10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

ஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின் சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும் -3

கடலால் தான் இந்த உலகமே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உலகமே இன்று ஏகாதிபத்திய உலகமயமாகியும் உள்ளது. இதுவே இக்கடலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுமுள்ளது. இவ் ஆக்கிரமிப்பு, கடல்வளங்களை வரலாறு காணாத வேகத்தில் சுரண்டத் தொடங்கிவிட்டது. சமுத்திரச் சட்டங்களாகவும், அதற்கான கடலோரத் திட்டங்களாகவும் இன்று இவை கடல்வளத்தை அபகரிக்கிறது. இதற்காகவே மீனவர்கள் கடலிலே தொடராகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாமலே பலர் கடலிலே தொலைந்தும் போகிறார்கள். தமது சொல்வழியைக் கேளாமல் நடப்பதால் தான்; இவைகள் நிகழ்ந்து விடுவதாக இவ்விரு அரசுகளும் (இந்-இல) ஆளுக்காள் கைகளையும் விரித்தும் விடுகிறது. 'ரோக்கின்" வேண்டி கடலிலே இறக்கும் ரோலர்காரன் வீட்டிலே சுகமாக இருந்துவிடுகிறான். பாவப்பட்ட வயிற்றுப் பிழைப்புக்குப் போகும் கூலி மீனவன் படுகொலை செய்யப்படுகிறான்! 'ரோக்கின்" வேண்டும் முதலாளியோ இருப்பிலுள்ள சட்டதிட்டங்களை தொழிலாளிக்குக் கூறுவதில்லை. இந்த அரசியல் சட்ட திட்டங்கள் பாழாய்போன வயிற்றுப் பட்டினிக்குத் தெரிவதுமில்லை. ரோலர்காரனான இவன் அரசியல்வாதியாகவும் இருப்பதால் பாமரக் கூலி ஏமாந்தும் விடுகிறான். ஏன் இந்த ரோலர்காரன் தனது பெரும் மூலதன, அதி நவீனத் தொழிலில்: இந்த அற்ப கூலிக்குத் தொழில் பார்க்கும் தொழிலாளிக்கு ஆயுட்காப்புறுதிகளைச் கூடச் செய்வதுமில்லை.

 

 

 

இந்திய -இலங்கைச் சட்டப்படி எல்லை தாண்டுவது சட்டவிரோதமாகும். அவ்வாறு தாண்டும் மீனவருக்கு ( ரோலர்) உரிமையாளர்களுக்கு கடலில் மீன்பிடிக்கும் உரிமம் மறுக்கப்படும் என்று சட்டமும் சொல்கிறது. ஆனால் அது நடைமுறையில் என்றும் எந்தப்பக்கத்திலும் இருந்ததில்லை. ஏனென்றால் அரசியல்வாதிகளுக்கும் பெரும் பணக்காரருக்கும் சட்டம் ஏறிப்பாயாது. பாமர ஏழை மீனவனுக்கோ இந்தச்சட்டம் ஓர் இருட்டறை. ரோலர்காரன் தன்மீது பாயாத சட்டத்தின் காரணங்களை மறைத்து விடுவதற்கும், இந்த ஏழைமீனவனுக்கு தான் நட்டஈடு வழங்குவதை தவிர்த்து விடுவதற்கும் ரோலர்காரன் வேறு ஒரு காரணத்தைப் போதிக்கின்றான். தமிழர் என்பதால்தான் சுடப்படுகிறார்கள் என்று. (மராட்டிக்காரனோ வேறு ஒருவனோ சென்றால் இது நடவாது என்பது போல) இவ்வாறே இலங்கை அரசும் பாசாங்காக தனது இப்படுகொலையில் நல்லபிள்ளையாக கையையும் விரித்துவிடுகிறது. தன்மீது பாயமுடியாத இந்த உலகமயமாதலின், இந்த உள்நாட்டுச்சட்டம் தான் இந்த விடயத்தில், இன்னொரு தீர்வாக இந்த ஏழை கூலி மீனவனைப் படுகொலை செய்திருக்கிறது என்பதை இவர்கள் (ரோலர்காரர்) லேசாக மறைத்து விடுகிறார்கள். கடலிலே வெடிக்கும் துப்பாக்கிக் குண்டின் மொழி, உலகமயமாதலின் அதிகார மொழி!! தங்கள் ரோலர்கள் இன்னும் அத்துமீறிப் போகவேண்டும் என்பதற்காகவே இப்படி ஏழைமீனவர்களைக் கிள்ளுக்கீரை ஆக்குகிறார்கள். இந்த மீனவர்களின் விலைமதிக்க முடியாத உயிர்களை, விட்டில்பூச்சியாகவும் ஆக்குகிறார்கள், இந்த உலகமயமாதல் கைவருடிகள். இந்த அற்ப சம்பளத்துக்காக இன்னும் உயிரைப் போக்க விரும்பாத ஏழைக்கூலி மீனவர்கள் எங்கே வேலைக்கு வராமல் போய்விடுவார்களோ என்ற பயத்தால், இதை இனப்படுகொலையாகக் காட்டி உசுப்பியும் விடுகிறார்கள். மொத்தத்தில் இந்த ஏழை மீனவனின் படுகொலையில் எல்லோரும் நன்றாகவே குனிந்து நிமிர்ந்து அரசியல் குளிர்காய்ந்தும் விடுகின்றனர்.

இலங்கை அரசு இந்த அப்பாவி (தமிழக) மீனவர்களைப் படுகொலை செய்வது சிங்கள மக்களுக்காகவோ அல்லது தமிழ் மக்களுக்காகவோ அல்ல. அது தனது உலகமயமாதலின் எசமானர்களுக்காகவே செய்கிறது. (இந்திய அரசும் மறுபுறத்தில் செய்விக்கிறது.) இதேபோலத்தான் இந்திய, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கையரசுடன் இணைந்து முள்ளிவாய்க்காலில் புலிகளை அழித்ததும் இனவழிப்புச் செய்ததும் எந்தவொரு இந்திய மக்களுக்காகவும் இலங்கை மக்களுக்காகவுமல்ல. இதேபோல புலிகளை ஆதரித்ததும் இலங்கைத் தமிழருக்காகவும் அல்ல. இந்தியத் (தமிழக) தமிழருக்குமாகவும் அல்ல. அரசியல்வாதிகள் நிலவும் அரசியலில் தமது இலாபங்களுக்காகவே கொட்டைப் பாக்கைப் போல அங்கும் இங்கும் துள்ளிக்கூத்தாடினர், இன்னும் கூத்தாடி வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு, சுனாமி ஆழிப் பேரலையில், நாகையும் கடலூரும் தான் இழப்புக்களையும் அழிவுகளையும் பெருமளவு சந்தித்திருந்தது. இந்த நாகை நீச்சாம் குப்பம் அருகே வாழும் நாகை தானுகா மீனவர்கள் இலங்கைக் கரையில் மீன்பிடிப்பதில்லை என்ற முடிவை சுயமாகவே எடுத்திருந்தனர். இதைமீறி இலங்கையில் பிடித்துவரும் படகுகளில் இருக்கும் மீன்களை விற்பனை செய்யும் மொத்தத் தொகையையும் அந்தந்த மீனவ பஞ்சாயத்திடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் தீர்மானித்திருந்தனர். இலங்கைக் கரையில் அத்துமீறி மீன்பிடிக்கும் படகுகள், ஒரு மாதத்துக்கு தண்டணையாக கடலில் இறங்க முடியாது என்பதை வலியுறுத்தியும் இருந்தனர். இந்த நிலையில் தான் வெள்ளாப்பு இணையச் செய்திகளாக (06. 03. 11) நாகை தொடர்பாக செய்திகள் வெளியாகியும் இருந்தன.

