புலியிடம் இருந்து ஜனநாயகம் கேட்ட புலியெதிர்ப்பு மாமாக்கள் பேரினவாதத்தின் பின் வழிகாட்டினர். ஆயுதத்தை வழிபட்ட புலி மாமாக்கள் ஜனநாயகத்துக்கு திரும்பியதாக கூறிக்கொண்டு, தங்கள் சொத்தைப் பாதுகாக்க வழிகாட்டினர்.

ஆயுதம் ஏந்தாவிட்டால் அது ஜனநாயகம் என்று பொழிப்புரை எழுதிவைத்துக் கொண்டு, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தான் புலத்துப் புலிகள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தியும், நாடு கடந்த தமிழீழத்தை முன்னிறுத்தியும், புலத்து மக்களை கொண்டு தமக்கு தாமே வாக்கு போட வைத்ததை ஜனநாயகம் என்று கூறி தேர்தல் நாடகத்தை நடத்தினர். இப்படி புலத்து புலிகளின் இரு கோஸ்டியும், அடுத்தடுத்து ஜனநாயகத்தின் பெயரில் ஆளுக்கொரு போலித் தேர்தலை நடத்தி முடித்தனர்.

இவர்கள் வேறு யாருமல்ல, தமிழ்மக்களை கொன்றழித்த கொலைகாரர்கள். மக்களை பணயம் வைத்து யுத்தமுனையில் பலிகொடுத்தவர்கள். பலிப் பிணத்தைக் காட்டி அரசியல் நடத்தியவர்கள். இப்படி பலிகொடுத்தவன் பலியெடுத்தவனை குற்றம் சாட்டி நடத்திய அரசியல் நாடகத்தில், இவர்களும் பலியெடுத்தவனுக்கு நிகரான கொலைகாரர்கள் தான்.

ஆட்டைப் பலியெடுக்கும் வேள்வியில் பலனை எதிர்பார்த்த பலிகொடுப்பவன் நிலையில் தான் புலிகள் செயல்பட்டனர். பலியெடுத்த பூசாரியை மட்டும் இதைச் செய்ததாக குற்றஞ் சாட்டுவது மட்டும் எப்படி? பலனை எதிர்பார்த்து, பலன் கிடைப்பதாக சொல்லி மேலும் மேலும் மக்களை பலிகொடுத்துக் கொன்ற கூட்டம் தான், புலத்தில் தேர்தலில் நின்று வென்ற வேட்பாளர்கள். தமிழ் மக்களின் அதிக பிணக்காட்சி தான், இலங்கையில் அன்னிய தலையீட்டை நடத்த அவசியமானது என்பதுதான் புலத்து புலி மாமாக்களின் கொள்கையாக இருந்தது.

இப்படி அன்று வன்னித் தலைமையுடன் கூடி நின்று மக்களை பலிகொடுத்த கொலைகாரக் கூட்டம் தான், தனக்குத் தானே ஒரு ஜனநாயக மூகமுடியைப் போட்டது. இன்று தங்கள் ஜனநாயக மூகமுடிக்குள், குத்து வெட்டுகளை நடத்துகின்றனர்.

மக்களைப் பலிகொடுத்த கொலைகாரர்களுக்கு வாக்குப் போடுவதன் மூலம், புலத்துப் புலியில் ஜனநாயகம் செழித்துவிடுவதாக காட்டிக்கொண்டு, இரு கோஸ்டியும் தமக்குள் மோதின. தாமே தமக்கு ஏற்ற எடுபிடிகளை முன்னிறுத்தி, தாமே கள்ளவோட்டைப் போட்டு, தேர்தல் என்ற ஒன்றை உலகத்தை ஏமாற்ற நடத்தினர். இதன் மூலம் இதை வழிநடத்தியவர்கள், பெருமளவில் புலிப் பணத்தை தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொண்டவர்கள் தான்.

மக்களைப் பலி கொடுத்த கொலைகாரர்கள், தமிழ் மக்களின் பணத்தை தனதாக்கிய நிகழ்வை மூடிமறைக்கத்தான், ஜனநாயகம் வேசம் உதவியது. இப்படி புலத்து புலிகள் புலத்து தமிழ் மக்களை ஏமாற்றி, அவர்களின் தெரிவின் பெயரால் புலிச் சொத்தின் உரிமையாளராக்கினர். அவர்கள் தமிழ்மக்களை வழிகாட்டுவதாக கூறி, மேற்கு மற்றும் இந்திய அரசுத் தலைவர்களின் எடுபிடிகளாக மாறி அங்குமிங்குமாக நின்று குலைக்கின்றனர்.

இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களை, இலங்கை அரசு மட்டும் இன்று மூடிமறைக்கவில்லை. இந்த இரு புலிக் கோஸ்டிகளும் கூட்டாகத்தான் மூடிமறைக்கின்றனர். நடந்தது என்ன என்பதை மூடிமறைப்பதில் தொடங்கி, கிடைத்த போர்க்குற்றத் தரவுகளையும் ஆவணங்களையும் கூட தமிழ் மக்களுக்கு மூடிமறைத்தபடி, அதை அன்னிய சக்திகளிடம் கொடுப்பதன் மூலம் மறுபடியும் இலங்கை அரசுக்குத்தான் உதவுகின்றனர்.

இவர்களின் ஜனநாயகம் இதுதான். இதைத் தாண்டியதல்ல. சொந்த மக்கள் அறியாமையிலும், பிரமையிலும் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், அவர்களை மந்தைகள் போல் நடத்துவது தான் புலிகளின் ஜனநாயகமாகி விடுகின்றது.

சொந்த தலைவருக்கு நடந்ததை குழிதோண்டிப் புதைத்த இந்த புலத்து புலி மாமாக்கள், இலங்கை அரசுக்கும் மேற்கின் ஊடாக உதவுவதையே ஜனநாயகம் என்கின்றனர்.

இப்படி இதற்குள் நின்று காவடி எடுத்தாடும் கூட்டம், இரு கோஸ்டியாக மாறி மோதுகின்றது. குழிபறிப்புகள், சதிகள் முதல் ஆளையாள் சேறு வீசி மிரட்டுகின்ற அனைத்தையும், புலிப் பாரம்பரியத்துடன் செய்வது தான் இன்று சந்திக்கு வருகின்றது. நாடுகடந்த தமிழீழ உறுப்பினராக திட்டமிட்டு புகுந்து கொண்ட புலியின் மறுகோஸ்டி, ஜனநாயகம் பற்றியும் மக்கள் தான் தம்மை தேர்ந்தெடுத்ததாக புலம்புகின்றது. திட்டமிட்டு மறுதரப்பை அழிக்கவும், கவிழ்க்கவும் கோஸ்டி கட்டி தம்மைத்தாம் வெல்ல வைத்து நாடு கடந்த தமிழீழ கோஸ்டிக்குள் சென்றவர்கள், இதையொத்த மறுதரப்புடன் மோதினர். இதன் ஒரு அங்கமாக நாடு கடந்த தமிழீழம் அல்லாத வட்டுக்கோட்டை கோஸ்டியின் உறுப்புரிமையை நாடு கடந்த தமிழீழ கோஸ்டி பறித்துள்ளனர். இப்படி உறுப்புரிமை இழந்து போனவர்கள் உள்ளிட எவரும், என்றும் மக்களின் ஜனநாயகத்துக்காக வாழ்ந்தவர்களுமில்லை, குரல் கொடுத்தவர்களுமில்லை.

வன்னியில் மக்களைப் பலியிடுவதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்று கூறி, புலித்தலைமையைப் பாதுகாக்க முற்பட்டவர்கள். இந்த எல்லைக்குள் புலம்பெயர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள். புலத்து மக்களை திரட்ட, வன்னி மக்களை ஆயிரம் ஆயிரமாக பலியிட்ட கொலைகாரர்கள். வன்னி மக்களின் அதிக பிணத்தைக் கோரி பலியெடுப்பை முன்னிறுத்தியவர்கள், அதை ஊக்குவித்து ஐரோப்பிய வீதிகளில் பிண அரசியல் நடத்திய பொறுக்கிகள். இன்றுவரை அதற்காக மனம் வருந்தாத கொலைகாரர்கள்.

இன்று ஜனநாயகம், மக்கள் தம்மை தெரிவு செய்தனர், யாப்பு… என்று விதம் விதமாக கதை சொல்லி வலம் வருகின்றனர். கடந்தகால நிகழ்வுக்கு பொறுப்புச் சொல்லாத, அவைகளை சரியென்று கருதுகின்ற இந்த கூட்டத்தால் என்றும் மக்களுக்கு விடிவும் வராது. இதுதான் இதன் பின்னுள்ள உண்மை.

பி.இரயாகரன்

05.04.2011