”மே18” இயக்கம் தம்மை மே 18 ற்கு பிற்பாடான தொடர்ச்சியாக திடீரென மீண்டும் பிரகடனம் செய்துகொண்ட "புரட்சிக்காரன்" தான், ”மே18” யைச் சேர்ந்த ரகுமான் ஜான். அவர் தேசம்நெற்றில் எமது அமைப்பு தோழர்கள் மேல் கல் எறிந்துள்ளார். அது தொடர்பாக பதிலளிக்க முன்னர், அதில் அவர் முன்வைத்த மற்றைய ஓரிரு விடையத்தை பற்றி குறிப்பாக கூறிச் செல்வது அவசியமானதாகின்றது.
1. முன்னாள் புளட் மற்றும் தீப்பொறி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும், இவருடன் ஒன்றாக இயங்கியவர்களுமான கண்ணாடிச் சந்திரன் மற்றும் நேசன் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் எவையும் அரசியல் நேர்மையின் பாலானதல்ல. இதில் கண்ணாடிச் சந்திரன் தீப்பொறியைவிட்டு வெளியேறிய போது, அவரை போட்டுத்தள்ளக் கோரியவர் தான் இந்த ரகுமான் ஜான். இதை பிரபாகரனோ, உமாமகேஸ்வரனோ கோரியிருந்தால் ஆச்சரியமல்ல. ரகுமான் ஜான் கோரினார். தீப்பொறி ஏன் புலிக்கு ஏற்ற இன்னொரு புலியாகவே ஆனது என்பதற்கு இவைகள்தான் உதாரணம். இதே ரகுமான் ஜான் ”மே 18” ஆனவுடன், பழைய ஆவணங்களைத் தேடி அழிப்பதில் கூட குறிப்பாக கவனம் செலுத்தினார்.
இப்படிப்பட்ட ரகுமான் ஜான், கண்ணாடிச் சந்திரன் மற்றும் நேசனுடனான நீண்டகால அரசியல் முரண்பாட்டை மூடிமறைப்பதன் மூலம், தனது சொந்த அரசியல் வங்குரோத்தை தற்காக்க நடத்தும் திடீர் கல்லெறித் தாக்குதல் தான் அவரின் தேசம்நெற் கட்டுரையாகும். கடந்த தீப்பொறி முதல் தமிழீழக்கட்சி வரை இவர் முன்வைத்த அரசியல் பித்தலாட்டங்கள் முதல் தனிநபர் பயங்கரவாதம் வரையான அனைத்து மக்கள்விரோத கூறுகளையும், தொடர்ந்து மூடிமறைக்கவும், விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் தடுக்கவும், தனிநபர் குற்றச்சாட்டுகள் மூலம் தற்காப்பு அரசியல் செய்ய முற்படுகின்றார். கண்ணாடி சந்திரன் மற்றும் நேசனுடனான அரசியல் முரண்பாடு என்ன? அவர்கள் தீப்பொறி அமைப்பில் இருந்து விலகக் காரணம் என்ன? இதைப் பற்றிப் பேசாத, பேசவிடாத, பேசமறுக்கின்ற கல்லெறியைத்தான், ”மே18” ரகுமான் ஜான், அவதூறுக்கு பெயர் போன தேசம்நெற்றில் தொடர்ந்து நடாத்துகின்றார்.
2. ஊடக பயன்பாடு பற்றியும், இதன் அறம் பற்றியும் ரகுமான் ஜான் முக்கிமுனகி எழுதுகின்ற தளம் எதுவென்றால், தேசம்நெற் என்பது தான், இதில் உள்ள அரசியல் போக்கிரித்தனமாகும். தேசம்நெற் அல்லாத எந்தத் தளமும், இவ்வளவு கேவலமாக இயங்கியது கிடையாது. இதை பாதுகாத்துக்கொண்டும், அதை தன் சொந்த எழுத்தின் மூலமும் வெளிப்படுத்திக்கொண்டும் தான், அனைத்தையும் "மே18" ஜச் சேர்ந்த ரகுமான் ஜானும் தேசம்நெற்றும் சேர்ந்து எதிர்ப்புரட்சி அரசியல் அரங்கில் அரங்கேற்ற முனைகின்றனர்.
3. எமது அமைப்பைச் சேர்ந்த இரயாகரன், சீலன் மீதான உங்கள் குற்றச்சாட்டு தொடர்பாக குறிப்பாக பார்ப்போம்.
"பொதுப்புத்தி" சார்ந்த தகவல் தொழில்நுட்பத்தின் பொது மனித அறிவின் பற்றாக்குறையை தனக்கு ஆதாரமாகக் கொண்டு, ரகுமான் ஜான் கல்லெறியில் இறங்குகின்றார். அதைப் பார்ப்போம்.
".. இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால், முன்னர் ஒரு தடவை இரயாகரன் அசோக்குடன் சர்ச்சைப்பட்ட போது தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்தி அச்சுறுத்தியதாகும். அப்போது அசோக்கிற்கு தமிழரங்கம் ஈ மெயில் முகவரியில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்பட்டது. அதில், "நீ பேசாமல் இருக்காவிட்டால் உனது நண்பன் ஜானை அம்பலப்படுத்துவோம்" என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேசம்நெற்றில் கட்டுரையொன்றும் இடம் பெற்றது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். (இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்) இந்தக் குற்றச்சாட்டுக்கு, அந்த மெயில் தமது முகவரியில் இருந்த வந்தது என்ற வகையில் இரயாகரன் தானே தார்மீக பொறுப்பு எடுத்திருக்க வேண்டும். மாறாக, ஜெயபாலன் மோசடி செய்ததாக கூறினார். நான் மீண்டும் கூறுகிறேன் அது அசோக்கிற்கு வந்த மெயில்தான் என்று. எங்கே இரயாகரன் ஏதாவது பொதுவான மத்தியஸ்த்துவத்தில் இதனை முகம் கொடுக்க தயாராக இருக்கிறாரா? இப்படியாக இரயாகரன் ஒருபோதும் தர்க்கரீதியாக விடயங்களை அணுகாமல், செந்திலின் ரெட்டை வாழைப்பழம் போன்று கதைகளை பேசிக்கொண்டிருப்பார். உதாரணமாக, தனது சொந்த வீடு பற்றிய பிரச்சனை வந்துபோது, "வங்கியின் வீட்டை தனது வீடு என்று சொல்வதாக" குறிப்பிட்டதை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் உலகத்தில் வேறு யாருக்குமே சுயமாக சிந்திக்க முடியாது என்று நினைத்துக் கொண்டுதான் கதை விடுகிறார்கள். இவையெல்லாம் ஏதாவது ஒரு புள்ளியில் நிறுத்தப்பட்டுத்தானே ஆகவேண்டியிருக்கும் என்பதை உணர்கிறார்களில்லை."
என்கின்றார்.