கடலிலே ஏழை மீனவர்களைக் கொன்றொழிக்கும் (இல-இந்) உலகமயமாதலின் இந்துமாகடலின் சரித்திர நிகழ்வு, 2007 ஆம் ஆண்டு, மீனவர்களின் (இந்திய) தன்னெழுச்சிப் போராட்டத்தால் எழுதிச் செல்லப்படுகிறது!... இது ஏழை மீனவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுவரும் சரித்திரம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் 36,000 மீனவர்களில், 12,000 பேர் இடம் பெயர்ந்து தொழில் செய்பவர்கள். இவர்களிடம் அதி நவீன மீன்பிடித்திறன் கொண்ட கலங்கள் இருக்கின்றன.

2007 ஆம் ஆண்டு மாச் (பங்குனி) மாதம் 29 ஆம் திகதி:

குமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த 09 மீனவர்களுடன் புறப்பட்ட ரோலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. கண்மண் தொரியாமல் தாக்குதலுக்கு உட்பட்ட இவ் ரோலர், 2007 ஆம் ஆண்டு இந்தப் படுகொலைத் இத்தாக்குதலுக்கு எதிரான போராட்டம், தன்னெழுச்சியாகவும் இருந்தது. இந்த 09 மீனவர்கள் படுகொலை தொடர்பாக, ஏப்பிரல் 02 ஆம் திகதி, குமரி கடலோர கிராமத்து மீனவ மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தநாள் ஆளும் கூட்டணியான தமிழக அரசு 'பந்த்' தையும் நடத்தியது. இக்காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட இரவிபுத்தன் துறை, அதி விசை படகில் (ரோலர்) ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடலில் தூக்கி வீசப்பட்டும் இருந்தனர். இதேபோல கோடிமுனை மீனவர்கள் காணமல் தொலைந்து போயுமிருந்தனர்.

குமரிமாவட்ட படுகொலை தொடர்பாக இந்திய எல்லைக்குள் 'மரியா" என்ற படகு, இந்திய கரையோர ரோலர் படகு காவற்படையால் கைதுசெய்யப்பட்டது. இம் 'மரியா"ப் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமான 06 விடுதலைப் புலிகள் அன்று இந்திய எல்லைக்குள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வாக்குமூலத்தின்படி மீனவர் கடத்தல் மற்றும் படுகொலைகளில் புலிகளின் தொடர்பு அம்பலமாகி இருப்பதாக இந்திய-அரசு தரப்பு செய்திகள் வருவதாக அடையாளப்படுத்தி - வுhந நேற ஐனெயைn நுஒpசநளள இ 20.05. 07 செய்தி வெயிட்டது. இதன் பின்னரே இந் - இல மீனவசட்டம் புதுப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக்காலத்தில் யாரும் கோடு கச்சேரி என்று இன்று போல வழக்கில் ஏறியிருக்கவில்லை. ஏனெனில் இது வில்லங்கங்களைக் கொண்டுவரக்கூடிய, பழுத்த இனவாத அரசியலால் மூடிமறைத்துவிட முடியாதது என்பது இவர்களுக்கு நன்கு தெரியும்! இவ்வாறு மீனவர்களின் படுகொலை இனவாதத்தைக் கடந்த பரிணாமங்களைக் கொண்டது.

இந்தப் புதுவருடம் ஜனவரி 12 இல்@

பாக்கு நீரிணைப் பகுதியில் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறீலங்கா ஆக்கிரமிப்பு இனவாதக் காடை அரசபடைகளால் கடலில் தூக்கி வீசப்பட்டிருந்தனர். தூக்கி வீசியவர்களைத் துப்பாக்கியால் சுட்ட ஆக்கிரமிப்புக் கொடுமையில் ஒருவர் கொல்லப்பட்டும் இருந்தார். மீண்டும் ஜனவரி 22 இல், கோடியாக்கரையில் மீன்பிடிக்கும் மூன்று மீனவர்களில் ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் காயமடைந்தும் இருந்தனர். புஸ்பவனம் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை மீனவர், கழுத்து இறுகக் கயிற்றால் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதால் துடிதுடிக்க இறந்திருந்தார். இவ்வாறு உலகமயமாதலின் வன்கொடுமைகளால் இறந்த ஜெயக்குமார், இன்று அரசியலின் இதர இலாபங்களுக்காகப் (இனவாத வாயால்) பேசப்படுகிறார். இந்த ஏழை மீனவனின் மரணத்துக்காக துடிதுடித்த எந்த மனிதப்புழுவும் இணைய அரசியலில் இல்லை!

மடிவலைகள் ரோலரை இழுத்துக்கொண்டு (நீரோட்டத்தால்) கரை தட்டுகின்றது என்ற இந்த இனவாத அரசியலுக்கு புதிது புதிதாக கொம்பு முளைக்கிறது. ரோலர்கள் தான் வலையை இழுத்துச் செல்கின்றன. வலைகளே ரோலரை இழுத்துச் செல்கின்ற உலக அதிசயங்கள் இனவாத (தமிழ்) அரசியலுக்குத்தான் பொருந்துகின்றன. ரோலர்கள் இலங்கையில் கரை தட்டுவதாக பரிசுகெட்ட கதைகளெல்லாம் இணையத்தில் உலாவுகிறது. அப்படித்தான் உலகம் தலைகீழாக மாறிவிட்டது என்று தறுதலைத்தனமாக வைத்துக் கொண்டாலும்@ இந்து சமுத்திரத்தின் நீரோட்டம் எப்படி இந்த ரோலர்களை, குடாவுக்குள் கொண்டு செல்கிறது? இந்துமா சமுத்திர பெருங்கடல் நீரோட்டம் கிழக்குக் கரையை அல்லவா அண்டி ஓடுகிறது. வழிவலைகள் கூட இலங்கைக்கு இழுத்துச் சென்றதாக சமீப காலங்களில் கதைகளில் கூட இல்லையே.

