Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா? என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கி இது சில இடுகைகளாக நீளும். நண்பர் வெள்ளை அவர்களுக்கு நன்றி.

 

 

உண்மையில் எது பீர் புரட்சியாக இருக்கிறது?

 

ஒருவரின் சொல், செயல் அனைத்தின் பின்னாலும் தொழிற்படுவது அவரது வர்க்கமே. வர்க்கத்தை, வர்க்க அரசியலை விலக்கிவிட்டு யாராலும் செயல்பட்டுவிட முடியாது. வெகுமக்களின் செயல்களிளூடான வர்க்க அரசியலை அடையாளம் கண்டுகொள்வது எளிதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்களிடம் மரபாக, பழக்கமாக, கருத்தாக இருந்துவருவதன் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் சிலரின் செயல்பாடுகளில் அதைப் பிரித்தறிவது நுணுக்கமான அணுகல் தேவைப்படும் ஒன்றாக இருக்கும். அந்தவகையில், ஜெயமோகன் அவர்களின் “மாவோயிஸ வன்முறை”யும் அவரின் வர்க்க அரசியலை மறைக்கும் எழுத்து எத்தனங்களோடு அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாக அவர் எழுதியிருக்கும் அந்த நீள் கட்டுரையை சாதாரணமாக படிக்கும் அவரின் வாசகர்கள், அவரே கூறியிருப்பது போல, மனித மனங்களை உய்த்துணரக்கூடிய எழுத்தாளனுக்குறிய கோணத்தில், இந்திய வரலாற்றை தொடர்ச்சியாக கற்றுவரும் அடிப்படையில், மண்ணைச் சுற்றிவந்த பயணியின் அனுபவத்தில் மாவோயிச பிரச்ச‌னையை பல்வேறு தளங்களில் அலசி எழுதப்பட்ட ஒன்றாகவே எண்ணுவர். ஆனாலும் அவரின் விரிவான அந்த அலசலில் ஊடாடியிருக்கும் அவரின் நோக்கம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே செய்கிறது.

 

கம்யூனிசம், பொதுவுடமை எனும் சொற்களை பயன்படுத்துவனின்று கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கும் அந்த கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம் கம்யூனிச எதிர்ப்பே. அதற்கு மாவோயிசம் ஒரு குறியீட்டு மையமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரி ஊடகவியலாளர்களிலிருந்து தொடங்கி மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனமாக பயணித்து மார்க்சிய மேற்கோள்களின் உதவியுடன் முதலாளித்துவத்திற்கு மார்க்சியம் மாற்றாக முடியாது என முடிக்கப்பட்டிருக்கிறது.

 

அரசியல் நோக்கில் கருத்தாடும் வழக்கமும், நேரமும், உழைப்பும் எனக்கில்லை, அதனால் அரசியலை தவிர்த்துவிட்டு அனுகியிருக்கிறேன், எனக்கூறிக்கொண்டே தன்னுடைய மார்க்சிய எதிர்ப்பு அரசியலை நெய்து தந்திருக்கிறார். அதாவது எரியும் ஒரு பிரச்சனையின் அடிக்கொள்ளியை தவிர்த்துவிட்டு நெருப்பின் சாதக பாதக விளைவுகளை பார்க்கிறேன் எனக் கூறிக்கொண்டே அந்த நெருப்புக்கு தன்னுடைய கொள்ளியைத் தருகிறார்.

 

மாவோயிச அரசியலைப் பற்றி எழுதப்புகுமுன் தன்னுடைய வாசகர்களின் உளப்பாங்கை சாதகமாக வளைக்கும் மனப்பாங்குடன் பீர்கோப்பை புரட்சி எனும் உருவகத்தில் ஊடகவியலாளர்கள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கிறார். ஊடகவியலாளர்கள் குறித்து அவர் வரைந்திருக்கும் சித்திரத்தை முழுமையாக மறுக்க முடியாது. ஒட்டுமொத்தத் தன்மையில் அது அப்படித்தான் இருக்கிறது என்றாலும், எதை எங்கு பொருத்த வேண்டும் என்பதில் தான் அவரின் எழுத்தாள அனுபவத்தை பயன்படுத்தி மெய்யேபோன்ற சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்.

 

நாட்டின் பெருமப்பான்மை மக்கள் நாளொன்றுக்கு எழுபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையைக் கடக்கிறார்கள், ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கும் சிறுபான்மை மக்கள் பீர்க்கோப்பை புரட்சி செய்கிறார்கள். இதில் அவர் தன்னை எங்கு இருத்திக்கொள்கிறார்? தன்னுடைய ஒரு மாத ஊதியம் அவர்களின் ஒருவேளைக் குடிப்பணம் என்பதன் மூலமும், அவர்கள் ஆயுதப் புரட்சியை ஆதரிக்கிறார்கள் நான் எதிர்க்கிறேன் என்பதன் மூலமும் நாளொன்றுக்கு 70 ரூபாய் வருமானம் பெறும் பெரும்பான்மை மக்களுடனும் இல்லாமல் மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் சிறுபான்மையினருடனும் இல்லாமல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை (ந‌டுநிலைமை(!)) தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். ஏனென்றால் 70 ரூபாய் தினக்கூலியில் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர் கவலைப்படப் போவதில்லை, ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களின் பேச்சளவிலான அம்மக்களின் ஆதர‌வையும் சரியில்லை என காட்ட‌ வேண்டியதிருக்கிறது.

