அமைதி சமாதான வழிகளில், எதிரியின் சொந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு புரட்சி நடந்துள்ளது. எதிரி வர்க்கமோ, தனது அதிகாரம் சொத்துடமை பண்பாட்டு மூலம் புரட்சியைச் சுற்றி வளைத்து நிற்கின்றது. ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளும், பார்ப்பனிய சாதிய இந்துத்துவமும் இந்தப் புரட்சிக்கு எதிராக, தமது சதிகளையும், எதிர்த்தாக்குதலையும் தொடங்கியுள்ளது
இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் தனது வர்க்க அதிகாரத்தை, உலகின் உச்சியில் நிறுவியுள்ளது. இமயத்தின் உச்சியில் செங்கொடி பறக்க, வர்க்கப் போராட்டம் என்ற பதாகை உலகப் புரட்சிக்கு அழைக்கின்றது. ஆம், மீண்டும் உலகைக் குலுக்க உள்ள பாட்டாளி வர்க்கப் போராட்டமும், புரட்சியும் தொடங்கியுள்ளது. மார்க்கசியத்தையும் பாட்டாளி வர்க்கத்தையும் கல்லறைக்கு அனுப்பிவிட்டதாக கூறி கெக்கலித்த முதலாளித்துவம் முன், மீண்டும் மக்கள் அதை தமது சொந்த புரட்சிகர வழிகளில் உயர்த்தி நிற்கின்றனர்.
இந்தப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயக சட்ட வழிகளில், அதன் சமாதான வேஷங்களின் ஊடாக தொடங்கியுள்ளது. இதற்கு தலைமை தாங்கிய பாட்டாளி வர்க்கம் தனது அயுதத்தை முடக்கி எதிரியின் கண்காணிப்பில் அதை வைத்தவர்கள், இன்று எதிரியின் படைக்கும் சேர்த்து தலைமை தாங்கும் புரட்சிகர அற்புதத்தை நடத்தியுள்ளனர்.
அன்று மாவோ சீனாவில் யப்பானுக்கு எதிரான யுத்தத்தின் போது, தனது படைத் தலைமையை கலைத்ததுடன், படையையும் படை நகர்வையும் கூட எதிரியின் தலைமைக்கு கீழ் இட்டுச் சென்றதன் மூலம், எதிரியையே எதிரியின் படையுடன் வீழ்த்தி புரட்சியை வழி நடத்தியது வரலாறு. அதையே மீண்டும் நேபாளத்தில், மாவோயிஸ்ட்டுகள் செய்து காட்டியுள்ளனர். எஞ்சியிருப்பது தொடரவுள்ள வர்க்கப் போராட்டம். எதிரியாக அறியப்பட்டவர்கள், ஒழிக்கப்படவேயில்லை. எதிரியால் சூழப்பட்டுள்ள, புதிய நிலை உருவாகியுள்ளது.
வர்க்கப் போராட்டத்துக்கான ஆயுதப் போராட்டம் வெற்றிபெறுவதை தடுக்க, ஏகாதிபத்தியங்கள் நடத்திய நாடகம் அமைதி சமாதானம். பாட்டாளி வர்க்கம் இந்த சதியை தனக்கு சார்பாக பயன்படுத்தியதன் மூலம், எதிரியின் அணிகளை புரட்சிக்கு சார்பாக மாற்றியதன் மூலம், அவர்களின் வர்க்க நலனைப் பூர்த்திசெய்யும் தேர்தலில் வென்று, எதிரியை தனிமைப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை, முதலாளித்துவ சட்ட வரையறை மூலம் கொண்டு வந்துள்ளனர்.
இது தனக்கென்று ஒரு பாட்டாளி வர்க்கப் படையை கொண்டுள்ளது. உறுதியான வர்க்கத் தலைமையும், கட்சி ஊழியர்களையும், பரந்து விரிந்த உணர்வுப+ர்வமான மக்களையும் ஆதாரமாக கொண்டுள்ளது. சர்வதேச ரீதியாக, புரட்சிகர பிரிவுகளின் ஆதாரத்தையும் கொண்டுள்ளது.
உலகில் தேவையுடன் இணைந்துள்ள புரட்சி
இது நேபாள மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கு தேவையான, ஓரு புரட்சிகரமான காலகட்டத்தில் நடந்துள்ளது. உலக நெருக்கடிகள் அதிகரித்துள்ள, மிகப் பொருத்தமான புரட்சிகரமான சூழலில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வருகின்றது.
