Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதன் இன்று உயர்வான வசதிகளைப் பெற்ற சிறந்த சமூக விலங்காக இருக்கிறான். பல்வேறு கண்டுபிடிப்புகள், சிந்தனைகளால் தன் வாழ்வையும் சூழலையும் மேம்படுத்தியிருக்கிறான். தன் ஆளுமையால் மண்ணையும் விண்ணையும் சாடி வியத்தகு சாதனைகள்களை செய்திருக்கிறான். சில லட்சம் ஆண்டுகளாக பூமியில் உலவும் மனிதன் எப்படி தோன்றினான் என்பதில் அறிவியலாளர்களின் கருத்தும் மதவாதிகளின் கருத்தும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை. ஏனென்றால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தான் மனித வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதவாதிகளின் கருத்துகள் பரிசீலனைக்கோ, ஆய்வுக்கோ உட்பட்டதல்ல, அது நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டது என்பதால் அறிவியலாளர்கள் அதை ஏற்பதில்லை. தங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்கிறது என்பதால் அறிவியலாளர்களின் கருத்துகளை மதவாதிகள் ஏற்பதில்லை. ஆனால் உண்மை என்ன?

கடவுள் படைத்த ஒரு மனிதன் அல்லது ஒரு தம்பதியினரிலிருந்து தான் பூமியில் மனித இனம் தோன்றியது எனும் மதவாதிகளின் கூற்றுக்கு எந்தவித ஆதரங்களோ அடிப்படைகளோ; நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லை. அதே நேரம் மனிதன் பரிணாமத்தின் அடிப்படையில் தோன்றியவன் என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் இருக்க முடியாது என்றாலும் நேரடியாக இல்லாத ஏராளமான ஆதாரங்கள் எல்லாத்துறைகளிலும் இருக்கின்றன.

மனிதனின் தோற்றம் குறித்து குரான் என்ன கூறுகிறது? அதற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு? குரானின் கூற்றைக் கொண்டு பரிணாமவியலை மறுக்கமுடியுமா? போன்றவைகளுக்கு கடப்பதற்கு முன்னர் பரிணாமம் குறித்து மதவாதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்துவிடுவது சிறப்பானதாக இருக்கும். எனவே அதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களின் பிறகு தொடரலாம்.
௧) பரிணாமவியல் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையல்ல, அது ஒரு யூகம் தான். கடவுட்கொள்கையை மறுப்பதற்காகத்தான் டார்வினை தூக்கிப்பிடிக்கின்றனரே தவிர அது வெறும் யூகம் தான்.

யூகம் என்பதற்கும் அறிவியல் யூகம் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. வெறுமனே விட்டத்தைப் பார்த்து கற்பனையில் கூறுவதல்ல அறிவியல் யூகம். அதற்கும் சான்றுகள் வேண்டும் அறிவியல் அடிப்படைகள் வேண்டும். அந்தவகையில் டார்வின் பீகிள் கப்பற்பயணத்தில் ஐந்தாண்டுகளாக மனிதன் காலடி படாத தீவுகளிலெல்லாம் சுற்றியலைந்து தொல்லுயிர் எச்சங்களைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன் விளைவாக மனிதனின் தொடக்கம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என யூகித்தது தான் டார்வினின் பரிணாமவியல். இதை வெறுமனே யூகம் என ஒதுக்கிவிட முடியாது.

இன்னொரு விதத்தில், பரிணாமவியலை யூகம் என ஒதுக்கும் மதவாதிகள் அறிவியல் யூகங்களை ஒதுக்குகிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதில். பெருவெடிப்புக் கொள்கையும் அறிவியல் யூகம்தான் ஆனால் அதை மதவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதன் காரணம் என்ன? பெருவெடிப்புக்கொள்கையை குரான் மறுப்பதில்லை என்பதனால் ஏற்றுக்கொள்கிறார்கள். பரிணாமவியலோ குரானுடன், கடவுட் கொள்கையுடன் நேரடியாக மோதுகிறது. அதனால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குரான் ஏற்கிறதா மறுக்கிறதா என்பதுதான் ஒன்றை ஏற்பதா மறுப்பதா என்பதைத் தீர்மானிக்குமேயன்றி அது அறிவியலா யூகமா என்பதல்ல.

