Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்கா கூறுவது போல், நிச்சயமாக அது புலிகள் அல்ல. அது அமெரிக்காவே தான். ஆனால் அமெரிக்காவோ புலிகள் என்கின்றான். புலியெதிர்ப்புக் கும்பலோ, மகிழ்ச்சியுடன் அதற்கு அரோகரா போடுகின்றது. புலியொழிப்பதையே அரசியல் வேலைத்திட்டமாக கொண்ட இந்த புலியொழிப்புக் கூத்தாடிகள், பிசாசுடன் சேர்ந்து இப்படித்தான் தமது மலட்டு அரசியலைச் செய்கின்றனர்.

 

சிலர் தாம் எந்த ஏகாதிபத்தியத்துடனும் சேர்ந்து செயல்படவில்லை என்று வித்தை காட்டுவது எல்லாம், அரசியலில் பொய்யும் புரட்டுமாகும். அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய பயங்கரவாத வரையறைக்குள், இவர்கள் அங்குமிங்குமாக மிதக்கின்றனர்.

 

உலகில் மிகப் பயங்கரமான, கொடூரமான, பயங்கரவாத இயக்கம் புலிகள் என்று அமெரிக்கா கூறுகின்றது. புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பல், இதை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். சூடு சுரணையற்ற நக்கித் தின்னும் மலட்டு அரசியல். இந்த இழிநிலையில் தான், புலியல்லாத அரசியல் பம்மி மிதக்கின்றது.

 

புலியை ஒழிக்க பேரினவாதிகளும், இந்தியாவும், ஏகாதிபத்தியமுமில்லை என்றால், என்ன அரசியலைத் தான், இந்தக் கும்பல் செய்யும். இதற்குள் தான் இவர்கள் சுற்றிச்சுற்றி சுழியோடுகின்றனர். கடந்த 20 வருடமாக, இப்படித் தான், இதற்குள் தான், புலியல்லாத கும்பல்கள், பேயுடனும் பிசாசுடனும் கூடி வாழ்கின்றனர்.

 

புலிகளை மிக மோசமான ஒரு இயக்கம் என்று சொல்ல அமெரிக்காவுக்கு, எந்த அருகதையும் தார்மீக உரிமையும் கிடையாது. பேரினவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்குகின்றார்கள் என்று புலிகள் தாங்களே தமிழ் மக்களை ஒடுக்கியபடி சொல்லும் உரிமை புலிகளுக்கு எப்படி இல்லையோ, அப்படித் தான் இதுவும்.

 

உலகிலேயே மிகமோசமான மனித அவலத்தை உருவாக்கி, அதைக் கொண்டு வாழும் அமெரிக்கா புலியைப் பற்றி கூறுவது நகைப்புக்குரியது. அமெரிக்காவின் பயங்கரவாத வழியில், அதன் அரசியல் உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான், புலிகள் இயக்கம்.

 

இப்படி அரசியல் பயங்கரவாதத்துக்கு, அரசியல் ரவுடிசத்துக்கு, அரசியல் மாபியாத்தனத்துக்கு தந்தையாக தாயாக இருப்பதே அமெரிக்கா தான். இப்படி உலகளாவில் அமெரிக்க மயமாக்கலில், புலிகள் வெறும் எடுபிடிகள் தான். உலகிலேயே மிகக் கோரமான, மனித அழிவுகளை உற்பத்தி செய்கின்ற முதல்தரமான பயங்கரவாதி அமெரிக்கா தான். அதன் ஒவ்வொரு அசைவும், உலக மக்கள் துன்பத்தையும் துயரத்தையும் மனித அழிவுகளையும் உருவாக்குகின்றது. அதன் இராணுவ இயந்திரம் முதல் அதன் பணம் கொடைகள் வரை, உலக பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டது.

 

 

இதன் மூலம் சதா மனித உயிர்களை காவு கொண்டபடி, உலகை அதி உச்சத்தில் சுரண்டிக் கொழுக்கின்ற பணக்கார புல்லுருவிகளின் நலனை அடிப்படையாகக் கொண்ட, ஓரு பயங்கரவாத நாடு தான் அமெரிக்கா.

