இன முரண்பாடும், முரண்பாட்டின் தன்மையும், முழுமை தளுவியதல்ல. அதாவது இலங்கை தளுவியதில்லை. வடக்கு கிழக்கு தமிழர் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக கருதுகின்ற போது, வடக்கு கிழக்கு அல்லாத பகுதிகளில் வாழும் தமிழரும் சிங்களவரும் அப்படிக் கருதவில்லை. இங்கு அவர்களின் பிரதான முரண்பாடு, வர்க்க முரண்பாடாக உள்ளது. அதேநேரம் இதே முரண்பாடு, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதே நிபந்தனையின் கீழ் உள்ளது. ஒரு நாட்டின் உள்ளான நிலைமை இது. அதேநேரம் வடக்கு கிழக்கு மக்களுக்குள் பிரதேச சாதிய வர்க்க முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளது.

இந்த நிலையில் இதை எல்லாம் மறுத்து, இன முரண்பாட்டை மட்டும் முன்னிலைப்படுத்துவது யார்? வடக்கு கிழக்கில் உள்ள சுரண்டும் வர்க்கம்தான். அவர்கள் தான் பிரிவினையை முன்வைக்கின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் சந்திக்கின்ற மேலதிகமான இனவொடுக்குமுறை, அந்த மக்கள் சந்திக்கின்ற வர்க்க ஒடுக்குமுறையை இல்லாததாக்கிவிடுவதில்லை. சாதிய பிரதேச முரண்பாடுகளை களைந்துவிடுவதில்லை.

பிரிவினையை முன்தள்ளும் சுரண்டும் வர்க்கம், இலங்கை தளுவிய வர்க்க முரண்பாட்டை மூடிமறைத்து, பிரிவினை மூலம் அதைப் பாதுகாத்து தன் சுரண்டும் உரிமையாக அதை மாற்றுகின்றது. இந்தப் பிரிவினைவாதத்தின் அரசியல் உள்ளடக்கம் இந்த அடிப்படையில் தான் கருக்கொள்கின்றது. ஒடுக்கும் இன சுரண்டும் வர்க்கம் தன் இன மக்களையும் சுரண்டுகின்றது என்பதையும் மறுத்து அல்லது மூடிமறைத்து, அனைத்தையும் வெறும் இன ஒடுக்குமுறையாகக் காட்டுகின்றது. இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகவும் காட்டுகின்றது. இதன் மூலம் தான் சுரண்டும் உரிமையை, முன்னிறுத்தி பாதுகாக்கின்றது.

 

 

பாட்டாளி வர்க்கம் ஒடுக்கும் இன சுரண்டலையும், அதுவே அந்த இன மக்களின் பிரதான முரண்பாடாக இருப்பதை எடுத்துக் காட்டுவதுடன், இன ஒடுக்குமுறையையும் எடுத்துக் காட்கின்றது. அதேநேரம் சுரண்டும் பிரிவினையை மறுத்து, ஐனநாயகக் கோரிக்கையை முன்னிறுத்தி அதற்காகப் போராடுகின்றது. லெனின் இதைத்தான் "எல்லாத்தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக்கொள்வது, பிரிந்துபோகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேச உரிமைகளையும் எல்லாத் தனித்துவப்போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப்பார்ப்பது' என்றார்.

இல்லையென்று சொல்லும் மார்க்சியம் எதுவும் கிடையாது. இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கம், இனவொடுக்குமுறையால் இழப்பதற்கு எதுவும் இருப்பதில்லை. இங்கு நிலவும் இனவொடுக்குமுறையால் பாதிக்கப்படுவது பாட்டாளி வர்க்கமல்ல. பாட்டாளி வர்க்கமல்லாத மற்றைய வர்க்கங்களின் நலன்கள்தான். இங்கு ஜனநாயகக் கோரிக்கை என்பது, தன் இன மக்களை சுரண்டுவதை அது அனுமதிப்பதில்லை. அது சொந்த இனப் பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுகின்ற பூர்சுவா வர்க்க உரிமையை மறுத்து நிற்கின்றது. ஜனநாயகக் கோரிக்கைக்கு மாறான பிரிவினைவாதம் என்பது, சுரண்டலை நடத்த அனுமதிக்கும் கோரிக்கையாகும்.

