"வெவ்வேறு தத்துவார்த்தப் பின்புலத்தைப் பெண்ணிய அமைப்புகள் கொண்டிருப்பினும் ஒரு புள்ளியில் அவர்கள் இணைகின்றனர். தனது பாலியல் உறவை தேர்ந்தெடுக்கும் உரிமை, யாருடன் பாலியல் உறவை எப்போது வைத்து கொள்ளலாம் என்ற உரிமை, தனது உடல் சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை ஆகியவை பெண்ணின் அடிப்படை உரிமைகள் என்கின்றனர் பெண்ணியவாதிகள். இது மேற்கு நாட்டு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. தமிழ் பெண்களுக்கு உரித்தான உரிமையும் கூட. குடும்பம், பாலுறவு ஆகியவை பெண்ணடக்குமுறையின் கருவிகளாக இருப்பது மேற்கு நாட்டில் மட்டுமல்ல அனைத்து சமூகங்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும். அவர்கள் என்ன சாதி, என்ன மதம், என்ன நிறம், எந்த வர்க்கம் என்பதற்கு மேலாக இது எல்லா பெண்களுக்கும் பொதுவான அம்சம்."

இப்பிடி எங்க ஊரு நாயொண்டு பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டு குண்டு, குழி, தண்டு, தாவரம், லைட்போஸ்ட் என்று எதைக் கண்டாலும் காலைக்கிளப்பும் நிலையை இன்று புலம் பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலுமுள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

இதற்கு காரணம் செக்கென்றும் பாராமல் சிவலிங்கமென்றும் பாராமல் காலைத் தூக்கும் அந்த நாய்க்கு ஆதரவாக ஆரவாரம் செய்யும் பிரமுகத்தனம் கொண்ட குட்டிபூர்சுவாக்களுக்கு உண்மையிலேயே, உண்மையான பெண்விடுதலையைப் பற்றி எந்த வித கரிசனையும் கிடையாது.

இவர்கள் பலர் பெண்ணியம் கதைப்பது தமது தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இழைத்த துரோகங்கள், பாலியல் நடத்தைப் பிறழ்வுகள் போன்றவற்றை நியாயப்படுத்துவதற்கும், தம்மை சிந்தனைத்திறன் கொண்ட மேலோராக காட்டிக் கொள்வதன் மூலம் சமூக அங்கீகாரம் பெறுவதற்குமேயாகும். இதில் பிரச்சனை என்னவென்றால் இவர்களின் நடத்தைகள் எந்தவித தத்துவத்தாலும் நியாயப்படுத்த முடியாது. ஏன் எனில் இன்று உலகில் உள்ள அனைத்து உயிரினமும் நடைமுறை ரீதியாக ஏதோ ஒரு கட்டமைப்பின் விதிகளுக்கு அமையவே, உயிர்வாழ முடியும் என்பது நிரூபணமானதொன்று. அக்கட்டமைப்புகள் இயற்கையின் கட்டமைப்பாக இருக்கலாம், மனிதர்களால் அமைக்கப்பெற்ற சமுதாய கட்டமைப்பாக இருக்கலாம். இதன் அடிப்படையில் சமுதாய மாற்றத்தை முன்னெடுக்கும் தத்துவங்கள் என்பது எது நடைமுறையிலுள்ள தத்துவமோ அதன் குறைபாட்டை மேம்படுத்தி புதிய கட்டமைப்பை உருவாக்க முயல்வதே ஒழிய, சமூக கட்டமைப்பை முழுதாக அழித்தொழிப்பதல்ல. ஏன் அனர்கிசம் கதைக்கும் அரசியல் சக்திகள் கூட அரசகட்டுமானம் உடைக்கப்பட வேண்டுமென்றும், அரச இயந்திரம் ஒழிக்கப்பட வேண்டுமென கூறுகின்றார்களே ஒழிய ஒட்டுமொத்தமாக எந்தவித கட்டமைப்பும் இருக்கக் கூடாதென சொல்வதில்லை.

அனர்கிஸ்ருகள் அரசிற்கு பதிலாக மக்களே தலைமைகள் இன்றி மனிதர்களின் தேவைகளின் அடிபடையில் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்வதே மனிதவிடுதலையின் மேம்பட்ட வடிவம் என்கின்றனர். இதன் அடிப்படையில் வரையறையற்ற பாலியல் நடவடிக்கையை அனைத்து விதமான பெண்ணிய கோட்பாடுகளும் ஆதரிக்கின்றன என்பது அப்பட்டமான சமூகவியல் வக்கிரத்தனமாகும்.

இதை மறுத்து வரையறையற்ற பாலியல் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பில்லாத சமூகத்தை உருவாக்கப் போவதாக யாராவது சொன்னால் அல்லது சொல்ல முயன்றால் அது வெறும் கற்பனாவாதமாகவும், பிரமுகதனத்தில் கற்பனையான இலக்கியம் படைக்க உதவும் சில மதம் சார்ந்த பார்வையாகவும், மற்றும் இன்று தத்துவ ஆய்வு அரங்கில் உயிருக்கு ஊசலாடும் சீரழிந்த பின்நவீனத்துவ குட்டி பூர்சுவாவர்க்க புரிதலாகவுமே இருக்கும்.