ஏகாதிபத்தியம் இன்று உடனடியாக, மீள முடியாததுமான, இரு பிரதான நெருக்கடிகளை எதிர் கொள்ளவுள்ளது. இந்த வகையில் 1. உணவு நெருக்கடி 2. நிதி நெருக்கடி
இது உலகை உலுக்கவும், ஏகாதிபத்திய அமைப்பையும் ஆட்டங்காண வைக்கவுள்ளது. இந்த நிலையில் அதை வழிகாட்டக் கூடிய நேபாளத்தின் புரட்சி, மூன்றாவதாக அதிபயங்கரமான நெருக்கடியாக மாறவுள்ளது.
உலகம் தளுவிய உணவு நெருக்கடி
மூன்றாம் உலகம் முதல் ஏகாதிபத்தியம் வரை இது பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், ஏற்றுமதித் தடைகள், உணவுக் கலகங்கள் என, ஒன்றுபட்ட உலகச் சந்தை என்ற உலகமயமாதல் கட்டுக்கோப்பையே அதிரவைக்கின்றது.
ஏகாதிபத்தியங்களால் வழிநடத்தப்பட்ட, உலகமயமாதல் விவசாயத்தின் விளைவு இது. நாட்டினதும் மக்களினதும் சுயசார்பை அழித்து, சுய உற்பத்தியை அழித்து, அனைத்தையும் தனதாக்கி, விவசாயத்தை சந்தை பொருளாதாரமயமாக்கியதன் மொத்த விளைவு இது.
இப்படி விவசாயம் அழிக்கப்பட்டுவிட்டது. பஞ்சமும் பட்டினியும் உலகம் தளுவிய ஒன்றாக, ஏகாதிபத்தியத்தின் சொந்த விளையாட்டாக மாற்றிவிட்டது. விவசாய உற்பத்திகள் போதுமான அளவுக்கு உற்பத்திசெய்ய முடியாத அளவுக்கு, சந்தையில் அவை அருகிவிட்டது. இந்த நிலமை
1. உற்பத்தியைக் கட்டுப்படுத்தி மனித இனத்தை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய நவீன கொள்கையால் உருவாகியுள்ளது.
2. நுகர்வை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியால் ஏற்பட்ட, சுற்றுச்சூழல் சிதைவால் நிகழ்ந்துள்ளது.
3. மாற்று எரிபொருளாக விவசாயத்தை பலியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளது.
4. கடன் கொள்கைக்கு ஏற்ற ஏற்றுமதி விவசாயம் என்று, நஞ்சிடப்பட்டு அழிக்கப்பட்டது.
5. எண்ணையை ஆயுதமாகக் கொண்டு, உலகை அடிமைப்படுத்தும் ஆக்கிரமிப்பால் நடந்துள்ளது.
உலகம் தளுவிய நிதி நெருக்கடி
இனியும் இதை பொத்தி வைக்க முடியாது உலகமே திவாலாகிவிட்டது. இந்த அபாயம் எப்போது, எங்கு எப்படி வெடிக்கும் என, உலக பொருளாதாரம் எதிர் கொள்கின்றது. இப்படி உலகமயமாதலின் கழுத்தின் மேலேயே சொந்தத் தூக்குக் கயிறு தொங்குகின்றது.
மக்களின் சேமிப்பு நிதியங்கள், காப்புறுதி நிதியங்கள், ஒய்வ+திய நிதியங்கள் எல்லாவற்றையும் வரைமுறையின்றி கையாண்ட வங்கிகள், அதை எல்லாம் பல வழிகளில் சிலரிடம் இழந்துள்ளனர். இந்தப் பணத்தை திருப்பிக்கொடுக்கும் நிலையில் உலக வங்கிகளிடம் நிதியில்லை. சுழற்சி முறையிலான பண ஒட்டத்தைக் கொண்டு, தனது போலித்தனத்தை இனியும் காப்பற்ற முடியாது, வங்கிகளின் திவால் அறிவிக்கப்படுகின்றது.
இந்தப் பணம் எங்கே போனது? உலகில் ஆயிரக்கணக்கில் 100 கோடி டொலருக்கு மேல் சொத்துச் சேர்த்துள்ள திடீர் பணக்காரக் கும்பல்களின் வரிசையில் உள்ளோரின் கைகளில் அவை குவிந்துவிட்டது.
இதற்காக ஏகாதிபத்தியம் செய்த சதி, நுகர்வு வேட்கையை அதிகப்படுத்தியது தான். கடனைக் கொடுத்து நுகரப்பண்ணியதன் மூலம், பணத்தை சிலர் அபகரித்துக் கொள்ள உதவினர். வீட்டுக் கடன் முதல் சாதாரண நுகர்வு வரை கொடுத்து, வங்கியில் இருந்த பணத்தைச் சிலர் சுருட்டிக்கொண்டனர். இதன் மூலம் அவர்கள் உலகையே அடிமாட்டு விலைக்கு அடிமை கொள்கின்றனர்.