 

அலைக்கற்றை ஊழலின் போது, ஊடகவியலாளர்கள், அந்த‌ பாவனை தரும் வசதியை பயன்படுத்தி அதிகாரத்தரகு வேலை செய்திருப்பது அம்பலமானது. செய்தி ஊடகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதும், தம் வர்க்க நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும், அல்லாதவற்றை மக்களிடமிருந்து மறைப்பதற்கும் எந்த எல்லைக்குச் செல்லவும் தயாராக இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. அவர்களின் ‘லாபியிங்’ வேலைகள் திசையை மறைத்து நடப்பனவும் அல்ல.

 

அதேபோல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ரசனையுடன் மதுவை ருசித்துக்கொண்டே, சாலைகளில் படுத்துறங்கும் மக்களின் துயரம் குறித்து கவலைப்படும் ‘தன்னார்வப்’ பிதாமகர்களின் கவலை, அவர்கள் அள்ளிவிடும் பணம், இதெல்லாம் எந்த நோக்கில் வழிகின்றன, பாய்கின்றன என்று பலமுறை அம்பலப்பட்டிருக்கிறது, படுத்தப்பட்டிருக்கிறது.

இவர்களின், இவர்களை ஒத்தவர்களின் கவலையும், பரிவும்; ஊடகவியலாளர்களின் கட்டுரைகளில் தெரித்து விழும் சிவப்பும் எத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை பாமரர்களுக்கு சற்றுமேல் விழிப்புடனிருப்பவர்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவை தாம். ஆனால் இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதற்கு எதிராக முன்னிருத்துகிறார் அல்லது இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதனுடன் தொடர்புபடுத்துகிறார் என்பதில் தான் அவரது அரசியல் இழையாடுகிறது.

 

இணையத்தில் புரட்சிகரமாக எழுதுபவர்களில், ஊடகங்களில் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துபவர்களில் களத்தில் செயல்படாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்படாதவர்கள் என்பதினாலேயே அவர்களின் கருத்துகள் பீர்க்கோப்பை நுரையில் காணாமல் போய்விடுமா? எளிமைப்படுத்திப் பார்த்தால் யதார்த்தத்தை விரித்துக்காட்டி உண்மையை மறைப்பது. அதாவது, ஊடகவியலாளர்களின் லாபி, அவர்கள் சுயம் கருதி வெளிப்படுத்தும் அரசுக்கு எதிரான தன்மைகள் எனும் யதார்த்தத்தை விரித்துக்காட்டி, மெய்யாகவே கொள்கைப்பிடிப்புடனும், அரசின் பயங்கரவாதத்தை, அதன் ஒதுக்கல்வாதத்தை அருகிருந்து கண்ட வலியுடன் எழுதுபவர்களையும் கூட மறைத்துவிடுவது அல்லது அந்தக் கும்பலில் இவர்களையும் சேர்த்துவிடுவது. குறிப்பாக அருந்ததிராய், சாய்நாத், பினாயக் சென் போன்றவர்களின் எழுத்தும் செயல்பாடும் பீர்நுரையில் அடங்குவதுதான் என்று குறிப்பிட்டுக் காட்டாமல் குறிப்பால் உணர்த்துகிறார்.

 

ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? அதன் தேவை என்ன? நீள்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் அவருடைய அனுபவத்தினூடாக கட்டுரையில் பயணிக்க வேண்டுமேயல்லாது, தங்களுடைய சொந்த வாசிப்பனுபவத்தினூடாக, மெய்யான நிலைகளின் அறிதல்களினூடாக கட்டுரையில் பயணப்பட்டு விடக்கூடாது என்பது தான். அவருடைய நோக்கமான கம்யூனிச எதிர்ப்பை உறையிட்டுக்காட்டுவதற்கு அவருடைய சொந்தப்பார்வைதான் பயன்படுமேயன்றி, வாசகனின் விழிப்புணர்வை தூண்டுவது பயன்படாது. அதனால் தான் அரசியல் நோக்கராக சொல்லவில்லை என்றும் எழுத்தாளன் என்ற தகுதியில் நின்று சொல்வதாகவும் தன்னுடைய ‘ஹோதா’வை தொடக்கத்திலேயே கடை பரப்பிவிடுகிறார்.

 

இப்போது சொல்லுங்கள் எது மெய்யான பீர்க்கோப்பை புரட்சி?

http://senkodi.wordpress.com/2011/02/20/mavoist-jeyamohan-1/