இன்று ஈழத்தில் என்ன நடக்கிறது? பல துரோகக் கும்பல்கள் புதிய முகங்களோடு மக்கள் முன் தோன்றியுள்ளார்கள். வன்னியை புனரமைக்க ஒருவர், யாழ்பாணத்தை வசந்தமாக்க ஒருவர், கிழக்கு மக்களை தூக்கி நிறுத்த சிலர் என்று திடீர் அரசியற் பிறப்பெடுத்துள்ளார்கள். கோடிக் கணக்கில் மக்கள் பணத்தினை சுருட்டி தங்கள் கணக்கில் பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் தான் இவர்கள். இவர்கள் தான் இன்று மீட்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.
புலிகளாலே உருவாக்கப்பட்ட இந்த கொள்ளைக்கார கும்பல்கள் இன்று புலித் தோலினை அகற்றிவிட்டு பசுத் தோலினை அணிந்து கொண்டு வந்துள்ளார்கள். ஏமாற்று அரசியல்வாதிகளுக்கே உரித்தான புன்சிரிப்பு, பணிவு, இரக்கம்…, இப்படி பலவிதமாக முகங்களை வைத்துக் கொள்கிறார்கள். எப்படித் தான் இவர்களால் முடிகிறதோ…?. பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. எதுவும் தெரியாத, எதுவும் நடக்காத, எந்த தவறும் செய்யாத, ஒன்றுமறியாத அப்பாவிகளாக மக்கள் முன் தோன்றியுள்ள இந்த துரோகக் கும்பல்களுக்கு நன்றாகவே தெரியும்; வெள்ளை வேட்டிக்கும், கோட்டு சூட்டிற்கும் இந்த மக்கள் மயங்கிவிடுவார்கள் என்று. மக்களுடைய ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி எஞ்சியுள்ள தங்கள் காலத்தினை அரசியல், மக்கள் தொண்டு என்று காட்டிக் கொண்டு இன்னும் சுரண்டக் கூடியதை சுரண்டுவதோடு; தங்களையும் தியாகிகள் ஆக்கிவிடலாம் என்பதே இவர்களின் நோக்கமே தவிர, மனதளவில் எந்த மக்கள் நலனும் இவர்களோடு இல்லை. இவர்களுடைய கடந்த கால வாழ்க்கையினை, கடந்தகால அரசியல் மாற்றங்களை, நிகழ்வுகளை நேர்மையோடு நிதானமாக பார்த்து புரிந்து கொண்டால் ஏதற்காக இவர்களை மக்கள் விரோதிகள் என்று சொல்வது புரியும்.
யார் இவர்கள்?. யாரால் உருவாக்கப்பட்டார்கள்?. எப்படி இவர்களால் கோடிக் கணக்கில் சொத்து சேர்க்க முடிந்தது…?
இவர்கள் புலிகளால் உருவாக்கப்பட்டவர்கள். புலிகளுக்கும், புலி ஆதரவாளர்களுக்கும் தங்களை உண்மை விசுவாசிகளாக காட்டிக் கொண்ட இவர்களின் உள் நோக்கம் புலிகளின் சொத்துக்கள் மீதே குறியாக இருந்தது. மக்கள் பணத்தினை தங்கள் வங்கிக் கணக்குகளில் பதுக்கிக் கொண்டு சந்தர்ப்பம் பார்த்து எதிரிகளோடு கைகோர்த்து துரோகத்தனமாக புலித்தலைமையினையும், பலபோராளிகளையும், பல்லாயிரக்கணகான அப்பாவி மக்களையும் பேரினவாத சிங்களஅரசு அழித்தொழிக்க தோள் கொடுத்தவர்கள். புலிகள் இருக்கும் வரை புலிகளைப் பற்றி எந்த விமர்சனத்தினையும் முன் வைக்காத இவர்கள், தங்கள் சுயலாபத்திற்காக துரோகத்தனமாக இத்தனையையும் செய்து முடித்துவிட்டு; தாங்களே அழித்தொழித்த மக்களுக்கு இன்று புனர்வாழ்வு அழிக்க மக்கள் நலன் பேசிக் கொண்டு அரசியலுக்கு வந்துள்ளார்கள். இவர்களை அரசியலை விட்டு விரட்டி அடிக்காது விட்டால், தமிழ்மக்கள் பல பிரச்சனைகளையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்காலத்தில் சந்திப்பதோடு இருக்கின்ற பிரச்சனையினை இரட்டிப்பாக்கினதாக முடியும். பல எதிரிகளை நாங்களே உருவாக்கினதாக முடியும்.
கடந்த கால போராட்டத்தில் புலிகள் தமிழ் மக்களுக்காக விட்டுச் சென்ற சொத்து இந்த துரோகிகள் தான். திருட்டுக் கும்பலிடமும், துரோகிகளிடமும் தமிழ் மக்களை ஒப்படைத்து விட்டு கோழைத்தனமாக அழிந்து போய்விட்டார்கள்.
எத்தனை கல்விமான்கள், எத்தனை புத்தி ஜீவிகள், மக்களை உண்மையாக நேசித்த ஜீவன்கள் எத்தனை, அப்பாவி மக்கள் எத்தனை, உண்மையாக போராட்டத்தினை நேசித்து உயிர் கொடுத்த போராளிகள் எத்தனை… அத்தனை பேரையும் கொன்று குவித்து மக்கள் விரோதிகளை இன்று தியாகிகளாக நடமாட வைத்துள்ளார்கள்.
இதுதானா நல்ல தலைவனின் வழிகாட்டல்…?
இதற்காகத் தான் பல உண்மை மனிதர்களை கொன்றார்களா…?
நல்ல தவைன், நல்ல போராட்டம்…!
தேவன்
19/03/2011