இப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.
இப்படி அரச பயங்கரவாதம் தன்னை மூடிமறைக்க முனைகின்றது. தனது பயங்கரவாத வழியிலான இராணுவத் தீர்வை, தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றது. இதை எங்கும் எதிலும் செய்கின்றது. இதற்கு ஏற்பவே தமிழ் அரசியல்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பேரினவாதிகள் மட்டுமல்ல, தேசியம் ஜனநாயகம் என்று கூறி பிழைக்கும் கூட்டம் கூட அங்கீகரிப்பது கிடையாது. தேசியம் ஜனநாயகம் என்று கூறி அரசியல் செய்பவர்களும் சரி, இதற்கு இடையில் மிதப்பவர்களும் சரி, தமிழ் மக்களைச் சார்ந்து நிற்பதை மறுப்பதே, அவர்களின் அரசியலாகிவிட்டது. தேசியவிடுதலை என்பது ஆயுதங்களாகி விடுகின்றது. ஜனநாயகம் என்பது இந்திய இலங்கை கூலிக் கும்பலாக மாரடிப்பதாகி விடுகின்றது. இவர்கள் தேசியம் ஜனநாயகம் என்பதை, ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, தமிழ் மக்களைக் கூறுகூறாக துண்டு துண்டாக வெட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் எதைத்தான், எப்படித் தான், தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும்.
இதனாலும், தமது வர்க்க குணத்தாலும், தமிழ் மக்களின் உணர்வுகளை, உரிமைகளைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவை அழிக்கப்படுவதையும் எப்படித் தான் அடையாளம் காணமுடியும், எப்படித்தான் அதை அடையாளம் கண்டு கோரமுடியும்.
விளைவு பேரினவாதம் தனக்கேற்ற ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரிக்கின்றது. ஊர் உலகத்தை ஏமாற்ற, தனது பேரினவாத பாசிச வெறியை அரங்கேற்றும், நாடகங்களை மேடையேற்றி, தமிழ் இனத்தையே அழிக்கின்றது.
இப்படி பேரினவாதம் தானே தீர்வு என்ற பெயரில் ஊற்றிக்குழைத்ததை, தமிழ் மக்களின் முகத்தில் சேறாய் அப்புகின்றது. அதற்கு நன்கு தெரியும், இதை பாதுகாத்துக் குலைக்க நாய்கள் உண்டென்று. இப்படியும், இதன் மூலமும் தமிழ் மக்களை வேட்டையாட முடியும் என்று, அது கருதுகின்றது.
பேரினவாத அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற கூலிக் குழுக்கள், இந்தியாவின் தயவில் அரசியல் செய்யும் அடிவருடிகள், எல்லாம் இதற்கு ஏற்பவே பாட்டுப்பாடுகின்றனர். இப்படி தமிழ் மக்களின் முதுகில் குத்துவதை மூடிமறைக்க, வேஷங்கள். தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது தான், எங்கள் கோரிக்கைகள் வேறுதான், ஆனால் இப்போதைக்கு இதை ஏற்றுக் கொள்வது அவசியம் என்கின்றனர். இப்படி தலைகீழாக நின்றே, இதைப் பாதுகாக்கின்றனர். எலும்புத் துண்டுக்காகவே இப்படி குலைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதையே புலியெதிர்ப்பு கருத்துத் தளங்கள், இந்தா தீர்வு என்று தமிழ் மக்களின் மீது ஒரே குரலில் வாந்தியெடுக்கின்றனர். தமது துரோகத்தையும், தமது அடிவருடித்தனத்தையும், தமிழ் மக்களுக்களின் விடுதலைக்கான ஒரே பாதை என்கின்றனர். புலிப் பாசிசத்துக்கான மாற்று, இது தான் என்கின்றனர். இதைத்தான் அவர்கள் ஜனநாயகம் என்கின்றனர்.
புலிப் பாசிசத்தின் இடத்தில் பேரினவாதம் கொண்டுவரும் முயற்சியே, இந்த அடிவருடிகளின் சொந்த அரசியலாகின்றது. இதன் மூலம் தாம் நக்கிப் பிழைக்க முடியும் என்றும் கருதுகின்றது. இதனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏறி மிதித்து, தமது சொந்த சிம்மாசனத்தை நிறுவ முனைகின்றனர்.
இதற்கு ஏற்ப பேரினவாதம் தானே வீசியெறிந்ததை, தனது குப்பையில் இருந்து தேடி எடுத்து இந்தா என்று தமிழ் மக்களுக்கு எறிகின்றது. நாய்கள் முகர்ந்து கொண்டு நக்க ஒடுகின்றது. திரும்பி பார்த்து, வள் என்று குலைக்கின்றது. இப்படி அரசியல் என்பது புலியல்லாத தளத்தில் அடிவருத்தனமாகிவிட்டது. அதை தமிழ்மக்களுக்கு பொருத்தமானது என்று வித்தை காட்ட முனைகின்றனர்.