மீனவருக்கு (இந்திய) திசையறி கருவியாக பல இணையங்கள் பேருக்கு இருக்கின்றன போலக் காட்டிக் கொள்கிறார்கள். இவர்களின் திசைகளில், 360 பாகையை விடவும் 72 திசைகள் முள்ளுக் கொம்பாசின் பாவனையில் உள்ளது! ஆனால் ஜி.பி.எஸ் சும், எக்கோ கருவிகளையும் கொண்ட ரோலர்கள் இலங்கையில் கரை தட்டுகிறதாம். இவை உலக அதிசயங்களாக இருக்கிறது. எக்கோ கருவியானது படு பாதாளத்திலுள்ள விலங்கினங்களை விஞ்ஞான உத்திகளால் பச்சை நீல.. வர்ணங்களாகக் காட்டுகிறது! எத்தனை தொன் மீன் இருக்கிறது பிடிக்கலாம் என்பது முதல் எந்த ஆழத்தில் நிற்கிறோம் என்பதுவரை சொல்லக் கூடியது. மறு பக்கத்தில் இவை எதுவுமற்ற வானசாஸ்திரியாக பாமர மீனவன் இருக்கிறான்! இவன் ஒரு கரையால் கடலுக்கு இறங்கி மறுகரையால் வீடு வருபவன் அல்ல. இவன் திசைதெரியாமல் கடலில் அலைபவனுமல்ல. வாயில் எச்சி; ஊறுவதை வைத்தே கடலின் நிலைமையைச் சொல்லுகின்ற இயற்கை விஞ்ஞான மனிதன். இவனுக்கு எல்லை தெரியாது என்று சொல்லுவதும், மீனவனுக்கு கடல் (எல்லை) தெரியாது என்கின்ற இணையச் சுத்துமாத்துக்களும், மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பதும், நட்டுவக்காரனுக்கு நொட்டிக்காட்டுவதற்கும் சமமானது. குனிந்து தண்ணீரைப் பார்த்து ஆழத்தைச் சொல்லுவதும், நிமிர்ந்து வானத்தைப் பார்த்து திசையைச் சொல்லுவதும் மீனவரின் பரம்பரை அறிவியல் சொத்தாகும். இவனுக்கு கடலின் எல்லைகளும் தூரங்களும் அத்துபடி.

மீனவ தொழிலை அரசியல் பாசாக்கும் இணையத்தளங்கள், மீனவ தொழிலையும் அதன் இயற்கை அறிவியலையும் இழிவு செய்கிறது. இனவாதத்தைக் கொதிநிலையில் வைத்து கடலிலே ஏழை மீனவனைப் பிணங்களாகவும், கரையிலே மீன்களைக் காசாகவும் உலகமயமாதலுக்கான சேவக அரசியலையும் செய்கின்றனர்.

இந்த உலக மயமாதலுக்காகத்தான் இவர்கள் கடலைப் பாத்திகட்டி சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்கிறார்கள். குட்டை, குளம், நீரேரிகள், கடலேரிகள், குடாக்கள், வாவிகள், கடலென்று ஒன்றையும் மிச்சம் விடாமல் இந்த உலகமயமாதல் ஆக்கிரமித்து வருகிறது. அதற்காகக் கடலை ஒரு சினிமாக்கொட்டகை மாதிரி ஆக்கி வைத்திருக்கிறார்கள். கடலுக்கே சொந்தக்காரரான பாமர மீனவர்கள் -கலரியிலேதான்- மீன்பிடிக்க முடியுமாம் (12கடல் மைலுக்குள்). இதற்குக் கூட ஆயிரத்தெட்டுச் சட்டங்களும் அளவுகளும் பத்திரங்களும் வைத்திருக்கிறார்கள்;. பெரிய பணக்கார மீன்பிடிகாரர் அதற்கு மேலே மீன்பிடிப்பார்களாம். இதற்குப் பெயர் ஆழ்கடல் மீன்பிடியாம். இதற்கும் மேலே -சூப்பர் பல்கனி - மீன்பிடியாக சர்வதேச பன்னாட்டுக் கம்பனிகளின் இராட்சதக் கப்பல்கள் மீன்பிடிக்குமாம். இதற்குப் பெயர் சமுத்திர மீன்பிடியாம். இந்த வகுப்;புவாரியாக மீன்பிடிப்பவர்கள் வகுப்புக்குத் தக்கமாதிரி அந்தந்த நாடுகளின் லைசன்ஸ் உடனும், ஒப்பந்தப் பத்திரங்களுடனும் தான் மீன்பிடிக்க முடியும். பெரும் சமுத்திர மீன்பிடிக் கப்பல்கள் கரையிலே வருவதற்கு மீன்பிடித்துறைமுகங்கள் வேண்டுமாம். இவர்கள் மீன்களைக் பதனிடுவதற்கு பெரும் களஞ்சியங்களும், குளிரூட்டிகளும் தேவையாம். கப்பலைப் பழுதுபார்க்க சிப்ஜாட்டும், இவர்கள் தங்கிப் போவதற்கு பெரும் உல்லாச விடுதிகளும் தேவையாம். இப்படி உலகமயமாதலின் பெரும் சுரண்டல் தொழில் சுற்றுலாவுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தேவை. இவை எல்லாத்துக்கும் அணையாத மின்சாரமும் தேவை. இவைகளுக்கு கரைக்கு -நிலத்துக்கு- எங்கே போவது? அதுக்குத்தான் கடலோரங்களில் இருக்கும் மீனவகிராமங்களையும், குப்பங்களையும் அகற்றிவிடுவது. இதுக்குத்தான் இந்தச் சமுத்திரத்துக்கான சட்டமும் கடலோரத்திட்டமும் உலகமயமாதலால் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு இத்திட்டங்களை உருவாக்க இருப்பதோ சிறிய கடற்கரை ஓரங்களே. முருக்குப்போல அதிவேகமாகப் பருத்துவரும் இந்தியாவுக்கு இவற்றை நடைமுறைப்படுத்த உடனடியாகவே இந்த ஒடுக்குமுறை மேலாண்மைச் சட்டங்கள் தேவையும் படுகிறது. இப்படித்தான் திருவள்ளுவர் மாவட்டம் எண்ணூருக்கு அடுத்துள்ள கட்டுப்பள்ளியில் மீன்பிடித் துறைமுகம் ஒன்று வந்தது. கப்பல் கட்டும் தொழிற்சாலையும், அனல்மின் நிலையமும் கூடவே வந்தது. இவற்றை இரண்டு எண்ணை நிறுவனங்கள் கட்டியும் வருகிறது. இத்துறைமுக விரிவாக்கத்தால் மீனவசமூகத்தினர் மேலும் நெருக்கடிக்கு ஆளாகியும் வருகின்றனர். சுமார் 15 மீனவ கிராமமக்களின் வாழ்வாதாரம் பதைபதைப்புக்கு உள்ளாகியும் வருகிறது. இதேபோல தமிழ்நாட்டில் கன்னியாகுமாரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மேலும் 6 மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்பட்டும் வருகிறது. ஆனால் மீனவர்களுக்கு எந்த மாற்றுத் திட்டமும் இல்லை. இதைக் கேட்பாருமில்லை.

