மின்சாரம்:
2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய மின்சாரச் சட்டத்தின்படி மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்த மின்சார வாரியங்கள் கலைக்கப்பட்டு, உற்பத்தி, பகிர்மாணம், விநியோகம் என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டன. ஆகஸ்ட் 2003 இல் தில்லியின் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டு டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனங்கள், அரசிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ1.32 வீதம் மின்சாரத்தை வாங்கி அரசு நிறுவனமான குடிநீர் வாரியத்துக்கு
ரூ 6.52க்கும், நகராட்சிக்கு ரூ.6.92க்கும் விற்றன. இதில் டாடாவும் ரிலையன்சும் சுருட்டியது ரூ.2ஆயிரம் கோடி. ஒரிசாவில் தனியார் நிறுவனங்கள் அரசிடம் இருந்து மின்சாரம் வாங்கி மக்களுக்கு விற்று இலாபம் பார்த்து விட்டு, வாங்கிய மின்சாரத்துக்குக் காசு கொடுக்காமல் ரூ.3,240 கோடியை அரசுக்கு நாமம் போட்டன.
தனியார்மயமாக்கப்படும் மின்சாரத் துறையின் லட்சணத்திற்கு என்ரான் ஒரு உதாரணம். அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரான், மராட்டிய மாநிலத்தில், தபோலில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பித்தது. இதற்கு போட்ட ரூ.9,000 கோடி முதலீட்டில் ஏறத்தாழ 40 சதவீதம் (3,600 கோடி) இந்திய வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. என்ரானின் மின்சாரத்துக்கு மாநில அரசு கொடுத்த விலை யூனிட் ஒன்றுக்கு 7ரூபாய். இதுவன்றித் திறன் கட்டணம் என்ற பேரில் மாதம் ரூ.95 கோடியை மாநில அரசு கொடுத்தது. போட்ட முதலுக்கு 16% இலாப உத்திரவாதமும் கொடுத்தார் வாஜ் பாயி. நிதி மோசடியில் ஈடுபட்ட என்ரான் அமெரிக்காவிலேயே திவால் ஆனது. என்ரான் நிர்வாகிக்கு அங்கே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இங்கேயோ என்ரானின் வக்கீலாகப் பணியாற்றி வந்த ப.சிதம்பரம், பின்னர் நிதி அமைச்சராகி, திவாலான என்ரானை ரூ.9000 கோடி விலை கொடுத்து வாங்கினார்.
எண்ணெய் எரிவாயு:
1990க்குப் பின் எண்ணெய் எரிவாயுத் துறையில் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டனர். அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள ரூ.20,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ¬முக்தா மற்றும் பன்னா என்ற இரு எண்ணெய் வயல்களை, ரிலையன்சும், அமெரிக்காவின் என்ரான் நிறுவனமும் கூட்டணி கட்டிக் கொண்டு வெறும் 12 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தன. முதலில் வந்தவருக்கு முதலில் என்ற "ஸ்பெக்ட்ரம் கொள்கைதான்' அன்றும் பின்பற்றப்பட்டது. இதேபோல 40க்கும் மேற்பட்ட எண்ணெய் வயல்கள் விற்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான எண்ணெய் எரிவாயுக் கழகத்தின் கோதாவரி ஆற்றுப்படுகை எண்ணெய் வயலை ரிலையன்சுக்கு விற்ற முறைகேடுகளை விசாரிக்க முடியாது என்று தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
காடுகள்: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 46, இந்தியப் பழங்குடியினரின் வாழ்விடங்களின் மீதான அவர்களின் உரிமையையும், அது பறிக்கப்பட்டால் மீட்டுக் கொடுப்பதையும் உறுதி செய்கிறது. ஆனால், மறுகாலனியாக்கம் எல்லாவற்றையும் குப்பையில் கடாசிவிட்டது. ஒரிசாவில் இரும்புக் கனிம நிறுவனங்களும், பிற முதலாளிகளும் பெரும்பகுதி நிலங்களைப் பறித்து விட்டனர்.
சட்டீஸ்கரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, 2009ஆம் ஆண்டு கிராமப்புற வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் அறிக்கை, டாடா மற்றும் எஸ்ஸார் குழுமத்தையும், இந்திய அரசையும் மிகப் பெரிய நில அபகரிப்பு கும்பல் என்று குற்றம் சாட்டுகிறது. இவையெல்லாமே அரசியல சட்டத்தை மீறி வெளிப்படையாகச் செய்யப்பட்ட கிரிமினல் நடவடிக்கைகள். இவற்றின் மூலம் பல லட்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் தனியார் பன்னாட்டு முதலாளிகளின் கைகளுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.
தண்ணீர்க் கொள்ளை: சட்டீஸ்கர் சியோனாத் ஆறு தனியாருக்கு விற்கப்பட்டது. அதனைப் பொதுமக்கள் பயன்படுத்துவது போலீசு துணையுடன் தடுக்கப்பட்டது. ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த கிணறுகள் அனைத்தும் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன.