"ஒரு புள்ளியில் நிறுத்தப்பட்டுத்தானே ஆகவேண்டியிருக்கும்" என்று கூறி தீப்பொறியை புலியாக்கி அதன் புரட்சிகர வரலாற்றை நிறுத்தியவர், மீண்டும் நிறுத்த ”மே18” ஊடாக வாரார். வந்ததும் இந்தப் புள்ளியில் நிறுத்து என்கின்றார்.
இப்படி நிறுத்த முனையும் அவர்
"நான் மீண்டும் கூறுகிறேன் அது அசோக்கிற்கு வந்த மெயில்தான் என்று"
என்று அடித்துக் கூறுகின்றார்.
சரி ரகுமான் ஜான், அப்படியெனில் நீங்கள் அனுப்பியதை வைத்துத்தான் இதை சொல்லுகின்றீர்கள் போலும்! இங்கு அது அசோக்குக்கு வந்ததா என்பது பற்றியதல்ல பிரச்சனை. அதை நாங்கள் அனுப்பினோமா என்பதுதான் பிரச்சனை. நாங்கள் தான் அனுப்பியதாக கூறுகின்ற குற்றச்சாட்டை, நிறுவவேண்டிய பொறுப்பு உங்களுடைது. அன்று இரயாகரன் இதை மறுத்து எழுதியவற்றை பின் இணைப்பில் பார்க்கவும். அத்துடன் இதைப்போல் யாரும் அனுப்பமுடியும் என்பதை நாம் விளக்கியிருந்தோம்.
நிற்க, அன்று தமிழரங்க ஈமெயிலில் இருந்து மற்றவருக்கு பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட ஒரு ஈமெயிலையும் வெளியிட்டுத்தான், இந்த மோசடி அன்று அரங்கேறியது தேசம்நெற். ”மே18” ஜச் சேர்ந்த ஒருவர் தன்னை நேர்மையின்றி மூடிமறைத்துக்கொண்டு, எம்முடன் கொண்ட அரசியல் ரீதியான உறவை பயன்படுத்தி அமைப்பின் உள்ளக ஈமெயிலை தொடர்ந்தும் பெற்று வந்தார். ஒரு அமைப்பின் ஜனநாயகத்தின் மீதுள்ள பொது உரிமையை வைத்து, ”மே18” தங்கள் உளவுக்கு பயன்படுத்தியது. ஆம் கல்லெறியத்தான். சம்பந்தப்பட்டவர் தான் ”மே18” இல் இருப்பதாக தெரிவிக்காததுடன், அதை நாம் அவரிடம் அதனைக் கேள்வியாக எழுப்பிய போது அதை மறுத்ததன் மூலம், எமது தகவல்களை தொடர்ந்து பெற்று வந்தார். இப்படி கல்லெறியும் ”மே18” ரகுமான் ஜான், தன் உளவுவேலைக்கு அவரைப் பயன்படுத்தினார். அவ்வாறாக அந்நபருக்கு கிடைத்த ஒரு ஈமெயிலை பயன்படுத்திய அதேநேரம், புனைவு ஈமெயில் ஒன்றை அனுப்பியும் எம்மீது கல் எறிந்தனர். இந்த வழிகளில் தான் அரசியல் ரீதியாக ரகுமான் ஜான் எம் அரசியலை எதிர்கொண்டு நிற்கின்றார். அன்று இது அம்பலமான போதும், மறுபடியும் கல்லெறிய அதையே இன்று மீண்டும் பயன்படுத்துகின்றார்.
போலி ஈமெயில் அனுப்புவது முடியாத காரியமல்ல என்பதை நன்கு தெரிந்து கொண்டே, அதை அவதூறுக்கு பயன்படுத்துகின்றார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, பொது அறிவு சார்ந்த பொது அறியாமையை இங்கு பயன்படுத்துவது போல் தான், மே18 பின் முளைத்த ”மே18” இயக்கம் தனது அரசியலைச் தொடர்ந்து செய்கின்றது. பொதுப்புத்தி அறிவு சார்ந்து அரசியலை முன்தள்ளும் ரகுமான் ஜானின் திட்டமிட்ட குற்றச்சாட்டை தகர்க்க, போலி ஈமெயில் தயாரிப்பது எவ்வாறு என்பது பற்றிய அறிவை பொதுப்பார்வைக்கு முன்வைப்பது அவசியமாகின்றது. இது அவரின் பொதுப்புத்தியிலான, சதி அரசியல் மூலமான வங்குரோத்தையும் அம்பலமாக்கும்.
இந்தக் குறிப்பிட்ட மின்னஞ்சலின் மூலதாரி உங்களில் யாரோ ஒருவரே. புளட்டின் சதிப்பாணியில் இதனை செய்து முடித்த யாரோ எவரையோ, நீங்கள் பாதுகாத்து காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்பதுதான் இதில் உள்ள மற்றொரு உண்மையுமாகும்.
மின்னஞ்சல் யாரால் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதில் யாரும் ஆள்மாறாட்டம் செய்யலாம். வெறுமனே From to என்பதிலிருந்து அனுப்பிய நபரை அறுதியிட்டு யாரும் கூறமுடியாது. இப்படி மின்னஞ்சலில் From என்பதனை வெகு இலகுவாக எழுதி யாரும் யாருக்கும் அனுப்பலாம். இப்படி அரசியலில் அனுப்புவது கிரிமினல்தனம். அதையே வைத்து அரசியல் செய்வது அரசியல் வங்குரோத்து சார்ந்த போக்கிரித்தனமாகும்.
வங்கி அட்டை (கிரடிட் காட்) மோசடிகளிலேயே கைவந்தவர்களுக்கு, மின்னஞ்சல் மோசடி செய்வது என்பது பெரிய சவாலுமல்ல. இணையத் தொழில்நுட்பத்தால் புனைபெயர்களில் நடமாடுவது எப்படி சாத்தியமோ, அப்படியே மின்னஞ்சல் கூட மிகத் தவறாக ஆள்மாறாட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம். இந்த விடயங்கள் பற்றி நன்கறிந்த ஒருவராகவே உங்களை நீங்கள் காட்டிக் கொள்கிறீர்கள். எனவே தெரிந்தே செய்யும் விசமத்தனமான எதிர்ப்பிரச்சாரம் (பொய்ப்பிரச்சாரம்) என்பதுதான் இதில் உள்ள உண்மை.
