மதியம் 2-மணியளவில் மேதின ஊர்வலம் ஆரம்பமாகும், பாரிஸ் றீபப்பிளிக் மெற்றோ நிலையம் சென்றடைந்தோம். பல அமைப்புக்கள் தம் கொடிகள், பதாகைகளுடன் அணி வகுத்து நின்றனர். அத்துடன் அரசியல் கோசங்களின் முழக்கங்களும், வாத்தியக் கோஸ்டிகளுடனான ஆடல் பாடல்களும் ஆங்காங்கே நடைபெற்றது. இதில் புலிகளின் அணி யாதுமற்ற அமைதி நிலையில். ஊர்வலத்திற்கு வந்தவர்கள் தொகையோ மிகக் குறைந்தளவு. நாம் கொண்டு சென்ற “போர்க்குற்றம் மீது சுதந்திரமான சுயாதீனமான விசாரணையைக் கோருவோம்” புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுர எண்ணிக்கையோ, அங்கு வந்திருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையினை விட அதிகம். என்ன செய்வது புலிகள் நிலை இப்படியாகி விட்டதே, என்றெண்ணியபடி துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தபடி, “முன்னணி” சஞசிகையையும் விற்க ஆரம்பித்தோம்.

விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம், சஞ்சிகையை வாங்கியவர்களில் பெரும்பாலானோர், புலிகள் ஊர்வலத்திற்கென அணி வகுத்து நின்ற இடத்திற்குள் இவற்றினை தம்முடன் கொண்டு சென்றனர். இது புலிகளுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்திற்று. முதற்தடவையாக மூவர் கொண்ட குழுவொன்று எமது தோழர்களை நோக்கி வந்து, உங்கள் முன்னணி ஈ.பி.ஆர்.எல்.வா? ஜே.வி.பி.யா? என்று கேட்டனர். (பாவம் அவர்கள் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியா என்று கேட்க மறந்து விட்டனர்.) தோழர்களிற்கு அருகில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டு நின்ற ஜே.வி.பி.யைச் சேர்ந்த ஒருவர் (தமிழ் தெரிந்த சிங்கள நண்பர்), உதொன்றும் இல்லை என்றார். அத்தோடு அவர்கள் சிங்கமும் இல்லை புலியும் இல்லை எனக் கிண்டலாக சொல்ல, கேள்வி கேட்டவர்கள் மௌனமாக திரும்பிச் சென்று விட்டனர். இச்சமயம் இச் சம்பவத்தை அவதானித்துக் கொண்டு நின்றவர்கள் மிக ஆர்வமாக எமது பிரசுரத்தையும், சஞ்சிகையையும் வாங்கினர்.

இதையடுத்து மீண்டும் ஐந்து நிமிடத்தில் பத்துப் பேர் கொண்ட கும்பலொன்று எமது தோழர்களை சூழ்ந்து கொண்டது. இக் கும்பல் புலிப் பாணியிலான அராஐகத்தொனியில் கத்தினர். அப்போது ஜே.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் கதைக்க முற்பட்டபோது, எம் முன்னணியைச் சேர்ந்த தோழரொருவர் தடுத்து நிறுத்தி, இவர்களுடன் தான் கதைப்பதாகச் சொல்லி, உங்கள் பிரச்சினை என்னவென்று கேட்டார். உங்கள் “முன்னணி” சஞ்சிகையின் சில கட்டுரைகள், சிறுகதை என்பன புலிகளை பற்றி குற்றம் சாட்டுகின்றது என்றனர். எனவே இதை இங்கே விற்கக் கூடாது என்றனர்.

இதை இங்கே விற்கக் கூடாது என சொல்ல உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது எனக் கூறினர் எமது தோழர்கள். இங்கே வந்துள்ள சில இடதுசாரி அமைப்புக்கள், இந்நாட்டின் ஐனாதிபதி சார்க்கோசியை மக்கள் விரோதி, சர்வாதிகாரி என்ற தொனியில் கோசம் போட்டுச் செல்கின்றனர். இதை பொலிசார் கூட கேட்டு சிரித்துக் கொண்டுதான் நிற்கின்றனர். இவர்களை சார்க்கோசியின் காவல் படையான பொலீஸ், கோசம் போடாதே, ஊர்வலம் போகாதே என தடுத்து நிறுத்தவில்லை. இது போக “முன்னணி” சஞ்சிகை, உங்களை அரசியலில் ரீதியாகதான் விமர்சித்துள்ளது. அத்துடன் இது பற்றி விபரமாக கதைக்க, விவாதிக்க இது உகந்த இடமல்ல எனக் கூறினர் எமது தோழர்கள்.

 

விரும்பினால் வேறு இடத்தில் கதைக்க நாம் தயார்! நீங்கள் தயாரா? என வினவினர் எமது தோழர்கள். இச் சமயமும் ஜே.வி.யை.ச் சேர்ந்த அதே தமிழ் தெரிந்த சிங்கள நண்பர் “அவர்கள் ரெடி! நீங்கள் ரெடியா”? எனக் கிண்டலாகக் கேட்டார். அப்போது எம் தோழர் அவரை மேற்கொண்டு கதைக்க விடாமல் தடுத்தனர். தொடர்ந்தும் எமது தோழர்கள் கருத்து தெரிவிக்கையில் எம் முன்னணி பற்றி உங்களுக்கு பல ஐயப்பாடுகள் உள்ளதை என்னால் உணரமுடிகின்றது. இதை நிவர்த்தி செய்ய, இத் துண்டுப்பிரசுரத்தில் உள்ள இணைய தளங்களை பாருங்கள்.

உங்கள் விமர்சனங்களை ஆக்கபூர்வமான பின்னூட்டங்களாக எழுதுங்கள். அதை நாம் கண்டிப்பாக பிரசுரிப்போம் என்று கூறினார்கள். இக் கூட்டத்தில் நின்று நடந்தவைகளை கேட்டும், பார்த்துக் கொண்டுமிருந்த அன்பரொருவர் எல்லோரையும் விலத்தி வந்து கை தர எல்லோரும் அமைதியாக கலைந்தனர். “முன்னணி” சஞ்சிகையை விற்கக் கூடாது என பறிக்க முற்பட்ட இன்னொருவர், தன் தவறிற்கு வருந்தி 2 ஈரோ தந்து சஞசிகையை வாங்கியும் சென்றார்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

04/05/2011