தென்னிந்திய மீனவர்கள் இலங்கைக் கடலிலே படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தப் படுகொலைகள் நீண்ட காலமாகவே நடந்தும் வருகிறது. கிட்டத்தட்ட இதுவரை 500 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டும் விட்டார்கள். இலங்கைக் கடற்படையாலும், இந்திய ரோலர் கண்காணிப்பு காவல் படைகளாலும், புலிகளாலும் இந்திய - இலங்கை மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டும் துன்புறுத்தப்பட்டும், காணாமற் போயும் இருந்தனர். இந்த மீனவர் படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் ஆதரிக்கவோ, நியாயப்படுத்தி விடவோ எவராலும் முடியாது. அதேபோல இப்போது நடக்கும் தமிழக மீனவப் படுகொலைகளையும் ஓர் ''இனப்படுகொலை'' யாகக் காட்டி, ஏழை மீனவர்களின் அடிப்படைப் பிரச்சனையை திசை திருப்பிவிடவும் முடியாது.
2008 ஆம் ஆண்டு இலங்கை அரசானது கிழக்கிலே புலிகளுக்கு எதிராக யுத்தத்தைத் தொடங்கி இருந்தது. இக்காலத்தில் இலங்கை - இந்தியக் கடல்களில், புலிகளின் நடமாட்டக் கண்காணிப்பு (பயங்கரவாத நடமாட்டத்தைக் கண்காணித்தல்) முதல், கடல் மேலாண்மையைக் கூட்டாகக் கண்காணிக்க இரு அரசுகளும் முன்வந்திருந்தன.
இக்காலத்தின் பின் இலங்கைக் கடலில் இந்திய மீனவர்களின் (தமிழக) படுகொலையானது குறைந்திருந்தது. இந்த யுத்தக்காலத்தில் இது இல்லை என்று சொல்லும் அளவுக்கும் இருந்தது. உள்நாட்டு யுத்தம் அகோரமாக நடந்ததால், இந்திய மீனவர்களின் வருகை உள்நுழைய முடியாததாகவே இருந்தது. இந்த உள்நாட்டு யுத்தம் கிழக்கில் இருந்து விரிவடைந்து வன்னியை நோக்கி நகர்ந்தது. இவ்யுத்தம் இறுதியில் புலிகளை அழித்தொழித்து (இனவழிப்புடன்) வெற்றியும் கொண்டது. இவ்வரசுகளின் இந்த யுத்த வெற்றியின் மீது, புலிகளிடம் இருந்து வந்த நிலங்களையும், கடலிலே இருந்த புலிகளின் மேலாண்மையையும் அரசு தன்வசப்படுத்தியும் கொண்டது.
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கைத்தீவு, 1100 மைல்கள் நீண்ட நெடிய கடல்வளம் அரசின் கைகளில் வந்தது. இவை யுத்த வெற்றிக்கு முன் இலங்கைக்கான மொத்தக் கடற்பரப்பு 12000 சதுர கடல் மைல்களாக இருந்தது. இவற்றில் 73.4 வீதத்தைக் கொண்ட வட - கிழக்குப் பகுதிக்கான கடல்களின் பெரும் பகுதி புலிகளின் மேலாண்மையின் கீழ் இருந்தது. யுத்த வெற்றியின் பின், கடல் அனைத்தினதும் மேலாண்மை அரசின் கீழ் வந்ததன் பின்னர் மீண்டும் இந்த இந்திய மீனவர்கள் படுகொலைகள் தொடரத் தொடங்கியுள்ளன. யுத்தத்தின் பின்னர் தமிழக மீனவர்களின் வருகையும் அதிகரித்துமுள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக கடும் இராணுவ முற்றுகைக்குள், வடக்குக் கிழக்கு மீனவர்களின் கடலானது இருந்து வந்தது. யுத்தம் முடிந்த கையுடன் கிழக்குக் கடலும் (யூன் '09), கடந்த வருடம் வடக்கு வன்னிசார் கடலும் அந்த மீனவமக்களின் தொழில் நடமாட்டத்துக்கு திறந்து விடப்பட்டது.