இவ்வாறு, மகாராஷ்டிராவின் நிரா ஆறு உள்ளிட்டு தமிழகம், கர்நாடகா, கேரளா என நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆறுகளும் குளங்களும் பா.ஜ.க., காங்கிரசு ஆட்சிகளின் போது அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுவிட்டன. தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க லிட்டருக்கு 1.2 பைசா மட்டுமே அரசுக்குத் தருகிறது, கோகோ கோலா.
சுரங்கங்கள்: சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஒரிசாவின் நியம்கிரி மலையில் பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிற்குச் சுரங்கம் தோண்ட அனுமதி கொடுக்கப்பட்டதை ஆகஸ்டு 2010இல் அம்பலப்படுத்தினார் என்.சி.சாக்சேனா என்பவர். 2006இல் சட்டீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க ஏதுவாக யானைகள் சரணாலயத்திற்கான அனுமதியை ரத்து செய்தது.
இரும்புத் தாதுவின் சந்தை விலை ஒரு டன் 1000 ரூபாய்க்கும் மேல் உள்ளது. ஆனால், அரசுக்குத் தனியார் சுரங்கங்கள் கொடுப்பதோ வெறும் 27 ரூபாய். இந்த விலையும் 2004இல் மாற்றியமைக்கப்பட்ட அடிமாட்டு விலை ஆகும். கர்நாடகாவில் மட்டும் 600 சட்டவிரோத இரும்புச் சுரங்கங்கள் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் 15,000 சட்டவிரோத சுரங்கங்கள் இருக்கின்றன (8,700 சுரங்கங்கள் மட்டுமே அனுமதி பெற்று இயங்குபவை).
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: சி.பொ.மண்டலங்களுக்கு, சுங்க வரிச் சட்டம் அல்லது பிற எந்த வகைச் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் ஏற்றுமதி/இறக்குமதிக்கான வரிகளிலிருந்து முழு விலக்கு; வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 10அ மற்றும் பிரிவு 80ஐஅஆ ன்படி 100% வருமான வரிச் சலுகை; மத்திய கலால் வரி, சேவை வரி , மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி இவற்றிலிருந்து முழு விலக்கு. மேலும், வெளிநாட்டு வணிகக் கடன் (External Commercial Borrowing) எனப்படும் குறைந்த வட்டி வெளிநாட்டுக் கடன்கள் 12 லட்சம் கோடி டாலர்கள் வரை பெற்றுக் கொள்ளும் வசதி சிறப்புச் சலுகைகளுடன் அளிக்கப்பட்டுள்ளன.
இவையன்றி அந்தந்த மாநில அரசுகள் அளிக்கும் சிறப்புச் சலுகைகள் தனி. நோக்கியா ஆலைக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள் ஒரு எடுத்துக்காட்டு. வாட் வரி, மத்திய விற்பனை வரியாக மத்திய அரசுக்கு நோக்கியா கட்டும் வரிகளை தமிழக அரசு திருப்பிக் கொடுக்கும். அந்த வகையில் 2005 முதல் இன்று வரை ரூ.650 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. நோக்கியா இந்தத் தொழிற்சாலையில் போட்ட முதலீடே ரூ.650 கோடிதான். அதுவும் வரிச்சலுகை என்ற பெயரில் வழங்கப்பட்டுவிட்டது. மொத்தமாக 1,024 கோடி ரூபாய்க்கு சலுகைகள் வழங்கியுள்ளது தமிழக அரசு. குறைந்த விலையில் மின்சாரம், தண்ணீர், அடி மாட்டு விலைக்கு நிலங்கள் எனச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர் தனியார் பன்னாட்டு முதலாளிகள்.
டாடா நிறுவனத்தின் நேனோ கார் உற்பத்தி சி.பொ. ம.விற்கு மேற்கு வங்க சி.பி.எம். அரசு 1% வட்டிக்கு ரூ.200 கோடி கடனுதவி தருவதாகவும், அதுவும் 20 வருடங்கள் கழித்துதான் வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் ஒப்பந்தமிட்டது. தற்போது அதனினும் அதிகமான சலுகைகளை குஜராத் அரசு வழங்கியுள்ளது. இதுவரை சி.பொ.ம.வால் மத்திய அரசுக்கு மட்டும் ரூபாய் ஒரு இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் இழந்த தொகை எத்தனை இலட்சம் கோடி என்பதற்கு கணக்கு இல்லை.
சட்டப்பூர்வ வரி ஏய்ப்பு மொரிஷியஸ் வழி: இந்தியாவில் மூலதனமிட்டிருக்கும் அந்நிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காவோ, ஜெர்மனியோ, ஜப்பானோ அல்ல. இந்துமாக்கடலில் உள்ள மொரிஷியஸ் என்னும் குட்டித்தீவுதான். காரணம், அந்த நாட்டுடன் இந்தியா போட்டிருக்கும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம். இதன்படி, மொரிஷியஸ் தீவைச் சேர்ந்தவர் இலாபத்திற்கான வரியை மொரிஷியஸில் கட்டினாலே போதும். மொரிஷியஸ் அரசோ அப்படி ஒரு வரியே விதிக்கவில்லை. எனவே, இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் மொரிஷியஸில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து கொண்டு, அதன் மூலமாக தமது மூதலீட்டை கொண்டு வருவதன் மூலம் வரியே கட்டாமல் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.2000 கோடி சுருட்டுகின்றனர்.