௨) குரங்குதான் மனிதனாக மாறியது என்றால் இப்போது ஏன் எந்த குரங்கும் மனிதனாக மாறுவதில்லை?

இது அடிப்படையற்ற கேள்வி. குரங்கு திடீரென மனிதனாக உருமாற்றம் பெற்றது என நினைப்பது பரிணாமவியலை அறியாதவர்களின் நினைப்பு. உயிரினங்கள் பரிணமித்து வெவ்வேறு உயிர்களாக காலப்போக்கில் மாறுகின்றன. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது எளிமை கருதி கூறப்படுவது, மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையிலிருந்து கிளைத்துவந்த இருவேறு உயிரினங்கள் என்பதே சரியானது. மனிதன் தன்னுடைய பரிணாமப் பாதையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்திருக்கிறான். விலங்கு நிலையிலிருந்து மனிதன் எனும் நிலைக்கு வருவதற்கு சற்றேறக்குறைய நான்கு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. நான்கு கோடிக்கும் அதிகமாக ஒரு மனிதனின் வாழ்நாள் இருக்குமானால் ஒருவேளை பரிணாம மாற்றங்களை அவனால் நேரடியாக கண்டிருக்க முடியும். மட்டுமல்லாது பரிணாமம் என்பது யாரேனும் கட்டளையிட்டு நிகழ்வதல்ல, இயற்கைத் தேர்வு முறையில் சூழலுக்கு உட்பட்டு வினைபடுவது. அப்போது நடைபெற்றது இப்போது ஏன் நடைபெறவில்லை என யாரலும் கேள்வி எழுப்ப முடியாது.

௩) குரங்கிலிருந்து மாறிவந்தவன் மனிதன் என்பது உண்மையானால் பரிணாமவியல் தத்துவத்தின்படி மனிதன் ஏன் இப்போது வேறொரு உயிரினாமாக மாறவில்லை. பரிணாமத்தை தடுத்தது யார்?

யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது. பரிணாமத்தின் முக்கியமான காரணியே சூழலால் பாதிக்கப்படுவது. சூழலால் தாக்கப்பட்டு நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் உயிரினங்கள் விரைவாக பரிணமிக்கின்றன. மனிதனைப் பொருத்தவரை தனக்கு ஏற்ப சூழலை மாற்றியமைத்து கொள்ளும் திறனுடன் இருக்கும் உயிரினினம் என்பதால் பரிணாமம் மெதுவாகவே நிகழும். அதேநேரம் மனிதனும் பரிணமித்திருக்கிறான். மூளையைச் சுற்றியிருக்கும் மெல்லிய உறை கடந்த நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் மனிதன் பெற்றிருக்கும் புதிய பரிணாமம். மட்டுமல்லாது மனிதன் தன் முடி, நகங்களை இழந்துவருகிறான்.

௪) களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டவன் மனிதன் எனும் குரனின் கூற்றை அறிவியல் உலகம் மெய்ப்பித்திருக்கும்போது உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்று மாறிவந்தது அதிலிருந்து மனிதன் வந்தான் என டார்வின் தத்துவம் பேசுவது அறிவியலுக்கே முரணானதில்லையா?

பொய்களைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. மனித உடலில் இருக்கும் தனிமங்கள் என 58 வகை தனிமங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறும் குரானின் கூற்றை மெய்ப்படுத்துவதாக கூறமுடியாது. மென்டலீப் எனும் வேதியியலாளர் சுமார் 108 தனிமங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப் பொருளானாலும் அவற்றுக்கு இந்த தனிமங்கள் தான் அடிப்படை. ஆனால் மனித உடலிலிருக்கும் தனிமங்களுக்கு மண்தான் அடிப்படை என மதவாதிகள் திரிக்கிறார்கள். மண் ஒரு பொருள் அந்தப் பொருளுக்கும் மேற்கண்ட தனிமங்களே அடிப்படை என்பது தான் உண்மை.

