“கைலாசபதி சாதி பார்த்தவரல்ல. ஆனால் நாவலர் பற்றிய ஆய்வின் பெரும்பகுதியை நாவலரின் சாதனை பற்றியதோடு சென்றும், பாதகமான விமர்சனங்களில் மென்மைப் போக்கோடும் செல்கின்றார். இப்படியான விமர்சனங்களை குறைத்து மதிப்பிடமுடியுமா?.  ஒவ்வோரினதும் எழுத்தின் பின்னால் அவர்களின் சமூக முத்திரை பதிந்திருக்கும்தானே?”

இது முன்னைய கட்டுரைக்கானதோர் பின்னோட்டம். அத்துடன் தாயகன் ரவி, தமிழகத்தின் அலெக்ஸ் போன்ற எழுத்தாளர் பலருக்கும் இந்த அபிப்பிராயங்கள் உண்டு. “இதில் என் நோக்கம் கைலாசதி வழிபாடு அல்ல. அவதூற்று விமர்சனங்கள்” பற்றியதில் இந் நோக்கோடு நான் அதை குறிப்பிடவில்லை. இதை  நீங்கள் சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.

கைலாசபதி நாவலர் பற்றிய தன் பதிவுகளை  “ஈழத்து இலக்கிய முன்னோடிகள்” எனும் நூலிலும் பதிவு செய்கின்றார். இந் நூல் அவரது மறைவுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அவரே முழுமையாகத் தயாரித்து அனுப்பிய நூல். இது நூல் வடிவில் வெளிவருவதற்கேற்ற வகையில் அவர் தயாரித்த இறுதி நூலும் இதுவே என்கின்றார்,  இந்நூலின் பதிப்புரையாளர்  மே. து. ராசு குமார்.  இருந்தும் இந்நூல் அவர் இயற்கை எய்திய நான்கான்டுகளின் பின்பே (1986-ல் மக்கள் பதிப்பக வெளியீடாக) முதற் பதிப்பாக வெளிவருகின்றது. இது பற்றியும் பலர் பற் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

கைலாசபதி நாவலரை மட்டுமல்ல, அவருடைய மாணவரான சபாபதிப்பிள்ளை, குமாரசுவாமி புலவர் உள்ளிட்ட ஏனைய புலவர்கள், சி.வை.தாமோதரம்பிள்ளை,  பண்டிதமணி கணபதிப்பிள்ளை, ஈறாக சோமசுந்தரப்புலவர் வரை அவர்களின் படைப்புக்கள் பற்றி குறிப்பிடுகின்றார். இவர்களெல்லோரும் உயர் இந்து மேட்டுக்குடி வேளாளத்தின் பிரதிநிதிகளே!.  இவர்களில் ஓர்சாரார் பண்டிதத்தின் பாற்பட்ட (சாதாரண மக்கள் விளங்கிக் கொள்ளாத படைப்புக்களைப் படைத்தவர்களும்,   சாதித் திமிர் கொண்டவர்களும்) படைபப்புக்களைப் படைத்தவர்களே. ஆகவே கைலாசபதி இதற்குள்ளான் ஆய்வுடன் நின்று உளன்றடிக்கும் போக்கும், அதற்குள் சாதாரண மக்கள் பற்றி மட்டமான பார்வையுள்ளதென்பதையும்  நிராகரிக்க முடியாது. அதே நேரம் இந்நூலுக்கான எழுத்தும் ஆய்வும் இப்படித் தான் இருக்கும் என்ற வாதமும் இருந்தது. இங்கு தான் ஓவ்வொருவரின் எழுத்திற்குள் உள்ளது எதுவென்ற கேள்வி எழுகின்றது?


உதாரணமாக டானியலின் எழுத்துக்களைப் பார்ப்போம். பஞ்சமர் நாவலை எடுத்துக்கொண்டால், முதலில் அதை நாவல் என்பதை விட, ஓடுக்கப்பட்ட மக்களின் ஆவணமாக கொள்ளலாம். இதை டானியலும் ஒப்புக் கொண்டதுண்டு. அதில் விஞ்சி நிற்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மொழி- அரசியல்-பொருளாதார-கலை-இலக்கிய பண்பாட்டுப் விழுமியங்களே. உயர் இந்து மேட்டுக்குடி வேளாளம் சொல்வது போல், அது இழிசனர் இலக்கியம் தான். இதில் எந்த கௌரவப் பிரச்சினையும் இல்லை. ஆனால் உயர் இந்து வேளாளம் கொதித்தெழும் சமாச்சாரமும் இந்நாவலில் உண்டு.

டானியல் இந்நாவலில் மாத்திரமல்ல, ஏனைய நாவல்களிலும் கற்சிதமாக ஒன்றைச் சொல்வார். மிக வலிந்து உயர்சாதிப் பெண்களுக்கும், ஓடுக்கப்பட்ட ஆண்களுக்கும் இடையில் தொடர்புகள்-உறவுகளை ஏற்படுத்தி விடுவார்!.  இது கற்பம் முதல் கருக் கலைப்புவரை செல்லும். இது குறுந்சாதியத்தின் பாற்பட்டதல்லவா எனக் கேட்டால், இது உண்மை தானே, இல்லாதததையா டானியல் எழுதிவிட்டாரென விவாதிக்கும், தலித் கனவான்களும உளர்.