Google இல் how to send a fake email anonymously என்ற சொற்களை வைத்துத் தேடினால் ஏராளமான இணையங்கள், அநாமதேய ஆள்மாறாட்ட மின்னஞ்சல் சேவைகளை வழங்குவதைக் கண்டு கொள்ளலாம். உதாரணத்துக்கு இங்கே உள்ள இந்த இணையம் இதனை வழங்குகிறது.
http://www.sendanonymousemail.net/
இப்படியிருக்க, இதை வைத்து எம்மைக் குற்றஞ்சாட்டுவது அபத்தம். இது போன்ற போலி ஈமெயில் எந்தக் கணனியிலிருந்து அனுப்பப்பட்டது என்பதை சேகரிப்பதற்கு, அதனுடைய ஜ.பி நம்பரை அவர்கள் பதிவு செய்கிறார்கள். அந்த ஐபி நம்பரை வைத்து நாடு, பிரதேசம், இன்றநெற் சேவை வழங்குநர் போன்ற விபரங்களை அறியலாம். இந்த ஜ.பி நம்பரை தனக்குக் கிடைத்த மின்னஞ்சலின் ஹெடர் எனப்படும் பகுதியை வைத்து, இந்த அநாமதேய ஆள்மாறாட்ட மின்னஞ்சலைப் பெறுபவர் அது எப்படி அனுப்பப்பட்டிருக்கின்றது என்பதனை ஆய்ந்து அறியலாம். ஆனால் சாதாரணமான மின்னஞ்சல் பாவனையில் இந்த ஹெடர் என்ற பகுதி மறைக்கப்பட்டிருக்கும். தகவல் பற்றிய சந்தேகம் மாறாட்டம் வரும் போது மட்டுமே பொதுவாக ஹெடர் என்ற பகுதியை கிண்டிக் கிளறுவது வழமை. அதற்கு பெறுநர் ஒத்துழைக்காத போது சாத்தியமேயில்லை.
எனவே பெறுநர் தன்வசமுள்ள ஹெடரினை நேர்மையோடு தந்தால் ஒழிய, அவர்கள் அள்ளிவீசும் அவதூறு அவர்களாலேயே திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது என்பதாக கருதமுடியும். இது பற்றி இந்த அவதூறு எமக்கெதிராக எழுப்பப்பட்டபோது இவைகள் பற்றி விளக்கமாக நாங்கள் தொழில்நுட்ப விபரங்களுடன் வாதாடியிருந்தோம். தேசம்நெற் இந்த மின்னஞ்சலுக்குரிய ஹெடர் கொண்டிருக்கக்கூடிய மேலதிக தகவல்களின் மூலம் அது உண்மையில் எவரிடமிருந்து எந்தக் கணணியில் இருந்து எந்த நாட்டிலிருந்து எந்தப் பிரதேசத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றதென்பதை நேர்மையாக ஏன் வெளிக்கொணர முடியவில்லை? ஏன் தயங்குகிறீர்கள்? அந்த ஹெடர் தரக்கூடிய விபரங்களை நாங்கள் கேட்டிருந்தும் ஜெயபாலன் நழுவிச் சென்றதன் பின்னணி என்ன?
இங்கு வேண்டுமென்றே அவதூறு செய்து கொண்டே, மற்றவர்களுக்கு பொது அறிவு சார்ந்த அறியாமை மீது போதனை செய்துள்ளீர்கள். தேசம்நெற்றில் உங்களுக்கு ஒவ்வாதவர்கள் மட்டும் எழுத முனைந்தபோது மட்டும் தான், தேசம்நெற் இப்படி அசிங்கமாகி விட்டதோ? அந்த அசிங்கத்தை துப்பரவு செய்ய வந்ததாக கூறும் நீங்கள், தேசம்நெற்றில் வரும் பின்னூட்ட அசிங்கங்களை அள்ளினாலே மிஞ்சப் போவது எதுவுமில்லை. தற்போது ரகுமான் ஜான் கொட்டியுள்ள மிகப் பெரும் அசிங்கத்தை அள்ளப்போவது யார்?
இப்படியிருக்க ரகுமான் ஜான் முன்நிறுத்தும் ஈமெயில் விவகாரம், உங்களின் கைங்கரியமாக எமது பெயரில் எழுதப்பட்ட ஆள்மாறாட்ட மின்னஞ்சலாக இதை நாங்கள் கருதுகிறோம். அந்த மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவருக்கு நாங்கள் அறுதியிட்டுக் கூறுவது என்னவெனில் நாங்கள் யாரையும் நேரிடையாகவே கட்டுரைகளினூடு விமர்சித்து வந்திருக்கிறோம், வருகிறோம். ஆள்மாறாட்ட மின்னஞ்சல் பகிரங்கமாகும், அம்பலமாகும் என்பது எந்த அற்பமான முட்டாளுக்கும் தெரியும். யாராவது தானே எழுதி தனக்கே சங்கடம் உருவாக்குவார்களோ? முட்டாள்கள் தான் அப்படி யோசிக்கின்றனர், அப்படிக் காட்டுகின்றனர்.
இந்த மின்னஞ்சலானது சர்ச்சையை உருவாக்குவதற்கும், எம்மீது சேறடிப்பதற்கும் என உருவாக்கப்பட்டு, இந்த மின்னஞ்சல் பெறுநருக்கும் எமக்குமிடையிலான கருத்து முரண்பாடுகளைக் கவனித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சதி. மற்றவன் கிரடிக்காட்டை மோசடி செய்து வாழும் கூட்டம்தான், இதையும் அரசியலில் செய்கின்றது.
யாரையும் அரசியல் வழியில் விமர்சிப்பதற்கு நாங்கள் கைக்கொள்கின்ற முறை என்றும் வெளிப்படையானது நேரிடையானது. ஒளித்திருந்து கல்லெறிய வேண்டிய தேவையுள்ளவர்கள் மட்டுமே, இந்த மாதிரி மின்னஞ்சல் ஆள்மாறாட்டம் மற்றும் புனைபெயர் அசிங்கப் பின்னூட்டங்களுக்குரியவர்கள். அப்படியான பின்னூட்டக்காரர்கள் மலிந்த இடம் தான் தேசம்நெற். உதாரணமாக என்.எல்.எப்.ரி தீப்பொறிக்கு கொடுத்த பணத்தை, பல்லி என்பவர் இரயாகரன் என்ற தனிநபர் கொடுத்ததாக அரசியல் உள்நோக்குடன் புனைகின்ற வக்கிரத்தை பாருங்கள். இந்தியாவில் வைத்து என்.எல்.எப்.ரி யின் மத்திய குழுவைச் சேர்ந்த விசுவும், ஜயரும் முடிவெடுத்து, அங்கு வைத்துதான் அப்பணத்தை அவர்கள் கொடுத்தனர். இந்தியாவில் வைத்துத்தான் தீப்பொறியைச் சேர்ந்தவர்கள் பணத்தைப் பெற்றனர். கொடுத்தவர்களும், பெற்றவர்களில் சிலரும் உயிருடன் தான் உள்ளனர். இப்படி இருக்க இரயாகரன் கொடுத்ததாக பல்லி தானே இட்டுக்கட்டி புனைந்து சொல்லவருவது ஏன்? இப்படி பல்லியின் அவதூறு, திட்டமிட்ட எதிர்ப்புரட்சி அரசியல் சார்ந்து, உள்நோக்கம் கொண்ட ஒன்றாகும். இப்படி தேசம்நெற்றின் இந்த அவதூறுகளைச் சார்ந்துதான், ரகுமான் ஜானின் ஊடக தர்மம் சார்ந்த அரசியல் வாழ்கின்றது. இந்த விவகாரத்தில் தளத்தில் இருந்த இரயாகரனுக்கு நேரடியாக எந்தத் தொடர்பு இருக்கவில்லை. ஏன் அவர் எந்த முக்கிய தீப்பொறி உறுப்பினர் எவரையும் சந்தித்ததே கிடையாது. என்.எல்.எவ்.ரியில் முடிவெடுக்கக் கூடிய பல முன்னணி உறுப்பினர்களின் வழிகாட்டலின் கீழ் தான், இரயாகரன் செயல்பட்டவர். இப்படியிருக்க எதிர்ப்புரட்சி அரசியல் உள் நோக்கம் கொண்ட அவதூறுக்காகவே இயங்கும் பல்லியும் தேசம்நெற்றும், திட்டமிட்ட சதியுடன் உண்மைகளை திரித்து இங்கு புனைகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஈமெயில் யாருடையது என்று தெரிந்து கொள்ள "எங்கே இரயாகரன் ஏதாவது பொதுவான மத்தியஸ்த்துவத்தில் இதனை முகம் கொடுக்க தயாராக இருக்கிறாரா?" என்று கேட்கின்றார்? ஈமெயில் உங்களிடம் உள்ளது. அதில் இருந்து இது "மின்னஞ்சல் மோசடி"யல்ல, நாம் தான் அனுப்பினோம் என்ற ஆதாரத்தை முதலில் முன்வையுங்கள். அதன்பின் இதைக் கோருங்கள்.
