அணுவுலகம் என்பது ஏகாதிபத்தியதனமாகும். அணுக்குண்டு மட்டும் உலகை ஆளவில்லை, அணு கூட ஏகாதிபத்திய மூலதனத்தை உற்பத்தி செய்யும் ஏகாதிபத்திய தொழில் நுட்பமாகிவிட்டது. இதனால் உலகம் கதிர்வீச்சின் எல்லைக்குள் மிக வேகமான சுருங்கி வருகின்றது. மனிதனை வெடிகுண்டு மேல் மட்டும் ஏகாதிபத்தியம் நிறுத்திவிடவில்லை, இலாப வெறிக்காக அணுவுலைக்கு முன்னால் மக்களைக் கைகட்டி நிற்கவும் கோருகின்றான்.

உலகை ஆள அணுக் குண்டை செய்தாலும், இலாபத்திற்காக ஆக்கத்தின் பெயரில் அணு மின்சாரத்தை தயாரித்தாலும், இவை அனைத்தும் உலகை அடிமை கொள்ளும் ஏகாதிபத்தியத்தனமாகும். அணு வெளியிடும் கதிரியியக்கம், உடைப்பெடுக்கும் போது அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஏகாதிபத்தியத்துக்கு கிடையாது. கதிரியக்கத்தின் அளவைப் பொறுத்து, அது சில கணங்களில் மரணத்தையும் சில தலைமுறைக்கு பக்கவிளைவையும் தரக் கூடியது.

அணுக்கதிர் இயக்கம் கட்டுடைத்து இயற்கையில் பரவும் போது, குறித்த பகுதி பல நூற்றாண்டுகள் உயிரினங்கள் உயிர் வாழ முடியாத சூனியப் பிரதேசமாகி விடுகின்றது. நிலம், நீர், சுவாசிக்கும் காற்று, மலை, கடல், அங்குள்ள பொருட்கள் என்ற அனைத்தும் பயன்படுத்த முடியாத வண்ணம் கதிர்வீச்சுக்குள்ளாகின்றது. இங்கு வாழும் உயிரினங்கள், இதன் இறைச்சி, பால், உணவு தானியங்கள்.. என்று எதைப் பயன்படுத்தினும், கதிர்வீச்சின் பாதிப்புக்கு உள்ளாவார்கள். உயிரினங்களின் இனப்பெருக்கம் கூட கதிர்வீச்சுக்குள்ளாகி சில தலைமுறை கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து தப்புவதில்லை.

இப்படி இயற்கையையும், இயற்கையில் வாழும் உயிரினங்களையும் கண்டுகொள்ளாத அணு சார்ந்த ஏகாதிபத்திய மூலதனக் கொள்கை, யப்பானில் அமெரிக்கா அணுக்குண்டை வீசிய காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. அணு, அணுக்கதிரின் விளைவு பற்றிய, மனித அறிவை குருடாக்கித்தான், ஏகாதிபத்தியங்கள் இதை மனிதகுலத்தின் நன்மை சார்ந்ததாக பறைசாற்றி வருகின்றது. குறிப்பாக காபனீர்ஓக்சைட் வெளியேற்றதைக் குறைக்கவும், பூமி சூடாவதை தடுக்கவும் தான் அணுவுலையை நிறுவுவதாக ஏகாதிபத்தியம் கூறிவருவது சுத்தப்பொய். அணு மூலதனம் மூலம் உலகை கொள்ளையடிக்கும் நோக்கைத் தவிர, ஏகாதிபத்தியத்துக்கு வேறு எந்த மனிதநேய முகமும் கிடையாது. இந்தப் ப+மி சூடாவதற்கும், அளவுக்குமதிகமாக காபனீர்ஓக்சைட் வெளியேறுவதற்கு, இந்த ஏகாதித்தியம் மூலதனத்தின் இலாபவெறிதான் காரணமாகும். ஏகாதிபத்திய இலாப வெறிக்கு ஏற்ற பொருள் உற்பத்தியும், அதற்கேற்ற நுகர்வு பண்பாடுகளும் தான் இதை உருவாக்குகின்றது. இங்கு தான் தொழில் நுட்பம் ஆக்கத்திற்கல்ல, அழிவுக்கு ஏற்ப ஏகாதிபத்தியத்தனமாக விரிவடைகின்றது.

இன்று உள்நாட்டு மின்சார உற்பத்தியில் பிரான்ஸ் தான் அதிகளவில் அணுவை பயன்படுத்துகின்றது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக அணுவுலைகள் கொண்ட நாடும் பிரான்ஸ் தான். இந்த மூலதனம் தான் இன்று உலகம் தளுவிய அளவில் ஏற்றுமதியாகின்றது.