இதையடுத்து இந்திய மீனவர்களின் வருகையும் வேகமாக அதிகரித்தும் இருந்தது. நீண்ட நெடுங்கால யுத்தத்தால் அரச கடல் ஒடுக்குமுறை ஒருபுறமும், புலிகளின் கடல் மேலாண்மை மறுபுறமுமாக இயற்கையான பாரம்பரிய மீனவத்தொழில் வளர்ச்சியைத் தடுத்திருந்தது. போதாக்குறைக்கு 2004 ஆம் ஆண்டு வந்த சுனாமி, மீனவத் தொழில் வளங்களை அழித்துப்போனது. பல்லாயிரக்கணக்கான உயிர்களோடு, இவர்கள் இச்சிறு தொழில் உடமைகளையும் இழந்தனர். நாட்டில் மொத்தமாக இருந்த 14 மீன்பிடித் துறைமுகங்களில் 12 முற்றாக அழிந்து போயின. கொழும்புக்கு அருகில் உள்ள முட்வால், மன்னார்தீவில் உள்ள கல்பிட்டியா ஆகிய மீன்பிடித் துறைமுகங்கள் தவிர மற்ற எல்லாம் முற்றிலும் அழிந்துபோயின. இவற்றைப் புனரமைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று இலங்கை அரசு அன்று அறிவித்தது. யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பருத்தித்துறையில் இருந்து தெற்கு மாநிலத்தில் உள்ள கல்லே மாவட்டம் வரையும், ஓர் இலட்சத்து 71 ஆயிரம் மீனவர்கள் இருந்து வந்தனர். இவர்களில் 90 சதவீதம் பேர் இந்தச் சுனாமியால் பாதிக்கப்பட்டும் இருந்தனர். கிழக்கில் ஏறத்தாழ 12 624 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 69 940 பேர் வரை ('72) வாழ்ந்து வந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவில் மட்டும், ஆயிரத்து 500 மீன்பிடி படகுகள் இருந்தன. இவற்றில் 14 தான் சுனாமிக்குப் பின்னர் எஞ்சி இருந்தன என்று கடற் புலிகளின் தலைவர் சூசை அன்று தெரிவித்தும் இருந்தார் இவ்வாறு எஞ்சிய சிறு உடமைகளையும், உதவிகளையும் கொண்டு மீனவர்களின் சிறு பகுதியினர் யுத்தத்தின் பின்னர் தொழிலில் ஈடுபட்டனர். 80 களில் இருந்ததோடு ஒப்பிடும்போது இது 2 - 5 வீதமாகவே சராசரியாகக் காணப்படுகிறது.
யுத்தம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் வலு சந்தோசப்பட்டனர். அதிகளவு மீன் பிடிபட்டபோது ஆசையோடு கரையை அடைந்தனர். இவர்களின் இந்தச் சந்தோசமும் ஆசைகளும் அன்று அந்தக் கரைகளிலேயே நாறிப்போயும் விட்டது. இந்த மீனவர்கள் பிடித்துவந்த மீன்கள் உள்ளுர் சந்தைக்கு அதிகமாகவே இருந்தது. முன்போல மீதத்தைக் கொழும்புச் சந்தைக்கு அனுப்ப முடியவில்லை. போக்குவரத்துக்கள் இராணுவ இறுக்கத்துடன் இதற்கான சாத்தியங்கள் அறவே அற்றும் இருந்தது. குறிப்பாக பாஸ் இவர்களுக்குத் துண்டாகவே கிடைக்கவில்லை. முன்னர் குருநகர், பருத்தித்துறை, மயிலிட்டி... போன்ற இடங்களில் இயங்கிய பிரதான ஐஜஸ்த் தொழிற்சாலைகள் யுத்தகாயங்களோடு இப்பவும் பாராமுகமாகவே அழிந்தே இருந்தது. மீன்களைப் பதப்படுத்தி கருவாடு போடுவதற்குக் கூட உப்புக் கல்லுக்குக் கூடத் தட்டுப்பாடு தான் நிலவியது. (இப்பொழுது இது ஓரளவுக்குக் கிடைக்கிறது).
ஒருபுறம் துரித அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, வாழ்வாதார உயர்வுகள் என்று பினாத்துகிறது அரசு. மறுபுறத்தே இந்த உலகமயமாக்கும் இனவாத தரகுச், சந்தைகளுக்காக வறிய சிறுபிடி மீனவர்களை இப்படி ஒடுக்கிக் கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு இவர்களை உள்ளுர் சந்தைகளுக்கு வெளியே உற்பத்தியில் ஈடுபடாதபடி ஒடுக்குகிறது. மீன்பிடிக் கரைகள் திறக்கப்பட்ட போதிலும், கொழும்புச் சந்தை இவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டும் இருக்கிறது. இலங்கை அரசானது உள்ளுர் மீன்பிடியை, பிரதேச சந்தைகளை உருவாக்கி விற்பனை செய்துவிட நினைக்கிறது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களுக்கு தலா 280 மீன் விற்பனை நிலையங்களை அமைக்கத் திட்டமிடுகிறது. இவ்வாறு இச்சந்தைகளுக்குப் போதிய அளவு மீனுக்கு மேல் பிடிக்காதவாறு இத்தொழிலை முடக்குகிறது. முன்பு கொழும்புக்குக் கொண்டு செல்லப்படுவதால், கொழும்பில் மீனின் விலை குறைவாக இருந்தது. இப்பொழுது கொழும்பு விலை உச்சத்தில் இருப்பதால், அரசு மீனை இறக்குமதி செய்கிறதாம். இதை வான் மூலமாக உள்ளுர் சந்தைகளுககு விநியோகிக்கவும் இருக்கிறதாம். ஆமிக்காரர் மரக்கறி விற்ற மாதிரி. வடக்குக் கிழக்கில் இருந்து இறால், நண்டை மட்டுமே தெற்குக்கு சந்தைப்படுத்தப் போகிறார்களாம். இவ்வாறாக மட்டுப்படுத்தப்பட்ட இச்சந்தை வடிவ, இவ் ஒடுக்குமுறையின் ஊடாக இம் மீனவர்களை இத்தொழிலில் இருந்தும் அவர்களின் கரையோரக் குடியிருப்புக்களில் இருந்தும் துரத்திவிடும் திட்டத்தோடு செயலாற்றி வருகிறது. இந்த நிலையில் தான் வறிய மீனவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை வேறுபக்கம் திருப்பிவிட இவ்வரசுகள் திட்டமிட்டும் செயற்படுகிறது. இந்த இரு அரசுகளின் இதற்கான எதிரும் புதிருமான கூத்துக்களே, இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனையாக இன்று நடந்துகொண்டிருக்கிறது.
மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்த இந்தியாவின் கடல்வள கரையோர நீளம் 812 மைல்களாகும். இவை இலங்கைக் கரையோர நீளத்தை விட 26.2 வீதம் குறைவானது. இது கிட்டத்தட்ட வடக்குக் கிழக்கு கரையோர நீளத்துக்கு அண்ணளவாகச் சமமானது. குஜராத் தொடக்கம் கன்னியாகுமரி வரையும் விரிந்து கிடக்கும் இந்தக் கரையோரங்களில் சுமார் 3000க்கு மேற்பட்ட மீனவகிராமங்கள் காணப்படுகின்றன. இந்தியக் கடலோர நீளத்தில் 12.7 வீதமே தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான கடற்கரையாகும். இது பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டம், கேரளா எல்லை வரை தொட்டு நீண்டு கிடக்கிறது. 2.5 இலட்சம் மீனவர்கள் செறிந்து வாழும் இந்தக் கரையிலே, 6200 ரோலர்களும், 50 ஆயிரத்து 400 வரையான மீன்பிடி கலன்களும் இருக்கின்றன. இது சுனாமிக்குப் பின்னான ஒரு சராசரி மதிப்பீடாகும்.
இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி, பரம்பரையாகத் தொழில் செய்து கரைகளில் வாழும் மீனவ மக்கள் ஒரு புறமும், போகத் தொழில் காரணமாக வாடி அமைத்து வாழும் மீனவர்கள் இன்னொரு புறமுமாக இவர்களின் வாழ்வு அமைந்து வருகிறது. இந்த இரு பிரிவினரான மீனவ மக்கள் தொழில் பிசகுகள் இன்றி, கடலிலே முழித்து கடலோடு தூங்கியும் வாழ்பவர்கள். இந்த மீனவர்களின் தொழிலுக்கான பொதுச் சொத்தும், அதற்கான உரிமையும் இந்தக் கடல் தாய் மட்டுமே. இந்த மீனவர்கள் இந்தத் தாயை தம்மைப் பெத்தவளைப் போலவே நேசித்தும் வருகின்றனர்.
கட்டுமரத் தாலாட்டில் தொடங்கிய இந்தத் தாயுடனான நீண்டதூர உறவும், அதன் உரிமையும் இன்று கேள்விக் குறியாகி விட்டது. கட்டுமர மீன்பிடி காலத்தில் மீனவர்கள் எல்லோரும் சந்தோஷமாகவே தொழில் புரிந்து வந்தனர். குறிப்பாக 70 சகாப்தத்தில் கண்ணாடி தும்பு நார்களினால் (கண்ணாடி இழைகளால்) தயாரிக்கப்பட்ட பிளாஸ்திக் வள்ளங்கள் 'நீலப்புரட்சி' என்று இந்த மீன்பிடித் தொழிலில் புகுந்தது. இல்லை புகுத்தப்பட்டது. சீனோர் என்கின்ற நோர்வே நிறுவனம் அப்பொழுது இலங்கையிலும், ''மாலு' மீன்'' என்ற பெயரில் இவ் வள்ளங்களைத் தயாரித்து வந்தது. கொரிய யுத்தத்தின் போது, கண்ணாடி இழையங்களை கொண்டு வருவதிலுள்ள (இறக்குமதி) கடற் போக்குவரத்து இடர்பாடுகளால் உள்ளுரில் உள்ள ஒருவகை சீமெந்துக் கலவையால் இவ்வள்ளங்கள் தயாரிக்கப்பட்டும் இருந்தது. இத்தொழில் நுட்பங்கள் உள்ளுர் மூலங்களின் ஊடாக வளர்ந்து வராமல் மேற்குலகு மூக்கணாங் கயிறைப் போடும் ஓர் அபிவிருத்தியாகவே இருந்தது.
