10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்களின் எதிரிகள் வருகிறார்கள்

வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியதாம் என்பது தான் ஞாபகத்திற்கு வருகின்றது இனியொரு இனையத் தளத்தைப் பார்க்கும் போது. மீண்டும் கள்வர் கூட்டம், மீண்டும் சதிகளின் ஆரம்பம், மீண்டும் மக்களை மந்தைகளாக நினைக்கும் கூட்டம். சுயநலவாதிகளின் கூட்டம். மீண்டும் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளின் கூட்டம். எல்லாம் ஒன்று சேர்கின்றன. இதை விளம்பரப்படுத்தும் இணையம் தான் இனியொரு. இனியொரு பற்றி இங்கு கவனத்தை செலுத்திவதிலும் விட இதில் வெளியாகிய நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையைப் பற்றி பார்ப்பதே இங்கு பிரதான நோக்கமாகும்.

 

 

இலண்டன் நகரில் புதிய திசைகள் அமைப்பால் கூட்டம் 10.04.2011 அன்று நடாத்தப்பட்டது இதில் கலந்து கொண்டு தமது கருத்தை தெரிவித்தவர்கள்

1. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி :- தயாபரன்

2. உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி :- இதயச்சந்திரன்

3. பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி :-சிவராஜன்- ஸ்கந்தா

4. இனியொரு ஆசிரியர், புதிய திசைகள் அமைப்பின் பிரதிநிதி : சபா நாவலன்

5. புதிய திசைகள் அமைப்பின் பிரதிநிதி :- மாசில் பாலன்

6. ஈ.என்.டி.எல்.எவ், ரீ.பி.சி யின் பிரதிநிதி :- ராம்ராஜ்

இவர்களின் அரசியல் பின்புலம் மற்றும் இவர்களின் அமைப்புகளின் செயற்பாடுகள் போன்றவற்றை நாம் இன்று கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசைப் பற்றி பார்ப்போமானால் இவர்களிடையே பிரதமர், வெளியுறவு அமைச்சர், …. என பல அமைச்சுக்களை உருவாக்கி நாம் அரசு ஒன்றை உருவாக்கிவிட்டோம் என மக்களை ஏமாற்றப் புறப்பட்டுள்ளனர். ஆங்காங்கோ உலகமெங்கும் பாராளுமன்றங்களில் எதிர்கட்சியினருக்கிடையே கைலப்புகள் எற்படுவது வழக்கம.; ஆனால் இந்த நாடுகடந்த தமிழீழ அரச சபையினுள் தற்போதே சண்டை ஆரம்பித்து விட்டது. இது ஒரு கட்டிடத்திற்குள் நடந்திருந்தால் நல்ல காட்சிகளைக் கண்டிருக்கலாம். நாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம் வகிக்கும் நபர்களுக்கிடையே ஒற்றுமை என்பது கிடையாது. இவர்களிடையே கருத்து முரண்பாடாம். என்ன கருத்து முரண்பாடு என்றால் அவை வெளியில் தெரியத் தேவையில்லை என்கின்றனர். இவர்களிடையேயான கருத்து முரண்பாடு என்பது பங்கிடப்படும் பணத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு என்ற பதத்தினால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். கே.பி இலங்கை அரசுடன் ஒன்றாக இணைந்து செயற்படும் ஒரு நபர். அவர் தமிழீழம் என்ற பதத்தை கைவிட்டு அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை சிங்கள பேரினவாதிகள் மறுதலிப்பதற்கு துணைபோகும் ஒரு பேர் வழி. அதனால் கே.பி.யை துரோகி என்று கூறும் பலர் நாடுகடந்த தமிழீழத்தின் அடிவருடியான உருத்திரகுமார் கே.பி.யின் ஆள் என்பதை பார்க்க மறுக்கின்றனர். மறைமுகமாக கே.பி.யுடன் இணைந்து இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசு வெளிச்சத்தில் தாம் தமிழீழம் பெற்றுத் தரப்போகின்றோம் என்று பூச்சாண்டி காட்டியபடி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் பிறநாட்டு உளவு ஸ்தாபனங்களுடன் கூடி நின்று செயற்பட்ட பலரும் இன்று இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள்.

