பி.இரயாகரன் - சமர்

சொந்த மக்களைக் கொன்றதை சரி என்று கூறி, மக்களை அதற்காக போராடக் கோருகின்றது இலங்கை அரசு. நாங்கள் கொன்றது தமிழ் மக்களைத்தான், ஆகவே சிங்கள மக்கள் இனரீதியாக எமக்கு ஆதரவு தர வேண்டும் என்கின்றது இந்த பேரினவாத அரசு. மேற்கு மற்றும் ஐ.நா முதலானவை, தங்கள் உலக ஒழுங்கிற்கு ஏற்ப தலையிட்டு ஆதிக்கம் செய்யும் பொதுப் போக்கை, அரசு எதிர்நிலையில் முன்னிறுத்தி தன்னை தற்காக்க முனைகின்றது.

இங்கு இலங்கை அரசின் போர்க்குற்றத்தை முன்வைத்து அதற்கான சுதந்திரமான விசாரணையை கோரியபடி மேற்கு தலையீட்டை எதிர்த்தும் எந்த (சிங்கள) எதிர்க்கட்சியும் போராடவில்லை. அதே போல் மேற்கு தலையீட்டை எதிர்த்தபடி சுதந்திரமான விசாரணையைக் கோரி எந்த தமிழ் தேசியமும் போராடவில்லை.

 

 

படுபிற்போக்கான சிங்கள தமிழ் இனவாதம் தான், ஏகாதிபத்திய எதிர்ப்பும் சார்பும் கொண்ட அரசியலாக மாறி நிற்கின்றது. இது இனப் படுகொலை மீதான சுயதீனமாக விசாரணைக்கு எதிரானதாக மாறி, குறுகி அதை மூடிமறைக்கின்றது.

இந்த வகையில் இம் முறை இலங்கை தொழிலாளர் தினத்தை, இலங்கை அரசு இனவாத எழுச்சிக்குரிய ஒரு போராட்டத் தினமாக அறிவித்துள்ளது. அதுவும் "ஏகாதிபத்திய எதிர்ப்பு" உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்ட, இனவாதம் சார்ந்த அரசியல் அறைகூவலை அது விடுத்துள்ளது.

பேரினவாதம் சார்ந்து ஐ.நா செயலாளர் பான் கீ முனின் அறிக்கையை எதிர்ப்பதா? அல்லது தொழிலாளர் உணர்வு பெற்று ஏகாதித்திபத்திய நலன் சார்ந்த இலங்கைப் பொருளாதாரக் கொள்கையை எதிர்ப்பதா? என்பதை தெரிவு செய்யும்படி பேரினவாத அரசு தொழிலாளர் உணர்வுக்கு சவால் விடுத்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு தொழிற்சங்கமும், அரசின் கூட்டாளிக் கட்சிகளும் சங்கடத்தில் நெளிகின்றது. அரசு தன் பலத்தை உலகுக்கு காட்டவுள்ளதாக தொழிலாளர் சார்பாக சவால் விட்டுள்ளது. நாட்டுக்காக மின்சாரக் கதிரையிலும் மரணிக்கத் தயார் என்று மகிந்த அறிவித்து உள்ளார்.

இனவாத வலை இலங்கை மக்கள் மேல் ஏகாதிபத்திய எல்லை வரை ஆழ அகலத்துக்கு, இலங்கை அரசால் வீசப்பட்டுள்ளது. இந்த இனவாதத்தில் இருந்து தப்பிச்செல்ல முடியாத வண்ணம், உலக வங்கிக்கு பின்னால் இலங்கை அரசு தொழிலாளர் வர்க்கத்தை அழைத்துச் செல்ல முனைகின்றது. அண்மையில்தான் உலக வங்கியின் திட்டத்திற்கு அமைவாக, ஒய்வூதிய திட்டத்தை இலங்கை அரசு தொழிலாளிக்கு எதிராக கொண்டு வந்ததுள்ளது. இதை எதிர்த்து மே தின அறைகூவலை தொழிற்சங்கங்கள் விட்டிருந்த நிலையில், மகாவம்சம் வழிவந்த மகிந்தா இனவாத அறைகூவலை விடுத்துள்ளார்.

இலங்கையை மேற்கு மூலதனத்திற்கு அடிமையாக்க உலகவங்கி வழங்கும் கடனை இரட்டிபாக்கும் செய்தியும், ஐ.நா செயலாளர் பான் கீ முனின் போர்க்குற்ற அறிக்கையும் அடுத்தடுத்து வருகின்றது. ஒரு நாணயத்தின் இருபக்கம். ஒன்றை ஆதரிக்கும் அரசு, மற்றதை எதிர்க்கின்றது. இதற்குள் தான், இந்த இனவாத அரசியல் முன்தள்ளப்படுகின்றது.

இந்த வகையில் ஐ.நா செயலாளர் பான் கீ முனின் அறிக்கை என்பது, இந்த ஏகாதிபத்திய உலக ஓழுங்கில் இலங்கையை ஓழுங்குபடுத்தல் தான். இனவழிப்பு யுத்தத்தின் போதான போர்க்குற்றம் பற்றிய குற்றச்சாட்டுகளும், மறுப்புகளும்; இதற்குள் தான் முன்வைக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் விசாரணைகள், அறிக்கைகள் என்று கூறி, பான் கீ முனும் மகிந்தாவும் மக்களுக்கு ஆப்பு வைக்கின்றனர்.