'நீலப்புரட்சி' என்று பேசப்பட்ட இந்த வள்ள வருகை இந்தியாவிலும், இலங்கையிலும் வேறுவேறான மாற்றங்களைக் கொண்டுவந்தது. இரு நாடுகளிலுமே இவ்விசைப் படகுகளை வாங்கக் கடனுதவி, எரிபொருள் மானியங்கள் போன்ற வசதிகளை இவ்விரு அரசாங்கங்களும் அறிவித்தன. இந்தியாவில் பண்ணை முதலாளிகள் தமது நிலபுலன்களைக் காட்டி அதிக கடனுதவிகளைப் பெற்று இவ்வள்ள மீன்பிடியில் முதலிட்டனர். இலங்கையில் தமிழர் பகுதிகளில் இவ்வாறு நடக்கவில்லை. இப்பகுதியில் மேலோங்கிய மீனவச் சமூகப்பிரிவினர் உத்தியோகத்தில் நாட்டம் கொண்ட இப் பிரிவினரும், இயற்கை மீன்பிடியில் கடின சம்பாத்தியத்தில் மிச்சம் பிடித்தவர்களும் முதலிட்டனர். காலங்காலமாக நடந்து வந்த கள்ளக்கடத்தலால் செல்வமீட்டிய பிரிவினரும் இதில் முதலிட்டிருந்தனர். இவை மீனவ சமூகப் பிரிவினரது முதலீடு என்பதால், கட்டுமரத் தொழிலாளருக்கும் - இப்புதிய வள்ளத் தொழிலாளருக்கும் இடையில் முரண்பாடுகள் பெரிதாக வெடிக்கவில்லை. இந்தக் காலத்தில் (72 இல்) வடக்குக் கிழக்கு உட்பட நாட்டில், 19 474 மீன்பிடி கலங்கள் இருந்தன. இவற்றில் 4 509 கிழக்கில் இருந்தது (வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை) கிழக்கிலே இருந்த மீன்பிடி கலங்களில் 91.9 வீதமானவை இயந்திரங்கள் அற்றவை. இந்த நிகழ்காலத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளில் சராசரி 35 வீதமானவை இயந்திர மீன்பிடிக் கலங்களாகக் காணப்பட்ட போதும், கிழக்கிலே இது 8.1 வீதமாகவே காணப்பட்டது.
இந்தியாவில் பண்ணைகள் வள்ளங்களில் முதலிட்ட புதிய வரவு, பெரும் முரண்பாடாக வெடித்தது. வறிய கட்டுமரத் தொழிலாளிகளுக்கும், இவ்வள்ள புதிய முதலீட்டுக்கும் இடையில் இது யுத்தம் என்ற அளவில் இருந்தது. இவை குத்துவெட்டுகளாகவும், கொலைகளாகவும், கைக்குண்டு வீச்சுக்களாகவும் இந்த மோதல் கடற்கரை நீளவும் காணப்பட்டது. மீனவரல்லாத இந்தச் சமூகத்தின் முதலீட்டு வருகை, கட்டுமரத் தொழிலை அடியோடு அகற்றும், ஈசலைப் போல் மொய்க்கும் பெரும் வருகையாகவே கடலில் இருந்தது:
கட்டுமரக்காரர் தொழில் செய்ய முடியாத அளவுக்கு இந்தப் பண்ணைகளின் முதலீட்டு வருகை ஆக்கிரமித்து இருந்தது. சிறியளவு கடலோரத்தைக் கொண்ட தமிழகத்தில் இந்தப்பண்ணைகளின் புற்றீசல் வருகை, மீன்வளத்தைக் காப்பாற்றும் நிர்;பந்தத்தைக் கொடுத்தது. அதனால் தமிழக அரசு 40 நாட்கள் சினைக்கால மீன்பிடித்தடையைச் சட்டமாக்கியது. இது கடந்த 35 வருடங்களாக நீடித்து, இன்று 45 நாட்கள் சினைக்கால மீன்பிடித்தடையாக இருந்தும் வருகிறது.
பண்ணைகளின் வள்ள முதலீட்டு வருகை, கடலில் மட்டுமன்றி கடற்கரை ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்தி தன்வசப்படுத்தியது. அந்நிய முதலீடுகள் கொண்டுவந்த இந்தத் தொழிற்பரட்சி (நீலப்புரட்சி) வறிய மீனவ சகோதரத் தொழிலாளர்களின் தொழிலை நாசம் செய்வதை உணர்ந்து கொள்வதற்கு இவர்களின் வர்க்கப் பேராசை இடந்தரவில்லை. இது கரைவரை ஒரு சுனாமியாக கட்டுமரத் தொழிலை விழுங்கியது. உலகமயமாதலின் அந்திய மூலதனத்துக்கான அசுரக்கரங்களாக இவை முளைத்திருந்தன. அரசு இதை ஊக்குவித்து, தனியார்கள் சூறையாடுவதற்குத் தடையாக இருந்த கரையோர மீனவக் குடியிருப்பு ஆதிக்கத்தை அகற்றும் அசுரக்கரங்களாக, இந்தப் பண்ணை ஆதிக்கத்தை ஊக்குவித்தது.