இந்த இடத்தில் குமரனால் விடப்பட்ட மற்றொரு தேசம்நெற் பின்னோட்டம்
"நான் இந்த விவாதத்தை கீழ்த்தரமாக நடத்த விரும்பவில்லை. உங்களிடம் உண்மையிருந்தால், இரயாகரனிடமும் உண்மையிருந்தால், நான் இரயாகரனிடம் கேட்கிறேன்; நீங்கள் புரட்சி செய்வதாகவும், மக்களை நம்புவதாகவும், தினம் தினம் கூறுகிறீர்கள். உங்களுக்கு உண்மையான மக்கள் நம்பிக்கை இருந்தால் நீங்கள் பகிரங்க விவாதத்திற்கு தயாரா? அப்படியானால் இடம், நேரம் என்பவற்றை அறிவியுங்கள். நான் என்றும் எதற்கும் உண்மையைப் பேச தயராக உள்ளேன். நீங்கள் தயாரா?" என்று கேட்கின்றார்.
ஏன் எம்மை நோக்கிக் கேட்கின்றீர்கள்!? நீங்கள் இவ்வளவு காலமும் மூடிமறைத்த கதையைச் சொல்ல நாங்கள் தான் இதற்கு தடையாக இருந்தோமா!!!? நாங்கள் இதில் நடந்தது என்ன என்ற தகவலை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் ஆவலாகவே உள்ளோம். இதில் என்ன சந்தேகம். நீண்டகாலமாக இதைத் தேடி அம்பலப்படுத்தி எழுதியவர்கள் நாங்கள் மட்டும்தான். இதைக் கடந்து "நீங்கள் பகிரங்க விவாதத்திற்கு தயாரா?" என்று எம்மை நோக்கி சவால் விடுகின்றீர்கள்? இதுவொரு அபத்தம். எது உண்மை என்பதை 25 வருடமாக மூட்டை கட்டி வைத்திருக்கும் நீங்கள், இன்று வரை உங்கள் கூட்டாளிகள் (அசோக் உட்பட) பற்றி வாய்திறக்காத நீங்கள், இதைப் பேசுவதையே "கீழ்த்தரமான" விவாதமாக இதுவரை கருதிய கருதும் நீங்கள், சவால் விடுவதுதான் இதில் உள்ள வேடிக்கை.
2009ம் ஆண்டு ரகுமான் ஜானுடன் சேர்ந்து வந்து நீங்களும் இரயாகரனோடு நடாத்திய சந்திப்பின் போது, இரயாகரன் பொதுவில் (உங்களையும் சேர்த்துதான்) கோரியது என்ன? கடந்தகாலத்தில் என்ன நடந்தது என்பதைத்தான். அதை வெளிப்படையாக முன்வைக்குமாறு சந்திப்பின் போது நேரிடையாகவே கோரினோம். இன்று திடீரென "நீங்கள் பகிரங்க விவாதத்திற்கு தயாரா? அப்படியானால் இடம், நேரம் என்பவற்றை அறிவியுங்கள். நான் என்றும் எதற்கும் உண்மையைப் பேச தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா?" என்று கேட்கின்றீர்கள். நாங்கள் தயார். பகிரங்கமாக, அதை உலகறிய மூடிமறைக்காது, யாரையும் பாதுகாக்காது (ஜென்னி மூடிமறைப்பது போல் அல்லாது) எழுத்தில் முன் வையுங்கள். நாங்கள் கருதுவதாக நீங்கள் கருதி எழுதுவது போல், இதில் உங்கள் பங்கு பற்றி எதுவும் எமக்குத் தெரியாது. ஆனால் அக்காலகட்டத்தில் இதற்கு பொறுப்பான பதவிப்பொறுப்பில் இருந்தவர். அனைத்தும் தெரிந்தவர். அது பற்றி பின் எதையும் இன்றுவரை முன்வைக்காதவர். இதனுடன் சம்மந்தப்பட்டவர்களுடன் அரசியல் உறவை தொடர்ந்தவர் என்பது தான் எமக்குத் தெரிந்த உண்மை. (இந்த இடத்தில் சிறு குறிப்பை தருவது நல்லது. புளட் சித்திரவதையால் அன்ரனிக்கு நடந்த ஆபிரேசனுக்கு நீங்கள்(குமரன) 1000 பிராங்கும் (150 ஈரோவும்) கொடுத்ததை, இங்கு இந்த இடத்தில் நினைவுகொள்ளத்தக்கதும் கூட.)
இனி ரகுமான் ஜானின் அடுத்த கல்லெறியைப் பார்ப்போம்.
"இதனைவிட வேடிக்கையான இன்னொரு விடயமும் இருக்கிறது. ப்ராவோ அமைப்பைச் சேர்ந்த அன்ரனியை நாம் காட்டிக் கொடுத்ததாக இவர்கள் பலகாலமாகவே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள். இங்கு நாம் அது பற்றியும் சிறிது பேசித்தான் ஆகவேண்டி இருக்கிறது. அன்ரனி முதலில் இலங்கைக்கு சென்றபோது எமது தோழர் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு உதவி செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதே இந்த இரயாகரன்தான். அதற்கேற்ப அன்ரனிக்கு தங்குமிடம், பாதுகாப்பு. போக்குவரத்து உதவிகள் என்று பலவற்றையும் எமது தோழர் செய்து கொடுத்தார். போதாக்குறைக்கு தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட அன்ரனிக்கு ஒரு கலியாணம் வேறு தேவைப்பட்டது. அதற்கு சாட்சிக் கையெடுத்து போட்டதும் கூட நமது தோழர்தான். மணப்பெண் வேறு யாருமல்ல. முன்னாள் புலிகள் இயக்க போராளி ஒருவர். இதில் நாங்கள் புலிக்கு காட்டிக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது.