ஏற்கனவே கல்ப்பாக்கத்தில் அணுஉலை அமைக்கப்பட்டதால் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது போயிருந்தது. போதாக்குறைக்கு அணுஉலைக் கலனில் இருந்து வெளியேறும் கொதிநீர் கடலை நாசப்படுத்துகிறது. இச்சுடுதண்ணீரால் மீன்கள் செத்து மிதக்கின்றன. தொழிலுக்குப் போகமுடியாத வறிய மீனவர்கள் இம்மீன்களைப் பொறுக்கி தமது வாழ்க்கைளை ஒருவாறு ஓட்டி வருகின்றர். இதனால் இவர்கள் பெரும் நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தையும் கொண்டிருக்கின்றனர். பன்னாட்டுக் கம்பனிகளின் அள்ளுகொள்ளை இலாபத்துக்காக உருவாக்கப்பட்ட இராட்சத இறால் பண்ணைகள் பெருந்தொகையான கழிவுகளைக் கடலிலே தள்ளி வருகிறது. இவைகளால் இந்திய மீன்வளம் அழிந்து வற்றியும் வருகிறது. இப்படி கூடல்குளத்தில் மேலும் 6 அணு உலைகளை அமைக்க இந்தியா ரசியாவுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளதாம். இவ்வாறு அதிவேகமான அபிவிருத்தித் திட்டங்களுக்காக கரையோர மக்கள் காதும் காதும் வைத்ததுபோல் அகற்றப்பட்டும் வருகின்றனர். மும்பே கோவாவில் வறிய ஏழை சிறுபிடி மீனவர்கள் கரைகளில் இருந்து துரத்தப்பட்டு விட்டனர். இவர்கள் கோவில்களுக்கு மெழுகுதிரியும் கற்பூரமும் செய்கிறார்கள். மண்வெட்டப் போகிறார்கள். கரையோரங்களில் நிமிர்ந்து எழும் உலகமயமாதலுக்கான கட்டிடங்களில் கட்டிடக் கூலிகளாக மாறி வருகிறார்கள். சாலைபோடுவதற்கு தெருவோரத்திலே வேலை செய்கிறார்கள். தொண்டர் நிறுவனங்கள் இவர்களுக்குத் தொழில் கற்றுக் கொடுக்கிறதாம்? மண்ணாங்கட்டி எப்படிச் செய்வது (செங்கட்டி) என்பதைத் தவிர இவர்களின் மானசீகத் தொழிலுக்கு இத்தொண்டு நிறுவனங்களோ உதவப்போவதில்லை. இவ்வாறு மீன்பிடி தொழிலிருந்து விரட்டப்பட்டவர்கள் போக அங்கே தொழில் நடக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பன்நாட்டு நிறுவனங்களும், பாலிவூட் நடிகர்களின் தனிச்சொத்து தனியார் நிறுவனங்களும் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டுக் கரைகளிலும் இவர்களது காற்று இணைந்து மெல்ல வீசத்தொடங்கியும் உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை அவர்களைப் போல அதிக அவசரம் இவர்களுக்கு இல்லை. நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த தாராளமான கரையோரம் இருக்கிறது. நீண்டகால யுத்தத்தால் தமிழர் கரையோரங்களும் கடலும் இவர்களிடமே இருந்தது. வன்னியுத்த வெற்றியால் பெரும் கரையோரப் பிரதேசம் இவர்கள் கைவசம் இருக்கிறது. இவர்கள்தான் கரையோரத்தில் இனி மக்களைக் குடியேற்ற வேண்டும் என்ற கதி இருப்பதால், உலகமயமாதலுக்கு ஏற்றதாய் அபிவிருத்தி என்ற போர்வையில் இதைச் செய்து முடிப்பர். ஆழ்கடல் மீன்பிடிக்கு கிழக்குக் கடல் வெறுமையாக இருப்பதால் இவர்களுக்கு இப்போதைக்கு இதற்கு எதுவும் அவசரமில்லை.

ஆனாலும், மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலச் சந்தியிலும் வந்து மீன்பிடிக்கும் இராமநாதபுர மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியையும், கள்ளக் கடத்தல்களையும் காரணமாகக் காட்டி இந்த உலகமயமாதல் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்துகிறது. கள்ளக் கடத்தல்களைக் காரணம் காட்டி மன்;னார் வளைகுடா பகுதியை ஒட்டிய கடல்களில் மீன்பிடி மட்டுப்படுத்தப்பட்டும் மறுக்கப்பட்டும் இருந்தது. பாஸ்முறை கடுமையான இறுக்கத்தோடு பயன்படுத்தப்பட்டது. வளைகுடாப் பகுதியில் இருந்து வந்த கண்காணிப்பு ரோந்து நடவடிக்கை பாக்ஜலச் சந்திக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பன்னைக்குளம், புதுவலசைப் பகுதியின் மீனவர்களின் புதுப்படகுக்காரருக்கு இவைகளைக் காரணங்களாகக் காட்டி கடலிலே மீன்பிடிக்கும் உரிமத்தை அரசு சுலபமாகத் தடைசெய்தும் விட்டது. வடக்கிலே ருசி மீன்களைத் தருகிற மயிலிட்டி கட்டைக்காட்டுப் பகுதியை அரசு இன்னும் திறந்து விடவும் இல்லை. இதை இராணுவச் சூனியப்பிரதேசமாகவே இன்னும் வைத்திருக்கிறது. இந்தியாவில் பிடிக்கப்படுகிற எல்லா மீன்களும் ருசி மீன்களாக இருப்பதில்லை. இதனால் இவை சந்தைகளில் விலைபோவது மந்தமாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் உள்ளுர் தரகுகளை வைத்து இம்மீன்களை அடிமட்ட விலையில் வாங்குகிறார்கள். பாமர மீனவர்கள் ஏதோ அவைகள் நாறிப்போகாமல் விற்றுவிடுவதாகவும் நினைக்கின்றனர். இவற்றை வாங்குகின்ற தனியார் நிறுவனங்கள் அவற்றைத் தூளாக்கி, தெரிதாக்கி 80 வீத புரத உணவாகத் தயாரிக்கின்றனர். இவற்றை மணமற்ற குழந்தை உணவாக அடைத்து ஒரு வீதப்புரதமாகப் பெரும் இலாபத்துக்கும் விற்றும் விடுகின்றனர்.