சுனாமிக்கு முன்னரே தமிழகக் கரையில் அமைந்திருக்கும் பட்டினப்பாக்கம், சாந்தோம் மீனவக்குடியிருப்புக்களை இப்பண்ணைகளை வைத்து இந்திய அரசு அகற்றியிருந்தது. நீண்ட காலமாகவே புதிய உலக ஒழுங்கமைப்புக்கு அமைய, அலைகரையில் இருந்து 500 மீற்றர்களுக்கு அப்பால் மீனவக் குடியிருப்புக்களைத் துரத்த நினைக்கும் தரகு அரசுகளின் மேலாண்மைச் சட்டங்களாக இவை முளைத்து விட்டது. இந்தக் கடல் மண்டல மேலாண்மைத் திட்டங்களும், அதன் மேலாண்மைச் சட்டங்களும் இன்று வறிய மீனவர்களை வெகுவாகத் தாக்கத் தொடங்கி விட்டது. கடலிலே மீன்பிடிக்கும் உரிமையையும், கரையிலே வாழ்வுரிமையையும் பறித்தும் புடுங்கியும் எறிய இந்த உலகமயமாதல் தயாராகி விட்டது. இப்படிப் பறிக்கப்படும் கரையோரங்களில் பெரும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் முதலிடத் தொடங்கியும் விட்டன. இப்பொழுது பட்டினப்பாக்கம் ஓர் எம்.எல்.லே க்குச் சொந்தமான குட்டிச் சிங்கப்பூராக மாறி வருகிறது. அங்கிருந்து துரத்தப்பட்ட வறிய மீனவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களைப் பற்றி இந்த உலகமயமாதல் கவலைப்படாது. அவர்கள் நடுத்தெருவுக்கு வந்தாலென்ன? தற்கொலை செய்தாலென்ன? அலைகரையில் இருந்து 500 மீற்றருக்கப்பால் மீனவரைத் துரத்தும் இந்த உலகமயமாதல், எப்படி அந்த எம்.எல்இலே யை இதே 500 மீற்றருக்குள் இருக்க அனுமதிக்கிறது??
இலங்கையில் இவை உள்நாட்டு யுத்த முன்னெடுப்புக்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன. கடலில் கண்காணிப்பு வலைய ஒடுக்குமுறையும், கரையோர இராணுவ முற்றுகையுமாக இவைகள் நடத்தப்பட்டன. இலங்கையில் இவை உள்நாட்டு யுத்தத்தால் சாதிக்கப்பட்டது. அரசின் கீழும் புலியின் கீழும் மட்டுமே இவ் தேக்கங்கள் வைத்திருக்கப்பட்டன. 91இல் புலிகள் அரசமைத்த காலத்தில், தென்கிழக்குக் ஆசியக் கரையோரங்களைக் குறிவைத்து பெரும் தொகையான தன்னார்வத் தொண்டுக் குழுக்கள் இயங்கத் துவங்கின. சுனாமியை அடுத்து இவை எண்ணிலடங்காது பல்கிப் பெருகியும் இருந்தன. சுனாமியை ஒரு வாய்ப்பாகப் பயன்படத்திய இந்த உலகமயமாதல், இப்பயத்தைக் காட்டி, கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, ஒட்டுமொத்த அலைகடல் ஓரங்களையும் பன்னாட்டு தொழில்சார் மண்டலங்களாக இது மாற்றுகிறது. இந்தத் திட்டம். ஒட்டு மொத்த வறிய சிறுபிடி மீனவ மக்களையும் அதன் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட, நிர்க்கதியான மீனவர்களை மீண்டும் அவர்களை அத்தொழிலுடன் இணைப்பதில் இத்தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டு ஆர்வம் காட்வில்லை. இவைகள் உலகமயமாதலுக்கு இசைவாக இவர்களை மெல்ல மெல்ல கரையோரத்தில் இருந்து நகர்த்தும் முகமாக வேறு தொழில் நாட்டத்தில் ஊக்குவித்தனர். அதற்கான தொண்டு உதவிகளையும் செய்து ஊக்குவித்தனர்.
கடற்கரை ஓரங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தலாம் என்று சொல்லி ,'பசுமைப் புரட்சியின் தந்தையான எம்.எஸ் சுவாமிநாதனால், 91 இல் 'நீலப்புரட்சி'க்காக கண்டுபிடித்துக் கொடுத்ததுதான் இந்தக் கடற்கரை மண்டல் மேலாண்மை. கடலையும், அதன் அலைகரை ஓரங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதே இந்த நீலப்புரட்சித் திட்டத்தின் கண்டுபிடிப்பு. அலை கரையோர வாழ்விடம் சார்ந்து மீன்பிடி செய்யும் மீனவர்களை, துறைமுகம் சார்ந்து மீன்பிடிக்க நிர்பந்தித்து, அங்கு உறிஞ்சி இழுப்பதே இவர்களின் திட்டம். கடற்கரை சார்ந்த பாரம்பரிய இயற்கை மீன்பிடியை உலக மயமாதலுக்கான துறைமுகம்சார் மீன்பிடியாக மாற்றி கரையோர மீன்பிடிக் குடியிருப்புக்களைப் பறித்தெடுப்பதே இவர்களின் கனவு. இவ்வாறு பறிக்கப்படும் வசிப்பிட நிலங்கள் பன்நாட்டு தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படும்.