இதற்கிடையில் அன்ரனியுடன் சேர்ந்து ஏதோ ஒரு புரொஜெக்ட்டுக்காக இரயாகரன் கோஸ்டி ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தையும் அன்ரனியிடம் கொடுத்துள்ளார்கள். இந்த பணத்துடன் அன்ரனி இவர்களுக்கும் தலைமறைவானார். ஆனால் அவர் தொடர்புகளை துண்டிப்பதற்கு முன்பு அன்ரனி இவர்களிடம், தனக்கு தீப்பொறி அமைப்பினால் ஆபத்து இருப்பதாகவும், நாம் அவரை புலிகள் அமைப்பிற்கு காட்டிக் கொடுக்கும் சாத்தியப்பாடு பற்றி தான் பயப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கு பின்னர்தான் அவர் இவர்களுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளார். இந்த இடைக்கால்த்தில் நாம் அன்ரனியை காட்டிக் கொடுத்துவிட்டதாக இவர்கள் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தார்கள்.
அண்மையில் சம்பந்தப்பட்ட எமது தோழர் இவர்களுடன் தொடர்பு கொண்டு இந்த பிரச்சனை பற்றி விளக்கியுள்ளார். அப்போதுதான் அன்ரனி மோசடி செய்தது இவர்களுக்கு தெரியவந்துள்ளது. (இதுபோல அன்ரனி பலரிடமும் பல்வேறு காரணங்களுக்காக பணம் வாங்கியிருப்பதாக அறிகிறோம்.) அப்போது தாம் அன்ரனி கூறியதை உண்மையென நம்பியே இப்படியான தவறை செய்துவிட்டதாக கூறிய இவர்கள் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்கள். ஆனால் பிரச்சனை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், அந்த தவறுக்கான மன்னிப்பை பகிரங்கமாக கேட்பதே முறையாக இருக்கும் என்று என்று அந்த தோழர் குறிப்பிட்டுள்ளார். எங்கே இரயாகரன்னும், சீலனும் என்ன சொல்கிறார்கள் என்று நாம் பார்க்கலாமா?" என்கின்றார் ஜான்.
யார் யாரைக் கட்டிக்கொடுத்தது என்பதையும், ரகுமான் ஜான் வாயால் கேட்பது தான் சிறப்பு. "மணப்பெண் வேறு யாருமல்ல. முன்னாள் புலிகள் இயக்க போராளி ஒருவர். இதில் நாங்கள் புலிக்கு காட்டிக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது." என்கின்றார்.
சம்பந்தப்பட்ட பெண் முன்னாள் புலி உறுப்பினர் என்பதும், அன்ரனிக்கு கூடத் தெரியாது. அவர்தான் புலிக்கு தகவல் கொடுத்தார் என்பதும் கூட அன்ரனிக்குத் தெரியாது. ஆனால் யானுக்குத் தெரிந்திருக்கின்றது. இதுவும் எம்மை அதிரவைக்கின்றது. அந்தப் பெண் முன்னாள் புலி உறுப்பினர் என்று நீங்கள் கூறும் இந்த விடையம், அன்ரனிக்கு கூடத் தெரியாது. அவர் புலியின் உளவாளி என்றால் (ரகுமான் ஜான் கூறுகின்றார்), இந்தத் தகவலை தெரிந்துள்ள ரகுமான் ஜான் யார்?; "நாங்கள் புலிக்கு காட்டிக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது." அவரே எல்லாம் புலிக்கு கொடுத்தார் என்று கூறுகின்ற அளவுக்கு, இவரின் அரசியல் பின்னணி என்ன? அதுதான் புலியில் இருந்து வந்த இளங்கோவுடன் சேர்ந்து, தீப்பொறியை புலியின் வாலாக்கியது மடடுமின்றி ஆள்காட்டி வேலையும் செய்தீர்களோ!
அன்ரனியின் மனைவி முன்னாள் புலியும் உளவாளியும் என்று அன்ரனிக்கே தெரியாத ஒரு தகவலைச் சொல்லும் ஜான், இதே கட்டுரையில் புலிக்குள் இருந்து மற்றொரு உள் தகவலையும் தன் அரசியல் பின்னணியில் தருகின்றார். கிட்டுக்கு குண்டு எறிந்த தகவலை "புலிகளால் கைது செய்யப்பட்ட தர்மலிங்கமோ, சண்முகநாதனோ மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்தபோதிலும் இறுதிவரை இந்த விடயம் தொடர்பாக மூச்சுக்கூட விடவில்லை. அவ்வாறே பின்னர் கைதான கேசவனும் கூட அத்தனை சித்திரவதைகளையும் மீறி இது தொடர்பாக எதுவுமே கூறவில்லை." என்கின்றார். இது எப்படி ரகுமான் ஜானுக்குத் தெரியும்!? இங்கு இவரின் தகவல்கள், அனைத்தும் இவர் யார் என்ற சந்தேகத்தை இங்கு எழுப்பியுள்ளது. அன்ரனியின் மனைவி மலையகத்தை சேர்ந்தவர் என்பதே அன்ரனிக்கு தெரிந்தது. அதே தகவல்தான் எமக்கும் தெரியும்.
"அன்ரனியை நாம் காட்டிக் கொடுத்ததாக இவர்கள் பலகாலமாகவே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள்." என்ற கூற்று குறிப்பாக அபத்தமானது. ப்ராவோ அமைப்பு பற்றிய தகவல்களை புலிக்கு வழங்கியது தமிழீழக்கட்சிதான். புலியால் அனுப்பப்பட்ட இளங்கோ உள்ளடங்கிய தமிழீழக்கட்சி செய்த வேலைதான் என்ன? இடதுசாரிய வேசம் கட்டி புலியை நியாயப்படுத்தியதும், புலியல்லாத மற்றவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி கொடுத்ததும்தான். ப்ராவோ அமைப்பு பற்றிய தகவல்களை புலிக்கு கொடுத்தது, புலியின் உளவாளியாக நீங்கள் சித்தரிக்கும் அந்தப் பெண் அல்ல. நீங்கள் தான். இரயாகரனுடன் சேர்ந்து நின்று இளங்கோ எடுத்த புகைப்படம் உட்பட, இப்படி பலரின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு புலிக்கு கொடுக்கப்பட்டது.
