Sun01192020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

போர்க்குற்றத்தை அரசியல் நீக்கம் செய்து, அரசைப் பாதுகாக்க முனையும் போக்குகள் மீது

  • PDF

தமிழ்மக்கள் பெயரால் தான், அனைத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தப் போர்க்குற்றத்தை விசாரிப்பதால் என்ன நன்மை? இது இனத்துக்கு எதிரான முரண்பாட்டை கூர்மையாக்கும். அதனால் அரசுடன் இணங்கிப் போகும் வண்ணம், இதிலிருந்து அரசைப் பாதுகாக்க வேண்டும். இந்த வகையில் இலங்கை அரசைப் பாதுகாக்கும் வாதங்களும், தர்க்கங்களும் ஆங்காங்கே தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. "இவ் அறிக்கையை ஐ.நா. செயலர் குழு வெளியிடுவதன் மூலம், இலங்கைத் தேசத்தில் சரிசெய்யப்பட முடியாத ஒரு பாதிப்பை உருவாக்கும்" என்று இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூற்றை எடுத்துக் காட்டி, தமிழர்கள் தமிழரை மறைமுகமாக மிரட்டுகின்றனர். அரசுடன் சாணக்கியமாக இணங்கி, காரியமாற்ற வேண்டும் என்கின்றனர். அரசு தன் இராணுவ பலத்தால் தமிழ் மக்களை ஒடுக்கி அடிபணிய வைக்கும் உள்ளடக்கத்தைக் காணாதவாறு, இங்கு சாணக்கியமாக பலர் இக்கருத்துக்களை முன்வைக்கின்றனர். அரசுடன் மோதி சாதிப்பதைவிட, இணங்கி ராஜதந்திரமாக சாதிப்பது தான் புத்திசாலித்தனம் என்கின்றனர். இதைப் பூசிமெழுக அரசியல் முலாம்கள்.

 

இந்த அரசு பல பத்தாயிரம் மக்களைக் கொன்று, அவர்களின் சமூக பொருளாதார வாழ்வை முற்றாக அழித்ததுடன், தொடர்ந்து இராணுவ நிர்வாகத்தின் கீழான திறந்த வெளிச் சிறைகளில் வைத்து மக்களைக் கண்காணிக்கின்றது.

இந்த நிலையில் அந்த மக்களின் பொருளாதார மீட்சி பற்றியும், யுத்தத்திற்கு எதிரான மக்களின் மனநிலையைக் காட்டியும், அரசுக்கு பலர் கம்பளம் விரிக்கின்றனர். இவை அனைத்தையும் மிகக் கச்சிதமாகச் செய்த அரசின் பின் நின்றுதான், இதைப் பற்றி பேசிக் கொள்கின்றனர். அரசை பகைக்காத இணக்க அரசியல் பற்றியும், அறிவுபூர்வமான ராஜதந்திரம் பற்றியும், சாணக்கியம் பற்றியும் விதவிதமாகக் கூறியே குற்றவாளிகளை பாதுகாக்க முனைகின்றனர்.

இதற்கமைய வெளியான சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1."கொலைசெய்தவரைக் கழுவேற்றுவதால் இறந்துபோனவர் உயிர்த்துவிடுவாரா? ஐ.நா. கூறுவதுபோல் மக்கள் மீது ஷெல் அடித்தவர்கள் மீதும், தப்பிவர முனைந்தவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?"

2.".. பாதுகாப்பான ஜனநாயகச் சூழலில் இருந்துகொண்டும், தமது பிள்ளைகளை தமது கமக்கட்டுக்குள் வைத்துப் பராமரித்துக் கொண்டும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆரோக்கியமான பார்வைகள் ஏதுமின்றியும், வெறுமனே பழிவாங்கும் மனநிலையில் இருந்து பேசுகிறார்கள். நாட்டில் வாழும் தமது சொந்தச் சகோதரங்களின் வாழ்நிலைகளை மறந்து மிகக் குறுகிய சிந்தைக்குட்பட்டிருப்பதையே இவர்களது பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன."

3."நடந்துபோன விடயங்களுக்கு அரசாங்கத்தையோ, புலிகளையோ குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது, ஏசி அறைகளுக்குள்ளிருந்து அறிக்கை தயாரித்து அளவளாவுபவர்களுக்கு வேண்டுமானால் சௌகரியமாக இருக்கலாம். போரில் இழந்தவர்களும், இழந்தவைகளும் போக, மிஞ்சியிருப்பவர்கள் தமது வாழ்வைக் கட்டியெழுப்ப ஏதாவது உருப்படியாகச் செய்ய முடிந்தால், அதுவே இப்போது புண்ணிய காரியமாக இருக்கும்."

4."மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசின்மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்களை (மறுதலிக்காத வகையில்) மறப்போம், மன்னிப்போம் என்ற முறைமையில் கைவிடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதற்குரிய சமிக்கையை அரசுக்கு வெளிப்படுத்த வேண்டும்."