கடற்கரை மேலாண்மைத் திட்டமானது, மீன்வளம் கடலில் குறைகிறது, கடல் மாசுபடுத்தப்படுகிறது என்ற அடிப்படையில் கொண்டு வரப்படுகிறது. கடற்கரை மீனவ குடியிருப்புக்களே இதை நாசப்படுத்துவதாகவும், மீனவர்களுக்குச் சரிவர மீன்பிடிக்கத் தெரியாததால் மீன்வளம் அழிவதாகவும் கூறி இச்சட்டம் தனது மேலாண்மையை உருவாக்குகிறது. இது துறைமுக மீன்பிடி தவிர்ந்த கடற்கரைசார் மீன்பிடியை கட்டுப்படுத்தி இல்லாதொழிக்கக் கொண்டுவரும் மேலாண்மையாகும். இது கூறுகிறது:
இச்சட்டத்தின் படி 12 கடல் மைல்களைத் தாண்டி எவரும் மீன் பிடிக்கமுடியாது.
12 கடல் மைல்களுக்கு உட்பட்ட மீன்பிடி தொழிலில்...
• பத்தாயிரம் ரூபாய்கு மேல் மீன் இருப்பின், படகு பறிமுதல்
• படகை விடுவிக்க வேண்டுமாயின் படகின் மதிப்பில் பாதியை பிணையாகக் கட்ட வேண்டும்.
• அப்படகில் இருந்த அனைவரும் 25 ஆயிரம் (இந்திய) ரூபா தண்டமாகக் கட்டவேண்டும்.
• சோதிக்கவிடாமல் தடுப்பவர்களுக்கு, 10 இலட்சம் ரூபா அபராதம்
• 12 கடல் மைல்கள் தாண்டினால் 9 இலட்சம் ரூபா அபராதம்
• 12 கடல் மைல் தாண்டி ஓடும் படகுச் சொந்தக்காரருக்கு, 3 ஆண்டுச் சிறைத் தண்டனை
• படகின் நீளம் 12 மீற்றருக்கு மேலிருந்தாலும் தண்டனை
இவ்வாறு இந்தக் கடல் மேலாண்மை, கடற்கரைசார் மீன்பிடியையும், அதன் கரையையும் ஆக்கிரமிக்கிறது.
இன்று பூமியின் மேற்பரப்பளவில் சுமார் 71 வீதம் கடல்களால் சூழப்பட்டுள்ளது. உலகில் வாழும் விலங்கினங்களில் ஏறத்தாள 80 வீதமானவை கடலிலே தான் சீவித்தும் வருகின்றன. நிலத்திலிருக்கும் மலைத்தொடர்களை விட கடலிலுள்ள மலைத்தொடர்களே அதிகமானவை. இவற்றைப் போலவே கடலிலுள்ள பனி வனாந்தரங்களும் அதிகமானவை.
கடந்த 42 ஆயிரம் வருடங்களில், பூமி தனது நிலைக்குத்து அச்சிலிருந்து 22.1 பாகையில் இருந்து 24.5 பாகையாக மேலதிக சூரியஒளியைப் பெற்று வருகிறது. இதனால் கடலில் இருந்த பனி வனாந்திரங்கள் பெருமளவு உருகிவிட்டது. கிட்டத்தட்ட 9 மில்லியோனர் சதுர கிலோமீற்றர் கடல் பனிவனாந்தரம் வடதுருவத்தில் அரைப்பங்காக உருகிவிட்டது. 2007 செப்ரம்பருக்குப் பின், இக்கடலானது குறுகிய கடல் பாதையைத் திறந்து விட்டது. வடதுருவத்தில் இருந்து, வடமேற்கு - வடகிழக்கு என்று இன்று பாதைகள் அமைந்து விட்டது. வட அமெரிக்கா மற்றும் ஜரோப்பாவில் இருந்து, சீனா, யப்பான் மற்றும் தென்கிழக்காசிய நாட்டுக்கான கிட்டிய கடல் பாதைiயாக அமைகிறது. இது ஜரோப்பாவுக்கும் சீனாவுக்குமான பழைய பாதையை விட 7000 கில்லோமீற்றர் குறைவானது. ஜரோப்பாவில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கான பெரும் பாரம்தாங்கிக் கடற் கப்பல்கள் தமது பயணத்தில் 12 நாட்களை மிச்சம் பிடிக்கிறது. இதனால் ஒவ்வொரு கப்பலும் சுமார் 1.2 இலட்சம் ஈரோக்களை மிச்சமும் பிடிக்கிறது.