டானியலின் பஞ்சமர் நாவல் முதன் முதலாக (ஏப்ரல் கிளர்ச்சிக்கு பிற்பாடு) யாழ்பாபாணத்தில், கட்சியால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. நல்லூர் அரசடி வீதியிலுள்ள ஓர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் தங்கவடிவேல் அவர்களின் தலைமையில் இவ்விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. இதில் இதன் சாதக-பாதக அம்சங்கள் விரிவாக விமர்சனத்திற்குட்பட்டது. பஞ்சமர் நாவல் சம்பந்தமாக இக்கூட்டத்தில் கட்சியால் வைக்கப்பட்ட பெரும் விமர்சனம் டானியல் குறுந்சாதிய நோக்கில்  வலிந்து குறிப்பிடும் உயர்சாதிப் பெண்களுக்கும், ஓடுக்கப்பட்ட ஆண்களுக்கும் இடையில் தொடர்புகள்-உறவுகளை ஏற்படுத்தி விடுதல் பற்றியதே. கடைசியாக ஏற்புரை வழங்கிய டானியல், கட்சித் தோழர்கள் சொன்னவாக்கில் என்னால் இலக்கியம் படைக்க முடியாதெனக் கூறினார். இதன் பிற்பாடு டானியலின் நாவல்களில் இக்குறைபாடு தொடர் குறைபாடாய் இருந்தே வந்தது. இவரின் நாவல்களின் தலைப்புகளிற்கும், உள்ளடக்கத்திற்கும் உடன்பாடற்ற போக்குகளே பேரதிகம். இக்கூட்டத்தின் பின் டானியல் கட்சிக் காரியாலயத்திற்கு செல்வதென்பதே அரிது. ஏன் இல்லையென்று கூடச் சொல்லலாம். கட்சிக்கு செய்து வந்த உதவிகளை இடை நிறுத்தியதும் உண்டு. அத்தோடு இதன் பின்னான தன் நாவலுக்கான விமர்சனக் கூட்டங்களுக்கு கட்சியினரை அழைப்பதேயில்லை. தன்னோடு உடன்பட்டவர்களோடுதான் அவரின் விமர்சன நிகழ்வுகள் நடக்கும்.

இதுபோன்றதொரு நிகழ்வு மகாகவிக்கும் ஏற்பட்டது. ஓர் தடவை இலங்கை ஓலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கைலாசபதி இலக்கியச் சர்ச்சசைகள் பற்றி உரையாற்றினார். இதில் மகாகவியின் கவிதை-தமிழ்த் தேசிய அரசியல் பற்றியும் விமர்சித்துள்ளார். இவ்விமர்சனத்தின் பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட ஆறுமாத காலம் வரை விடுபடவேயில்லை. கலை-இலக்கிய நண்பர்களை சந்திப்பதுமில்லை.

எனவே இது ஏதோ டானியலுக்கு மட்டுமுரிய தனிக் குறைபாடல்ல.  அவருக்குரிய இக்குறைபாடு போன்று, ஒவ்வொருவருக்கும் அவர்களின் எழுத்துக்களிலான படைப்பில் அவைகளை சொல்லும் விதத்தில் நிறைவுகளும், குறைவுகளும் இருந்தேதீரும். இது கைலாசபதிக்கும்தான்.

“நாவலர் பற்றிய ஆய்வின் பெரும்பகுதியை நாவலரின் சாதனை பற்றியதோடு சென்றும், பாதகமான விமர்சனங்களில் மென்மைப்போக்கோடும் செல்கின்றார். இப்படியான விமர்சனங்களை குறைத்து மதிப்பிடமுடியுமா?”

குறைத்து மதிப்பிட முடியாது. முன்னையதற்கு கொடுத்த அழுத்தம், பின்னையதற்கு கொடுக்கப்படவில்லை. போதாதென்பதை நிராகரிக்க முடியாது. இப்போதாமையின் நிமித்தம் கைலாசபதி நாவலரின் மாணவன் போன்று செல்வதையும் காண முடியும்.  “அடியும் முடியும்”  நூலில் முருகையனை விமர்சிக்கும் துணிவு கூட நாவலரின் பாற்பட்டு செய்யப்படவில்லை.

இது போன்றதொரு குறைபாட்டை திருக்குறள் பற்றிய ஆய்விலும் செய்கின்றார். க.நா. சுப்பிரமணியம் திருக்குறள் இலக்கியமல்ல. அற நூல் என்பதை சொல்லி பின்னால் இலக்கியம் தான் என்ற நிலைக்கும் வந்தடைகின்றார். கைலாசபதி நாவலரின் அளவுகோலுக் கூடாகவே திருக்குறளை இலக்கியமாகப் பார்க்கின்றார். அதனால் தான் திருக்குறளை வணிக சார்பான நூலாக கணித்தாரோ என கேட்கத் தோன்றுகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை வணிக நூல் என்பதில் எச் சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆனால் வணிக சார்பிற்கான உள்கிடக்கைகள் திருக்குறளில் இல்லையென்றே சொல்லலாம். எனவே திருக்குறள் பற்றிய ஆய்வில் கைலாசபதி ஆழமாக செல்லவில்லை என்ற விமர்சனத்தை தட்டிக்கழிக்க முடியாது. இதனால் தான் கோவை ஞானி , கைலாசபதியின் ஆய்வுகளை வரட்டுத்தன்ம் கொண்டதெனச் சொல்கின்றார். கைலாசபதியின் ஆய்வுகள் தமிழ் இலக்கியப் பரப்பிலுள்ள ஆன்மீகம், அழகியல், பண்பாட்டுத்தளம் போன்றவற்றைப்பற்றி கண்டு கொள்வதேயில்லை என்கின்றார்.

(தொடரும்)