அன்று எந்த அரசியல் நோக்கில் சதிகார புளட் ஒரு பெண்ணை பாலியல் ரீதியான வக்கிரத்துடன், தனது சொந்த அசிங்கங்களுடன் அரங்கேற்றி நடத்திய கூத்தைத்தான், இன்று மீளவும் ஜென்னி அரங்கேற்றுகின்றார். சில பாத்திரங்களை மாற்றி, பல்லியின் பல்லவியுடன் அது அரங்கேறுகின்றது. இவர்கள் அரங்கேற்றும் கூத்தில் பாதிக்கப்பட்டது ஒரு பெண். அந்தப் பெண் இன்று ஒரு சாதாரண வாழ்வு வாழ்கின்ற ஒரு அப்பாவி அபலை. சமூகத்தின் பொது உளவியல் அரக்கத்தனத்துக்குள் வாழ்கின்ற ஒரு பெண்ணை, மறுபடியும் ஜென்னி தன் குறுகிய சுயநலனுக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்கியுள்ளார். இதற்கு ஏற்ப தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறும் தேசம்நெற் பல்லி, அதை நான் இப்ப சொல்லமாட்டேன் என்கின்றார். இப்படி பல்லியோ பொய் புரட்டுகள் மூலம் பல்லவி பாடி, ஒளித்திருந்து அரங்கேற்ற முனைவது வலதுசாரிய சதிதான். இதற்கு பலியாவது, மறுபடியும் அதே பெண்தான். வரலாற்றில் இரண்டாம் முறை, இவர்களால் அப்பெண் குதறப்படுகின்றாள்.

 

இங்கு சகுனி ஆட்டம் போடும் தேசம்நெற் பல்லி, தன்னை மூடிமறைக்க முடியும், ஆனால் தன் அரசியலை என்றும் மூடிமறைக்க முடியாது.

புளட் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் மேல், அதனுடன் உடன்படாது போனவர்கள் மேல் நடத்துகின்ற இழிவான கேவலமான வலதுசாரிய வக்கிரங்கள் தான், பல்லி தனதாக்கி நிற்கும் அரசியலாகும். பாதிக்கப்பட்டவர்கள் மேல் சதியை அடிப்படையாகக் கொண்ட புளட் அராஜகவாதிகளின் தொடர் நடவடிக்கைகளை மீள சரியென்று வாதாடுகின்ற தர்க்கங்கள், குதர்க்கங்கள் அள்ளிவீசப்படுகின்றது. அந்த அமைப்பு பற்றியும், அதன் அறம் பற்றியும் அரசியல் ரீதியான பார்வையின்றி, அதை பிரநிதிநிதித்துவம் செய்து கொண்டு இன்றும் எழுதுகின்றவர்களின் யோக்கியத்தையே இது இன்று எடுத்துக்காட்டுகின்றது.

இந்த புளட் அமைப்பை விட்டு காலத்துக்குகாலம் வெளியேறியவர்கள் (குறிப்பாக தீப்பொறி) அரசியல் ரீதியாக, மக்களுக்காக தொடாந்து நின்று போராட முடியாமல் போனமைக்கான விமர்சனம் மற்றொரு விவாதமாகும். இவர்கள் புளட்டில் இருந்த காலம் கூட விமர்சனத்துக்குரியது தான். ஆனால் இதைக் கடந்தது புளட்டின் வலதுசாரிய அரசியல் அராஜகம். ஜென்னி பல்லி முதற்கொண்டு புளட்டில் வலதுசாரிய அரசியலை பாதுகாக்க, அதற்கு எதிராக போராடியவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டி நீ யோக்கியவானா என்று கேட்கும் குதர்க்கங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்ற வக்கிரத்தை அரங்கேற்றுகின்றனர்.

குறிப்பாக தீப்பொறி புதியதோர் உலகம் கொடுத்த அரசியல் உள்ளடக்கமும், அது கொடுத்த அரசியல் எதிர்பார்ப்பையும் கடந்து, தீப்பொறி மற்றொரு புலியாக புளட்டாக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றது. தனிநபர்களை கொல்லும் முடிவு முதல் தமது உறுப்பினர் சிங்களப் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என்று இனவாதம் பேசுகின்ற வரை, தீப்பொறியின் அரசியல் வங்குரோத்து பற்றி தனியாக ஆராய வேண்டியுள்ளது.

இவை புளட்டின் அராஜகத்துக்கும், அதன் ஈனத்தனமான செயல்களுக்கும் முற்றிலும் வெளியானது. புளட்டில் இருந்து தீப்பொறி உருவாக்கம் ஒரு அரசியல் ரீதியாக வெளிப்படையான போராட்டத்தின் பால் உருவானதல்ல. பலமுனை முரண்பாடு சார்ந்த, மூட்டை பிரித்தவுடன் உருண்டு ஓடியவர்களின் கூட்டணி தான் தீப்பொறி. இது புலியில் இருந்து புளட் உருவான போது எப்படி பலமுகம் கொண்டதோ, அப்படித்தான் தீப்பொறியும். ஒருபுறம் தனிநபர் பயங்கரவாத இனவாத அடிப்படையைக் கொண்ட ஜான் மறுபுறம் மார்க்சியத்தை முன்வைத்த அதேநேரம் ஸ்தாபன ரீதியான ஆளுமையற்ற கேசவன் என்று, இரு எதிர்முனையில் மீளவும் ஒரு புளட்டாக புலியாக தீப்பொறி மாறிச்செல்ல பலர் அதில் இருந்து விலகிக்கொண்டனர்.