இந்த வகையில் ப்ராவோ அமைப்பு மீதான புலியின் விசாரணைகளையும் அழுத்தங்களையும் மட்டுமின்றி, புலியின் இறுதிக்காலத்தில் இவரின் வீட்டில் புலிகள் அத்துமீறி அடாத்தாகத் தங்கிக்கொண்டு (இவர் இருந்த வீட்டுக்கு நேர் எதிரே இராணுவ முகாம் இருந்தது) தமிழீழமக்கள் கட்சி கொடுத்த தகவலின் அடிப்படையில் கேள்விகளையும் அழுத்தத்தையும் தொடர்ந்து அன்ரனிக்கு கொடுத்தனர்.
ரகுமான் ஜான் தலைமையில் இருந்த புளட் கொடுத்த சித்திரவதையில் உயிர்வாழ போராடிக் கொண்டிருந்த அன்ரனி (மாதம் ஒருசில பத்தாயிரம் ரூபா மருந்துக்கு பாவிக்கும் நிலையில்) மீது, தமிழீழமக்கள் கட்சி ஊடாக பெற்ற தகவலைக் கொண்டு புலிகள் கொடுத்த அழுத்தத்தால் அவரின் உடல்நிலi மேலும் சீர்குலைந்து மரணத்தை எட்டும் நிலைக்கு அவர் சென்றார். இரயாவுடனான தொடர்பில் தொடர்ச்சியாக இருந்த நிலையில், உளவியல் ரீதியான சித்திரவதை மற்றும் உடல் ரீதியாக ஊனமாகிச் சென்ற நிலையில் இருந்து அவரை மீட்க, அவரை அவரின் மனைவி வீட்டில் (மலையகத்தில்) தலைமறைவாக செல்லுமாறு நாம் கூறினோம். அப்படியே அந்த வீட்டை திடீரென கைவிட்டு சென்ற அவர், நோயின் கொடுமையிலும் சரியாக பராமரிக்க எவருமின்றிய நிலையில், தனிமைப்பட்ட நிலையில் தன் பேசும் சக்தியையும் படிப்படியாக இழந்தார். பின் அவர் பற்றிய தொடர்பை நாம் இழந்தோம். இந்தக் காலத்தில் இலங்கை அரசும் - புலிகளும் நடத்திய, இனந்தெரியாத சில ஆயிரம் படுகொலைகளின் பின்னணியில் அவரையும் நாம் தேடினோம். ஆனால் அவர் அரசியல் உறவுகளை இழந்து, நோயின் கொடுமையால் அனாதையாகி அனாதரவாக அங்குமிங்கும் அலைந்தார்.
இந்த நிலையில்தான் ரகுமான் ஜான், அவர்களின் அமைப்பின் பெயரில், தேசம்நெற்றில் திடீரென கட்டுரை எழுதினார். அவரை புலிக்கு காட்டிக் கொடுத்த தமிழீழ மக்கள் கட்சி, அந்த அமைப்பின் பெயரால் ரகுமான் ஜான் கட்டுரை எழுதுகின்ற கொடுமையை நாம் அம்பலப்படுத்தினோம். புலியின் பின் ”மே18” மூலம் தன்னை புலியின் வாரிசாக காட்டியது போன்று, தேசபக்தனின் பெயரிலும் மோசடி செய்த கொடுமைக்கு எதிராகவும், காட்டிக் கொடுப்புக்கு எதிராகவும் சேர்த்து குரல் கொடுத்தோம்.
இந்த வகையில் புறோவா அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அன்ரனி பற்றிய கட்டுக்கதையை அள்ளி வீசியுள்ளார். முதலில் இந்த ஜான் மாஸ்ரருக்கு அன்ரனி பற்றி கதைக்கவோ அல்லது புளட்டில் இருந்த மற்றைய நபர்களைப் பற்றி கதைக்கவே எள்ளளவும் அருகதை கிடையாது. புளட்டில் உமாமகேஸ்வரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும், அதேவேளை புளட்டின் உப செயலதிபர், உப இராணுவப் பொறுப்பாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தவர் தான் இந்த ரகுமான் ஜான். இவர் புளட்டினுள் நடந்த உட்படுகொலைகளுக்கு எதிராக எதையும் செய்யாது, தன்னை மட்டும் காப்பாற்றினால் போதும் என்று தப்பி ஓடியவர் தான், இன்று மற்றைய நபர்கள் மீது குற்றம் கண்டு பிடிக்க புறப்பட்டுள்ளார்.
அன்ரனி, சீலன் உட்பட்ட ஒன்பது பேரை புளட்டின் ஏச் (சிக் முகாம் அல்லது அரசியல் பயிற்றுவித்த முகாம்) முகாமில் இருந்து, இரவோடு இரவாக மாணிக்கதாசனின் தலைமையில் கைது செய்து தாக்கிய போது, அதை எதிர்த்து நின்ற மற்றைய தோழர்களையும் தாக்கி வதைமுகாமிற்கு அனுப்பிவைத்தவர்களில் இவரும் ஒருவர். புளட்டின் தலைமைப்பீடம் இதைத்தான் அன்று வெட்கமின்றி செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டு ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்ட எம்மில் பலர், இன்றும் அரை உயிருடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு வாழ்பவரில் அன்ரனியும் ஒருவர். அவருக்கு இவர்கள் அன்றும் உதவவில்லை, இன்றும் உதவவில்லை. மோசடிக்காரன் என்று எங்கள் பெயரில் பட்டங்கள் கொடுக்கின்றனர். ஆனால் நாங்கள் தான் தொடர்ந்து உதவினோம்;.
1986களில் புளட்டில் இருந்து விலகிய அன்ரனி, 1987 களில் புரோவா என்ற அமைப்பை உருவாக்கினார். பல தவறுகளுடன் தொடர்ந்து இயங்கிய அவர்கள், தாம் செய்த தவறுகளை சுயவிமர்சனம் செய்துகொண்டு, சுயமாக இயங்க முடியாத நிலை உருவாகும் வரை, தொடர்ந்து அரசியலில் இயங்கியவர் தான் அன்ரனி. அன்ரனியைப்பற்றி ஜான் கதைக்கக் கூட அருகதையற்றவர். அவர் சமூகம் பற்றி, கட்சி பற்றி எமக்கு எழுதியவை, சுயவிமர்சனம் செய்து கொண்டவை மிகப்பெறுமதி வாய்ந்தவை. விரைவில் அதை வெளியிட உள்ளோம்.
இப்படி இருக்க ரகுமான் ஜான் புளட்டின் தலைமையில் இருந்தபடி அதன் சுகபோகங்களை அனுபவித்தவர், தன் இருப்பிற்கு ஆப்பு வரப்போகின்றது என்ற காரணத்தால் புளட்டில் இருந்த மற்றையவர்களை பற்றி எள்ளளவும் நினைத்துப் பார்க்காது தப்பியோடியவர். இவர் இந்தியாவில் தலைமறைவாக இருந்து (இவர் தலைமறைவாக இருந்தது இந்திய அரசுக்கோ அல்லது இலங்கை அரசுக்கோ அல்ல மாறாக புளட்டுக்காக மாத்திரமே - என் எல் எவ் ரீ யின் உதவியுடன்) ), அதன்பின் தளத்திலும் தனது பாதுகாப்பில் மாத்திரம் குறியாக இருந்தவர்தான் இவர்.