புலிகள் அடிவாங்கிய சாரைப்பாம்பாகி, தொடர்ந்தும் இராணுவவாத எல்லைக்குள் ஊர முனைகின்றனர். இப்படி எதையும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு, அதை முறியடிக்க திராணியற்றவராகி விட்டனர்.
மொத்தத்தில் தமிழ் மக்கள் கருத்தற்ற ஊமையாக்கப்பட்டுவிட்டனர். வரும் எதிரான ஓரிரு கருத்துகளை நிறுத்திவிட புதிய தந்திரங்கள். கருத்துள்ள, எதிர்த்துப் போராடக் கூடியவர்கள் காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். எல்லாம் இனம் தெரியாத நபர்களின் பெயரில், அரசியல் இருப்பு உள்ளவர்களின் அரசியலாகின்றது.
புலம்பெயர் நாட்டில் அதே அரசியல் கொண்டவர்கள். இப்படி தேசியம் ஜனநாயகம் பேசும் வள்ளல்கள், இனம் தெரியாத நபர்களாகவே இணையங்களில் வலம் வருகின்றனர். அவர்களின் அரசியல் என்பது அவதூறுகளாக, தனிநபர் தாக்குதலாக மாறி, தமிழ் மக்கள் பற்றிய குறைந்தபட்ச குரல்களை முடக்க முனைகின்றனர்.
இப்படி மொத்தத்தில் தமிழ் மக்களை சுற்றிவளைத்து, அவதூறுகளால் கழுத்தை இறுக்கி கொல்ல முனைகின்றனர். எந்த நிகழ்ச்சி திட்டத்திலும், செயலிலும் தமிழ் மக்களின் உரிமைகளை, மறப்பது அனைவரினதும் அடிப்படை கொள்கையாகிவிட்டது.
இப்படி இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள், அவர்களின் உரிமையை முன்வைக்க கூடியவர்கள் யாருமில்லை என்பதையே, எதார்த்தம் எடுத்துக் காட்டுகின்றது. பொறுக்கிகளும், அடிவருடிகளும் எங்கும் நிறைந்து, அவர்களின் சமூக இழிவுகளே கருத்தாகிவிடுன்றது.
தீர்வுத் திட்டம் தொடர்பாக சமூக அக்கறையுடன் கனடா செழியன் வைத்த வாதத்தை, இனம்
தெரியாத ஒரு அடிவருடி கடித்துக் குதற முனைகின்றது. செழியனின் கடந்தகால கவிதை வரிகளான “ஜேர்மென் வீதிகளிலேயே என்னைத் தேட வேண்டாம்” என்பதைக் கொண்டு, தனது நக்கலுக்கு ஏற்ப இணையத்தில் குலைக்கின்றது.
எல்லாம் எதற்காக? மகிந்தாவின் பேரினவாத தீர்வுத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்ற அற்பத்தனத்தை அடிப்படையாக கொண்டு தான் கவிதை வரிக்கு, அர்த்தம் தேடுகின்றது. செழியன் இருந்த அமைப்பு இந்தியாவின் கோமணமாகியது. அடிவருடிகள் அங்கு தேடினால், எப்படி செழியனைக் காண முடியும். அந்தச் செழியனை 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து" இருந்து அல்லவா காணமுடியும்.
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதே உங்கள் அரசியல். மாறாக செழியனின் கடந்த காலம், நிகழ்காலம் இதில் இருந்து மாறுபட்டது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து நிற்கும் நீங்கள் யார்? உங்கள் அரசியல் என்ன? முதலில் யார் நீங்கள் என்று வெளிப்படையாக வாருங்கள். இந்திய இலங்கை அரசின் பின்னால் மறைந்து நின்று, தமிழ் மக்களுக்கு வேடிக்கையா காட்டுகின்றீர்கள்.
தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள், இப்படிப்பட்ட அற்பர்களால் தான் கூவி விலை பேசப்படுகின்றது. இந்த அடிவருடிகளின் பொறுக்கித்தனத்தையே அரசு பயன்படுத்தி, தமிழ் மக்களின் இருப்புக்கே வேட்டு வைக்கின்றது.
தமிழ் மக்களுக்கு தீர்வு என்ற பெயரில், தமிழ் மக்களின் எந்த பிரதிநிதிகளுமின்றி ஒரு திடீர் தீர்வு. இப்படி தனியொரு பேரினவாத சர்வாதிகாரி, தனது இராணுவத் தீர்வை திணிக்க அரசியல் தீர்வு என்ற எலும்பை வீசுகின்றார்.
இது பயங்கரவாதிகளுக்கு அல்ல என்று கூறி, ஒரு பாசிச இராணுவப் பயங்கரவாதி நடத்தும் நாடகம் இது. இப்படி தமிழ் மக்கள் மீது என்ன அக்கறை! நாட்டை மறுகாலனியாக்கி வரும் பேரினவாதி, சிங்கள மக்களைப் பற்றியே அக்கறைப்படுவதில்லை. இதில் தமிழ் மக்களைப் பற்றி என்ன அக்கறை.