இது மற்றொரு வரலாறாக எம்முன் இருக்கின்றது. இன்று ஜென்னி மறுபடியும் முன்தள்ளும் பித்தலாட்டங்களை, தீப்பொறியின் நடத்தைக்குள் வைத்து காட்டமுற்;படுவது அரசியல் ரீதியான திரிபு. புளட்டின் அராஜகம், அதன் சதி அரசியலால் அமைப்பைவிட்டு வெளியேறியவர்கள் மீதான புளட்டின் தொடர் செயற்பாடுகளை, இன்று மீளவும் நியாயப்படுத்த முற்படுவது தான் ஜென்னியின் வலதுசாரிய புனைவாகும்.

தங்களை நியாயப்படுத்த, தன்னைப் பாதுகாக்க மீண்டும் அதே பெண்ணை ஜென்னி வன்முறைக்குள்ளாக்குகின்றார். அந்தப் பெண் எந்த அரசியல் செயல்பாட்டிலும் இல்லாத, அந்தப் பெண்ணின் தனிப்பட்ட இன்றைய வாழ்வை கவனத்தில் கொள்ளாத வக்கிரம். அன்று இதை அரங்கேற்றியவர்கள், மறுபடியும் சில மாற்றத்துடன் அங்கேற்றுகின்ற கேவலத்தை ஜென்னி செய்கின்றார். ஆம் மறுபடியும் கடந்தகால தன் அரசியல் எதிரிகள் மீது, அதே அரசியல் காழ்ப்புடன் இதை மீளவும் பயன்படுத்தியுள்ளார். இன்றும் அவரின் அரசியல் வலதுசாரியம் தான். ஆம் இங்கு நிச்சயமாக, இது அரசியல் ரீதியானது. இந்த வகையில் தான் பல்லி என்ற பெயரில் உள்ள வலதுசாரிய லும்பன், இடதுசாரி அரசியலை தாக்க உண்மையான சில தகவலை சுற்றி பொய்களையும் புரட்டுகளையும் இட்டுக்கட்டி பொய்கள் மூலம் சகுனியாட்டம் சதி செய்கின்றார்.

இங்கு வலதுசாரிய வக்கிரங்களை பாதுகாக்க, அன்றைய வலதுசாரியத்துக்கு எதிரான இடதுசாரியத்தை சாட்டமுனைவது தான் இதன் அரசியல் சாரமாகும். இன்று இலங்கை அரசாங்கம் முதல் இந்தியா உலகம் வரை விரும்புவது, இடதுசாரியத்துக்கு எதிரான வலதுசாரியத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பார்வைதான். எல்லா விடையங்கள் மீதும் இதைக் கோருகின்றது வலதுசாரியம். இந்த வகையில் தான் தேசம்நெற், பல்லி, ஜென்னி என்று பலர் களத்தில் இறங்கி, தங்கள் வலதுசாரியத்துக்கு ஏற்ற வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இதைத் தாண்டி மக்கள் அரசியல் சார்ந்த எந்த சமூக நோக்கமும் இந்தக் கும்பலிடம் கிடையாது.

இந்த வகையில் தான் ஜென்னியின் புனைவும், பல்லியின் பல்லவியும் ஓரே திசையில் பயணிப்பது, உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்கல்ல. மாறாக அதைப் புதைப்பதுதான். புளட்டின் அராஜகத்தை மூடிமறைத்து, குற்றச்சாட்டை அதற்கு எதிராக போராடியவர்கள் மேல் சுமத்துகின்றனர். வேடிக்கையான வலதுசாரிய அரசியல் கூத்து.

அன்று எந்த அரசியல் நோக்கில் புளட் இந்த பாலியல் விவகாரத்தை உருவாக்கி நடத்தியதோ, அதே அரசியல் நோக்கில் தான் அதனை மீண்டும் கையில் எடுத்து ஜென்னி, சில திருத்தங்களுடன் புனைகின்றார். பல்லியோ தன்னிடம் ஆதாரம் உண்டு, ஆனால் இப்ப வைக்கமாட்டேன், சொல்ல மாட்டேன் என்று பல்லவி பாடி சகுனி ஆட்டத்தை அரங்கேற்றுகின்றனர். இப்படி இங்கு அதே பெண், மீண்டும் பலியிடப்படுகின்றாள். எதற்காக தங்கள் வலதுசாரிய அரசியலை நிலை நிறுத்தத்தான். வேறு எந்த சமூக நோக்கமும் இங்கு கிடையாது.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

10.03.2011

 

1. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1