ஏப்ரல் 2000இல் நேரடி வரிகளுக்கான மத்திய அமைப்பு இந்த முறைகேடுகளை விசாரிக்கத் தொடங்கியவுடன், இந்தியப் பங்குச் சந்தையில் சரிவை உண்டாக்கி மிரட்டினர், இம்முதலாளிகள். நிதி அமைச்சகமும் நிரந்தரமாகப் பின்வாங்கியது.
அந்நியச் செலவாணிச் சட்டத்திருத்த மோசடிகள்:
கடத்தல் மற்றும் அந்நியச் செலவாணி மோசடிகளினால் நாட்டின் பொருளாதாரம் சீர்கெடுவதைத் தடுப்பதற்காகக் கொண்ட வரப்பட்ட அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் (ஃபெரா) 2000இல் முற்றிலும் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா) கொண்டு வரப்பட்ட து. இதன்படி, ஃபெராவின் கீழ் கிரிமினல் குற்றங்களாகக் கருதப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அந்நியச் செலவாணி மோசடிகளுக்கு, ஃபெமாவில் வெறும் அபராதம் மட்டுமே என்று தண்டனை மாற்றப்பட்டது. அதாவது ஹவாலா உள்ளிட்ட மோசடிகள் இனி கிரிமினல் குற்றங்களல்ல என்று ஆக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீதும் தினகரன் மீதும் ஃபெராவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்த போதிலும், இப்புதிய சட்டத்தினால் அபராதம் மட்டுமே கட்டச் சொல்லி 2008இல் தீர்ப்பளிக்கப்பட்டது. இது நாம் அறிந்த ஒரு உதாரணம் மட்டுமே. கறுப்புப் பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்தும் எல்லா கிரிமினல்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதே இந்த சட்டத்திருத்தத்தின் சாரம்.
வரிச்சலுகைகள்: தொழில் வளர்ச்சிக்கு அரசின் சலுகைகள் அவசியம் என்று நியாயவாதங்களை அடுக்கி, பல்வேறு நேர்முக வரித் தள்ளுபடிகள், தீர்வைத் தள்ளுபடிகள் மூலமாக கடந்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 முதல் 5 இலட் சம் கோடி ரூபாய் வரை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் இந்திய அரசு சட்டபூர்வமாகவே அள்ளிக் கொடுத்துள்ளது.
இவற்றின் விளைவாக, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் 2008-09இல் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.68,914 கோடிகள் என பட்ஜெட் மதிப்பீட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடி வரிகளின் மீதான சலுகைகள் மூலம் 200708இல் ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.62,199 கோடி. தீர்வை வரிச் சலுகைகள் மூலம் இழப்பு ரூ.87,468 கோடி. சுங்கவரியின் மூலம் இழப்பு ரூ.1,53,593 கோடி. ஆகமொத்தம் ரூ. 3,03,260 கோடிகள். இதில் ஏற்றுமதி வரவைக் கழித்து விட்டால் கூட, இது 2 இலட்சம் கோடிகளைத் தாண்டுகிறது. இதுவே 2008-09இல் 3 இலட்சம் கோடிகளைத் தாண்டுகிறது. இதுகூடக் குறைத்துக் காட்டப்பட்ட உத்தேச மதிப்பீடுதான். கடந்த 15 ஆண்டுகளில், சராசரியாக நாளொன்றுக்கு ரூ.700 கோடி வீதம் இம்முதலாளித்துவக் கும்பல்களுக்கு சட்டபூர்வமாகவே தீனிபோடப்பட்டுள்ளது.
இது ஊழல் அல்ல, கொள்ளை!
மேற்சொன்ன வரிச்சலுகைகள் மற்றும் இதரச் சலுகைகள் காரணமாக இந்திய அரசுக்கு 200910 இல் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மட்டும் ரூ.4 இலட்சம் கோடிகளுக்கும் மேல். இது 200809ல் இந்திய அரசுக்கு வந்த வரி வருவாயில் 69% ஆகும். இந்தத் தொகை முழுவதும் முதலாளிகளுக்கு இலாபம்.
வரிவருவாய் இழப்பைக் காரணம் காட்டித்தான் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்கள்நலச் செலவுகளை வெட்டுகிறது அரசு. இதன் விளைவாக, அவற்றிலும் புகுந்து கொள்ளையடிக்கிறார்கள் முதலாளிகள். இதுவும் முதலாளிகளுக்கு இலாபம். பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்டத்தான் பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்குவது அவசியம் என்கிறது அரசு. அடிமாட்டு விலைக்கு பொதுச்சொத்துகளை வாங்கும் முதலாளிகளுக்கு அதிலும் மீண்டும் இலாபம். ஆண்டொன்றுக்கு 3 ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவுக்கு முதலாளிகள் அடிக்கும் இந்தக் கொள்ளை, சட்டபூர்வமாகச் செய்யப்படுவதால், இது "ஊழல்' என்ற கணக்கில் சேருவதில்லை. அழகு