இப்படி உலகெங்கும் 443 அணுவுலைகள் 31 நாட்டில் 201 இடத்தில் இயங்குகின்றது. இன்று 62 புதிய அணுவுலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. யப்பானில் நடந்தவைகளை காணும் போது, மனிதனை சுற்றியும் இயற்கையை அழித்துவிடும் அளவுக்கு அணுகதிர் ஆலைகளை ஏகாதிபத்தியங்கள் நிறுவிவருகின்றது. ஏழை நாடான பங்களாதேசத்தில் கூட, ஏகாதிபத்தியம் இதை திணித்திருக்கின்றது.

இன்று உலகளவில் மின்சாரம் உற்பத்தியில் 16 சதவிகிதம் தான் அணு மூலம் தயாரிக்கப்படுகின்றது. இது மொத்த உலக சக்தி வளத்திலோ 7 சதவீதமாகும். குறிப்பாக 6 நாடுகள் தன் மின்சார உற்பத்தியில் நாலில் மூன்று பங்கு மின்சாரத்தை, அணுவைச் சார்ந்து தயாரிக்கின்றது. இப்படி அணுவைச் சுற்றிய உலகமாக, உலகம் சுருங்கி வருகின்றது. இயற்கையை சார்ந்து வாழாது, அந்த வளங்களை அழித்து அழிவுகரமான நாசகரமான உலகை ஏகாதிபத்தியம் வழிகாட்டுகின்றது. சொந்த நாடுகளில் அதிகளவில் அணு மூலமான மின்சாரத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலை எடுத்தால்

நாடு சதவீதத்தில்              தெரவாற் உற்பத்தி                            அணுமின்நிலையங்கள்

பிரான்ஸ்      70 சதவீதம்                 391.7                                                                  58

பெல்ஜியம்     51.7 சதவீதம்              45                                                                       7

தென்கொரியா 34.8 சதவீதம்           141.1                                                                   21

சுவீடன் 34.7 சதவீதம் 50                                                                       10

யாப்பான் 27.8 சதவீதம் 263.1                                                                    55

ஜெர்மனி 22.9 சதவீதம் 127.7                                                                   17

அமெரிக்கா 19.4 சதவீதம்                   798.7                                                                   104

பிரிட்டன் 17.9 சதவீதம் 62.9                                                                     19

ஸ்பனியோல் 17.5 சதவீதம்               50.6                                                                     8

கனடா 14.8 சதவீதம் 85.3                                                                    18

ருசியா 15.7 சதவீதம்  152.8                                                                   32

பிரேசில் 3 சதவீதம் 0.006                                                                    1

சீனா 2 சதவீதம் 65.7                                                                     13

இந்தியா 3 சதவீதம் 0.048                                                                  20

இப்படி இன்று அணு, மூலதனத்தை உற்பத்திசெய்யும் கருவியாக மாறிவிட்ட நிலையில், அணுவுலைகள் ஏற்றுமதிப் பொருளாக மாறிவிட்டது. உலகமயமாக்கல் வேகம் பெற்றுள்ள இன்றைய நிலையில், மூன்றாம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதியாக்கும் ஏகாதிபத்திய கொள்கை இதை இன்று கட்டாயப்படுத்துகின்றது. அதேநேரம் இதனால் ஏற்படும் விளைவுக்கு, ஏற்றுமதி செய்த நாடோ, இதனை உற்பத்தி செய்த நிறுவனமோ பொறுப்பல்ல என்று மூன்றாம் உலக நாடுகளில் சட்டவிதிகளை உருவாக்கிய பின்தான், இந்த அணு மின் உற்பத்தி திணிக்கப்பட்டு மூலதனம் திரட்டப்படுகின்றது. இலாபம் தான் குறிக்கோள், விளைவுக்கு பொறுப்பேற்காத அடாவடித்தனம் தான், அணு பற்றிய ஏகாதிபத்தியத்தின் இன்றைய கொள்;கையாகும்.

இந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் புதிய சந்தைக்குரிய பிரதேசமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா இதில் முதலிடம் வகிக்கின்றது. இந்தியா 5 புதிய அணுவுலைகளைக் கட்டி வருகின்றது. 4.780 மெகவாற் திறன் கொண்ட 20 அணுவுலைகளை கொண்டுமுள்ளது. இது 2032 முன்னதாக 63000 மெகவாற் திறன் கொண்ட அணுவுலைகளை நிறுவவுள்ளதுடன், இதற்காக 10000 கோடி டொலரை முதலிடவுள்ளது.

சீனா 27 புதிய அணுவுலைகளை (இது இன்று உலகளவில் அமைக்கும் அணுவுலைகளில் 40 சதவீதம்) அமைத்து வருவதுடன், 50 புதிய அணுவுலைகளை அமைக்கும் திட்டத்தை மேற் கொண்டுள்ளது.

