உங்களிடமுள்ள சுடுகலங்கள்
ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதாயினும்
ஏந்தும் கரமும் இதயமும்
ஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது

 

இயந்திரத் துப்பாக்கிகளிலிருந்து

சீறிப்பாயும் ரவைகள் யாரை வீழ்த்தப் போகிறது
அடக்கு முறையாளரின் கோட்டைகள்
இடிந்து நொருங்கும் படியாய்
அதிரும் கோசங்களுடன் அணிவகுத்து நிற்பது
உங்களது அன்னை தந்தையர்
உங்களது உடன்பிறந்தோர்
உங்களது துணைகள்
உங்களது பிள்ளைகள்
கொடியவரைக் காப்பதற்காய்
மக்கள் எதிரியாய் மடிவதை விட்டு
கையிருக்கும் துப்பாக்கியோடு
மக்களோடு மக்களாய் கலந்து விடுங்கள்
எழுச்சியின் விளை நிலத்தில் ஏகாதிபத்தியங்கள்
அடிவருடிகளை அமர்த்துவதற்காய்
சதித்திட்டங்கள் படுவேகமாய் தீட்டப்படுகிறது

சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியின் நீட்சி
மக்கள் அரசாட்சியை நோக்கி அணிவகுக்கும்
அரபு மக்கள் தீரம் தொடர்ந்தெழுந்து வெல்லும்
எழுச்சியின் இலக்கு வீழ்த்தப்பட முடியாதது
கட்டளைகளை புறம் தள்ளிவிட்டு
மக்களிற்காகக் போரிடுங்கள் படைவீரர்களே!

 

செய்தி:  நிராயுதபாணிகளான மக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு தாக்கும் கதாபியின் மிருகத்தனமான உத்தரவிற்கு கீழ்படியாத இரண்டு லிபிய விமானிகள் தமது விமானங்களை பக்கத்து நாடான மால்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியிருக்கின்றனர்—-