ஆனால் உளவியல் மருத்துவ முறையூடாக இவர்களின் நடத்தையை விளங்கிக்கொள்ளலாம். உதாரணமாக, எந்த வரையறையும் இன்றி, இடம்; பொருள் ஏவல் எதையும் ஒரு மனிதம் கவனத்தில் கொள்ளாமல் நடந்து கொள்வதை ”நடத்தையும் உணர்வுகளும் விகாரமடைந்த கோளாறு” அல்லது வருத்தம் என்று வரையறுக்கிறது உலகசுகாதார நிறுவனத்தின் சர்வதேச உடல் உள வருத்தத்தை வகைப்படுத்த உதவும் கையேடு, International Statistical Classification of Diseases and Related Health Problems(ICD-10). சமூகம் மற்றும் தனிநபர்களை வதைக்கும் பாலியல் மற்றும் சமூகவிரோத செயலில் ஈடுபடுவதை ”நடத்தையும் உணர்வுகளும் விகாரமடைந்த கோளாறு ” என ஒரு வரியில் கூறினாலும்; இந்தவகைக் கோளாறு உள்ளவரின் நடத்தையின் தன்மை, அவரின் குழந்தை நிலையிலிருந்து வாலிபவயது வரையான வாழ்க்கையின் தன்மை போன்ற பின்புலத்திலிருந்த அவரின் கோளாறை உலகசுகாதார நிறுவனத்தின் சர்வதேச உடல் உள வருத்தத்தை வகைப்படுத்த உதவும் கையேடு, International Statistical Classification of Diseases and Related Health Problems(ICD-10). துல்லியமாக வரையறுக்கிறது. குறிப்பாக borderline personality disorder (F60.31) விளிம்புநிலை ஆளுமைக் குறைபாட்டுக்கோளாறு, emotionally unstable personality disorder (F60.3)உணர்வுநிலை தடுமாற்ற கோளாறு, F90-F98 Behavioural and emotional disorders உணர்ச்சிவசப்படலும் நடத்தையும் சார் கோளாறு போன்ற உளவியல் குறைபாடுள்ளோர் தமது பாலியல் சார்ந்த உணர்சிக்கட்டற்ற நடத்தையினால் தம்மையும் தமது சூழலையும் துன்பத்திற்கும், சீரழிவுக்கும் உள்ளாக்குகின்றனர் என்பது உலகசுகாதார நிறுவனத்தின் சர்வதேச உடல்-உள வருத்தத்தை வகைப்படுத்த உதவும் கையேட்டின் கருத்தாகும். இந்தக் கையேடு தான் இன்று உலகில் எல்லா நாடுகளிலும் உளவியல் மருத்துவர்களால், மன நோயாளிளின் வருத்தத்தை கண்டறிய பாவிக்கப்படுகிறது.

ஆகவே பெண்ணியத்தையும், மற்றும் தத்துவங்களையும் பாவித்து பாலியல் மனநோயாளிகளை நியாயப்படுத்துவதை விட அவர்களின் உளவியல்சார் துன்பத்தை சரியாக விளங்கி, அவர்களை பரிவும் கருணையும் தேவையானவர்களாக உணர்ந்து கொண்டு அவர்களை தகுதி வாய்ந்த மன நல மருத்துவரிடமோ அல்லது பாலியல் ஆலோசகரிடமோ(sexologist) அழைத்துச் செல்வது நன்மை பயக்கும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலத்தில் உளவியல் சம்பந்தமான விழிப்புணர்வு குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெகுவாக பரவியது. காரணம் இரண்டாம் உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வலியினால் ஏற்பட்ட பரவலான உளவியல் வருத்தங்களாகும். உளவியல் பாதிப்புக்களின் விளைபொருளாக கட்டற்ற மதுபாவனை, போதைவஸ்து பாவனை, போன்ற பிரச்சனைகள் அதிகமாகியது. இப்பிரச்சனை மேற்கு ஐரோப்பிய இடதுசாரி கட்சிகளையும் பாதித்தது. பல்லாயிரம் கிட்லருக்கு எதிரான தேசபக்த யுத்தத்தில் போரிட்ட பல தோழர்கள் கட்டற்ற மதுபாவனை, போதைவஸ்து பாவனை போன்றவற்றுக்கு அடிமையாகியதுடன் பலர் குடும்பத்தில் வன்முறை பாவிப்போராக மாறினார். கட்சிகளின் பலம் குறைந்த நிலையில், இப்பிரச்சனைகளை இடதுசாரி கட்சிகள் விளங்கிக் கொள்ள முயன்றன. அதுவரை மேற்படி உளவியல் பாதிக்கப்பட்டு, தொழில் செய்ய முடியாமல், போதைக்கு அடிமையானோரை லும்பன்கள் என வகுத்த கட்சிகள், தமது வர்க்க ஆய்விலிருந்து அச்சொல்லை விலக்கினர். சிலகட்சிகள் சமூக மாற்றத்திற்கேற்ப சமுகம் சார் புதியகுழுக்களை லும்பன்களாக வகுத்தனர். உளவியல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த மருத்துவ மற்றும் சமூக உதவி வழங்க வேண்டுமென்பதை அரசியல் கோசமாக முன்வைத்து போராடினர். இதனாலேயே இன்று அனைத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல சமூக நல உதவிகள் தொழில் மூலம் வருவாயை பெறமுடியாதவர்களுக்கு வழங்கப்படுகிறது .