அன்ரனி தன்னுடன் ஒரு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறைசென்று மீண்டவர்களுக்கு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், புரோவா அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஒருவரையும் கைவிடாது அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவியவர். பின் எமது உதவியுடன் நாடுதிரும்பிய அன்ரனியை பற்றி இல்லாத பொல்லாத கதைகளை இட்டுக்கட்டி கருத்துக் கூறுகின்றார்.
இங்கு "எமது தோழர் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு உதவி செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதே இந்த இரயாகரன்தான்" என்கின்றார். அன்ரனி இவர்களது தோழர் எனக் குறிப்பிடப்படும் நபரை கொழும்பில் சந்தித்தபின், அந்நபர் அன்ரனி பற்றி கதைத்த நிலையில் அன்ரனியுடன் உறவை ஏற்படுத்த விரும்பிய நிலையில்தான், இந்நபருடன் அன்ரனி பற்றிக் கதைக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர் 1980 களில் இரயாகரனுக்கு அரசியல் ரீதியாக தெரிந்தவர் என்ற அடிப்படையிலும், தீப்பொறியில் இருந்தவர் என்ற அடிப்படையிலும், அன்ரனிக்கு கொழும்பில் அறிமுகமானவர் என்ற அடைப்படையிலும் தான், இந்நபர் மூலமாகவும் உதவிகள் கோரப்பட்டது. ஆந்நபர் தமிழீழ மக்கள் கட்சியின் உறுப்பினர் என்று, இரயாவுக்கு அவர் தெரிவிக்கவில்லை. அவரின் திருமணச் சாட்சிக் கையெழுத்துக் கடந்து, திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண், புலியின் உளவாளி என்ற தகவல் எம்மை மேலும் அதிரவைக்கின்றது. ஆம் கிட்டுவுக்கு தீப்பொறி குண்டு எறிந்த தகவல் போல். கண்ணாடி சந்திரனை போடக் கோரிய தகவல்போல். அந்தப் பெண் புலியின் உளவாளி என்றால், அந்தத் திருமணத்தின் பின்னணியில் உங்கள் பங்கு என்ன என்ற கேள்வி இன்று எமக்கு எழுகின்றது.
"இதற்கிடையில் அன்ரனியுடன் சேர்ந்து ஏதோ ஒரு புரொஜெக்ட்டுக்காக இரயாகரன் கோஸ்டி ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தையும் அன்ரனியிடம் கொடுத்துள்ளார்கள். இந்த பணத்துடன் அன்ரனி இவர்களுக்கும் தலைமறைவானார். ஆனால் அவர் தொடர்புகளை துண்டிப்பதற்கு முன்பு அன்ரனி இவர்களிடம், தனக்கு தீப்பொறி அமைப்பினால் ஆபத்து இருப்பதாகவும், நாம் அவரை புலிகள் அமைப்பிற்குக் காட்டிக் கொடுக்கும் சாத்தியப்பாடு பற்றி தான் பயப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கு பின்னர்தான் அவர் இவர்களுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளார்." என்கின்றார்.
கற்பனைக் கதையில், வெளிப்படுகிறது வண்டவாளம். அன்ரனி எமக்கு பணமோசடி செய்ததாக கூறுவது, இவர்களின் கடைந்தெடுத்த கற்பனை. உங்கள் புளட்கால தலைமையால் சித்திரவதை செய்யப்பட்டு, நிரந்தமாக நோய்க்குள்ளாகி, நாளாந்தமும் அதிக விலையுள்ள மருந்தின்றி உயிரே வாழ முடியாத நிலையில், இருந்தவனுக்கு நீங்கள் உதவவில்லை. அன்ரனியை மோசடிக்காரன் என்று எங்கள் பெயரால், உங்கள் ”மே18” அரசியலுக்காக முடிசூட்ட விரும்புகின்றீர்கள். 15 வருடங்களாக எமது தோழர்கள் தான், பல வழியில் தொடர்ந்து உதவினர். அவன் வைத்த அரசியல் மற்றும் விவாதங்களின் பரிமாணம் உங்களோடு ஒப்பிடுவதற்கு எள்ளளவும் நிகரில்லா பெறுமதியானது. அவனது கால் தூசுக்குப் போதாது உங்களது வியாக்கியானங்கள்.
அவன் உங்கள் சித்திரவதைகள் மூலம் பெற்ற நோய் கூர்மையாகி, பேச்சுத்திறனை இழந்த நிலையில், வாசிக்கவே முடியாத நிலையில் இன்று வாழ்கின்றான். நோயின் கொடுமையில், அவனின் இன்றைய அர்த்தமற்ற செயல்கள் கொச்சைக்குரியனவல்ல. அவன் இன்றும் நாம் கொடுத்த பணத்தைப் பற்றி மட்டுமின்றி, இரயாவின் சில முன்கூட்டிய பாதுகாப்பு வழிகாட்டல்களையும் மீறி செயல்பட்டதால், தான் இழைத்த தவறுகள் பற்றியும் பேசுகின்ற நேர்மையை, உங்கள் ”மே18” அரசியல் மூலம் என்றும் சேறடிக்க முடியாது. நாம் அதை அனுமதிக்கவும் மாட்டோம்.
"அன்ரனி கூறியதை உண்மையென நம்பியே இப்படியான தவறை செய்துவிட்டதாக கூறிய இவர்கள் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்கள்… எங்கே இரயாகரனும், சீலனும் என்ன சொல்கிறார்கள் என்று நாம் பார்க்கலாமா?" என்கின்றார்.
வேடிக்கை தான் போங்கள். உங்கள் கற்பனைக்கு, நீங்கள் கம்பளம் விரித்து வரவேற்பு நடத்த முனைகின்றீர்கள். தமிழீழமக்கள் கட்சியின் புலி அரசியல் தான், புலிக்கு காட்டிக் கொடுத்தது. இது உண்மை மட்டுமின்றி, இளங்கோ புலியின் உளவாளியும் கூட. இந்த உண்மையை மறுத்து நாம் எதையும் முன்வைக்கவில்லை. அன்ரனி கூறியதைக் கொண்டோ, உங்கள் தோழர் என்று நீங்கள் கூறும் எந்த நபரும் கூறியதைக்கொண்டோ, இல்லாத ஒன்றை நாம் சொன்னது கிடையாது.