 

இதற்காக அமெரிக்கா உற்பத்தி செய்த பயங்கரவாத இயங்கங்கள், சதிகள், ஆட்சி கவிழ்ப்புகள், படுகொலைகள், ஆக்கிரமிப்புகள் என்று எத்தனை எத்தனை. இதன் மூலம் கோடான கோடி மக்களை கொன்று குவித்த ஒரு பயங்கரவாத நாடு தான், அமெரிக்கா.

 

வியட்நாமில் உலகம் அறிந்த பயங்கரவாதத்தை ஏவிய நாடு. இன்று ஈராக்கின் எண்ணைக்காக, அதன் மூலம் சில முதலாளிகளைக் கொழுக்க வைக்க, ஈராக்கை ஆக்கிரமிக்க விரும்பி, அதையே செய்தது, அமெரிக்கா. இதற்காக இந்த பயங்கரவாத நாடு நடத்திய சதிகள், சூழ்ச்சிகள், பேரங்கள், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், பொய்கள், அவதூறுகள் எண்ணில் அடங்காது. இறுதியாக அது நடத்திய ஆக்கிரமிப்பு வரை, ஈராக்கில் இந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டுகின்றது. அந்தப் பயங்கரவாதம் இன்றும் தொடருகின்றது. இந்தப் பயங்கரவாதி சொல்வது, புலியொழிப்பு கும்பலுக்கோ அரோகரா போடக் கூடிய வேதவாக்காக உள்ளது.

 

ஈராக்கின் எண்ணையைக் கொள்ளையடிக்கவும், இதன் மூலம் சிலர் கொழுக்கவும் தான், இவ்வளவு ஆட்டம் ஆடுகின்றனர். இதற்காக இவர்கள் பேசுவதோ திடீர் ஜனநாயகம்.

 

உலகப் பயங்கரவாதம் பற்றி பேசும் இந்த அமெரிக்கா தான், ஒசாமா பில்லாடனை கூட தனது பயங்கரவாத தேவைக்காக பயங்கரவாதியாக உற்பத்தி செய்தது. ஆயுதம் முதல் பணம் வரை வாரிக்கொடுத்து, பயங்கரவாதத்துக்கு பயிற்சி அளித்தது. இதன் மூலம் இன்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, அந்த மக்களையே கொன்று போடும் அதிபயங்கரவாதத்தையே அமெரிக்கா செய்கின்றது.

 

இப்படிப்பட்ட அமெரிக்காவின் பயங்கரவாதங்கள் பற்பல. 1948 வரை இஸ்ரேல் என்ற நாடே மத்திய கிழக்கில் இருக்கவில்லை. பலாத்காரமாக, திட்டமிட்டும், வெளியில் இருந்தும் கொண்டு சென்று யூதர்களை கொண்டு உருவாக்கிய நாடு தான் இஸ்ரேல். மத்திய கிழக்கின் தனது பேட்டை ரவுடியாக, அமெரிக்காவால் திட்டமிட்டு இப்படித்தான் உருவாக்கப்பட்டது.

 

பாலஸ்தீன நாட்டை இல்லாதாக்கிய அமெரிக்கா, இன்று அதன் ஒரு பகுதியை வழங்குவதா இல்லையா என்று விவாதம் செய்கின்றது. என்ன வேடிக்கை. ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் கொப்பளிப்பு இப்படிப்பட்டது தான்.

 