இதைப்பற்றி எல்லாம் எந்தவித அறிவும் இல்லாமல், யாழ்ப்பாணிய தமிழ் இனவாதி தனது தளத்தில், தனது அரசியல் வங்குரோத்துத்தனத்தை மறைக்கவும், பழிவாங்கலை முன்னிறுத்தியும், கார்ல் மார்க்சை துணைக்கழைத்து, அவரின் "லும்பன்" என்ற பதத்தை திரிபுபடுத்தி கட்டுரை வரைந்து தனது இச்சையைத் தீர்க்க முயன்றுள்ளார்.

இந்திய மீன்பிடி சம்பந்தமாக மேற்படி இனவாதி எழுதிய கட்டுரையை, ஒருவர் விமர்சித்து பின்னூட்டம் விட்டதுடன், வேறு ஒரு தளத்தில் மார்க்சிச பார்வையில் வெளிவந்த கட்டுரையை மேற்கோள் காட்டியிருந்தார். முகமூடி கிழிபட்ட தமிழினவாதி மீன்பிடி பற்றி ஒன்றும் தெரியாமல் எழுதிய புலுடாக்கள் சந்திக்கு வந்ததனால் கடுப்புக்கு உள்ளானார். இதன் பின்னணியில் தனது கடுப்பை தீர்க்கவும், மீன்பிடி சம்பந்தமான தனது தவறான கருத்தை சடையவுமே "லும்பன்கள்" பற்றி கட்டுரை எழுதியுள்ளார்.

"அதே லும்பனிசத்தின் கூறுகள் இன்று புலம் பெயர் நாடுகளில் தமது வேர்களைப் படரவிடுகின்றன. புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியின் பின்னான வேலையில்லாத்திண்டாட்டம் இதற்கு ஊக்கியாகத் தொழிலாற்றுகின்றது." என தனது கட்டுரையில் எழுதுகிறார் அந்த இனவாதி.

அவரது கருத்துப்படி வேலையில்லாத்திண்டாட்ட நிலை என்பது, சமூகம்சார் நிகழ்வென்றாலும் அதற்கு காரணம் தனிமனிதர்கள் என்றே தன் கட்டுரையில் சொல்ல வருகிறார். இன்றுள்ள மார்க்சிச ஆய்வுமுறையில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்குப்பட்ட பாட்டாளிகள் லும்பன்கள் அல்ல. அவர்கள் தொழில் செய்யும் காலத்தில் செலுத்திய தொகையே அவர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது அரச மற்றும் தனியார் காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் சிறு தொகையை பெறுவதற்கே ததிங்கிணதோம் போட வேண்டும். இதனாலேயே ஐரோப்பிய இடதுசாரி கட்சிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தமது அரசியல் திட்டத்தில் பாட்டாளிவர்க்கத்தின் முண்ணனிச் சக்திகளில் ஒன்றாக வரையறுக்கின்றனர்.

அப்படி என்றால் லும்பன்களே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய உலக நிலையில் சமுதாய கட்டமைப்புக்கு வெளியில் சீரழிவு வேலையில் ஈடுபடுவோரையும், சமூக மேல் மட்டத்தில் இடைத்தரகர்களாக இயங்கி குறுக்கு முறையில் அதாவது உற்பத்தி உறவு முறைக்கு வெளியில் பொருள் சேர்ப்போரையுமே லும்பன்கள் எனலாம். உதாரணமாக, மாபியாவாக இயங்குவோர், ஆள்கடத்தி பணம்பறிப்போர், போதைவஸ்து கடத்துவோர், தொழில்முறை உறவுகளை ஏற்படுத்தி வங்கிகளையும், தனிமனிதர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்போர், அரச தனியார் துறைகளில் லஞ்சம் கைமாற்றும் தரகர்களாக இயங்குவோர், என லும்பன்களை வகைப்படுத்தலாம். இதன் அடிப்படையில் பொருளாதார வறுமையாலும், உடல் உளவியல் வருத்தத்தாலும், வேலையில்லாத்திண்டாட்டத்தாலும் பாதிக்கப்ப்பட்டோரை அரசியல் நச்சுவிதைகள் என முத்திரை குத்துவது அரசியல் வங்குரோத்துத்தனமும், தனது வர்க்கம்சார் குணத்தை உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் தன்மை என முத்திரை குத்துவதும் தான் இன்றைய புலம்பெயர் அரசியலிலுள்ள தறிக்கப்பட வேண்டிய நச்சுவிருட்சம் எதுவென காட்டிநிற்கும் அறிகுறிகளாகும்.

கார்த்திகேசு கலியுகவரன்