தற்போதுள்ள நிலையில் 50 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கடற்பரப்பு குறித்து எதுவும் அறியமுடியாதுள்ளதாக அரசு கூறி வருகிறது. இது குறித்து ஒஸ்திரியா நாட்டுடன் ஒரு பேச்சை நடத்தியுள்ளது. புதிய ராடர் கருவிகளைப் பெறுவதற்காகவும், இதை வைத்துக் கொண்டு இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் அத்துமீறும் மீன்பிடி வருகையை கட்டுப்படுத்தி விடலாம் என்றும் கூறிவருகிறது. இந்த வளைகுடா அரசியல் விளையாட்டில், ஐநாவின் ஓர் அங்கமான உணவு, விவசாய அமைப்பு 122 மில்லியன் ரூபாயில் இலங்கையுடன் ஒர் ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளது. இது மன்னார் வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடற்தொழிலாளர்களுக்கான புதிய இறங்கு துறைமுகங்களைக் கட்டுவதற்கானதாகும். இதன்படி 1.1 மில்லியன் டொலரில் 11 துறைமுகங்கள் மன்னாரிலும், 3 முல்லைத் தீவிலும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு முல்லைத்தீவில் கடற்தொழில் காரியாலயம் ஒன்றையும் கனேடிய நிதி உதவியுடன் உணவு விவசாய அமைப்பு உருவாக்கவுள்ளது. இப்படி இந்த உலகமயமாதல் 'நீலப்புரட்சி" என்ற தொழிற்புரட்சி ஊடாக உலகப்பசியைப் போக்கிவிடலாம் என்ற தமது நீண்டகால உத்தேச வாய்ப்பாட்டைச் சொல்லிக் கொண்டும் கொள்ளையடிக்க நினைக்கிறது. நிலங்களைத் தரிசாக்கிய பசுமைப்புரட்சியும், கடலை உப்பளங்களாக மட்டுமே மாற்ற நினைக்கிற நீலப்புரட்சிகளும் சுரண்டல் கொள்ளைக்கானதே ஒழிய உலகப் பசியைப் போக்குகின்ற மார்க்கத்துக்கானது அல்ல. சுரண்டலை ஒழிக்காமல் உலகப் பசியை ஒருக்காலும் ஒழிக்க முடியாது என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாததுமல்ல.

உலகத்தில் உற்பத்தி செய்யப்படும் புரதத்தில் சுமார் 70 சதவீதம் மரக்கறியில் இருந்து பெறப்படும் தாவரப் புரதமாகும். மிகுதி 30 சதவீத மாமிசப் புரதத்தில் நிலத்திலிருந்து 25சதவீதமும், கடலிலிருந்து 5 சதவீதமும் பெறப்பட்டு வந்தது. இருப்பினும் உலகத்தில் இருக்கும் பாதிப்பேருக்கு போதிய புரத உணவோ கிடைப்பதில்லை. உலகிலுள்ள நிலத்தில் 11 வீதம் மனித உணவு உற்பத்திக்கும், 22 வீதம் மிருக உற்பத்திக்குப் பயன்பட்டது. புரதத்தில் 8 அமினோ அமிலங்கள் இருக்கிற போதும், விற்றமின் பி 1-2 தாவரப்புரதத்தில் இருப்பதில்லை. இவை மாமிசப் புரதத்திலேயே இருப்பதால், ஒருமனிதனுக்கு நாளொன்றுக்கு ஏறத்தாள 60 - 70 கிராம் மாமிசப்புரதம் தேவைப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றிருக்கும் கடலை சமமாகப் பங்கிட்டால், ஒரு மனிதனுக்கு 5 400 சதுர மீற்றர் கடல் சொந்தமாகும். ஆனால் 60 கிராம் மாமிசப் புரதமே வாழ்க்கையில் கிடைக்காத சுமார் 5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழுகின்றனர். நிலத்திலுள்ள விலங்குகளில் இருந்து 1 கிலோ புரதத்தை பெறுவதற்கு அவற்றுக்குச் சுமார் 6 கிலோவுக்கு மேல் தாவரப்புரதத்தை கொடுக்கவேண்டி இருக்கிறது. கடல் புரதத்தில் 1 கிலோவைப் பெறுவதற்கு மொத்தமாக 20 கிலோ கனிப்பொருட்கள் செலவாகிறது. இவற்றில் அதிகமானவை இயற்கையாகவே கடலில் வளங்களாக இருப்பதால், விலங்குப் புரதத்தில் மீன் புரதமே மலிவாகப் பெறப்படுகிறது.

உலகப்புகழ்பெற்ற யுனெஸ்கோ, யுனிசெவ் போன்ற அமைப்புக்கள் கிழக்காசிய நாடுகளில் பணத்தை அள்ளித் தெளித்து உணவு உற்பத்திக்கான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. உணவுப் பசியைப் போக்கிவிட மாய்வதாக் காட்டிக்கொண்டு மறுபுறத்தே உலகமயமாதலுக்கான திட்டமிடுதலையும் கூடவே ஒழுங்குசெய்கிறது. வளர்ந்த நாடுகளில் ஓர் அலகு (யூனிற்) நெல் உற்பத்திக்கு 10 அலகு மேல் கனிவளம் தேவையாக இருக்க, இலங்கை, பிலிப்பைன்ஸ்.... போன்ற நாடுகளில் ஒரு அலகுக்கு 0.65 - 1 அலகு கனிவளம் போதுமானதாக இருக்கிறது. மிகுதி குறைந்த விலையிலான மனிதவளமாகப் பெறமுடிகிறது. மொத்தத்தில் எமது நாடுகளில், நீர், நிலம், கடல், வனம், ஆகாயம், மனிதவளங்கள் என்று இந்த உலகமயமாதல் ஒட்ட உறிஞ்சிப் பிழைப்பதைத் திட்டமிடுகிறது. நிலத்தையும் நிலத்திலுள்ள வனத்தையும் சுருட்டிய ஏகாதிபத்திய உலகமயமாதலும், அதன் கைவருடியான உள்நாட்டு அரசுகளும் தற்போது கடலின் மீது சுற்றுக்கும் வந்துள்ளது.