5."இன்றைய இலங்கைச் சூழலில் தமது உடனடித் தேவையாக அழிவுகளற்ற, சமாதானமும் சுபிட்சமும் நிறைந்த வளமான வாழ்வையே கோருகிறார்கள் அம்மக்கள்"

6."இவர்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், எவ்வித பாதிப்புகளும் அற்ற வகையில், சிறுபான்மைத் தேசியங்களின் வாழ்வு வளம் பெறுவதற்கும் முன்னேற்றம் காண்பதற்குமான சந்தர்ப்பங்கள் குறுகிப்போகுமா அன்றி அதிகரிக்குமா அல்லது முற்றாக அழிக்கப்படுமா?"

இப்படி பற்பல தர்க்கங்கள். இதில் பேரினவாதத்தின் மறைமுக மிரட்டல் முதல் மக்களின் வாழ்வுசார் அக்கறையின்பால் இதை முன்வைப்பதாக கூறிக்கொண்டு, போர்க்குற்றத்தில் இருந்து அரசை விடுவிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எப்படியாவது அரசை பாதுகாக்கும் வழிகளில், அரசியல் நீக்கம் செய்ய முனைகின்றனர். இந்த வகையில் முன்பு இடதுசாரியம் பேசிய பழசுகள் சேர்ந்து கொண்டு, அங்குமிங்குமாக அரசை பாதுகாக்கும் வாதங்களையும் தர்க்கத்தையும் தொடர்ந்து முன்தள்ளுகின்றனர்.

போர்க் குற்றங்களை "மறப்போம், மன்னிப்போம்" என்கின்றனர். இதை அந்த மக்கள் சொன்னார்களா!? இப்படியான வாதத்தை முன்வைக்க முன், அரசு தன்னளவில் இதை உணர்ந்து ஏதாவது பரிகாரம் செய்து இருந்தால், இதை எழுப்பும் தார்மீக அடிப்படையாவது இங்கு இருந்திருக்கும்! அதுவுமில்லை. அரசு தொடர்ந்து இனவொடுக்குமுறையை செய்கின்றது. ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாத தொடர்ச்சியில், அரசு இன்னமும் அதையே தொடர்ந்து செய்கின்றது. "மறப்போம், மன்னிப்போம்" என்பது அரசியல் ரீதியாக கேலிக்குரியது.

ஐ.நா. அறிக்கை அரசிடம் கோரியது போல், அரசு பொதுமன்னிப்பை தமிழ் மக்களிடம் கோரினால் கூட, இந்தக் குற்றத்தில் இருந்து குற்றவாளிகளைப் பாதுகாக்கும் உரிமை யாருக்கும்; கிடையாது.

இந்த இலங்கை அரசு 1971, 1989-1990, 2009 என்று, மூன்று வேறு காலகட்டத்தில் இலங்கையில் பெருமெடுப்பில் பாரிய படுகொலைகளை நடத்தியிருக்கின்றது. இந்த 40 வருட கால இடைவெளியில், ஒன்றிலிருந்து மற்றொன்றாக பிரிக்க முடியாத குற்றக் கும்பல் தான் தொடர்ந்தும் நாட்டை ஆண்டு வருகின்றது. இந்த வகையில் 2009 தமிழர் படுகொலை மட்டுமல்ல, 1971, 1989-1990 சிங்களவர் படுகொலையையும் உள்ளடக்கிய வண்ணம், நாம் எமது கோசத்தை அரசியல் ரீதியாக விரிவாக்க வேண்டும். அந்த வகையில் சிங்கள மக்களை இதன்பால் இணைத்து, இந்த போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும்.

யுத்தம் நடந்த காலத்தில் மக்களை புலியிடமிருந்து மீட்கவே, அரசின் பின் நிற்பதாக புலியெதிர்ப்பு தர்க்கித்து அரசின் பின் நின்றது. இன்று மக்களின் மீள்கட்டுமானத்தைச் சொல்லி, அவர்களின் பரிதாபகரமான வாழ்வைக் காட்டியும், போர்க்குற்றத்தில் இருந்து அரசை பாதுகாக்க புதிதுபுதிதாக பலர் மக்களின் பெயரில் களமிறங்குகின்றனர்.

மக்கள் தமக்கு நடந்த கொடுமைகளுக்கு கொடூரங்களுக்கு எதிரான ஒரு விசாரணையையும், நீதியையும், தண்டனையும் கோரவில்லை என்கின்றனர். மக்கள் "இன்றைய இலங்கைச் சூழலில் தமது உடனடித் தேவையாக அழிவுகளற்ற, சமாதானமும் சுபீட்சமும் நிறைந்த வளமான வாழ்வையே கோருகிறார்கள்" என்கின்றனர். நீதியுடன் கூடிய தண்டனையும், அதையொட்டிய விசாரணையுமற்ற சுபீட்சம் என்பதும், சமாதானம் என்பதும் கண்கட்டு வித்தைகள் தான். இது யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு மக்கள் சந்தோசமாகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும், யுத்தமற்ற சூழலில் சமாதானமாக வாழ்வதாக அடிக்கடி தமிழில் மகிந்த கூறுகின்ற அதே வார்த்தை ஜாலங்கள்.

