ளாகிவிடும்'' என்று நீதிபதிகளின் கேள்விக்கு மைய அரசின் அட்டார்னி ஜெனரல் வாகன்வதி பதில் அளித்தார். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது தங்களுக்கே ஆபத்தாக முடிந்து விடும் என்பதால், அட்டார்னி ஜெனரலின் அவமதிப்பை மவுனமாக சகித்துக் கொண்டõர்கள் மாட்சிமை தங்கிய நீதிபதிகள். இது தான் நீதிபதிகளின் யோக்கியதை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்டால் கூடத் தங்களைப் பதவி நீக்கம் செய்யவோ, தண்டிக்கவோ முடியாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பைப் பெற்றிருப்பவர்களும், தமது சொத்துக் கணக்கைக்கூடப் பொது மக்களின் பார்வைக்குத் தர முடியாது எனத் திமிரோடு அறிவிக்கின்றவர்களுமான உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஊழலைப் பற்றி உபதேசம் செய்யும் தகுதி அறவே கிடையாது.
நீதித்துறையில் நிறைந்திருக்கும் ஊழலைக் காட்டிலும் கொடியது அவர்களது வெறி கொண்ட ஆளும் வர்க்கக் கண்ணோட்டமே ஆகும். யூனியன் கார்பைடு, என்ரான், போஸ்கோ, வேதாந்தா, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதற்கு ஆதரவாகவும் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடந்த இருபதாண்டுகளில் அளித்திருக்கும் எண்ணற்ற தீர்ப்புகளை அலசிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் பங்காளிகள் என்பது பளிச்சென தெரியவரும். ""தனியார்மயக் கொள்கையில் தலையிட மாட்டோம்'' என வெளிப்படையாகவே அறிவித்து, பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்குத் துணை நின்று வரும் உச்ச நீதிமன்றம், அலைக்கற்றை ஊழலில் குற்றவாளிகளைத் தண்டித்துவிடும் என நம்புவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.
அலைக்கற்றை ஊழலை விசாரிப்பதாக பாவ்லா காட்டிக் கொண்டிருந்த சி.பி.ஐ.யிடம்தான் மீண்டும் விசாரணை செய்யும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்திருக்கிறது. ஆனால் முன்பு போலின்றி, தற்பொழுது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சி.பி.ஐ.யின் விசாரணை நடைபெறுவது குறித்து ஊடகங்கள் பெரிதும் நம்பிக்கையூட்டி எழுதுகின்றன. சி.பி.ஐ யின் யோக்கியதையோ பல்வேறு வழக்குகளில் அம்பலமானதுதான். சி.பி.ஐ யின் விசாரணையும்கூட, எய்தவர்களான கார்ப்பரேட் நிறுவனங்களை விட்டுவிட்டு, வெறும் அம்புகளை மட்டும்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது.
அரசால் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பொது அரங்கில் வெளியிடப்பட்டிருப்பதையொட்டி அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார் டாடா. அந்த உரையாடல்களை வெளியிட்ட ஓபன், அவுட்லுக் பத்திரிகைகளை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க விரும்பவில்லை என்று டாடாவின் வழக்குரைஞர் கூறிய போதிலும், ""இந்த வழக்கை முழுமையாக நாங்கள் விசாரிக்க விரும்புகிறோம்'' என்று கூறி அந்தப் பத்திரிகைகளையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்திருக்கின்றனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
அலைக்கற்றை ஊழல் வழக்கை "முழுமையாக' விசாரித்து நீதி வழங்க வேண்டுமென்றால் ராடியாவையும், ராசாவையும், பெய்ஜாலையும் மட்டும் விசாரிப்பது போதுமானதல்ல; மன்மோகன் சிங் முதல் டாடா, அம்பானி வரையிலான அனைவரையும்தான் விசாரிக்க வேண்டும். விசாரணையை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம் அப்படியொரு உத்தரவை சி.பி.ஐ. க்குப் பிறப்பிக்கப் போவதில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கு குறித்து அவ்வப்போது உதிர்த்து வரும் வீர வசனங்களுக்கும் தமிழ்ப் படக் கதாநாயகர்கள் பேசும் ""பஞ்ச் டயலாக்''கிற்கு மேற்பட்ட முக்கியத்துவத்தை அளிக்கத் தேவையில்லை.
ரஹீம்