Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகின்து. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம் மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

எம் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும், ஆயுத வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டிய மஹிந்த – பாசிச அரசு, யுத்தத்தின் பின்னான காலத்தில் தனது அனைத்து அதிகார இயந்திரங்களையும் பயன்படுத்தி, திறந்த வெளிச் சிறைச்சாலையாய் மாற்றப்பட்ட எம் நிலத்தில் மக்களை சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்தும் உள்ளாக்குகின்றனர்.

அபிவிருத்தி, யுத்தத்தில் பின்னான மீள்கட்டமைப்பு என்ற பெயரில் நடாத்தப்படும் செயற்திட்டங்கள் எதுவும், எம் மக்களின் வாழ்வில் உண்மையான வாழ்க்கை மேம்பாட்டையோ, சமுதாய ரீதியிலான வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் இராணுவத்தினராலும், இந்தியா -சீனா ஈறாக சர்வதேச மூலதன மேலாதிக்க சக்திகளாலும், இவர்களுக்கு துணை போகும் மஹிந்த குடும்பம் மற்றும் உள்நாட்டு அரச ஒட்டுண்ணிகளாலும் எம் மக்களின் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது.

எம் தேசத்தின் விடுதலையின் பெயரிலான புலிப் போராட்டத்தையும் அதன் தலைமையையும்  முள்ளிவாய்க்காலில் வைத்து அழித்த நிலையில், பத்தாயிரத்துக்கும் அதிகமான புலிகள் மஹிந்த பாசிச அரசின் சிறைகளில் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள். சிறையில் இருந்து மீண்ட முன்னாள் புலிகள் பலர் தமது குடும்பங்களுடன் பசித்த வயிற்றுடன் அல்லற்படுகின்றனர். குறிப்பாக பெண் போராளிகளும், ஆண் துணை இழந்த பெண்களும் எமது சமூகத்தின் எல்லா வகை பிற்போக்குத்தனமான கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். புலிகளின் அழிவரசியலுக்கு கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக் கொடுத்த புலம்பெயர் மக்கள் பணம், இன்று இவர்களின் வறுமைக்கும் வாழ்வுக்கும்  உதவவில்லை.

இன்று புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுள்ள நிலையில், புலத்தில் அவர்களின் பினாமிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தில், மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் தொடர்ந்தும் அழிவு அரசியலை முன்னெடுத்தபடி தமிழீழக் கனவில் மிதக்கின்றனர். மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் இவர்களைப் பயன்படுத்தி மீண்டும் எம் தேசத்தை தன் பொருளாதார, அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய  ஒன்றியம் முதல் கனடா வரை இலங்கை மஹிந்த பாசிச அரசின் மீது கண்டனங்கள் முதல் அறிக்கைகளையும் விடுகின்றனர். நோர்வே அரசு போர்க்கால சாட்சிகளை இலங்கையில் இருந்து கடத்தி வருவதும் இதற்குள்  தான் நடந்தேறுகிறது.

இப்படியான எமது தேசத்தின் இருண்ட சூழ்நிலையில், எம்மை ஒடுக்கும் இலங்கை இனவாத பாசிச அரசு, இனவாதத்தை முன்தள்ளி நரித்தனத்துடன் எமது சகோதர இனமான சிங்கள மக்களையும், முஸ்லீம் மக்களையும், மலையக தமிழர்களையும் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளி சமுதாய சீரழிவுக்கும் உள்ளாக்கிய வண்ணமுள்ளது. குறிப்பாக அனைத்து உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கையும், வரலாறு காணாத வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், எமது தேச விடுதலையை இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கப்படுவதன் மூலமே வென்றெடுக்க முடியும். இதனைத் தான் நமது பல பத்து வருட போராட்ட வரலாறு கற்றுத் தந்துள்ளது. அதே போல ஆயுதத்தையும், தமிழினவாதத்தையும், ஏகாதிபத்திய நல்லுறவையுமே அடித்தளமாகக் கொண்டு, மக்களில் தங்கி இல்லாமல் நடத்தும் போராட்டம் அழிவுக்கே வழிவகுக்கும் என்பதையும் புலிகளின் போராட்ட வரலாறு எமக்கு உணர்த்தியுள்ளது.

இந்தவகையில்:

பேரினவாத அரசின் இனவழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும், மக்களுக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்!

தமிழினவாதத்தைக் கைவிட்டு சர்வதேசியத்தை முன்னிறுத்தி எம் தேச விடுதலைக்காக போராட அறைகூவல் விடுக்கிறோம்!

அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும், அவர்களின் அடிவருடிகளையும் தேச விடுதலைப் போராட்டக் களத்திலிருந்து அகற்றுவோம்!

மக்கள் சார்ந்த அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து நட்பு சக்திகளையும் ஓர் அணியில் திரள அழைப்பு விடுக்கிறோம்!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி


(துண்டுப்பிரசுரம் 17.05.2011)

www.ndpfront.com www.tamilarangam.net www.ndpfront.net

www.tamilcircle.net http://kalaiy.blogspot.com/