Language Selection

புதிய ஜனநாயகம் 2011

ஓசூர் அருகிலுள்ள பாகலூரில், அண்மைக்காலமாக விவசாய நிலங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து தொங்கி, மின்சாரம் தாக்கிப் பல விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். இது பற்றிப் பலமுறை முறையிட்டும் மின்சார வாரியம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதோடு, மீட்டர் பொருத்த இலஞ்சம் வாங்கி இழுத்தடிப்பது, டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் சீரமைக்காமல் புறக்கணிப்பது, மின்வாரிய ஊழியர்கள் அல்லாமல் புரோக்கர்களை வைத்துச் சீரமைப்பது முதலான முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

 

இதனால் பாகலூர், பெலத்தூர், அலசபள்ளி, கக்கனூர் முதலான பகுதிகளில் தொடர்ந்து மின்தடையும் பாதிப்புகளும் விபத்துகளும் நடக்கின்றன. இதைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி பாகலூர் மின்வாரிய அதிகாரிகளிடமும் போலீசு நிலையத்திலும் முறையிட்டது. ஆனால், மாதங்கள் பலவாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகார வர்க்கம் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால், இவ்வட்டார விவசாயிகளைத் திரட்டி விவசாயிகள் விடுதலை முன்னணியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து 15.12.10 அன்று பாகலூரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

 

மின்துறை தனியார்மயமாக்கப்பட்டு வருவதன் விளைவுதான் இந்த அலட்சியம் என்றும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் விளக்கி முன்னணியாளர்கள் உரையாற்றினர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு போர்க்குணத்துடன் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சில இடங்களில் பழுது பார்த்துச் சீரமைத்துள்ளனர். பு.ஜ.செய்தியாளர், ஓசூர்.