ஊடனடித் தேவை என்பது, "அழிவுகளற்ற, சமாதானமும் சுபீட்சமும்" மட்டுமல்ல. தங்கள் மீதான கொடுமைகளுக்கும் கொடூரங்களுக்குமான பரிகாரம் கூடத்தான். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் குறுகிய தமிழ் இனவாத கட்சிக்கு, தொடர்ந்து ஏன் வாக்குப் போடுகின்றனர்? தங்கள் மேலான தொடர்ச்சியான இனவொடுக்குமுறைக்கு எதிராகத்தான் வாக்குகளைப் போடுகின்றனர். மக்கள் இந்தக் கொலைகார கொடுங்கோல் அரசை நம்பவில்லை. அதன் தொடர்ச்சியான இனவொடுக்குமுறையிலான கொடூரத்தை தொடர்ந்து தங்கள் வாழ்வாக அனுபவிக்கின்றனர். அதற்கு எதிராக தொடர்ந்து வாக்களிக்கின்றனர்.

இங்கு "மறப்போம், மன்னிப்போம்" என்ற நிலையில், வடக்கு கிழக்கு மக்கள் இல்லை. தொடர்ந்து மறக்க முடியாத துயரத்தை, மன்னிக்க முடியாத அவலத்தையே அரசு கொடுத்து வருகின்றது. அந்த மக்கள் தமக்கு இந்தக் கொடுமையை செய்தவர்களை, தண்டிக்கக் கோருகின்றனர். அவர்களின் கீழ் தொடர்ந்து வாழ்வதை எதிர்த்தே, அவர்கள் வாக்களிக்கின்றனர். பல்வேறு கண்காணிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் நடந்த போலித் தேர்தலில் தான், மக்கள் தங்கள் கோபத்தை அரசுக்கு எதிராக மிகத் தெளிவாக வெளிப்படுத்தினர்.

அரசு அமைத்த விசாரணைக் குழு சுதந்திரமானதாகவும் சுயாதீனமாகவும் இயங்காத போதும், கண்காணிக்கப்பட்டு சாட்சியங்களை அச்சுறுத்திய போதும், அதையும் மீறி துணிவுடன் பெருமெடுப்பில் மக்கள் சாட்சியமளித்தனர். இங்கு மக்களின் விருப்பம், விசாரணையையும் நீதியையும் கோருவது தான். தண்டனையில்லாத விசாரணையும் நீதியையுமா! மக்கள் கோரினர்! "மறப்போம், மன்னிப்போம்" என்றா, மக்கள் இதை அணுகினர்!?

மக்கள் பெயரால் அரசைப் பாதுகாக்கும் தர்க்கங்கள் வாதங்கள் அனைத்தும் போலியானது புரட்டுத்தனமானது. அரசைப் பாதுகாக்கும் சாணக்கியத்துடன் அவை முன்வைக்கப்படுகின்றது. "கொலைசெய்தவரைக் கழுவேற்றுவதால் இறந்துபோனவர் உயிர்த்துவிடுவாரா? ஐ.நா. கூறுவதுபோல் மக்கள் மீது ஷெல் அடித்தவர்கள் மீதும், தப்பிவர முனைந்தவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?" என்று கேட்பதன் மூலம், இதை செய்தவர்களை பாதுகாக்க செய்கின்ற அரசியலில் தம்மை மூடிமறைக்க "மிஞ்சியிருப்பவர்கள் தமது வாழ்வைக் கட்டியெழுப்ப ஏதாவது உருப்படியாகச் செய்ய முடிந்தால், அதுவே இப்போது புண்ணிய காரியமாக இருக்கும்." என்று கூறி நிற்கின்றது. இதை அரசிடம் கோராது அரசிடம் சோரம் போன இந்த வக்கற்ற கூட்டம், அரசின் தொடர்ச்சியான இனவொடுக்குமுறையில குளிர்காய்ந்தபடிதான் இதை முன்வைக்கின்றது. இன்னமும் போர்க்குற்றத்தை தொடர்ந்து அரசு செய்தபடியிருக்கின்றது என்பதை, அதன் அச்சில்தான் இந்த மனிதாபிமான அரசியலும் சாணக்கிய அரசியலும் பேசப்படுகின்றது என்பது தான், இதன் பின்னுள்ள அரசியல் உண்மையாகும்.

பி.இரயாகரன்

27.04.2011

Last Updated on Wednesday, 27 April 2011 08:23