இந்தப் புதிய நிலமைகள் உலகமயமாதலின் வேகத்தைத் துரிதப்படுத்தியது. இவ்வாறான நிலமைகளே புலிகளை அழிக்கும் யுத்தத்தையும் மறுபுறத்தில் தீவிரப்படுத்தியும் இருந்தது. சமுத்திரங்கள் இவ்வாறு குறுகிய பாதையைத் திறந்து விட்டதால், புதிய உலகமைப்புக்கான சமுத்திர வேட்டை ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. இது வெறுமனே கடல் வணிகப் போக்குவரத்து, மற்றும் மீன்பிடி அறுவடை சார்ந்தது மட்டுமல்ல. கடலிலே கொட்டிக் கிடக்கும் அற்புதமான செல்வங்களைக் கொள்ளையடிப்பதையும் தன்னகத்தே கொண்டது.
நிலத்திலிருக்கும் அலுமீனியம் இன்னும் 70 - 80 வருடங்களுக்கும் குறைவான காலங்களுக்கே போதுமானதாக நம்பப்படுகிறது. ஆனால், பசுபிக் சமுத்திரத்தில் இருக்கும் தளத்தில் 430 கோடி தொன்னுக்கு மேல் அலுமீனியம் புதையலாக இருக்கிறது. இது இன்றைய உலகத் தேவையின்படி, இன்னும் 15 ஆயிரம் வருடங்களுக்கு மேல் போதும் போதுமென்ற அளவில் இருக்கிறது. இதைவிடவும் யுத்த தேவைகளுக்குப் பயன்படும் 'ரைற்றேனியம்' 100 கோடி தொன்னும், இரும்புத்தாதுப் பொருள் 2070 கோடி தொன்னும் இருக்கிறது. எண்ணிலடங்காத மருத்துவ தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய மருந்துகள் இந்தக் கடல்தாயின் மடிக்குள் இருக்கிறது. இதைவிடவும் எண்ணைத்தாது மசகுப் படிமங்களும், பெரும் மின்சக்திப் பிறப்பாக்கிகளும் என்று ஏராளம் திரவியங்கள் இங்கே ஒளிந்து கிடக்கிறது. இவற்றை மொத்தமாக் கொள்ளையடிப்பதன் அவசரம் தான் இந்தப் புதிய உலக ஒழுங்கமைப்பின் 'நீலப் புரட்சி'யின் பரம இரகசியம்.
பன்நாட்டு சமுத்திர மீன்பிடி அறுவடை மற்றும் மேற்சொன்ன இரகசியக் கொள்ளைகளுக்காக இந்நாடுகளில் மேலதிக துறைமுகங்கள் தேவைப்படுகிறது. மேற்குலகிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நோக்கி நகர்ந்த மூலதன தொழில் உற்பத்திகளுக்குமான விரிவான கடல் வணிகப் போக்குவரத்துக்களும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இதை நிறைவு செய்யவும் இதன் இதர தேவைகளுக்காகவும் பெரும் கடற்கரை நிலங்களும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இதனால் இன்று சமுத்திரங்கள் மீதான மேலாண்மை இறுகத் தொடங்கியுள்ளது.
இதன் தரகுக் காரணங்களால், புதிதாகக் கடல் எல்லையை நாடுகள் கோரி வருகின்றன. வன்னி யுத்தத்தின் பின்னர் இலங்கை தனது கடல்பரப்பை விஸ்தரிக்க இருப்பதாவும், இது தொடர்பாக ஜநாவைக் கோரி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதன்படி தற்பொழுது இலங்கையின் கடற்பரப்பு 5 இலட்சத்து 17 ஆயிரம் கடல் மைல்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
2008 ஆம் ஆண்டே (வன்னி யுத்தத்துக்கு முன்பே) இந்தக் கடல் மேலாண்மையையும், கடற்கரை ஒழுங்கமைப்பையும் இந்த உலகங்கள் திட்டமிட்டு விட்டன. புலிகள் அழிக்கப்படுவதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர், ஆழ்கடல் மீன்பிடிக்கான புதிய துறைமுகம் ஒன்றுக்காக நெதர்லாந்துடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. 8 பில்லியன் பெறுமதியான இந்த துறைமுக ஒப்பந்தம் 6.5 ஏக்கரில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் 65 வள்ளங்கள், மற்றும் 150 சிறு மீன்பிடி வள்ளங்கள் போன்றவற்றைக் கொண்ட துறைமுகமாகும். குளிரூட்டப்பட்ட களஞ்சியப் பிரிவுகள், ஜஸ்க் கட்டித் தயாரிப்பு, மற்றும் ஆழ்கடல் செயற்பாட்டுக்கான உபகரணங்களைக் கொண்ட துறைமுகமாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது. டிக்கோவிட்ட எனுமிடத்தில் அமைக்கப்படவுள்ள இந்த மீன்பிடி துறைமுகத்துக்கு நெதர்லாந்து அரசாங்கம் 17.1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாகவும் மீதத் தொகையை இலகு கடனாகவும் வழங்கவுள்ளது. இத்துறைமுகம் இலங்கையில் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக அமையுமென்றும் கூறப்பட்டது.