இந்த பயங்கரவாத மூதாதையர்களின் கதையும் இதுதான். அமெரிக்கா என்ற தேசத்தை உருவாக்க, அவர்கள் 10 கோடி செவ்விந்தியர்களைக் கொன்றனர். கொல்வதை சட்டமாக, அதை புனிதமாக, பண வருவாயுள்ள தொழிலாகவே அவர்கள் அறிவித்தவர்கள். கால்மார்க்ஸ் மூலதனத்தில் இதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். ""புரட்டெஸ்டென்ட் மதத்தின், கண்ணியமிக்க காவலர்களான நியூ இங்கிலாந்தின் புனிதர்கள், 1703 ல் தங்கள் சபையில் நிறவெறி சட்டங்களின்படி ஒரு சிவப்பு இந்தியனின் மண்டைத் தோலுக்கு, அல்லது சிறைபிடிக்கப்பட்ட சிவப்பு இந்தியனுக்கு 40 பவுண் விலை நிர்ணயித்தனர். 1720 இல் ஒவ்வொரு மண்டைத் தோலின் விலையும் 100 பவுணாக உயர்ந்தது. 1744 ல் மாசாசூசெட்ஸ்பே, ஒரு குறிப்பட்ட சிவப்பு இந்திய இனத்தை கலகக்காரர்கள் என்று பிரகடனம் செய்த பின்பு விலைவாசி பின்வருமாறு இருந்தது. 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆணின் மண்டைத் தோல் 100 பவுன் (புதிய பவுன்). ஆண்கைதி 105 பவுண். பெண் மற்றும் குழந்தைக் கைதிகள் 55 பவுண். ….வேட்டைநாய்களையும், மண்டைத்தோல் உரித்தலையும் "கடவுளாலும், இயற்கையாலும் தனக்கு அளிக்கப்பட்ட சாதனங்கள்" என்று பிரிட்டிஷ் பார்லிமென்ட் பிரகடனம் செய்தது"" இப்படி இந்திய இனங்கள் பூண்டோடு வேட்டையாடப்பட்டது.

 

இவர்களின் வாரிகள் 10 கோடி கறுப்பு அடிமைகளை கடத்தி வந்து, கொழுத்தனர். இதுவும் அமெரிக்கப் பயங்கரவாதிகளினால், சட்ட அந்தஸ்து பெற்றது. கறுப்பின மக்களை யாரும் எப்படியும், நடத்தலாம். கொல்ல முடியும், பாலியல் உறவு கொள்ள முடியும், இப்படி எதுவும் செய்யமுடியும். பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்காவின் செல்வக் குவிப்பு இப்படித் தான் நடந்தது.

 

செல்வம் குவிய இந்த பயங்கரவாத தொழில் பெருகியது. 1700 களில் கூறப்பட்ட ஒரு புகழ் பெற்ற ஒப்பந்தம் உருவானது. அதுதான் 'அஸியெந்தோ" உடன்படிக்கையாகும். இதன் படி ""இங்கிலாந்து, ஆண்டு ஒன்றிக்கு 4800 நீக்ரோக்கள் வீதம் 1743 வரை, ஸ்பானிஷ் அமெரிக்காவுக்கு அனுப்பும் உரிமையைப் பெற்றது"" அதாவது நீக்ரோக்களை (கறுப்பர்களை) பிடித்து அடிமையாக அனுப்பும் கோட்டாவை பெற்றுக் கொண்டனர். இது இன்றைய வர்த்தக கோட்பாடு போன்றதே, இந்த நாகரீக ஒப்பந்தங்கள். அடிமைகளை அமெரிக்கா சந்தையில், அன்றைய டொலரில் 500 முதல் 1000 டொலர் என்ற பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டனர்.

 

கூலியற்ற இந்த அடிமைகளின் உழைப்பு, தன்னை வாங்கிய பணத்தையே பலமடங்காக்கியது. இதன் செழிப்பு, அடிமை வியாபாரத்தையே சர்வதேச வர்த்தகமாக்கியது. அன்று அடிமைகள் ஏற்றுமதியில் ஈடுபட்ட கப்பல் நிறுவனமான ""லிவர்பூல் 1730 இல் 15 கப்பல்களையும், 1751 இல் 53 கப்பலையும், 1760 இல் 74 கப்பலையும், 1770 இல் 96 கப்பலையும், 1792 இல் 132 கப்பலையும்"" பயன்படுத்தியது. அடிமை வியாபாரத்தில் நம்ப முடியாத வளர்ச்சி. இப்படி அடிமை வியாபாரத்தில் பல கம்பனிகள். கோடானு கோடி (கறுப்பின) மக்களின் அவலத்தில் இந்த வர்த்தகமும், கூலியற்ற உழைப்பும் செழித்தது. விவர்பூல் 60 வருடத்தில் அடிமைகளை ஏற்றுமதி செய்த கப்பல் எண்ணிக்கையை 9 மடங்காக பெருகியது. அதாவது 117 கப்பல் அதிகரித்தது. கப்பல் தொழில் நுட்பம் பெருகியது. அதிக அடிமைகளை கொண்டுவரும் வகையில், கப்பல் கொழுத்தது. அதிக அடிமைகளை கைப்பற்றும் நுட்பம், அவர்களை கொண்டுவரும் நுட்பம் வளர்ந்தது. அடிமைகளை அடிமைப்படுத்தி உழைப்பை உறிஞ்சும் நுட்பம் பெருகியது. அன்று செல்வத்தின் இருப்பிடமே அடிமை வியாபாரமாகியது. இதனால் கடல் கடந்து இந்த வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தொகை அதிகரித்து. அடிமைகளை கைப்பற்ற பல நாடுகள் போட்டியிட்டன. இதற்கு ஏற்ப சட்டம் சுதந்திரமாகி, அடிமைகைள இலகுவாக கையாளும் வகையில் ஜனநாயகமாகியது. சுதந்திர மனிதன் அடிமைகளை கையாள்வது என்பது, மேலும் சுதந்திரமாகி ஜனநாயகமாக மாறியது. இதனால் அது கொடூரமானதாகியதுடன், காட்டுமிராண்டித்தனத்தையே நாகரீகமாக்கியது.