இலங்கையில் கிழக்குக் கடலே ஆழமான பெரும் கடலாகும். இது மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து அம்பாறை அறுகம்பை வரையும் கிழக்குக் கடல் என அழைக்கப்படுகிறது. கிழக்குக் கடல் கரையில் இருந்து திடீரென ஆழம் கூடுவதால் இதை 'மடிவு கடல்" என்றும் அழைப்பர். சில மீனவர்கள் உயர் கடல் என்றும் அழைப்பர். அமைதிக் கடலான இந்து சமுத்திரத்தின் பெரும் கடல் நீரோட்டம் கிழக்குக் கரையைத் தழுவி ஓடுகிறது. இதனால் ஏற்படும் கடலரிப்பே கரைகளில் ஆழமாக இருப்பதற்குக் காரணம் எனவும் சிலர் கருதுகின்றனர்.

இந்த ஆழ்கடலின் சமுத்திர மீன்பிடி யப்பானுக்கும் சீனாவுக்கும் குத்தகைக்கு எழுதப்பட்டிருக்கிறது. இது புலிகளுடனான பேச்சுவார்த்தைக் காலத்திலேயே உருவாகியும் இருந்தது. இன்று மட்டக்களப்பில், புன்னைக்குடா, கறுவன்கேணி, மூபாலையடித்தேணா பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியை அமைக்க அரசு திட்டமிடுகிறது. இதற்காக வாழைச்சேனையில் ஓர் மீன்பிடித் துறைமுகத்தையும் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்திய முதலீட்டாளர்களுடனேயே இந்த ஆழ்கடல் மீன்பிடித்திட்டம் ஆரம்பமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று இந்த ஏழை மீனவர்களைப் பலிகொடுத்து வரும் ரோலர்காரர்கள் நாளை இந்த மீன்பிடி திட்டத்தில் இணைத்தும் கொள்வார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஜெயக்குமார் போன்ற ஏழைமீனவர்களின் உயிர்கள் என்றும் திரும்பி வராது. இன்று பேசப்படும் இந்த இனவாத அரசியல் நாளை இவர்களால் வேறுவிதமாகவும் பேசப்படும்.

இலங்கையில் புத்தளம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 470 சதுர மைல் கொண்ட கடலேரிகள் இருக்கின்றன. யாழ் கடலேரி 160 சதுர மைலைக் கொண்டவை. தொண்டைமானாறு 30 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இதை வடமராட்சி தெற்கு கடல்நீரேரி என்றும், வடமராட்சி வடக்குக் கடல்நீரேரி என்றும் மீனவர்கள் பிரித்தும் அழைப்பர். வடமராச்சி தெற்கு கடல்நீரேரி உப்பாறு என்று சொல்லப்படுவதுடன், இதன் கிழக்கு எல்லையாக பெரிய பச்சிப்பள்ளியையும், தென்கிழக்கு எல்லையாக வடக்குத் தொண்டைமானாறு கடலையும் கொண்டது. ஆனையிறவுக் கடல்நீரேரியின் கிழக்குப் பகுதி சுண்டிக்குளம் கடலுடனும், மேற்குப் பகுதி யாழ்-கண்டி வீதியால் தனியாக்கவும் படுகிறது. இக் கடலேரிகளின் அதிகூடிய ஆழம் 13 அடிகள் மாத்திரமே. அளவெட்டியில் இருந்து உற்பத்தியாகும் வழுக்கை ஆறும், இவ் உப்பாறும் அராலிக் கடலிலே கலக்கின்றன. உப்பாறு சரசாலை, மட்டுவில், கைதடி, நாவற்குழியை ஒருபுறமாகவும்@ புத்தூர், கோப்பாய், சிவியாதெருவையும் ஊடறுத்துப் பாய்கிறது. இவற்றை அண்டி தாழ்நிலை வயற்பிரதேசங்கள் இருக்கின்றன. இவ்வயல்களில் கண்மூடித்தனமாகத் தெளிக்கப்படுகின்ற அளவுக்கதிகமான கிருமிநாசினிகளால் இவ்வேரிகள் பாதிக்கப்படுகின்றன. இக்கிருமி நாசினிகளில் காணப்படும் நஞ்சு நீடித்து நிற்கக் கூடியவை என்பதால் கடல் உயிரினங்களுக்கு இவை ஆபத்தாகவும் அமைகின்றன. வடக்குக் கிழக்கில் காணப்படுகின்ற குளங்களும், ஏரிகள் குடாக்களின் முகத்துவாரங்களும் நூற்றாண்டு காலமாத் தூரெடுக்காமல் கிடக்கின்றன. பல குடாக்களையும் கடலேரிகளையும் பெரும் செல்வங்களாகக் கொண்ட வடக்குக் கிழக்குப் பிரதேசம், வரண்ட பகுதியாகவும் இருப்பதால் இங்கு உப்பு தாராளமாக விளையக்கூடியதாகவும் உள்ளது. ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்தீவு போன்ற இடங்களில் இது விளைகிறது. இதனால் கடல்தொழிலில் கருவாடு பதனிடுவதில் வடக்குக் கிழக்கு முதன்மையாகவும் இருக்கிறது. 80 சகாப்தத்தில் கொழும்புச் சந்தையில் வடக்குக் கிழக்குக் கருவாடு 93 சதவீதத்தை எட்டியிருந்தது.