புலிக்கு புலம்பெயர் இலக்கியவாதிகள் பற்றிய முழுவிபரமும் அடங்கிய, அவர்களின் படங்கள் ஈறாக (இளங்கோ அனைவருடனும் நின்று எடுத்த படம்), உங்கள் தமிழீழமக்கள் கட்சிதான் புலிக்கு கொடுத்தது மட்டுமன்றி ஆள்காட்டி வேலையையும் செய்தது. இதைத்தான் "தேசபக்தனுக்கு" எதிராகவும் தமிழீழமக்கள் கட்சி செய்தது. அரசியல் ரீதியாக புலியை வழிகாட்டியவர்கள், எல்லாம் முடிந்தவுடன் தமிழீழமக்கள் கட்சி என்ற அமைப்பையே இல்லாதாக்கியவர்கள்.
"எமக்கெதிராக இந்த சந்திரனும், நேசனும் அவிழ்த்துவிட்ட சில்லரை உருப்படிகளுக்கெல்லாம் இந்த இரயாகரன்தான் மொத்த வியாபாரி. முதலில் நாங்கள் கேசவனை காட்டிக் கொடுத்ததாக கூறினார்கள். இத்தனைக்கும் இவர்களுடன் எங்களுக்கு நேரடியான தொடர்பு இருந்து வந்தது. இரயாகரனும், சீலனும் எம்மைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ந்தும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கேசவன் தொடர்பான பொய்களை நேசன் வெளியிட்டதும், அது தொடர்பாக எம்முடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளாமலேயே அவற்றை ஊதிப்பெருக்க வைத்தார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள எமது தோழர்கள் சீலனுடன் பேசியபோது நேசன்தான் தமக்கு இந்த தகவல்களை வழங்கியதாக அவர் கூறினார். சிறீரங்கன் தனது வலைத்தளத்தில் கேசவன் கைதின் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இப்போதுதான் நேசன் பகிரங்கமாக வந்திருக்கிறாரே. அவரிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொள்வதுதானே. இதனைவிட நாம் முன்பு மக்கள் கட்சியாக செயற்பட்டபோது பலரை உளவு பார்த்ததாக, காட்டிக் கொடுத்ததாக குற்றஞ் சாட்டுகின்றார்கள். எங்கே ஆதாரங்களை முன்வைக்கட்டுமே" என்கின்றார். ஆக இப்படி புலி இளங்கோ உள்ளிட்ட தமிழீழக்கட்சி, புலிக்கு எதிராகத்தான் இயங்கியது என்று ரகுமான் ஜான் கூறுகின்றார். இந்தப் புரட்டை நம்பக் கோருகின்றார்.
"கேசவன் தொடர்பான பொய்களை நேசன் வெளியிட்டதும், அது தொடர்பாக எம்முடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளாமலேயே அவற்றை ஊதிப்பெருக்க வைத்தார்கள்." என்கின்றார். அபத்தமான பொய். கேசவனோ, சந்திரனோ எம்முடன் தொடர்பில் இருந்தவர்களல்ல. நேசன் உடனான எமது தொடர்பு, கிட்டுவுக்கு தீப்பொறிதான் குண்டு எறிந்தது என்று தேசத்தில் வந்த பின்னோட்டத்தின் பின் தான். அதாவது கடந்த இரண்டு மாதமாகத்தான். இதில் இரயாவோ, சீலனோ அவர்களுடன் இன்றுவரை தொடர்பு கொள்ளவில்லை. இப்படி இருக்க எமது குற்றச்சாட்டு வெளிப்படையானது. நாம் முன்கூட்டியே இதைக் கூறி வருகின்றோம். ரகுமான் யான் 2009 ம் ஆண்டு ஐரோப்பிய பயணத்தின் போது, எமது தோழர்கள் அவரிடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருகின்றார்கள். அவரைச் சுற்றி நிகழ்ந்த கடந்தகாலம் பற்றியும், அக்கால விமர்சனத்தையும், சுயவிமர்சனத்தையும் வெளிப்படையாக முன்வைக்கவும் கோரினார்கள். ஆனால் அவர் கடந்தகால உண்மைகளை மூடிமறைக்க, அதை தேடி அழிப்பதில் தான் குறிப்பாக கவனம் செலுத்தினார். பலரிடம் இருந்த ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றார். இப்படித்தான் கடந்தகாலம் பற்றிய மூடிமறைப்பை முன்னின்று செய்தார்.
இப்படி மூடிமறைக்கின்ற பித்தலாட்ட அரசியலே தான், யாழ்ப்பாணத்தை நன்கு அறியாத கேசவனை (இவர் திருகோணமலையை சேர்ந்தவர்) யாழ் அனுப்பியது. இப்படி அனுப்பியவிதம், தங்களை பாதுகாப்பாக்கிக் கொண்டு அவரை மட்டும் பலிகொடுத்த விதம், அவர் பிடிபட்ட விதம், அவருக்கு அஞ்சலி செலுத்தாது கடமைக்கு அதை ஒப்புவித்த விதம், மார்க்சியத்தை கொச்சைப்படுத்தி திரித்த விதம், புலிக்கு வக்காலத்து வாங்கி தீப்பொறியை புலியாக்கிய விதம், புலியின் உளவாளிகளை உள்வாங்கி அனைவரையும் காட்டிக்கொடுத்த விதம், இப்படி தொடரான பல நிகழ்வுகள், புலியின் அரசியல் முதல் அதன் சதி அரசியல் நடைமுறை எல்லாம் எம்முன் எதைச் சொல்லுகின்றது!? அதை மூடிமறைத்து ”மே18” ஆக தொடர்ந்தும் செய்யும் சதி அரசியல், எமது குற்றச்சாட்டுக்கான அரசியல் அடிப்படையை தொடர்ந்து வழங்குகின்றது.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
07.03.2011
1.தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி! ஆச்சரியம்!!- அவதூறுக்கு மறுப்பு
2.என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி "வியூகம்" படம்
3. ஜெயபாலனின் இன்றைய உலக ஒழுங்கமைப்புக்குள் இருக்கும் 'ஜேணலிசத்'தின் ஆதாரங்கள்
4."மே18"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்
5. சந்தர்ப்பவாத "மே 18" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும்
6. புலியின் உளவு அமைப்பான தமிழீழக் கட்சி தான் இன்று "மே 18" இயக்கமாகும்
7."மே18" இயக்கம் "தன்னியல்புவாதம்" மூலம் முன்மொழியும் வர்க்கமற்ற அரசியல் (வியூகம் : பகுதி 01)
11. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1
12. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2
13. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3
14. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 4
15. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 5
16. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 6
17. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 7
18. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 8
19. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 9
20. அகிலன்-செல்வன் படுகொலையை திரித்தும், மூடிமறைத்தும் கொலைகாரர் வரலாற்றை மீண்டும் எழுதுகின்றார் ஜென்னி
21. கிட்டுவுக்கு குண்டு எறிந்த தீப்பொறியின் அரசியல், தனிநபர் பயங்கரவாதமாகும்