 

இப்படி பயங்கரவாதத்தை அரசியலாக கொண்ட அதன் நூற்றாண்டு வரலாறு, இன்றும் தொடருகின்றது. இன்றும் உலகில் மிகப் பெரிய பயங்கரவாத நாடு அமெரிக்க தான். உலகில் உணவின்றி, சுத்தமான நீர் இன்றி, மருந்தின்றி, சுற்றுச்சூழல் மாசடைதலால் மரணிக்கும் 10 கோடிக்கு மேற்பட்ட மக்களின் பச்சைப் படுகொலைக்கு, அமெரிக்கா கையாளும் அரசியல் பயங்கரவாதம் தான் காரணம். இதைவிட ஆக்கிரமிப்புகள், பொருளாதாரத் தடைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள், இப்படி மக்களை அன்றாடம் படுகொலை செய்யும் அமெரிக்காவின் பயங்கரவாதம், உலகம் தளுவிய அதி பயங்கரமானது.

 

இந்தப் பயங்கரவாத நாடு, புலியை உலகின் முதல்தரமான பயங்கரவாதி என்கின்றது. புலிகளின் பயங்கரவாதம் என்பது, அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டும் போராடாது, மக்களுக்கு (தமிழ் மக்களுக்கும்) எதிராக உள்ளது என்பதால், நாம் அந்த பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம். அதை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டும் அவர்கள் கையாண்டால், அந்தப் "பயங்கரவாத" த்தை நாம் ஆதரிப்போம். புலிகள் மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதம், அமெரிக்காவின் அரசியல் பொருளாதார பயங்கரவாதத்தை பின்பற்றியே செய்கின்றனர். இதற்கு வெளியில் அல்ல. இதன் அரசியல் தன்மை என்பது ஒன்றே.

 

புலிகளின் பயங்கரவாதம் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களுக்கும் மேலானதாக இருப்பதால், ஒப்பீட்டளவில் அது குறுகியது. அமெரிக்கப் பயங்கரவாதமோ, உலக மக்கள் மேலானது. புலிகளின் பயங்கரவாதத்தின் மூலமாக, அதன் அடிப்படையாக இருப்பது பேரினவாதத்தின் கொடூரமான இன ஒடுக்குமுறை தான். இப்படியிருக்க, அமெரிக்கா புலியின் பயங்கரவாதம் பற்றிப் பேசுவது என்பது, இலங்கையை தனது அடிமை நாடாக மாற்றத்தான். தனது பயங்கரவாதச் சதிகள் மூலம், தலையிடும் உரிமைக்காகத் தான் அது புலம்புகின்றது. அதாவது தனது பயங்கரவாதத்தை இலங்கை மக்கள் மேல் திணிக்கத் தான், புலிப்பயங்கரவாதம் பற்றிப் பேசுகின்றது. இந்த அடிப்படையில் தான், புலியெதிர்ப்பு புலியொழிப்பு வாதிகளும், தமது பங்குக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து மக்களின் முதுகில் குத்துகின்றனர்.

 

பி.இரயாகரன்
13.01.2007