ஏரிகளில் மீன்பிடிப்பவர்கள் முழங்காலுக்கு உயரம் குறைந்த வள்ளங்களையே பாவித்து வருகின்றனர். இது ஏரிகளில் வலைகளை வீசுவதற்குச் சுகமாக இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். அதேவேளை முதலைகளின் ஆபத்துகளில் இருந்து தப்புவதற்கு, அதற்கான பலமான வள்ளங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் லாஹீகல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள, பானம்பத்துவ கிராமத்துப் பெண்கள் ஆண்டாண்டு காலமாக தமது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித்து வருகிறார்கள். உபகரணங்களோ, வள்ளங்களோ இல்லாத ஏழைப்பெண் மீனவர்கள். ஏரிக்கரையிலே கண்களை மூடி, குலதெய்வங்களை நேர்ந்துகொண்டு ஆபத்து நிறைந்த ஆழ ஏரிகளில் இறங்குகின்ற பெண் மீனவர்கள். முதலைகளும் விச மீன்களும் காணப்படும் இவ்வேரியிலே இறங்கி, வெறும் கைகளால் இறால்கள், நண்டுகள், மீனென்று பிடித்து வருகிறார்கள். மூன்று தலைமுறைக்கும் மேலாக உள்ளுர் சந்தைகளில் உச்சவிலையில் இருக்கும் இறால், நண்டுகள், மீன்களை இவர்கள் பிடிக்கிறார்கள். நாளொன்றுக்கு இரண்டு மூன்று கிலோக்களை உயிருடன் கைகளால் பிடித்துவரும் இப்பெண்களில் சுமார் 12 பேர்வரை இத்தொழிலைத் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். இவ்வாறு கைகளால் பிடிக்கும் இறால்கள் நீண்டநேரம் உயிருடன் இருப்பதால் நல்லவிலை போகிறது. கடந்த வருடம் 'ப்பிறக்டிக்கல் எக்சன்' பிராந்திய நிறுவனத்தினர் (இலங்கை. இந்திய பாக்கிஸ்தான்....) இங்கு வந்தபோதே, இந்தப் பெண்களின் பாரம்பரிய மீன்பிடி வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. தற்போது இவர்களில் 12 பேர் ஏரி முகாமைத்துவ அதிகாரசபை பிரதிநிதிகளாக இன்று உள்ளனர். பெண்கள் நூற்றாட்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், பானம ஏரி முகாமைத்துவ அதிகார சபையின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களாக, இப்பெண் மீனவர்கள் இருவர் இடம் பெறுவது நினைவு கூரவும் தக்கது.

உப்புநீரும், நன்னீரும் கலந்து விடுகிற இந்த இரண்டும் கெட்டான் நீர்வளத்தை, சவர் நீர் என்று அழைப்பர். இச்சவர் நீர் மீன்உற்பத்திக்கு நல்ல வளமான நீர்நிலையாகும். கிட்டத்தட்ட இந்தச் சவர்நீரில் 112 வகையின மீனினங்கள் வரை வாழ்ந்துவருகின்றன. இங்கே 65 வீதமான மீன்கள் கடலிலிருந்து வருகின்றன. 30 வீதமானவைகள் சவர்நீரிலேயே வாழ்கின்றன. மீதி 5 வீதமானவை நன்னீரிலும் வாழக்கூடியவை. பிரபல்யமான வியாபார கடலுணவுகளான இறால், ஏரி நண்டுகள்(பச்சை - நீலம்), கடலட்டைகள் சிப்பிகள் என்பன இங்கே காணப்படுகின்றன. உலகத்தில் சவர்நீர், கடல்நீர் சிப்பிகளே விலை உயர்ந்தவை. 50 தொடக்கம் 200 அடிவரையிலுள்ள கடலடியில் இவைகள் வாழுகின்றன. இவைகள் நன்றாகத் திளைக்கக்கூடிய வளச்சூழலாக வளைகுடாக்கள காணப்படுகின்றன. உலகத்தில் விலைமதிப்பானதும் அருமையான சிப்பிகளைத் தருவது பாரசீக வளைகுடாவாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மாற்றுக் குறையாத தரமான முத்துக்களைத் தருவது மன்னார் வளைகுடாவாகும். தம்பலகாமம் வாவி முத்துக்குளிப்புக்குப் பேர்போன இடங்களில் ஒன்றாகும். இதைப்போல கிழக்கிலே நிலாவெளி, புறாமலை, பாசிக்குடா போன்ற பகுதிகள் கடலட்டைக்குப் பேர் போனவை.

இலங்கையில் மொத்த மீன்பிடியில் 37 சதவீதத்துக் மேல் சவர்நீரில் இருந்தே பிடிக்கப்படுகிறது. இந்தச் சவர்நீரில் வாழுகின்ற சில இன இறால்கள் கடலேரியில் வாழ்ந்து முதிர்ந்த பின்னர் கடலுக்குச் செல்கிறது. கடலிலே புணர்ந்து அங்கேயே முட்டையும் இடுகின்றன. முட்டையில் இருந்து வெளியாகும் குடம்பிகள் மறுபடி கடலேரிகளைத் தேடி நீந்திவருகின்றது. சில இன இறால்கள் கடலேரியிலேயே வாழ்ந்து, புணர்ந்து, முட்டையிட்டுப் பல்கிப் பெருகுகின்றன. சமன் இன மீன்கள் கடலிலே வாழ்ந்து முதிர்ந்த பின் நீரேரிகளைத் தேடிச் சென்று முட்டை இடுகிறது. இந்த முட்டையில் இருந்து வெளிவரும் குடம்பிகள் மீண்டும் கடலைத் தேடி நீந்திச் செல்கிறது. இதனால் மீனவர்கள் நீரேரி முகத்துவாரத்தில் பொறிகள், வேலிகள், பட்டிகள் என வலைகள் வைத்து இவற்றைப் பிடிக்கிறார்கள். சிலர் டைனமற்றை வீசிக்கூட இவற்றைப் பிடிக்கிறார்கள். இவ்விடங்களில் இவ்வகையாக மீன்பிடிப்பதை மீனவர்கள் தவிர்ப்பதோடு, கண்டிப்பாகத் தடைசெய்யப் படவும் வேண்டும். சமன் இனமான கெண்டை, கெழுறு, கயல், குராம், நிலாப்பியா - திலாப்பியா (யப்பான் மீன்), மட்டை இறால் (வெள்ளை இறால்) என்பவையும் ஏரிகளை நாடியும் வாழ்விடங்களாகக் கொண்டும் சீவியம் நடத்தி வருகின்றன. வியாபார ரீதியாக மவுசுகொண்ட திலாப்பியா என்கின்ற யப்பான் மீன் பெருவகையாகப் பல்கிப் பெருகும் வகையினமாகும். இவை ஒரு சிறந்த வளர்ப்பு இன மீனினமும் ஆகும். பால்மீன், மண்முலே போன்ற மீன் இனங்களையும் கடலேரிகளில் புகுத்தி வளர்ப்பது ஒரு சிறந்த முறை என்றும் கருதப்படுகிறது.