இந்த வகையில் இன்று மொத்தமாக 62 புதிய அணு உலைகள் உலகெங்கும் அமைக்கப்பட்டு வருகின்றது. சீனா 27, ருசியா 10, இந்தியா 5, தென்கொரியா 5 ... ஆக இப்படி எம்மைச் சுற்றி அணுவுலைகளை ஏகாதிபத்தியம் இலாபவெறியுடன் பெருக்கி வருகின்றது. கதிர்வீச்சின் எல்லைக்குள் உலகம் அதிவேகமாக சுருங்கி வருகின்றது. இதன் விளைவுகளை மக்கள் மேல் ஏகாதிபத்தியம் திணிக்கின்றது.

2ம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை, மனித வாழ்வில் புகுத்திய ஏகாதிபத்தியம்

இன்று விவசாயம் என்றால் செயற்கை உரம் இன்றியும், கிருமி நாசினி இன்றியும் சாத்தியமில்லை என்று கருதுமளவுக்கு மனித அறிவை மலடாக்கி உள்ளது ஏகாதிபத்தியம்;. 2ம் உலக யுத்தகாலத்தில் குண்டுகளை தயாரிக்க உருவான நிறுவனங்களும், இதில் இலாபம் பெற்ற கொழுத்த மூலதனமும் தான், தன் வெடிமருந்தை சந்தைப்படுத்த அதை உரமாக்கியது, கிருமிநாசினியாகியது. மனிதனைக் கொல்லவும் அழிக்கவும் பயன்படுத்திய அதே பொருளைத்தான், ஆக்கத்தின் பெயரில் ஏகாதிபத்தியங்கள் மனித வாழ்வில் திணித்தது. யுத்தத்தை நடத்தியது போல், எந்த மனித நலன்சார் நோக்கமும் இங்கு இருக்கவில்லை. யுத்தத்தின் பின் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இலாபமீட்டவும், மூலதனத்தை திரட்டவும் கண்டுபிடித்ததுதான் இந்த செயற்கை உரமும் கிருமி நாசினிகளும்.

உலகை ஆக்கிரமிக்க பயன்படுத்திய வெடிபொருட்கள் மற்றும் இரசாயன ஆயுதங்களைத்தான், ஏகாதிபத்தியங்கள் விவசாயத்தில் புகுத்தினர். இப்படி மனித அழிவுக்கு பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு, இயற்கை சார்ந்த விவசாயத்தை நஞ்சாக்கினர். நஞ்சைக் கொண்டு இயற்கையை நாசமாக்கி, உயிர்pனத்தின் மரபுக் கூறுகளையே கொன்றனர். இதற்கு எதிரான போராட்டம் விழிப்புணர்வு தான் தான், இன்று இயற்கை சார்ந்த பொருள் (உயிரியல்) உற்பத்தியைச் சார்ந்த நுகர்வு சார்ந்த சந்தை, ஜரோப்பாவில் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றது. அதாவது உரம், கிருமிநாசினி பயன்படுத்தாத பொருட்கள் சந்தையில் தனி அடையாளத்துடன் வருகின்றது. ஆக செயற்கை உரமும் கிருமிநாசினியும் அழிவுகரமானது என்பதையே, இயற்கை சார்ந்த உணவை தேடும் மனித அறிவு தெளிவாக்குகின்றது.

இப்படி உண்மைகள் இருக்க, 2ம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய அணுக் குண்டுதான், மின்சார உற்பத்தியில் இலாப வெறியுடன் புகுத்தப்பட்டது. இன்று பாரிய மூலதன ஏற்றுமதிக் பொருளாக அணுமின்நிலையங்கள் மாறி நிற்கின்றது.

யப்பானின் அணுவுலையின் இன்றைய வெடிப்பு, அணு மூலதனத்திற்கு பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் விழிப்புணர்வு சார்ந்த எதிர்ப்பும், ஆளும் கூட்டத்தின் மூடிமறைத்த அழிவுகர நாசகார கொள்கையும் மோதும் ஒரு நிலை, உலகளவில் உருவாகியுள்ளது. இதுவும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு திறன் மிகு ஆயுதமாக மாறிவிட்டது.

அணு விளைவை மூடிமறைத்தல் தான், மூலதனத்தின் விரிவாக்க நலனாகும்;

1980 களில் உக்கிரைன் அணுவுலை வெடித்த போது, அதை முதலில் ருசியா உலகின் முன் மூடிமறைத்தது. அணுக் கதிர்வீச்சு ஐரோப்பிய வான்பரப்பில் பரவிய நிலையில், கதிர்வீச்சுக்கு ஐரோப்பா உள்ளாகியது. ஐரோப்பா எங்கும் இதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் பிரான்ஸ் இதைச் செய்யவில்லை.