மனிதன் மட்டுமல்ல உல‌கின் அனைத்துப் பொருட்களும் மேற்கண்ட தனிமங்களினால் ஆனவையே. ஆனால் குரான் மனிதனை மட்டும் சிறப்பாக களிமண்ணினால் படைத்ததாக கூறுகிறது. மனிதன் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்குமே மேற்கண்ட தனிமங்களினால் ஆக்கப்பட்டிருக்க குரான் மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக கூறுவதிலிருந்தே அதற்கும் அறிவியலுக்கும் உள்ள பொருத்தம் எளிதில் விளங்கும்.

மட்டுமல்லாது மனிதன் பூமியிலுள்ள களிமண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. சொர்க்கம் அல்லது வேற்று கிரகத்திலுள்ள ஒருவகை களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதனின் உடலிலுள்ள தனிமங்கள் அனைத்தும் பூமியிலுள்ளவையே. பூமியில் இருக்கும் தனிமங்கள் வேற்று கிரகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றாலும் பூமியில் இல்லாத ஒன்றிரண்டு தனிமங்களாவது மனிதனின் உடலில் இருந்தாக வேண்டுமல்லவா? அப்படி எந்த தனிமமும் இல்லை என்பதிலிருந்தே மனிதன் முழுக்க முழுக்க பூமியின் தயாரிப்பு என்பது உறுதியாகிறது.

௫) பலமான விலங்கே உயிர்வாழும் என்று பரிணாமவியல் கூறுகிறது. பலமான விலங்கான புலியை அரசு தனியாக நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டியுள்ளது, பலவீனமான ஆடு பல்லயிரம் கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா டார்வின் தத்துவம் ஏற்கமுடியாத ஒன்று என்பது?

தகுதியான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும், பலமான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. சூழ்நிலையின் வினைப்பாட்டை தாக்குப்பிடித்து நீடிக்கும் விலங்கே உயிர்வாழும் தகுதியைப் பெறும். டைனோசர்கள் வாழும் காலத்தில் அவற்றைவிட பலசாலியான வேறு விலங்குகள் எதுவும் பூமியில் இல்லை. ஆனால் ஒரு குறுங்கோள் பூமியை தாக்கியபோது அதை தாக்குப்பிடித்து வாழும் வலிமையை பலசாலியான அந்த விலங்குகள் பெற்றிருந்திருக்கவில்லை என்பதால் அவை அழிந்துபோயின. ஆடுகளுடன் ஒப்பிடுகையில் புலிகள் வலிமையானவை தான். ஆனால் மனிதனின் உணவுத்தேவையே ஆடுகளை கோடிகளில் வாழவைத்திருக்கிறது. புலிகளிடம் இவ்வாறான தேவை எதுவும் மனிதனுக்கில்லை. ஒருவேளை புலிகளை மனிதன் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தால் அதும் எண்ணிக்கையில் அதிகம் இருந்திருக்கக் கூடும். அதேநேரம் ஆடுகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வெள்ளாடு, செம்மறியாடு எனும் இரண்டு வகைதான். இந்த இரண்டும் மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கின்றன. இதே ஆட்டினத்தில் வரையாடு என்றொரு வகை உண்டு. தமிழ்நாடு அரசின் விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரையாடுகள் அரசின் நிதி ஒதுகீட்டிற்கும், பராமரிப்புக்கும் பிறகும் கூட எண்ணிக்கையில் குறைந்துகொண்டே செல்கின்றன. இது ஏன் என சிந்திப்பவர்களுக்கு அந்தக் கேள்வியிலுள்ள பித்தலாட்டம் புரியவரும்.

பின் குறிப்பு:இந்தக் கேள்விக்கு பதில் கூறவில்லை” என நினைப்பவர்களும், “இந்தக் கேள்விக்கு பதில் கூறலாமே” என நினைப்பவர்களும் தங்களிடம் இருக்கும் பரிணாமம் குறித்த கேள்விகளை தெரிவிக்கலாம். அவை அனைத்திற்கும் பதில் கூறிவிட்டே தொடர்வது என எண்ணியுள்ளேன். எனவே பரிணாமம் குறித்த உங்கள் கேள்விகளை தமிழில் பதிவு செய்யவும்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

http://senkodi.wordpress.com/