ஏழு நீர் ஊற்றுக்களையும், இயற்கையான அலைத்தடுப்புச் சுவர்களையும் கொண்ட திருகோணமலை இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ளது. இதனால் இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பூகோள அரசியலிலும் பேசப்பட்டும் வந்தது. உலகத்தில் அபூர்வமாகக் காணக்கூடிய இன்னொரு செல்வத்தையும் இந்தத் திருகோணமலைக் கடல் கொண்டுமுள்ளது. திருகோணமலை கடலடியில் ஆறுகள் போன்ற குளிர்ந்த நீரோட்டம் ஓடுகிறது. இப்படி கரைக்கு அணித்தாக செழிப்பான குளிர்ந்த நீரோட்டம் சாதாரணமாக அமைவதில்லை. இந்த வரப்பிரசாதமும் எமது கடற்செல்வத்தில் ஒன்றாகும். மேல்மட்டக் கடல் 30 பாகை வெப்பமாகவும், கடல் அடி 0 பாகை குளிர்ச்சியாகவும் இருப்பது உலகிலேயே மிகச்சிறந்ந இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த வெப்ப வேற்றுமையைப் பயன்படுத்தி உயர் வலுவைக்கொண்ட மின்சாரத்தைப் பெறமுடியும் என்று கால் நூற்றாண்டுக்கு முன்னர் அத்தர் கிளாக் குழுவினர் கூறியிருந்தனர். இவர்களின் கருத்துப்படி நாற்பது இலட்சம் கிலோ வாட்டுக்குக் (4000,000 கி.வா) குறையாமல் மின்சாரத்தைப் பெறலாம் எனவும் கணிக்கப்பட்டது. இதனால் இந்தியா திருகோணமலையில் அதிக கவனம் செலுத்துவதோடு, பிராந்திய அரசியலில் இலங்கையில் அதிக ஆழுமையையும் கொண்டும் இருக்கிறது.

ஒரு காலத்தில் யப்பானும், ரசியாவும் திமிங்கில வேட்டையை சமுத்திரக் கடலிலே போட்டி போட்டு நடத்தி வந்தது. இந்துமாக் கடலிலே திமிங்கிலங்கள் கக்கிவிடும் வாசனைப் பொருளான அப்பர் கிறிஸ், இந்துசமுத்திர நீரோட்டம் காரணமாக கிழக்குக் கரைகளை இவைகள் வந்தடைகின்றன. இலவசமாகக் கரைகளை அடையும் இவைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் செல்வங்களாக இந்தக்கடலானது கொண்டுவந்தும் சேர்க்கிறது. கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண அழகிய வளர்ப்பு மீன்கள் கிழக்கிலே பெரும் கொடைகளாகவும் இருக்கின்றன. பௌர்ணமி நிலாவிலே பாடும் மீன்களை (அல்லது மட்டிகளை) கொண்ட, மீன்பாடும் தேனாடான எமது அரும்பெரும் கடல்செல்வங்களை தறிகெட்ட மீன்பிடிகளால் அழித்து, இந்தப் பாடும் மீன்களை முகாரி பாடவும் வைக்கலாமா?

இவ்வாறு குடாச் செல்வங்களையும், ஏரிக் கொடைகளையும் கொண்ட எமது கடல் செல்வங்கள், பன்னாட்டுக் கம்பனிகளாலும் இவர்களின் உள்நாட்டுத் திருடர்களாலும் மூட்டை கட்டப்பட்டு வருகிறது. குளத்திலிருந்து சமுத்திரம் வரையும், கிணற்றிலிருந்து ஆகாயம் வரையும் உலகமயமாக்கல் அரக்கர்களால் அள்ளிச் செல்லப்படுகிறது. இக் கொள்ளைகளுக்காகவும் பெரும் சுரண்டலுக்காகவும் உள்நாட்டு அரசுகள் சொந்த மக்களுக்குச் கொடிய சட்டங்களையும், தடைகளையும் விதிக்கின்றது. உலகமயமாதலின் மேலாண்மைக்காக மண்ணிலும் கடலிலும் துப்பாக்கிகள் சட்டமாகப் பேசுகிறது. கடலிலே நடந்து வருகின்ற தொடர் படுகொலைகள் உலகமயமாதலின் மக்கள் விரோத அரசுகளின் கூட்டுப் பொது மொழியாகவும் இருக்கிறது. கடலிலே காலங்காலமாக ஊதியம் பெறாத கடல் எல்லைக் காவலர்களாக இருந்துவரும் மீனவர்களை, உலகமயமாதலின் சமுத்திர வேட்டைக்காகவும் இதற்கான கரையோரக் குகைகளுக்காகவும் ஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளியும் இரத்தம் குடித்தும் வருகிறது இந்த மக்கள் விரோத அரசுகள்.

திருத்தங்களும், வருத்தங்களும்..

முதல் பகுதியில், 'வன்னி யுத்தத்தின் பின்னர் இலங்கை தனது கடற்பரப்பை விஸ்தரிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக ஐநாவைக் கோரி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதன்படி தற்பொழுது இலங்கையின் கடற்பரப்பு 5 இலட்சத்து 17 ஆயிரம் கடல் மைல்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது " இச் செய்தியானது 12.11.2010 ஆம் திகதி 'தினகரன்' இணையச் செய்தியில் வெளியாகி இருந்தது. இவ் அளவுகள் கடல் மைல்களா? என்று சரியாகச் சொல்ல முடியவில்லை.

பகுதி இரண்டில், 'தங்கூசி வலை (நைலோன் வலை), சுருக்கு வலை, மடிவலை என்பன இலங்கை அரசால் நீண்ட காலமாகவே தடைசெய்யப்பட்டும் விட்டது" நைலோன் வலை இன்றும் பாவனையில் இருப்பதால், அடைப்புக்குறிக்குள் நான் இப்பெயரை இட்டதால், வாசகர்களுக்கு பிழையான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. இத்தவறுக்கும், வாசகர் சிரமத்துக்கும் மனம் வருந்துகிறேன். தங்கூசி நைலோன் மூலத்தைக் கொண்ட நூலாகத் திரிக்கப்படாத ஒர் நிலையாகும். நைலோன் வலை இழைகளாகத் திரிக்கப்பட்ட ஒர் நிலையாகும். இன்று ஐரோப்பிய நாடுகளில் இந்த நைலோன் வலைகளின் பாவனை அருகியும் விட்டது. நைலோனின் இன்னொரு புதிய நிலையாக மூல்ஃபின் வலை இன்று பாவனையில் உள்ளது. இதன் ஒரு பட்டு இழையின் தடிப்பு 0.2 மில்லி மீற்றராகும். திரிக்கப்பட்ட சாதாரண நைலோன் வலைகளை விட இது பாரம் குறைந்தது. அதைவிடவும் 15 - 20 மடங்கு வலுவானதும், நீண்டகாலம் உழைக்கக்கூடியதும். இவற்றை சலவை மெசினில் போட்டும் இலகுவாகக் கழுவக்கூடியதாகவும் இருக்கிறதாம்.

கட்டுரைக்கான துணைகள்

- Vitenskap-

-  Møre Note-

- அம்பு -

- ஊற்று -

- இணையச் செய்திகள் -

 

வாரம்-10, பங்குனி 2011

ஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்:சமுத்திரச்சட்டமும், கடலோரத் திட்டமும் பாகம் ஒன்று

2.ஏழை மீனவர்களை மரணப் படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்: சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும். -2


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்