இங்கு பாட்டாளி வர்க்கத்தின் கடமை, இனம் கடந்த வர்க்க ஓற்றுமையைக் கோரி, சுரண்டல் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் வண்ணம் இடைநிலை வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதுதான்.

இனியொருவும் புதியதிசையும் முன்வைத்த தமது திட்டத்தில் "இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு. … பிரதான முரண்பாடுகளைக் கடந்து இலங்கை மக்களின் பிரதான எதிரி தரகு முதலாளித்துவம்" என்கின்றனர். இலங்கையின் பிரதான முரண்பாடு "தேசிய இன முரண்பாடு" என்பது தவறானது. வடக்கு கிழக்கு அல்லாத மக்களின் பிரதான முரண்பாடு, வர்க்க முரண்பாடாகும். அதே முரண்பாடு வடக்கு கிழக்கு மக்களுக்கும் உள்ளது. "பிரதான எதிரி தரகு முதலாளித்துவம்" என்பது, குறுக்கிக் காட்டுகின்ற மற்றொரு அரசியல் திரிபு. "தரகு முதலாளித்துவம்" பிரதான எதிரிகளில் ஒன்றுதானே ஓழிய, அது மட்டும் தான் "பிரதான எதிரி"யல்ல.

தொடர்ந்து அவர்கள் கூறுகின்ற "பிரதான முரண்பாடான தேசிய இன முரண்பாடிற்கும் தேசிய இன அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களின் வெற்றியே இலங்கை மக்களின் விடுதலைக்கான முன்நிபந்தனையாக அமைகிறது" என்பது மற்றொரு திரிபு. இலங்கை மக்களின் (வடக்கு கிழக்கு அல்லாத மக்களின் பிரதான முரண்பாடு வர்க்க முரண்பாடு) வர்க்கப் போராட்டமும், தேசிய இன முரண்பாட்டை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. வடக்கு கிழக்கு அல்லாத பிரதேசத்தில் இனமுரண்பாடல்ல பிரதான முரண்பாடு. இதை குறுந்தேசியவாதிகள் தான், அதாவது பிரிவினைவாதத்தை முன்தள்ளும் கூட்டம் தான், இப்படி குறுக்கிக் காட்டுகின்றனர். லெனின் தலைமையிலான பாட்டாளிவர்க்க கட்சி, இதே நிலைமையை சந்திக்கவில்லையா? ருசியாவில் பல சிறிய தேசிய இனங்கள் ஓடுக்கப்பட்டு அங்கு இனமுரண்பாடு நிலவிய போது, சிறு தேசிய இனங்களின் முதன்மை முரண்பாடாக இனமுரண்பாடு இருந்த போது, ருசியாவின் வர்க்கப் போராட்டத்தை முதன்மை முரண்பாடாக கொண்டுதான் லெனின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து தேசிய இனவொடுக்குமுறைக்கு முடிவு கட்டினார். இங்கு சுயநிர்ணயத்தை உயர்த்திப்பிடித்து, வர்க்கப் போராட்டம் மூலம் இனவொடுக்குமுறைக்கு முடிவு கட்டினர்.

இந்த உண்மைகள் பலவற்றை தங்கள் பிரிவினைவாத திட்டத்துக்கு அமைய திரித்து மறுக்கின்றது, இனியொருவும், புதிய திசைகளும். இந்த வகையில் இவை குறுகிய குறுந்தேசிய இனவாதம் சார்ந்த பிரிவினைவாதத் திட்டமாகும். பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தை மறுத்து, அதற்கு குழிபறிக்கும் கோட்பாட்டையும் நடைமுறையையும் அது கோருகின்றது.

 

முற்றும்

 

பி.இரயாகரன்

26.02.2011

 

1. இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 1

2. இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 2