உலகத்தமிழர் பேரவையினருக்கு, இவர்களுக்கு என்று ஒரு வேலைத்திட்டம் கொள்கை இல்லையாம். அப்படியிருக்க உலகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் கூறும் தமது நடவடிக்கைகளை பார்ப்போமாயின் ஜ.எம்.எவ் உலகவங்கி போன்ற உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மையங்கள் இலங்கையில் பொருளாதாரத் தடை ஏற்படுத்தும் பட்சத்தில் ஒரு புரட்சி வெடிக்கும் என்பதாலேயே அவை இலங்கை அரசுக்கு உதவுகின்றன என்ற மாபெரும் கண்டுபிடிப்பை முதல் முதல் கண்டுபிடித்துள்ளனர் உலகத் தமிழர் பேரவையினர். ஜ.எம்.எவ் உலகவங்கி போன்றவற்றின் அடிப்படை நோக்கமே அது தான் என்பது தெரிந்த விடையம்.

இது இலங்கைக்கு மட்டும் அல்ல இந்தியா பாக்கிஸ்தான் …. போன்ற பல நாடுகளுக்கும் தான். அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் உழைக்கும் மக்களால் புரடசி ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் தமது கட்டுப்பாட்டில் உலகை ஆள்வதற்காகவுமே கடன் உதவிகளை வழங்கி வருகின்றனர். இதை தமது வேலைகளில் ஒன்றாகப் புகழ்ந்த உலகத் தமிழர் பேரவையினர் அடுத்து ஒரு சில ஜரோப்பிய அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுத்து வருகின்றன என்பதையும் முதன் முதல் இவர்கள் தான் கண்டுபிடித்துள்ளனர். என்ன பேச்சு? என்ன கண்டுபிடிப்பு? இதற்கு நோபல் பரிசு தான் பாக்கி. யுத்தம் நடக்கும் போது ஜரோப்பாவின் தெருக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டம் வீறாப்பாய் இருந்தது எனலாம். அதைக் கண்டும் காணாதது போல் இருந்த இந்த நாடுகள் தமது நலன் சார்ந்து தான் எதனையும் தீர்மானிக்கின்றன என்பதை எவரும் விளங்கிக் கொள்ள முடியும். தமிழ் ஈழத்தில் எண்ணெய் இருந்திருத்தால் அதை இலங்கை அரசு சீனாவிற்கு விற்றிருந்தால் இந்த ஜரோப்பிய நாடுகள் தமது நலன் சார்ந்து தமிழீழம் மலரச் செய்திருக்கும். இது எவரும் அறிந்ததே. இதை தமது வேலைகளில் ஒன்றாக காட்டமுனையும் இந்த அமைப்பு இவர்களின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தது பற்றிய விபரத்தையும் அதன் உள்நோக்கத்தையும் அதில் கூறவில்லையே? ஏன் என்றால் சோனியாவை மாதாவாக வழிபடும் இவர்கள் புலியின் அழிவிற்கு மாதாவும் ஒரு முக்கிய காரணியாக இருந்ததனை மறைக்க வேண்டுமல்லவா?