பேரினவாதம் என்பது மோசடி, சுத்துமாத்து மூலம், எப்போதும் எலும்பைப் போட்டு தமிழ் மக்களையே விலை பேசுவது தான்.
வடக்குக்கு மட்டும் இடைக்கால சபை. வடக்கும் கிழக்கும் ஒன்றாக இருக்காதாம். வேடிக்கை தான். இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை. இது பிரதேசப் பிரச்சனைகளோ, அல்லது வேறு எந்தப் பிரச்சனையோவல்ல. அவைகள் யாவும் இனப்பிரச்சனைக்கு உட்பட்டது தான். அல்லது அவை மற்றொரு வேறான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது, இனங்களை அங்கீகரிப்பதில் தொடங்குகின்றது. இலங்கையில் தேசிய இனங்கள் எவை, அவைகளின் உரிமைகள் என்ன, அவை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பானது. இதுவே அடிப்படை முரணற்ற ஜனநாயகம். இதை மறுக்கின்ற அனைத்தும், மனிதவிரோத தன்மை கொண்டது.
உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை யாரும் கோருவதில்லை. கோருபவர்களை இல்லாது ஒழித்துவிடுகின்றனர். புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை, தத்தம் பாணியில் இதைச் செய்கின்றனர். அரசு தனது பேரினவாதப் பாணியில் இதை ஊக்குவித்து, தானும் தன்பங்குக்குச் செய்கின்றது.
இப்படி தமிழ் மக்களின் பிரச்சனை வியாபாரப் பொருளாகிவிடுகின்றது. சிலருக்கு இதனால் வாழ்வும் கொழுத்த வருமானமும்.
இந்தியாவின் மாநிலங்கள் கூட இன அடிப்படையிலானது. குறைந்தபட்சம் இதைக் கூட முன்னிறுத்திப் போராட வக்கற்றுப் போன தமிழ் அரசியல். மறுபக்கத்தில் பேரினவாதம் இந்தியாவின் நலன்களுடன் சேர்ந்து நின்று, புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்க முனைகின்றது.
சர்வகட்சி மாநாடுகள் என்ற பெயரில் ஊர் உலகத்துக்கு தலைப்பாகை அணிந்தவர்கள், இந்தப் பேரினவாதிகள். பின் வழமைபோல், அதையே குப்பையில் போடுகின்றனர். முன்னர் குப்பையில் இட்டதை குப்பையில் இருந்து கிளறி எடுத்து, இந்தா என்கின்றனர். இப்படி எத்தனை மாநாடுகள், ஒப்பந்தங்கள். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்த போது, எந்த சர்வகட்சி மாநாட்டையும் இவர்கள் நடத்தியது கிடையாது.
செழியனை நோக்கி எழுதும் அடிவருடி 'ஐம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிக்கிடக்கின்ற பிரச்சினையை ஓரிரவுக்குள் சகல அதிகாரங்களுடனும் தீர்க்கப்படவேண்டும் என்று செழியன் கனவு காண்கிறார்" இப்படி அவர் எதற்காக குலைக்கின்றார். கிடைக்கும் எலும்புத்துண்டுக் கனவு, பேரினவாதத்தைப் பாதுகாக்க பாய்கின்றது.
பேரினவாதத்தின் கொடூரத்தை, அதன் கோட்பாடுகளை, அதன் நடைமுறைகளை பாதுகாக்க, ஒரு நாளில் இதை தீர்க்க முடியாது என்கின்றது இந்த அடிவருடி. சாடிக்கு ஏற்ற மூடி.
தமிழ் மக்களுக்கு எதிரான தீர்வுகளை ஒரு நிமிடத்தில் திணிக்க முடிகின்றது. ஒப்பந்தங்களை ஒரே கணத்தில் கிழித்தெறிய முடிகின்றது. வாக்குறுதிகள் நொடியில் காற்றோடு போய்விடுகின்றது. பேரினவாத கட்சிகளோ, இதற்கு என்ன தீர்வு என்று எதையும் வைக்காது கட்சி நடத்துகின்றனர். இந்த பேரினவாதிகளுக்கு ஏற்ப தமிழ் அடிவருடிகள் அரசியல் செய்கின்றனர்.
பேரினவாதிகள் ஊர் உலகத்தை ஏமாற்றி இராணுவத் தீர்வை திணிக்கத் தான், தீர்வை வைக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தையே இல்லாததாக்கி, அவர்களை ஒடுக்கி அடிபணிய வைக்க முனைகின்றனர்.
புலியெதிர்ப்பு புல்லுருவிகள் பேரினவாத தீர்வு விசர் பிடித்து, மக்களின் உரிமைகளையே கடித்துக் குதறுகின்றனர். இவை புலிகளின் பெயரில், புலியெதிர்ப்பு அடிவருடிகளின் அரசியலாகின்றது. அதற்கு ஏற்ப பேரினவாதிகளின் திடீர் தீர்வு.
பி.இரயாகரன்
27.01.2008