இன்று அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகில் அதிக அணுவுலைகளை நிறுவியுள்ள பிரான்ஸ் மட்டும், அன்று இந்த எச்சரிக்கையை விட மறுத்தது. இதன் மூலம் முன்தடுப்பு நடவடிக்;கை எடுப்பதை திட்டமிட்டு தவிர்த்தது. இதற்காக வானிலை அறிக்கையைக் கூட திரித்து, பிரான்ஸ்சின் எல்லைக்கு வெளியில் தான் கதிர்வீச்சு காற்றில் பரவுகின்றது என்ற பொய்யை மீளமீள சொன்னது.

அதே நேரம் காற்று மூலமும், மழை மூலமும் பிரான்ஸ் கதிர்வீச்சுக்கு உள்ளாகியது. முன்தடுப்பு எதுவுமின்றியும், உண்ணும் உணவுகள் மூலமும் மக்கள் கதிர்வீச்சுக்கு உள்ளாகினர். கதிர்வீச்சை அளவிடும் தானியக்க கருவிகள் இந்தக் கதிர்வீச்சை தன்னியல்பாக அறிவிக்கத் தொடங்கிய போது கூட, அதை மக்களுக்கு மூடிமறைத்தனர்.

இந்தளவையும் செய்யக் காரணம், பிரான்சில் அதிகளவில் அணுவுலை நிறுவும் கொள்கை உட்பட, அதை நிறுவிய காலமும் இதுதான். மக்கள் விழிப்புணர்வை தடுக்கவும், அணு மூலதனத்தைப் பாதுகாக்கவும,; அரசும், அறிவுத்துறையும், பத்திரிகைத்துறையும் திட்டமிட்டு சேர்ந்து செய்த சதி தான் இது.

இதனால் அன்று இந்தக் கதிர்வீச்சின் பக்கவிளைவை சந்தித்தவர்கள் பாரிய நோய்களில் சிக்கி, பலர் உயிர் இழந்தனர். பலர் நோயின் தாக்கத்துடன் போராடி வாழ்கின்றனர். உண்மையை மறைத்ததற்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கைகள் தொடர, இன்று அது ஒரு விசாரணைக் கமிசன் முன்னிலையில் இருக்கின்றது.

மறுதளத்தில் இன்று பிராஸ்சின் அணுவுலைகளில் வேலை செய்த ஊழியர்கள் பலர், அணுவின் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆனால் இதில் பலர் தாங்கள் மின் அணுவலையில் வேலை செய்தனர் என்பதை சட்டத்தின் முன் நிறுவமுடியாத சுத்துமாத்து வழிகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர். இதனால் அணுப்பாதிப்பு அடிப்படையில் மருத்துவத்தை பெற முடியாதுள்ளனர்.

பிரான்ஸ் மின்சாரசபை மின் அணுவுலைகளை தனியார் நிறுவனங்கள் மூலம் தான் நடத்துகின்றது. மிகக்குறைந்த அடிப்படை சம்பளத்தில், அணுவின் விளைவைப் புரிந்து கொள்ளாதவர்களாகவே பலர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதை விட மிக அபாயகரமான வேலையில், வெளியில் இருந்து தற்காலிகமாக வேலைக்கமர்த்தும் முறை மூலம் அல்லது தரகுவேலை மூலம், தாங்கள் எங்கே என்ன வேலை செய்;கின்றோம் என்று தெரியாத வண்ணம் அணுவுலைகளில் வேலை வாங்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை, அணுவுலையில் வேலை செய்ததால் ஏற்பட்டது என்பதை, சட்டப்படி நிறுவ முடியாது போராடுகின்றனர்.

முதலாளித்துவ ஜனநாயகம் என்ன என்பதையும், ஏகாதிபத்தியத்தனம் எப்படிப்பட்டது என்பதையும் இது மிக எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றது.

இந்த இலாபவெறிக் கொள்கையும், மூலதனத்தை திரட்டும் அணு தொழில்நுட்ப மூலதனமும் தான், உலகம் சுருங்கும் வண்ணம் ஏற்றுமதியாகின்றது. இது உலகளவில் சுரண்டலை மட்டுமல்ல, இயற்கை அழிவையும் கதிர்வீச்சின் பாதிப்பையும் உயிரினத் தொகுதியின் மீதான அழிவுகார நாசகார கொள்கையை ஏகாதிபத்தியம் திணித்தும் அழித்தும் வருகின்றது. இதுதான் உலகமயமாக்கலின் மற்றொரு வெட்டுமுகம். இதற்கெதிரான போராட்டமின்றி, மனிதகுலம் வாழவும் முடியாது, இயற்கை இயற்கையாக பாதுகாக்கவும் முடியாது.

பி.இரயாகரன்

22.03.2011