இந்த ஒப்பந்த வருடத்தில் (ஓகஸ்ட -26 '08) தான் 96 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை -இந்திய மீன்பிடி ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டும் இருந்தது. இத்தோடு இலங்கை -இந்தியக் கூட்டுக் கண்காணிப்புடன் கிழக்கிலும் அதைத் தொடர்ந்து வன்னியிலும் யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
இந்தியாவிலே கொண்டு வரப்பட்ட கடல் ஒழுங்காற்றுச் சட்டம் (12 கடல் மைல்), கடற்கரையைக் கொண்ட மாநிலங்களுக்கு மாநிலம் வேறாகவும் இருக்கிறது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 12 கடல் மைல் சட்டம் கடலை மீனவர்களுக்கு இரண்டாகப் பிரிக்கிறது. 12 மீற்றருக்கு உட்பட்ட மீன்பிடி கலங்களைக் கொண்ட மீனவர்களை இவர்கள் இவ்வாறு வேலியிட்டு ஒடுக்குகிறார்கள்.
ஒடுக்கப்படும் இந்த மீனவர்கள் மூன்று வனையாக வகைப்படுத்ததப்படுகிறார்கள்.
1. முழுநேர மீன்பிடித் தொழிலாளர்கள்.
2. கட்டுமரம் மற்றும் சிறு மோட்டார் விசை கொண்ட பகுதிநேர மீனவர்கள்.
3. கடற்கரையிலே வலைவிரித்தும், வாரம் ஒருமுறை கடலில் மீன்பிடித்தும் வரும் ஏழை மீனவர்கள்.
இதில் கீழுள்ள இரு பிரிவினரையும் கண்டறிந்து தொண்டர் உதவி நிறுவனங்கள் வைத்து இவர்களின் வாழ்க்கைக் கஸ்டத்தை போக்குவதாக பாசாங்கு காட்டி, இவர்களுக்கு வேறு சிறுதொழில் வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்குகிறார்கள். இப்படியே திட்டமிட்டு இவர்களை ஏமாற்றி இந்தக் கரைகளில் இருந்து அகற்றி விடுகிறார்கள். இதற்காக உள்நாட்டு வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்கள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இப்படி மத்திய மாநில அரசுகளின் பலகோடி ரூபாயில் உருவாக்கப் பட்டதுதான் இயக்குனர் பாலாஜுயின் தலைமையிலான '' மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பக அறக்கட்டளை''. இது தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரைக்குமான கரையோர மீனவர்களிடம் சுயதொழில் தேடித்தரும் தொண்டர் நிறுவனமாக இயங்கி வருகிறது.
'இஸ்டெர் லைட்' என்றழைக்கப்படும் தாமிர உருக்காலைக்கு எதிராக எவ்வளவு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தபோதிலும், தொண்டர் நிறுவனங்களை வைத்து மக்களுக்காக குரல் கொடுப்பது போல பாசாங்கு செய்து, அவர்களின் நியாயமான வாழ்வாதார ஜனநாயகக் கோரிக்கையை அடக்கி விடுகிறார்கள். சுற்றுச்சூழல், மறுவாழ்வுப் பணிகளைக் காரணம் காட்டி இதே ஆலை நிறுவனம் அதே தொண்டர் நிறுவனங்களுக்கு நன்கொடைகளைக் கொடுப்பதுவும், ஒருவருக்கொருவர் பாராட்டுகளை வழங்குவதும் நடக்கிறது.
உலகில் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான 'பெப்சி'யின் பாசி வளர்ப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். பெண்கள் கடற்பாசியை எடுத்து காயவைத்து அற்ப சொற்ப காசுக்கு விற்றுப் பிழைப்பதே ஏழை எளிய மீனவ குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கையாக இருக்கிறது. பன்னாட்டு சமுத்திர மீன் அறுவடைக்கும், துறைமுக மீன்பிடி சந்தைகளுக்கும் வேண்டிய மீன் உருவாக்கத்துக்கு பாசியோடு பாசியாக 'பிளாங்ரன்' என்ற நுண்தாவரத்தை வளர்ப்பதே இவர்களின் கள்ளத் திட்டமாகும். மீன்கள் விரும்பி உண்ணும் இந்தத் தாவரம், பெரும் மீன்பிடி கலங்களின் புளக்கத்தால் அழிந்துவிடுகிறது. மீன்வளம் அழிந்து வருவதற்கு கரையோர மீனவ குடியிருப்புக்களே காரணம் (கடலை மாசுபடுத்தல்) என சும்மா சொல்லுகின்ற அரசுகள், இந்த உண்மைகளை எப்படி மக்கள் முன் சொல்ல முடியும்?
வளரும்...
Feb 2011