பிரித்தானிய தமிழர் பேரவையினரின் பிரதிநிதியின் பேச்சு பின்வருமாறு அமைந்தது. தங்களது வேலைத்திட்டத்தில் பிரித்தானியாவின் மூன்று கட்சிகளிலும் தாம் தமது நபர்களை இணைத்துள்ளதாகவும் அவர்கள் தமிழ் மக்களுக்கான செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினையை தமிழ் மக்கள் அல்லாதவர்கள் மூலம் தீர்க்க முயலும் செயற்பாடு இது. இன்றுவரை மக்களிடம் இருந்து அறவிட்ட பணத்திற்கு கணக்கு கூறாத இவர்கள் இன்று மீண்டும் மக்களை ஏமாற்ற புதுக்கதைகளை கூறிக் கொண்டு புறப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் புலியின் பினாமியாக இயங்கிய பல அமைப்புகள் இன்று எங்கு என்றே தெரியவில்லை. இதற்கு நல்ல உதாரணம் ஒன்று உள்ளது புலிகள் அழியும்வரை ஈழத் தமிழ் மக்களின் உதவிக்காக பணம் சேகரித்த வெண்புறா அமைப்பு. இன்று எங்கே போனது? அதன் நிறுவனரும் முக்கிய புள்ளியுமான மூர்த்தி மக்களிடம் பெற்ற பணத்திற்கு கணக்கு காட்டினாரா? அல்லது கொடுத்த மக்கள்; தான் கேட்டார்களா? இல்லை அவ்வளவு பணமும் என்ன ஆயிற்று என்ற கேள்வியை பணம் கொடுத்த மக்கள் கேட்காமல் இருப்பதால் தான் இன்று இவர்கள் மீண்டும் துளிர்விட முடிகிறது. வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வணங்கா மண் கப்பலுக்கும் வைத்திய உதவிக்கும் என ஒரு சிலர் பணம் வாங்கினரே அந்தப் பணம் என்ன ஆயிற்று? எவருக்காவது தெரியுமா? நிச்சயமாக அது வன்னிக்கு அனுப்பப்படவில்லை என்பது உறுதி. ஆனால் இவர்கள் எல்லோரிடமும் பணம் எங்கு என்று கேட்டால் அது எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்து விட்டது என்ற மகத்தான பொய்யை கூறுகின்றனர். இவர்களின் இக்கூற்றை நம்மில் பலர் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றோம். எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்து விட்டது என்றவுடன் நாம் நினைப்பது புலிகளின் தலைமைக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று. அது தான் இல்லை. மாறாக தமது சுயலாபத்திற்கு பாவிக்கப்பட்டு விட்டது என்பதை தான் அவர்கள் கூறுகின்றனர் என்பதை கவனத்தில் கொள்வதில்லை.

புதிய திசைகளின் அங்கத்தவர்களான நாவலனும் மாசில் பாலனும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதில் மாசில் பாலன் நடந்த யுத்தம் தேசிய விடுதலைக்கான யுத்தமா என்று சந்தேகம் இருப்பதாக கருத்துரைத்துள்ளார். இந்த சந்தேகத்திற்கு என்ன காரணம் என்பதை அங்கு அவர் குறிப்பிடவி;ல்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பாசிசமாக மாற்றி அழித்தொழித்த அமைப்புக்களுடன் சேர்ந்து கூட்டம் வைத்தபடி அவர்கள் மேல் எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்காது அவர்களை தமது நட்புசக்திகளாக கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயற்படத் துடிக்கும் இவர்கள் இந்தக் கேள்வியை கேட்பதற்கு என்ன அர்த்தமென்று புரியவேயில்லை.. புலிகளை “தேசிய சக்தியாக” அங்கீகரித்த தமிழீழ மக்கள் கட்சியில் முன்னர் உறுப்பினர்களாக இந்த புதிய திசைகள் அங்கத்தவர்கள் மீண்டும் புலிகள் நடத்திய யுத்தத்தை தேசிய விடுதலை யுத்தமா? என்று கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியதே. இனியொரு ஆசிரியரும் புதிய திசைகள் உறுப்பினருமான நாவலன் தனது இணையத்தில் இந்த அமைப்புகளுக்கு எதிரான பல கட்டுரைகளை வெளியிட்டு மக்கள் முன் இவர்களை விமர்சிப்பவர் போன்ற ஒரு வேடத்தை தனக்காக்கிக் கொண்டபோதும் இன்று யார் யாரை விமர்சித்தாரோ அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து கூட்டம் போட்டுள்ளதுடன் மட்டுமன்றி பொது வேலைத்திட்டமொன்றில் இணைந்து இயங்குவது பற்றியும் பேசியுள்ளார். இவரது இரட்டை வேட அரசியல் பல நாட்களாகவே குறிப்பாக மே 2009 இற்கு பின்னர் மிகவும் திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது. இணையத் தளத்தில் ஏகாதியத்திய எதிர்ப்பு, புலி எதிர்ப்பு சிறிலங்கா அரச எதிர்ப்பு, உலகப் புரட்சிகர அமைப்புக்களுடனும,; இலங்கையில் இருக்கின்ற புரட்சிகர கட்சிகளுடன் உறவு என கதை விட்டுக் கொண்டு நடைமுறையில் கடந்தகாலத்தில் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் விரோதிகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்த - குறிப்பாக இந்திய “றோ” உளவு நிறுவனத்துடன் சேர்ந்தியங்கிய நபர்களுடனும் புலிகளை முள்ளிவாய்க்கால் வரை கூட்டி வந்து அழித்த மேலத்தேய நாட்டு அரசுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைய இயங்கிய புலிப் பினாமி அமைப்புக்களுடனும் மிக இறுக்கமான நல்ல உறவினையே பேணிவந்து கொண்டிருக்கின்றார். குறிப்பாக ஜீரிவி; கலந்துரையாடலகள்; பீரீஎவ்வுடன் இணைந்து நடத்திய கூட்டங்கள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றின் ஊடாக தன்னை யார் என வெளிக்காட்டியுள்ளார்.