இந்தவகையில் மனித அக்கறையின்பால், போர்க்குற்றம் தொடர்பாக எதையும் யாரும் முன்னிறுத்தி முன்நகர்த்தவில்லை. அதேபோல் இதற்கு எதிரான உண்மையான போராட்டங்கள், மற்றும் அழுத்தங்கள் என எதையும் உலகம் சந்திக்கவில்லை. அதாவது மனிதனுக்கு எதிரான போர்க்குற்றத்ததை, உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்ட அடிப்படையில் இவை யாராலும் முன்வைக்கப்படவில்லை, எழுப்பப்படவில்லை.

சுயநலம் கொண்ட மேற்கு உலகம் முதல் புலத்து புலி வியாபாரிகள் வரை, இந்தப் போர்க்குற்றம் பற்றிய அக்கறை என்பது குறுகிய அரசியல் பொருளாதார உள்நோக்கம் கொண்டது. இதனால் இதன் மீதான உண்மையான விசாரணை என்பதற்கு பதில், அவை சுயநலன்களை அடையும் குறுகிய எல்லைக்கு உட்பட்டதாக காணப்படுகின்றது.

எந்த எதிர்கட்சிக்கும் சொந்த நாட்டு மக்களை கொன்றதையிட்டு எந்த அக்கறையும் கிடையாது. இடதுசாரியம் பேசும் ஜே.வி.பி உட்பட, அனைவரும் இனவாதம் தான் பேசுகின்றனர். சண்டை செய்த புலி - இராணுவம் பற்றியதல்ல, யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியது இந்த விவகாரம். இந்தக் குற்றத்தை செய்த இராணுவத்தை (மகிந்த குடும்பம் உட்பட) பாதுகாக்க வேண்டும் என்று கூறி, எதிர்க்கட்சி அரசியல் இனவாத சேற்றில் மூழ்கி எழுகின்றது. இந்தப் போர்க்குற்ற சலசலப்புகளின் பின்னணியில், பேரினவாதம் எதிர்க்கட்சிகளை தன்பின்னால் அணிதிரட்டி தனது பாசிச குடும்ப சர்வாதிகாரத்தை பலப்படுத்துகின்றது. பேரினவாதம் சிங்கள தேசியத்தை முன்னிறுத்தி, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக தன்பின்னால் அணிதிரட்டிக் கொள்கின்றது.

இதன் பின்னணியில் இலங்கை தொழிலாளர் வர்க்கத்தை தன்பின் அணி திரட்ட முனைகின்றது. ஐ.நா செயலாளர் பான் கீ மூன் அறிக்கையை எதிர்க்க, மே 1 தொழிலாளர் தினத்தை தெரிவு செய்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களை இனவாதத்தில் புதைக்கவும், தொழிலாளார் கோரிக்கைகளை இல்லாதாக்கவும் மிகத் திட்டமிட்ட வகையில் அரசு அறை கூவியுள்ளது.

உலக வங்கியின் கட்டளைகளை ஏற்று தொழிலாளிக்கு எதிராக ஓய்வ+திய சட்டங்கள் முதல் அனைத்ததையும் இந்த அரசு தான் திணிக்கின்றது. இதை எதிர்க்கின்ற தொழிலாளி வர்க்கத்தை தனக்கு ஆதரவாக இனவாத சேற்றில் தள்ளிவிட, ஐ.நா செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை மூலம் அரசு முயற்சிக்கின்றது.

இந்த மே தினம், இனவாதமா! அல்லது தொழிலாளர் உரிமையை முன்னிறுத்தி இனவாதத்துக்கு எதிராக போராடுவதா! என்ற சவாலை அடிப்படையாக கொண்ட, விவாதத்தையும் போராட்டத்தையும் மகிந்த அரசு தொடக்கி வைத்துள்ளது.

இதுவரை காலமும் பேரினவாதம் கொண்ட ஒரு முகமாக சிங்கள மக்களை அடையாளப்படுத்திய போக்கை, இந்த மே தினம் தகர்க்குமா என்பதை பொறுத்துதான் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்குகள் எதிரும் புதிருமாக வெளிப்படும்;.

முதலாளிக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் போலித்தனங்கள், அரசுடன் நிற்கின்ற அதன் அரசியல் தலைமைகள் முதல் இனவாதத்தை அரசியலாக கொண்ட ஜே.வி.பி. வரை, அரசியல் ரீதியாக இன்று நெருக்கடியை எதிர்கொள்கின்றது.

குறுகிய இனவாதம் சார்ந்து மேற்கை எதிர்ப்பதா அல்லது தொழிலாளர் உணர்வை சார்ந்து இலங்கை அரசையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பதா என்ற கேள்வியை இன்று அது எழுப்பியிருக்கின்றது.

 

பி.இரயாகரன்

19.04.2011