வீட்டுக்கடனை வலிந்து கொடுத்து, வீட்டுக்கு இரண்டு மடங்குக்கு மேலாக விலை அதிகரிப்பை உருவாக்கினர். இப்படி வங்கிப் பணத்தை, மக்களைக் கொண்டு வீட்டுமனை வர்த்தகம் மூலம் சிலர் திருடினர். இன்று வீட்டுச்சொந்தக்காரன் வீட்டுக் கடனை கட்ட முடியாது திணறுகின்றான். வங்கி வீட்டை மீளப்பெறுவதும் அவை விற்க முடியாது சந்தையில் தேங்குவதும் உலகெங்கும் தொடங்கிவிட்டது. வீட்டு விலை சரிந்து வருகின்றது. வீடு மறுபடியும, வீட்டை விற்றவனின் மறு கொள்ளைக்கான சொத்தாகின்றது.
மறுபக்கத்தில் கடன் பெற்று நுகர்ந்தவன் நுகர முடியாத நிலைக்கு கடன் சுமை, வட்டிச் சுமை, வேலையின்மை, குறைந்த சம்பளம் என்ற முதலாளித்துவ நரகலை மிதித்து, தனது வங்கியில் அதை அப்புகின்றான். விளைவு வங்கிக் கடனை கொடுக்க முடியாது, வட்டியை கொடுக்க முடியாது அவன் திவாலாக, வங்கிகள் திவலாகின்றது. வங்கியில் பணம் போட்டவன் திவாலாகின்றான். இப்படி உலக வங்கிகள், பாரிய உலக நெருக்கடிக்குள் மீளமுடியாது சிக்கிவிட்டது.
இதை எதிர்கொள்வது எப்படி?
இதை வழிகாட்டும் ஆற்றல், கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான் உள்ளது. உலக மக்கள் எதிர் கொள்ளவுள்ள நெருக்கடியை, தலைமை தாங்கி மக்களை வழிகாட்ட வேண்டிய சர்வதேச காலகட்டத்தில் நேபாள மாவோயிஸ்ட்டுகள் உள்ளனர். சிரமமான இரண்டு வேறுவேறான, ஆனால் ஒன்றான பணிகள் அவர்கள் முன் உள்ளது.
கம்யூனிஸ்டுகளின் இந்த புரட்சிகரமான சர்வதேச பணிதான், ஏகாதிபத்தியம் எதிர் கொள்ளவுள்ள புதிய சர்வதேச நெருக்கடி. மீண்டும் கம்யூனிசம் என்ற அச்சத்தையும், பீதியையும் அது எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
மக்கள் அடிமையாக, மூலதனத்துக்கு அடிமைப்பட்டு, மனித சுயத்தை இழந்து வாழமுடியாது. வெறும் நுகர்வு என்ற வக்கிர உணர்வால், மனித இனத்தை யாரும் வழிகாட்ட முடியாது. மனிதனாக வாழ, கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் வழிகாட்டுகின்றனர். இது தான் மாற்று வழி.
வர்க்கப் போராட்டமும், சர்வதேச புரட்சிப் பணியும்
இந்த வகையில் மாவோயிஸ்ட்டுகள் தொடங்கவுள்ள வர்க்கப் போராட்டம் மிகக் கடுமையானது. சொந்த நாட்டில் எதிரியுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டிய தேவையும், அதேநேரம் ஒழித்துக்கட்ட வேண்டிய பணியும் அவர்கள் முன்னுள்ளது. ஜனநாயக கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், தரகு முதலாளித்துவத்தையும் நிலபிரபுத்துவத்தையும் ஒழிக்க வேண்டியுள்ளது. பாட்டாளி வர்க்கம், தேசிய முதலாளித்துவ சக்திகளுடன் சேர்ந்து நின்று, இந்த வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் ஆணாதிக்கத்தை ஒழித்தல், பார்ப்பனிய சாதிய அடிப்படையைத் தகர்த்தல், சமூக வேறுபாடுகளை ஒழித்தல் என்று, நீண்ட வாக்கப் பணி அவர்கள் முன் காத்து இருக்கின்றது.
இந்தப் போராட்டத்தை எதிரியுடன் பயணித்தபடி, முள்ளை முள்ளால் எடுக்க வேண்டியுள்ளது. இப்படி ஜனநாயக கடமைகளை நிறைவு செய்யும் புரட்சி, அவர்கள் முன்னுள்ளது.
