இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6

மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

குரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது தான். 15 ஆண்டுகளுக்குப்பிறகு என்பதே சரியானது. பதினைந்து ஆண்டுகள் என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் 25 ஆண்டுகள் என எழுதியிருப்பது என்னுடைய கவனக்குறைவினால் நேர்ந்தது தான்.

 

பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.

இதுகுறித்து நான் கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தேன், “முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா?” ஆனால் நண்பர் மீண்டும் அவரின் நம்பிக்கையையே பதிலாக கூறியிருக்கிறார். எங்கள் நம்பிக்கை என்று முடித்துவிட்டால் அதில் கேள்வி எழுப்ப ஒன்றுமில்லை. ஆனால், அதுதான் சரியானது அதுமட்டுமே சரியானது எனும் போது தான் அதில் கேள்விகள் எழுப்பவும் ஐயப்படவும் தேவை எழுகிறது. இது ஏதோ நமக்கு புரியவில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு எடுத்துக்காட்டு கூறியிருக்கிறார். ஆனால் இதில் புரியாமல் நின்று கொண்டிருப்பது யார்?

ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?

பொதுவாக குரான் தொகுக்கப்பட்டதற்கு கூறப்படும் காரணங்களிலேயே சில குழப்பங்கள் இருக்கின்றன. குரானைப் பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அல்லா உறுதிகூறுகிறான். அதை அனைத்து முஸ்லீம்களும் நம்புகின்றனர். ஆனால் முகம்மது தன்னுடைய முயற்சியிலேயே அதாவது மனித முயற்சியிலேயே குரானை பாதுகாக்க முயற்சிக்கிறார். தொழுகையின்போது குரான் வசனங்களை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ததும், அந்த நேரத்து வசதிகளின்படி எழுதி வைத்ததும் மனித முயற்சியினால்தான். ஒருவேளை அல்லா பாதுகாப்பேன் என்று உறுதியளித்தது முகம்மதுவின் இந்த மனித முயற்சியைத்தான் என்றால் தொகுப்பதற்கு கூறப்படும் காரணமான மனனம் செய்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அல்லாவின் உறுதிமொழிக்கு மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பேதும் இல்லை என முகம்மதின் தோழர்கள் கருதினார்கள் என பொருள் வருகிறது. மற்றொரு பக்கம் முகம்மது ஏற்பாடு செய்து எழுதிவைத்திருந்த குரான் வசனங்கள் இருக்கும்போது மனனம் செய்திருந்தவர்கள் இறந்துவிட்டனர் எனும் காரணமே மாற்றுக் குறைவானாதாக ஆகிவிடுகிறது.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன்? வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.

அடுத்து, எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நான் கேட்டிருப்பது என்ன? வேத வசனங்கள் இறங்கும் போது அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய(!) வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது எனும் பொருளில் ஐயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு நண்பரின் மறுப்பு என்ன? முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி?

அடுத்து, குரானின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வியை கேள்வியை எழுப்பியிருக்கும் ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் தொகுப்பான முஸ்லீமில் இடம்பெற்றிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். முகம்மதுவிற்கு மிகவும் விருப்பமான மனைவியான ஆய்சாவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த ஹதீஸ் முகம்மது இருக்கும்வரை அந்த வசனம் குரானில் ஓதப்பட்டு வந்தது என்பதையும் பின்னர் நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெளிவாகவே விளக்குகிறது. ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது? எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ்? புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. தவிரவும், \\இது தொடர்பான மேலதிகவிபரங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவரை அந்த ஹதீஸ் குறித்த விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை.

அடுத்து, நான் எழுதியிருந்தவைகளில் முரண்பாடு என சிலவற்றைச் சுட்டியிருக்கிறார். அவற்றில் முதலாவது, இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது? இதில் அபூபக்கர் காலத்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. மட்டுமல்லாது இது எதற்காக கூறப்பட்டது என்பதை பார்க்க வேண்டாமா? முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது? அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா?

இன்றைய குரான் பிரதிகளுக்கிடையில் வசன எண்களில் வித்தியாசம் இல்லையா? இருக்கிறது ஜான் டிரஸ்ட் வெளியீட்டுக்கும், பிஜே வெளியீட்டுக்கும் இடையில் வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. வசன எண்கள் அடையாளத்திற்குத்தான் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.

கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்