இந்தப் புதிய திசைகள் அமைப்பினர் எலும்பில்லா நாக்கால் ஒன்றை கூறிக்கொண்டு செயற்பாட்டளவில் வேறொன்றைச் செய்து வருகின்றனர். இவர்கள் தம்மை முற்போக்காகவும் தம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவம் காட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெற்று வாசகமே இவர்களது போலி மார்க்சியம். மார்க்சியத்துக்கு எதிரானவர்களுடனும் தமிழினத்தை காட்டிக் கொடுத்தவர்களுடனும் ஒன்று சேர்ந்து போலிக்கு மார்க்சியம் கதைத்தபடி கூட்டங்களை நடத்தும் புதியதிசைகள் அமைப்பு தனது உண்மையான முகத்தை தற்போது மக்கள் முன் காட்டியுள்ளது..

ஈ.என்.டி.எல்.எவ் இன் பிரதிநிதி ராம்ராஜ் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்தியாவின் உதவியுடன் அமுல்படுத்துவது பற்றி கருத்துக் கூறியுள்ளார். முதலின் இந்த ஈ.என்.டி.எல்.எவ் என்ற அமைப்பு இந்தியாவின் உளவு ஸ்தாபனமான றோவின் கைப்பொம்மை என்பதை எல்லோரும் அறிவார்கள். இன அழிப்பை முன்னின்று நிகழ்த்திய இந்த உளவு ஸ்தாபனத்தின் தலையாட்டிப் பொம்மைகளே இவர்கள். எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் தனையும் கணக்கில் எடுக்காது இந்தியாவின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த கோருவதன் மூலம் மாறுவேடத்தில் உள் நுழைந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் கதைத்த அனைவரும் உண்மையில் பரந்துபட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தி அந்த மக்களைச் சார்ந்து போராடியவர்கள் அல்லர். மாறாக மக்களின் எதிரிகள். இவர்கள் இந்தப் போராட்டத்தை அழித்தொழித்த அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் விரோதிகளுடன் தமது சொந்த அற்ப நலன்களிற்காக கூட்டுச் சேர்ந்து போராட்டத்தினை சரியான பாதையினை நோக்கி செல்வதனை சீரழித்ததுடன் தேசத்திலிருந்த மக்களை நம்பாது இவர்களையும் இவர்கள் வாங்கி அனுப்பிய சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் நம்பிய தலைவனையும் அவனது தளபதிகள் போராளிகளையும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் முள்ளிவாய்க்கால் வரை உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம் என நம்ப வைத்து கூட்டி வந்து கொலைக் களம் அனுப்பி வைத்த தேசபக்தர்கள் அல்லவா. இவர்கள் எல்லோரும் கூடி மீண்டும் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போகிறார்களாம். என்ன கொடுமை இது சரவணன் சார்!.

புலியின் தோல்வியின் பின்னர் இந்த மக்கள் விரோத சக்திகள் அனைத்தும் ஒரு மேடையில் சந்திக்கின்றன என்றால் இவர்கள் மக்களை இன்னொரு முறை அழிவிற்கு இட்டுச் செல்ல தயாராகின்றனர் என்றே அர்த்தம்.

எனவே மக்களே இந்த புல்லுருவிகளை இணங்காணுங்கள். இவர்கள் தான் மக்களது போராட்டத்தை அழிக்க சிறிலங்கா அரசிற்கும் ஏனைய ஆதிக்க வல்லரசுகளிற்கும் உறுதுணையாக கூடியிருந்து செயற்பட்ட புல்லுருவிகள். எனவே மக்களது போராட்டத்தை முளையிலேயே நசுக்க எதிரிகளிற்கு துணைபுரியக் கூடிய இந்தச் சக்திகளை இனங்கண்டு கொள்வது தான் எமது இன்றைய முதற் பணியாகும்..

 

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்