பலர் கருதுவது போல், வெறும் மன்னர் ஆட்சியை ஒழிப்பதல்ல இது. மன்னரைப் பிரநிதித்துவம் செய்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒழிப்பதாகும். இந்த நிலப்பிரபுத்துவ பார்ப்பனிய சாதிய சமூக கட்டுமானத்தை ஒழிப்பது உள்ளிட்ட, ஒரு முதலாளித்துவப் புரட்சியை பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கி நடத்த வேண்டியுள்ளது.
பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வர்க்க நலனை உயர்த்துவதும், பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்துவதன் மூலமும், மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டியுள்ளது.
ஒரு பண்பாட்டு கலாச்சார புரட்சியை வீச்சாக நடத்துவதும், அதே நேரத்தில் பிற்போக்கை பிரதிநித்ததுவப்படுத்தும் சக்திகளை தனிமைப்படுத்தி அழிக்கவும் வேண்டியுள்ளது. முதலாளித்துவம் கோருகின்ற பாராளுமன்ற சட்டத்தின் ஆட்சியை, முரணற்ற ஜனநாயக சட்டங்கள் மூலம் நிறுவ வேண்டியுள்ளது. அதைக் கொண்டே எதிரியை ஒடுக்க வேண்டும். இந்த சட்டத்தின் உரிமைகளை மக்கள் தம் கைளில் எடுக்கும் வண்ணம், மக்கள் நீதி மன்றங்களை நிறுவ வேண்டும். முதலாளித்துவ பாராளுமன்ற சட்ட அதிகாரத்தை, மக்களிடம் கொடுக்க வேண்டும்.
இந்த முரணற்ற ஜனநாயக ஆட்சிக்கு எதிராக ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்புவாதிகளும், பார்ப்பனியமும் திரைமறைவில் சதிகளையும், அவதூறுகளையும் அடிப்படையாக கொண்டு புரட்சிக்கு எதிராக செயல்படுகின்றனர். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வருவதை தடுப்பதே, அவர்களின் அரசியலாகும்.
அவர்கள் ஆட்பலம், பணப்பலம், பண்பாட்டுப் பலம் என அனைத்தையும் கொண்டு, நேபாள மக்களின் வர்க்கப் புரட்சிக்கு எதிரான நஞ்சிட பல வழிகளில் முனைகின்றனர். இதை எதிர்கொண்வாறே, வர்க்கப் புரட்சியை நடத்தும் பணி அவர்கள் முன்னுள்ளது.
முன்பு எதிரி யார் என்று, தெளிவாக கட்சிக்கும் மக்களுக்கும் தெரிந்தே இருந்தது. இன்று அந்த எதிரியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அவர்களை அழிக்க, மக்களுக்கு எதிரி யார் என்பதையும், எங்கே எந்த வடிவில் உள்ளான் என்பதையும், நடைமுறை மூலம் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. புரட்சிகர வன்முறையை, முதலாளித்துவ சட்ட வழிகளை கையாண்டு செய்யவேண்டியுள்ளது. மக்கள் திரளைக் கொண்டு, சட்டத்தின் ஆட்சியை புரட்சியாக சாதிக்க வேண்டியுள்ளது.
சட்டம் என்பது வெறும் அதிகார வாக்க நிர்வாகிகளைக் கொண்ட, முதலாளித்துவ சட்ட உரிமையாக எதார்த்தத்தில் இருக்கின்து. மாறாக சட்டத்தை பரந்துபட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாக்கி, சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் புரட்சி அவசியமானதாக உள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெறுவதை, இதன் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.
ஏகாதிபத்திய அவதூறுகளையும், முற்றுகைகளையும், தகர்த்தெறியும் வகையில், சர்வதேசம் எங்கும் எழுகின்ற புரட்சிகர உணர்வை உணர்ச்சியை சரியாக அரசியல் மயப்படுத்த வேண்டியுள்ளது. தேசம் அடைந்துள்ள புரட்சிகர எழுச்சிகளையும் உணர்வுகளையும் சரியாக வழிநடத்தவும், ஏன் சர்வதேச புரட்சிக்கு வழிகாட்ட வேண்டிய பணி மாவோயிஸ்டுகளின் முன்னால் நிற்கின்றது.
ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கையாளவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சியை நடத்தவும் வேண்டியுள்ளது. இது அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகும்.
பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்பது, அந்த வர்க்கத்தின் நலனை பாதுகாப்பது தான். நேபாள மாவோயிஸ்ட்டுகளின் அந்த புரட்சிகர பணி வெற்றிபெற, எமது கரங்களையும் அவர்களின் கரங்களுடன் இணைப்போம்.
பி.இரயாகரன்
20.04.2008